ஸ்ரீ:

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

பெரிய திருமடல்

பெரிய திருமடல் என்னும் இத்திவ்ய ப்ரபந்தமானது இந்த உலகில் இருள் நீங்க வந்துதித்து அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந் துரைத்த ஆழ்வார்களுள் பிரதானரான நம்மாழ்வாரருளிச்செய்த சதுர்வேத ஸாரமான நான்கு திவ்யப்ரபந்தங்களுக்கு ஆறங்கங்கூற அவதரித்த திருமங்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய ஆறு திவ்ய ப்ரபந்தங்களுள் ஒன்றாம். (பெரிய திருமொழி, திருக்குறுந்தாண் டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் – என்பன ஆறு திவ்ய ப்ரபந்தங்களாம்.) ஸ்ரீமந்நாத முனிகள் வகுத்தருளின அடைவில் மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் பத்தாவது பிரபந்தமாக அமைந்தது இது.

ஆழ்வார் திருமடலருளிச் செய்யவேண்டிய காரணத்தையும், மடலின் ஸ்வரூபம் முதலியவற்றையும், திருமடற்பிரபந்தம் ஒரேபாட்டு என்பதற்கு உள்ள உபபத்திகளையும், ப்ராஸங்கிகமாக மற்றும் பல விஷயங்களையும் சிறிய திருமடல் முன்னுரையில் விரித்துரைத்தோம், அங்கே கண்டுகொள்க.

பரகாலநாயகி, கீழே சிறிய திருமடலில் எம்பெருமான் பதறி ஓடிவந்து மேல்விழுந்து தன்னை புணர்வதற்காக மடலூர்வேனென்று சொன்னவிடத்திலும் அவ்வெம்பெருமான் வந்து தோன்றிலனாகவே மடலெடுத்தே தீர்வதென்று தனது திண்ணிய துணிவை மீண்டும் விரிவாகக் கூறுகின்றாள் இப்பெரிய திருமடலில், சிறிய அஸ்த்ரம் விட்டதில் காரியம் கைகூடவில்லை யென்று பார்த்துப் பெரிய அஸ்த்ரம் விடுகிறாள் போலும்.

கீழே கழிந்த திருமடல் நுற்றைம்பத்தைந்து அடிகளினாலமைந்த கலிவெண்பா வாதலால் அது சிறிய திருமடலென்றும், இஃது இருநூற்றுத் தொண்ணூற்றேழடிகளினாலமைந்த கலிவெண்பா வாதலால் பெரிய திருமடலென்றும் ஸ்யவஹரிக்கலாயிற்று.

நாயகனும் நாயகியும் தெய்வ வசத்தால் ஏகாந்தமான ஓரிடத் திலே ஸந்தித்துப் பரஸ்பரம் காதல் கொண்டு கொடுப்பாரு மடுப் பாருமின்றித் தமது விருப்பத்தின்படி களவுப்புணர்ச்சி புணர்ந்து பிரிந்தபின்பு ஆற்றாமைவிஞ்சி அதனால் நாணம் முதலியன அழிந்து இவர்களுள் ஒருவர் மற்றொருவரது வடிவத்தையும் ஊரையும் பேரையும் தமது ஊரையும் பேரையும் ஒரு படத்திலெழுதி அந்தச் சித்திர படத்தைக் கையிற்கொண்டு பனை மடலினால் ஒரு குதிரை யுருச்செய்வித்து அதன் மீது தாம் ஏறி அதனைப் பிறரால் இழுப்பித்து வீதிவழியே பலருங்கூடும் பொதுவிடங்களிலெல்லாம் செல்லுபவராவர் ; இது, மடலூர்தலெனவும் மடன்மாவேறுதலெனவும் படும். இதற்குப் பயன்- இவரது இக்கடுந் தொழிலைக்கண்டு அதனால் இவரது பெருவேட்கையை யுணர்ந்து நாயகனோ நாயகியோ தானே ஓடிவந்து கூடுதல், உறவினராயினும் அரசனாயினும் வெளிப்படையாக மணஞ்செய்விக்கப் பெறுதல், இல்லையாகில் முடிந்து பிழைத்தல் எதேனுமாம். இம்மடற்றிறம் ஆடவர்க்கே பெரும் பாலும் உரியது. அளவுக்கு விஞ்சின ஆசையின் மிகுதியால் மகளிர்க்கும் சிறுபான்மை வரும். அன்றியும், மடலூர்தல் ஆடவர்க்கே உரியதென்றும், மடலூர்வேனென்று சொல்லுதல் இருபாலர்க்கு முரியதென்றும் உணர்க.

