ஸ்ரீ ரஸ்து


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்


தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த

திருப்பள்ளியெழுச்சி


தனியன் உரை


(திருமாலையாண்டான் அருளிச்செய்த)


तमेव मत्वा परवासुदेवं रङ्गेशयं राजवदर्हणीयं।

प्राबोधिकी योकृत सूक्तिमालां भक्थान्ध्रि रेणुं भगवन्तमीदे॥


தமேவ மத்வா பரவாஸுதேவம்

ரங்கேஶயம் ராஜவத3ர்ஹணீயம் |

ப்ராபோதி4கீம் யோக்ருத ஸூக்திமாலாம்

ப4க்தா2ங்க்ரிரேணும் ப4க3வந்தமீடே3 ||


பதவுரை


ய: யாவரொரு ஆழ்வார்
ராஜவத் அரசனைப்போல்
அரஹநீயம் பூஜிக்கத்தக்கவராய்
ரங்கேஶயம் திருவரங்கத்தரவணையில் பள்ளி கொள்பவரான பெரிய பெருமாளை
தம் பரவாசுதேவம் ஏவ அப்படிப்பட்ட ஸாக்ஷாத் பரவாஸுதேவனாகவே
மத்வா ப்ரதிபத்திபண்ணி,
ப்ராபோதிகீம் திருப்பள்ளி யுணர்த்துமதான
ஸூக்திமாலாம் திவ்யப்ரபந்தத்தை
அக்ருத (தம்) அருளிச்செய்தாரோ (அப்படிப்பட்ட)
பகவந்தம் ஞானம் முதலிய குணங்கள் அமைந்த
பக்தாங்க்ரிரேணும் தொண்டாடிப்பொடி யாழ்வாரை
ஈடே துதிக்கின்றேன்

***- கருத்து – கோயிலிலே கண்வளர்ந்தருளுமவரான பெரியபெருமாளை ஸாக்ஷாத் பரவாஸுதேவனாகவே அநுஸந்தித்து அவர் விஷயமாகத் திருப்பள்ளியெழுச்சி யென்னும் திவ்யப்ரபந்தத்தை அருளிச்செய்த தொண்டாடிப்பொடியாழ்வாரைத் துதிக்கின்றேனென்றபடி. ராஜாக்களைப் பள்ளியுணர்த்துமாபோலே ராதிராஜனான அழகிய மணவாளனைத் திருப்பள்ளியுணர்த்துகையாலே “ராஜவதர்ஹணீயம்“ எனப்பட்டது. சக்ரவர்த்தி திருமகனாலும் ஆராதிக்கப்பெற்ற பெருமாளிறே.

“***“ “காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம் –ஸவாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம்பதம்”, “வடிவுடைவானோர் தலைவனே யென்னும் வண்திருவரங்கனே யென்னும்“ “பொங்கோதஞ்சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதுஞ் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்“ என்றிவை முதலான ப்ரமாணங்களை அடியொற்றி “தமேவ மத்வா பரவாஸுதேவம்“ எனப்பட்டது.

இவ்வாழ்வார்க்கு “பக்தாங்க்ரிரேணு“ என்றும், “தொண்டாடிப்பொடி“ என்றும் திருநாமம் நிகழ்ந்ததற்குக் காரணம் இவரது சரித்திரத்திரலே விளக்கப்பட்டது.


திருவரங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது

(இருவிகற்க நேரிசை வெண்பா)


மண்டங் குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்த்

தொண்ட ரடிப்பொடி தொன்னகரம் – வண்டு

திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி

யுணர்த்தும் பிரானுதித்த வூர்.


வண்டு வண்டுகளானவை
திணர்த்த நெருங்கிப்படிந்திருக்கப்பெற்ற
வயல் கழனிகள் சூழ்ந்த
தென் அழகிய
அரங்கத்து திருவரங்கத்தில் (கண்வளர்ந்தருள்கிற)
அம்மானை பெரிய பெருமானை
பள்ளி உணர்த்தும் திருப்பள்ளி யுணர்த்து மவராய்
பிரான் பரமோபகாரகராய்
தொண்ட ரடிப்பொடி “தொண்டரடிப்பொடி“ என்னுந் திருநாம முடையரான ஆழ்வார்
உதித்த ஊர் திருவவதரித்த திவ்யதேசமாவது
மா மறையோர் சிறந்த வைதிகர்கள்
மன்னிய பொருந்தி வாழ்தற்கீடான
சீர் சீர்மையையுடைய
மண்டங்குடி ‘திருமண்டங்குடி‘ என்கிற
தொல் நகரம் அநாதியான நகரமாகும்
என்பர் என்று பெரியோர் கூறுவர்

>

***- அழகிய மணவாளனுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடியருளின தொண்டரடிப்பொடியாழ்வார் திருவவதரித்தருளின திருமண்டங்குடியே நமக்குப் புகலிட மென்றவாறு. ஆழ்வார்களிற்காட்டிலும் அவர்கள் திருவவதாரஸ்தலமே ப்ராப்யதமம் என்ற விஶேஷார்த்தம் உய்த்துணரத்தக்கது.