ஆழ்வாருடைய திருமடல்களிரண்டும் – “ மடலூர்வேன், மடலூர்வேன்“ என்று பகட்டினவளவே யன்றி மெய்யே மடலூர்ந்தமையில்லை. சிறிய திருமடலில் வாஸவதத்தையை எடுத்துக்காட்டினதுபோல் இப்பெரிய திருமடலில ஸீதை, வேகவதி, உலூபிகை, உஷை, பார்வதி என்னும் மாதர்களை மடலூர்ந்தவர்களாக ஆழ்வார் எடுத்துக்காட்டியிருப்பது கொண்டு ‘அந்த மாதர்கள் – மடலூர்ந்தார்கள் என்று எண்ண வேண்டா, பின்னை அவர்களை இவர் எடுத்துக்காட்டினது எதுக்காக வென்னில், கேண்மின், – “ பேறு பெறுவதற்கு ஸ்வப்ரவ்ருத்தி யொன்றுங்கூடாது, காஷ்ட லோஷ்டாதிகளான அசேதநம் போலே வாயடைத்துக் கிடக்கவேண்டும், எம்பெருமானுக்குத் திருவுள்ளமானபோது தானேபேறு பெறுவிப்பவன் என்று கொண்டிருப்பார்களின் கொள்கையைத் தள்ளி, என்னை விரைவில் சேர்த்துக்கொள், என்னை விரைவில்சேர்த்துக்கொள் என்று பதறுகை வேண்டுமென்பதை ஸ்தாபிக்க நினைத்த ஆழ்வார், ஸாமாந்யமாக உலகத்திலுள்ள பெண்கள் தங்கள் கணவனோடு சேர்வதற்கு எவ்வாறு பதறுகின்றார்களோ அவ்வாறாகவேதான் பகவத் காமுகர்களும் பகவானோடு சேர்வதற்குப் பதறவேண்டுமென்று நிரூபிக்கவேண்டி, ‘அப்படி பதறின பேர்களுண்டு, தங்கள் இஷ்ட விஷயத்தில் காதல் கிளர்ந்து நிர்ப்பந்தரூபமாகக் கலந்து மகிழ்ந்த அக்காதலிகளை யாரும் பழித்திலர், அவர்களுடைய காமத்தை மஹர்ஷிகள் கொண்டாடியே யிருக்கின்றனர்‘ என்பதற்காகச் சில பெண்ணரசிகளை எடுத்துக் காட்டின ராழ்வார் என்றுணர்க.

ஆகவே, ஆழ்வாருடைய திருவுள்ளத்தால், மடலூர்வதாவது பேற்றுக்குப்பதறுவதைக் காட்டுகிறவளவேயன்றி மற்றபடி ஹேயமான க்ரியாகலாபமல்ல வென்பதும் உயத்துணரத்தக்கது. காமத்தின் அதிசயத்தைக் காட்டும் வகையில் மடலூர்தல் என்னுஞ்சொல்லைத் தமிழர் உபயோகித்திருப்பதால், ஹேயமான காமத்தின் ஸ்தாநத்திலே பகவத் காமத்தை ஏற்றுக்கொண்ட ஆழ்வார்கள் தமது காமாதிசயத்தை அந்த மடல் சப்தத்தையிட்டே வெளியிட்டார்கள் என்னுமிதுவே ஸாரம். பகவத் காமம் அளவற்றிருந்தாலும் பதறலாமோ என்கிற சங்கைக்குப் பரிஹாரம் சிறிய திருமடலின் முன்னுரையில் விரிய வரைந்தோம்.

சிறிய திருமடல் போலவே, இப்பெரிய திருமடலும் ஸ்த்ரீத்வ பாவனையாலே அருளிச் செய்வதாம், “மானோக்கினன்ன நடையாரலரேச ஆடவர்மேல், மன்னு மடலூரா ரென்பதோர் வாசகமும், தென்னுரையிற் கேட்டறிவதுண்டதனை யாம் தெளியோம்“ – “என்னுடைய நெஞ்சுமறிவு மினவளையும் பொன்னியலு மேகலையுமாங் கொழியப் போந்தேற்கு“ – “என்னுடைய பெண்மையுமென்னலனு மென்முலையும் . . . முன்னிருந்து மூக்கின்று மூவாமைக்காப்பதோர் மன்னுமருந் தறிவீரில்லையே“ இத்யாதி ஸ்ரீ ஸூக்திகளில் ஸ்த்ரீஸமாதி வெளிப்படுமாறு காண்க.



ஆழ்வார் திருவடிகளே சரணம்


பெரிய திருமடலின் தனியன்

பிள்ளை திருநராவூரரையர் அருளிச் செய்தது.

நேரிசை வெண்பா.


பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றிசெய்யும்

நன்னுதலீர். நம்பி நறையூரர், – மன்னுலகில்

என்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில்,

மன்னு மடலூர்வன் வந்து.


நல் நுதலீர் அழகிய நெற்றியையுடைய மாதர்காள்!
பொன் உலகில் வானவரும் பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளும்
பூ மகளும் தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டியும்
போற்றி செய்யும் தோத்திரம் செய்யப்பெற்ற
நறையூரர் திருநறையூரில் எழுந்தருளியிரப்பவனும்
நம்பி கல்யாண குணபரிபூர்ணனுமான எம்பெருமான்
மண் உலகில் ப்ரவாஹதோ நித்யமான இந்நிலத்தில்
என் நிலைமை கண்டும் எனது அவஸ்தையைக் கடாக்ஷித்தும்
இரங்கார் ஆம் ஆகில் க்ருபை செய் தருளாவிடில்
வந்து திருப்பதிகள் தோறும் வந்து
மன்னு மடல் ஊர்வன் நித்யம் மடலூர்ந்து கொண்டே யிருப்பேன்.

***- இது ஆழ்வாருடைய பாவனையாகவே பேசின பாசுரம். ஆழ்வாருடைய திருநாமத்தைச் சொல்லி வணங்குதல், அவர் அவதரித்த ஊரைச் சொல்லிப் புகழ்தல் அவர் அருளிய ஸ்ரீ ஸூக்தியின் பெருமையையோ உட்கருத்தையோ எடுத்துரைத்தல் ஆகிய இவை பெரும்பாலும் தனியன்களில் வரும். இத்தனியன் அங்ஙனல்லாமல் ஆழ்வார் பிரபந்தம் பேசுகிற பாவனையாகவே அமைந்துளதென்பதும், இதனால் இத்தனியன் அருளிச்செய்த ஆசிரியர்க்கு ஆழ்வாருடைய த்யாநம் முற்றி பாவநாப்ரகர்ஷத்தால் தந்மயத்வம் உண்டாயிற்றென்பதும் அறியத்தக்கன.