தனியன் உரை முற்றிற்று

திருப்பள்ளியெழுச்சி


தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களிரண்டினுள் பிந்தியது – இப்பிரபந்தம். திரு என்னுஞ்சொல் சிறப்புப்பொருளைக் காட்டி, பள்ளிக்கு (அல்லது, எழுச்சிக்கு) அடைமொழியாய் நின்றது. பள்ளி – படுக்கை. எழுச்சி – எழுந்திருத்தல், ‘சி‘ விகுதிபெற்ற தொழிற்பெயர். படுக்கையைவிட்டெழுந்திருத்தல் என்றதாயிற்று, இது, இத்திவ்யப்பரபந்தத்திற்கு இலக்கணையால் திருநாமமாயிற்று. ஒவ்வொரு பாட்டிலும் “பள்ளியெழுந்தருளாயே“ என்று திருப்பள்ளியெழுச்சியை வேண்டுதலால். பிரபந்தத்திற்குப் பெயரிடும் வகையைக் கூறுமிடத்து, (நன்னூல் – பொதுப்பாயிரத்தில்) “முதனூல் கருத்தன் அளவுமிகுதி, பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும், இடுகுறியானும் நூற்கு எய்தும் பெயரே“ என்று கூறப்பட்டிருத்தலால் நுதலிய பொருளினால் பேர்பெற்றது இந்நூல் என்க. (நூதலிய பொருள் – நூலிற் கூறப்பட்ட விஷயம்.)

இத்திவ்யப்ரபந்த்த்திற்கு நஞ்சீயரும் பெரியவாச்சான்பிள்ளையும் மணிப்ரவாள நடையில் மிகவும் கம்பீரமான நடையில் அருளிச்செய்த வியாக்கியானங்கள் உள்ளன. பெரும்பாலும் அவற்றைத்தழுவி “திவ்யப்ரபந்த திவ்யார்த்த தீபிகை” என்னும் இவ்வுரை வரையப்படுகின்றது.


திருப்பள்ளி யெழுச்சி உரையின் அவதாரிகை


கீழ்ப் பிரபந்தமாகிய திருமாலையில் இவ்வாழ்வார் தாம் விஷயாந்தரங்களினின்றும் தமது நெஞ்சைமீட்டு பகவத் விஷயத்திலே சேர்த்தது முதலாகத்தாம் பெற்ற பேறுகளைச் சொல்லிக்கொண்டு போந்து பகவத் வைபவத்தையும் பாகவத வைபவத்தையும் பரக்க அருளிச்செய்து, எம்பெருமானோடே அணைந்து ஆநந்திக்கப் பெறவேணுமென்று பாரித்துக்கொண்டு பெரியபெருமாளருகே சென்றார், சென்றவிடத்திலே பெருமாள் திருக்கண்களாலே குளிரநோக்குதல், கையை நீட்டி, அணைத்தல், குஸலப்ரச்நம் பண்ணுதல் ஒன்றுஞ் செய்யாதே பள்ளிகொண்டருளினார். இக்கண்வளர்த்தியானது ஸம்ஸாரிகளுடைய உறக்கம் போலே சோம்பலாலன்று, ஆழ்வார் பக்கலிலே அநாதரத்தாலுமன்று. பின்னை எத்தாலே யென்னில், * சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோ டிசைந்து மாதரார் கயற்கணென்னும் வலையுள் பட்டழுந்திக்கிடந்த இவ்வாழ்வார் அக்கொடிய நிலைமையெல்லாம் நீங்கித் தன் பக்கலிலே ப்ரவணரானபடியையும், அவர்க்கு இந்த ப்ராவண்யத்தை யுண்டாக்கின தன் பெருமையையும் நினைந்துகொண்டு “நாகமிசைத் துயில்வான் போலுலகெல்லாம் நன்கொடுங்க” என்றபடி-மற்றுள்ளோரையும் இவரைப்போல தன்பக்கலிலே ஆட்படுத்திக் கொள்ளும் வழியாதுகொல்? என்று இந்சிந்தையோடே திருக்கண்வளர்ந்தருளினான்.

அவ்வெம்பெருமானை “அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே” என்று பலகாலும் திருப்பள்ளியுணர்த்தி, “தொண்டரடிப்பொடி யென்னுமடியனை அளியனென்றருளி உன்னடியார்க் காட்படுத்தாய்” என்று பாகவத பர்யந்தமான கைங்கரியத்தைக் கொண்டருளவேணுமென்று பிரார்த்திக்கிறதாய்த்து -இத்திவ்யப்பரபந்தம்.

Dravidaveda

back to top