நன்னுதலீர்! என்கிற ஸம்போதநம் – ஸ்த்ரீபாவமடைந்த ஆழ்வார் (பரகால நாயகி) தோழிகளை நோக்கி விளிப்பதாகக் கொள்க, பரமபதவாஸிகளான நித்யஸூரிகளும் பெரிய பிராட்டியாரும் வந்து மங்களாசாஸநம் செய்யப்பெற்ற திருநறையூ ரெம்பெருமான் என் ஆற்றாமையைக் கண்டும் ஒடிவந்து கலவி செய்தருளாவிடில் மடலூர்வது தவிரமாட்டேனென்கை. பொன்னுலகு என்று ஸ்வர்க்க லோகத்தைச் சொல்லவுமாம். பூமகனும் என்றும் பாடமுண்டு, பூவிற் பிறந்த பிரமனும் என்றபடி.

போற்றி – இகரவிகுதிபெற்ற தொழிற்பெயர், இனி, போற்றிசெய்யும் என்பதற்கு – போற்றி என்ற சொல்லைக்கொண்டு வாழ்த்தப்பெற்ற எனினுமாம், இப்பொருளில் போற்றி என்பது போற்றிய என்னும் வியங்கோளின் அநுகரணம், ஈறு தொக்கு வந்த்தென்க.

தனியன் உரை முற்றிற்று

பெரிய திருமடலின் தாத்பர்யஸங்க்ரஹம்

(இத்திருமடல் மற்றைப் பிரபந்தங்களைப்போல நாலடிகொண்ட பாட்டுடைத்தல்லாமல் மிக நீண்டதோர் பிரபந்தமாய் முழுதும் ஒரே வாக்கியார்த்தமா யிருப்பதனால், கண்டம் கண்டமாக நாம் உரையிட்டுக்கொண்டு போவதில் ஆங்காங்கு பதப்பொருள்கள் ஏற்பட்டாலும் அகண்ட வாக்கியார்த்தம் நெஞ்சிற் பதிவது அரிதாயிருக்கு மாகையாலே அக்குறை நீங்க, மூலத்தைப் பெரும்பான்மை தழுவி இப்பிரபந்தத்தில் ஸாரமான தாத்பர்யம் இங்கே எழுதப்படுகின்றது – கற்போர் தம் மனம் தெளிய).

எம்பெருமான் திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியில் சயனித்துக்கொண்டு ஸ்ரீ பூமிப்பிராட்டி திருவடி வருடப்பெற்று ஜகத் ஸ்ருஷ்டிக்காக யோக நித்திரை செய்தருளுமளவில், தனது திருநாபிக் கமலத்திலே நான்முகக் கடவுளை ஸ்ருஷ்டிக்க, அப்பிரமன் நான்கு வேதங்களை வெளிப்படுத்தினான். அந்த வேதங்களில் – தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்று நான்கு புருஷார்த்தங்கள் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் மோக்ஷ மென்பது சரீரம் முடிந்த பிறகு கிடைக்கக்கூடிய புருஷார்த்தமென்று ஓதப்பட்டுள்ளது. அப்புருஷார்த்தத்தைப் பெற விரும்புமவர்கள் கனிகளையும் இலைகளையும் தின்று தாபஸர்களாய்க் குடிசைகளில் வஸித்தும் ஸூர்ய கிரணங்களை பக்ஷித்தும் நீர் நிலங்களில் மூழ்கிக்கிடந்தும் இப்படியே பல பல பாடுகள் பட்டு முடிவில் இவ்வுடலை யொழித்து மோக்ஷத்துக்குச் சென்றார்களென்று ஏடுகளில் எழுதி வைத்திருப்பதைப் படிக்குமித்தனையேயன்றி, “ இன்னான் இன்ன காலத்தில் மோக்ஷமடைய நான் கண்டேன்” என்று மெய்யே கண்டறிந்தார் சொல்லக் கேட்டதேயில்லை. ஆகையாலே மோக்ஷமென்னும் புருஷார்த்தமே பொய்யானது. அது மெய்யே உண்டென்னில், “ ஸூர்ய மண்டலத்தைப் பிளந்துகொண்டு ஸூக்ஷமமான ரந்த்ரத்தின் வழியே போய் மோக்ஷத்தைப் பெற்று வந்தேன்” என்று வந்தாரொருவரைக் காட்டிச் சொல்லுங்கள், அங்ஙனே காட்டமாட்டாமல் “அவன் மோக்ஷமடைந்தான், இவன் மோக்ஷமடைந்தான்” என்று பழம்பாட்டையே பாடிக்கொண்டிருக்கிற அவிவேகிகளுக்கு நாம் என்ன சொல்வது!

அந்த மோக்ஷ வார்த்தையை விட்டுத் தொலையுங்கள். மற்ற தர்மார்த்த காமமென்ன்ற மூன்று புருஷார்த்தங்களுள் முதலதான தர்மத்தை அநுஷ்டித்த மஹான்கள் – தேவலோகத்திற் சென்று தேவர்களால் கொண்டாடப்பெற்றுச் சீரிய சிங்காசனத்திலே யிருந்துகொண்டு, ஆங்கு அப்ஸரஸ் ஸத்ரீகள் சாமரம் வீசிக்கொண்டே அருகே நின்று புன்முறுவல் செய்ய அதனை அநுபவித்தும், அவர்களது கடாக்ஷ வீக்ஷணங்களைப் பெற்று மகிழ்ந்தும், அங்கேயுள்ள அழகிய கற்பகச் சோலைகளிலே அந்த மாதர்களுடனே கூடி விளையாடியும், அலங்காரங்களாற் சிறந்த அழகிய மண்டபத்தில் அம்மாதர்களை வீணை வாசிக்கக்கேட்டு ஆநந்தித்தும், சிறந்த மாடமாளிகைகளில் அம்மாதர்கள் ஆச்சரியமாக விரிந்த படுக்கையின்மேல் படுத்துக்கொண்டு இனிய தென்றற்காற்று வீசப்பெற்று அழகிற் சிறந்த அம்மாதர்களின் ஸம்ச்லேஷத்தைப் பெற்றும் இப்படியாகச் சில போகங்களை அநுபவித்து மகிழ்வார்கள், இதுவாய்த்து தர்ம புருஷார்த்தத்தாற் பெறும்பேறு.

இரண்டாவதான அர்த்த புருஷார்த்தத்தின் பலனும் இப்படிப்பட்டதேயாம். (ஏனென்றால்) அர்த்தமுள்ளவர்களே தர்மமநுஷ்டிப்பவர்களாதலால் தர்மத்தின் பலனாகக் கீழ்ச் சொல்லப்பட்டது தானே அர்த்தத்திற்கும் பரம்பராய பலனாகத் தேறக்கடவது. ஆக, தர்மம் அர்த்தம் என்ற இரண்டு புருஷார்த்தங்களாலும் (கீழ் விவரித்தபடி) காமபுருஷார்த்தமே பலனாகப் பெறப்படுதலால் காமமே ப்ரதான சேஷியான புருஷார்த்தமென்றும் அறம் பொருள்கள் அக்காமத்திற்கு சேஷபூதமான புருஷார்த்தங்களென்றும் கொண்டு காமத்தையே நாம் கடைப்பிடித்தோம். அதுதன்னில், ஆபாஸமான காமத்தை யொழித்து ஸ்திரமாயும் ஸ்வரூபாநுரூபமாயுமுள்ள பகவத் காமத்தைப் பற்றினோம். அது கை புகுவதற்காக இப்போது நாம் மடலூரத் துணிந்தோம். “நாயகனை நோக்க நாயகியானவள் மடலூரத்தகாது“ என்று தமிழர் சொல்லக் கேட்டிருக்கிறோமாகிலும் நாம் இவ்விஷயத்தில் தமிழர்களின் மரியாதையை உதறித் தள்ளுவோமத்தனை, ‘ஸ்திரீகளுக்கு மடலூருகையே புருஷார்த்தம்” என்று உபபாதிக்கிற ஸ்ரீராமாயனாதிகள் சம்ஸ்க்ருத பாஷையில் உள்ளனவாகையால் நாம் அவ்வட நெறியையே பேணி மடலூரக் கடவோம்.

என்னைப்போல காம புருஷார்தத்தை விரும்பாதவர்கள் (எப்படிப்பட்டவர்களென்றால்,) சந்தநத்தின் தன்மையை அறியாதவர்கள், குழலோசையிலே ஈடுபடாதவர்கள், காளைகளின் கழுத்திலே மணி ஒலிக்க அவ்வொலி கேட்டுச் சுருண்டு விழமாட்டாதவர்கள், பனைமரத்தின்மீது வாயலகு கோத்திருக்கின்ற அன்றிற் பறவையின் ஆர்த்த நாதத்தைக் கேட்டு உருகி யிரங்காதவர்கள், நாயகனை யொழியவும் நிலாவிலே படுக்க வல்லவர்கள், மன்மதன் தனது புஷ்பபாணங்களைத் தொடுத்துப் பிரயோகிக்கவும் மடலூரப்புறப்படாமல் சலியாதே யிருப்பவர்கள், தனிக் கிடையிலே தென்றல் வந்து வீசவும் தீக்கதுவினாற் போலே வருந்துதலின்றியே பரமஸுகமாக உறங்கவல்ல அரஸிக புஞ்ஜங்கள் பின்னையும் ஒருசுற்றுத் தடிக்கட்டும், நாயக விரஹத்துக்கு வாடாதே வதங்காதே கிடந்து மேன்மேலும் செல்வங்களை அநுபவிக்கட்டும். அப்படிப்பட்ட அரஸிக ஸ்த்ரீகளைப்பற்றி நமக்குக் கவலையில்லை.

நாயகனைப்பற்றி தரித்திருக்கமாட்டாதே மடலூருமாபோலே புறப்பட்டுப் பின் சென்று மகிழ்ந்த மஹாநுபாவைகளான மாதர்களில் சிலரைச் சொல்லுகிறேன், கேளுங்கள். தசரத சக்ரவர்த்தியின் வார்த்தையை ஆதரித்துத் திருவபிஷேகத்தை யொழித்து ராஜ்யத்தை உபேக்ஷித்து மிகக் கொடிய காட்டிலே இராமபிரான் எழுந்தருள ஸீதாபிராட்டியும்கூட எழுந்தருளவில்லையா? அழகிற்சிறந்த வேகவதி யென்பா ளொரு கன்னிகை தான் தனது காதலனைக் காணவொண்ணாதபடி தமையன் தடுக்கச் செய்தேயும் அதனை லக்ஷ்யம் பண்ணாமல் பதறிச்சென்று போர்க்களத்திலே போய் நாயகனைப் பற்றிப் பிடித்து நகரத்திலே கொணர்ந்து புணர்ந்தாளன்றோ? உலூபிகை என்கிற நாக கன்னிகை அர்ஜுநனைக் கண்டு காமுற்றுத் தனது நகரத்திற்கு அவனை யழைத்துக்கொண்டு சென்று அநுபவித்து மகிழவில்லையா? மஹாபாரதத்திலுள்ள இக்கதையை நீங்கள் கேட்டதில்லையா? இன்னமும், பாணாஸுரனுடைய பெண்ணாகிய உஷை யென்பவள் சித்ரலேகை யென்னும் தன் தோழி மூலமாக அநிருத்தாழ்வானை வரவழைத்துக்கொண்டு ரமிக்க வில்லையா? உங்களுக்கு நான் எத்தனை திருஷ்டாந்தங் காட்டுவேன்? பார்வதியரனவள், ஊன்வாட வுண்ணாது உயிர் காவலிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து தான் வாட வாடத் தவஞ் செய்து பரமசிவனைப் பெற்று மகிழ்ந்தாளென்கிற கதை உங்களுக்குத் தெரியாதா? இவ்வளவும் நான் சுருங்கச்சொன்னேன், விஸ்தரித்துச் சொல்ல வ்யாஸபராசராதிகளே வல்லவர். இந்தப் பழங்கதைகள் கிடக்கட்டும்.

யானுற்றநோயை யான் சொல்லுகிறேன் கேளுங்கள் நான் திருநறையூ ரெம்பெருமானை ஸேவிக்கச் சென்று ஸந்நிதியுள்ளே புகுந்து பார்த்தேன், பார்த்தவுடனே அவ்வெம்பெருமானுடைய திருமார்பு திருவதரம் திருவடி திருக்கை திருக்கண் ஆகிய இவ்வவயவங்கள் நீலகிரிமேல் தாமரைக்காடு பூத்தாற்போல் பொலிந்தன. திருவரைநாண் திருத்தோள்வளை திருமகர குண்டலம் ஹாரம் திருவபிஷேகம் ஆகிய திருவாபரணங்கள் பளபள வென்று ப்ரகாசித்தன. அவ்வெம்பெருமான் பக்கத்தில் – அன்னம் போன்ற நடையழகும் மான் போன்ற தோளழகும், செப்புப் போன்ற முலையழகும், கோவை போன்ற வாயழகும், கெண்டைபோன்ற கண்ணழகுமுடையளான பெரிய பிராட்டியார் இளவஞ்சிக் கொடிபோலே நின்றதையுங் கண்டேன், கண்டதும் அறிவுபோயிற்று, பல விகாரங்களுண்டாயின. இப்படி வருத்தப்படாநின்ற எனக்குக் கடலோசை வந்து மேன்மேலும் ஹிம்ஸையைப் பண்ணாநின்றது, எல்லாருக்கும் இனிதான நிலா எனக்குத் தீ வீசுகின்றது. குளிர்ந்த நிலா சுடும்படியாக ஸங்கல்பித்தவனாரோ அறியேன்.

இவ்வளவேயோ? எல்லார்க்கும் ஆநந்தகரமாக மலயபர்வதத்தினின்றும் வருகின்ற தென்றல் எனக்கு அழலை வீசாநின்றது. பனைமரத்தின்மீது தாமரைத்தண்டாலே செய்த கூட்டிலிருந்து கொண்டு அன்றிற் பறவையின் பேடை லகுவான ஸ்வரத்தோடே கூவுவதும் என்னெஞ்சை அறுக்கின்றது. என்செய்வேன்? கொடியனான மன்மதனும் தனது கருப்புவில்லை வளைத்து என்னையே இலக்காகக்கொண்டு புஷ்பபாணங்களைப் பிரயோகிக்கின்றானே, நானிதற்குத் தப்பிப் பிழைக்கும்படி செய்வாராருமில்லையே! எனது தேஹகுணங்களும் ஆத்ம குணங்களும் திருக்கண்ணபுரத் தெம்பெருமானுடைய ஸம்ச்லேஷத்துக்கு உறுப்பாகாவிடில் இவற்றாலென்ன பயன்? ஒருவரும் புகக்கூடாத காட்டிலே மணமிக்க புஷ்பம் புஷ்பித்துக் கமழநின்றால் ஆர்க்கு என்ன பயன்? எம்பெருமானோடு அணையப் பெறாதே வீணாக வளர்ந்து கிடக்கின்ற இம்முலைகள் எப்போதும் கண்ணெதிரே தோன்றி நின்று மார்புக்கும் பாரமாகி வருத்துகின்றனவே, இம்முலைகள் தொலைத்தொழிய மருந்து தருவாரு மில்லையே! செவிக்கு இனிதாகக் கேட்கத்தக்க விடை மணிக்குரலும் என் காதுக்கு கடூரமாயிரா நின்றது. இந்தத் துன்பங்களெல்லாம் நீங்கி நான் வாழும் வகை ஏதேனுமுண்டோ? சொல்லீர்.

தென்றல் முதலான இவையெல்லாம் என்மேல் படையெடுக்கும்படி செய்த மஹாநுபாவன் எனக்குத் தெரியாமையில்லை, அவனாகிறான் திருத்துழாய்மார்வன், சந்திரனுக்குண்டான க்ஷயத்தைப் போக்கி காத்தருளினவன், காளமேகத் திருவுருவன்! காயாம்பூவண்ணன், கடலில் அணைகட்டி இலங்கை புக்குப் போர்களத்திலே இராவணனைக் கொன்றொழித்தவன், தேவர்களனைவர்க்கும் குலபாதகனாயிருக்க ஹிரண்ய கசிபுவை நரசிங்க வுருக்கொண்டு தன் மடிமீது போட்டுக்கொண்டு மார்பு கிழிய வதைத்திட்டவன், திருவாழி கொண்ட பெருவீரன், வராஹவதாரஞ் செய்தருளிப் பூமிப்பிராட்டியை உத்தரித்தவன், கடல் கடைந்து வானவர்க்கு அமுதளித்தவன், வாமநரூபீயாய் மாவலிபக்கற்சென்று த்ரிவிக்ரமனாகி. உலகமெல்லா மளந்தவன், ஸாக்ஷாத் ச்ரிய:பதியாயுள்ளவன் நன்கு அறிவேன்.

இப்படிப்பட்ட எம்பெருமானைத் திருவிண்ணகர் திருக்குடந்தை. திருக்கண்ணபுரம் திருநறையூர் முதலான திருப்பதிகளிலே சென்று சேவித்து “ஸ்வாமிந்! இப்படிதானா என்னைக் கைவிடுவது? விரஹம்தின்ற உடம்பைப்பாரீர்“ என்று என் அவஸ்தையை விண்ணப்பஞ்செய்வேன், அதுகேட்டுக் திருவுள்ள மிரங்கித் திருமார்போடே என்னை அணைத்துக் கொள்ளா தொழியில், மாதர்களும் வைதிகர்களும் பக்தர்களும் அரசர்களும் திரண்டுகிடக்குமிடங்கள்தோறும் புகுந்து அவனது ஸமாசாரங்களையெல்லாம் பலரறிய விளம்பரப்படுத்துவேன்.

அவை எவை யென்னில், இடைச்சேரியில் தயிர் வெண்ணெய் திருடி இடைச்சிகள் கையில் அகப்பட்டுக்கொண்டு உரலோடே கட்டுண்டு ஏங்கி யழுது நின்ற நிலைமை, -தேவேந்திரனுக்கு இட்ட சோற்றையெல்லாம் தானே பெரும்பூத வடிவுகொண்டு வயிறாரத் தின்று நின்ற வெட்கக்கேடு, -சேவகன் என்று பலரும் ஏசும்படியாகப் பாண்டவர்கட்குத் தூது சென்ற செலவு, – கூத்தாடியென்று பெண்கள் கூறும்படி குடக்கூத்தாடினமை – தன்னை யாசைப்பட்டு வந்த சூர்ப்பணகையின் காதையும் மூக்கையும் அரிந்துவிட்ட புன்மை, – ஒரு ரிஷியின் பேச்சைக்கேட்டுத் தாடகையென்ற ஒரு ஸ்த்ரீயைக் கொலை செய்த சிறுச்சேவகம், – இவை போல்வன மற்றும் பல ஸமாசாரங்களையும் தெருவிலே எடுத்துவிட்டு நாடு நகரமும் நன்கறிய மடலூர்வேன் காண்மின் – என்று தலைக்கட்டிற்றாயிற்று.

Dravidaveda

back to top