ஸ்ரீ:
ஆழ்வார் திருவடிகளே சரணம்
திருநெடுந்தாண்டகம்
உரையவதாரிகை:-
இந்த உலகி ளிருள்நீங்க வந்துதித்து அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்களுள் பிரதானறான நம்மாழ்வார் அருளிச்செய்த சாமவேத சாரமான நான்கு திவ்யப்பிரபந்தங்களுக்கு ஆரங்கங்கூற அவதரித்த திருமங்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய ஆறு திவ்யப்பிரபந்தங்களுள் சரமப்ரபந்தமாகும் இத்திருநெடுந்தாண்டகம். [பெரிய திருமொழி, திருக்குருந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் என அடைவு காண்க.]
இது, ஸ்ரீமந்நாதமுனிகள் வகுத்தருளின அடைவில் இரண்டாவது ஆயிரத்தில் மூன்றாவது பிரபந்தமாக அமைந்தது,
“வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி வேற்கணார் கலவியே கருதி, நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்” என்றும், “சாந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்தாழ்ந்தேன்“ என்றும் தாமே அருளிச்செய்தபடி விஷயப்ரவணராய்த் திரிந்து கொண்டிருந்த இவ்வாழ்வார் தம்மை எம்பெருமான் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம் பற்றி, ‘விஷயங்களில் ஆழ்ந்து திரிகிற இவரை சாஸ்திரங்களைக் காட்டித் திருத்தமுடியாது, நம் அழகைக் காட்டியே மீட்கவேணும்‘ என்று கொண்டு தன் அழகைக் கட்டிக்கொடுக்க, ஆழ்வாரும் அதைக்கண்டு ஈடுபட்டு “வேம்பின்புழு வேம்பன்றியுண்ணாது அடியேன் நான் பின்னுமுன் சேவடியன்றி நயவேன்“ என்னும்படி அவகாஹித்தார்.
இவர் இப்படி தன் பக்கல் அவகாஹிக்கக் கண்ட எம்பெருமான் ‘இப்போது இவர்க்கு நம்மிடத்து உண்டான பற்று மற்ற விஷயங்களிற்போலல்லாமல் ஸம்பந்த வுணர்ச்சியை முன்னிட்டுப் பிறப்பித்ததாக வேணும், இல்லையேல் இப்பற்று இவர்க்கு நிலைநிற்கா தொழியினும் ஒழியும்‘ என்றெண்ணி, எல்லாப் பொருள்களையும் விளக்குவதான திருமந்திரத்தையும் தனது ஸௌசீல்யம் முதலிய திருக்குணங்களையும், திருமந்தரார்த்தத்துக்கு எல்லை நிலமான திவ்ய தேசங்களையும் ஆழ்வார்க்குக் காட்டிக்கொடுக்க வாடினேன் வாடி தொடங்கி எம்பெருமானுகந்தருளின இடமே பரம ப்ராப்யமென்று அநுபவித்தார்.
இங்ஙனம் அநுபவித்த ஆழ்வார்க்கு இவ்வநுபவம் நித்யமாய்ச் செல்லுகைக்காக இவரைத் திருநாட்டில் கொண்டு போகவேணுமெனக் கருதிய எம்பெருமான் ஸம்ஸாரத்தில் இவர்க்கு ஜிஹாஸை பிறக்கும்படி அதனுடைய தண்மையை அறிவிக்க, அறிந்தவிவர் அஞ்சி நடுங்கி மாற்றமுள வென்னுந் திருமொழியிலே “பாம்போடொரு கூரையிலே பயின்றாற்போல்” “இருபாடெரி கொள்ளியினுள் ளெறும்பேபோல்“ “வெள்ளத் திடைப்பட்ட நரியினம்போலே“ என்று தமது அச்சத்திற்குப் பலவற்றை த்ருஷ்டாந்தமாகச் சொல்லிக் கதறினார்.
இப்படி இவர் கதறிக்கதறி “பணியாயெனக் குய்யும்வகை பரஞ்சோதீ“ என்றும் “அந்தோ வடியேற்கருளா யுன்னருளே“ என்றுஞ்சொல்லி வேண்டிய விடத்தும், சிறு குழந்தைகள் பசி பசியென்று கதறியழுதாலும் அஜீரணம் முதலியவை கழிந்து உண்மையான பசி உண்டாமளவும் சோறிடாத தாயைப்போலே எம்பெருமான், ‘இவர்க்கு முற்ற முதிர்ந்த பரமபக்தி பிறக்குமளவும் நாம் முகங்காட்டுவோமல்லோம்‘ என்று உதாஸீநனாயிருக்க, ஒரு க்ஷணமும் அவனைப் பிரிந்திருக்க மாட்டாத ஆழ்வார், மிகுந்த தாஹங்கொண்டவர்கள் நீரிலே விழுந்து நீரைக்குடிப்பதும் நீரைவாரி மேலே இறைத்துக்கொள்வதும் செய்யுமாபோலே, அவ்வெம்பெருமானை வாயாலே பேசியும் தலையாலே வணங்கியும் நெஞ்சாலே நினைத்தும் தரிக்கப் பார்த்தார் திருக்குறுந்தாண்டகமென்னும் திவ்யப்ரபந்த்த்திலே.
தாஹம் அளவற்றதாயிருக்கச் சிறிது குடித்ததண்ணீர் த்ருப்தியை உண்டு பண்ணாமல் மேன்மேலும் விஞ்சியவிடாயைப் பிறப்பிக்குமாபோலே இவர் திருக்குறுந்தாண்டகத்தில் அநுபவித்த அநுபவம் பழைய அபிநிவேசத்தைக் கிளப்பிப் பெரிய ஆர்த்தியை உண்டாக்கவே “நின்னடியிணைபணிவன் வருமிடரகல மாற்றோ வினையே“ என்று ஆர்த்தராய்ச் சரணம் புகுந்தார் திருவெழுகூற்றிருக்கை யென்னுந் திவ்யப்ரபந்த்திலே.
அப்போதும் எம்பெருமான் இவருடைய அபேக்ஷிதத்தைச் செய்து தலைக்கட்டிற்றிலன், நம்போலியரை வாழ்விக்க இவ்வாழ்வார் முகமாக இன்னுஞ்சில திவ்யப்ரபந்தங்களை வெளியிடவேணுமென்ற அவாவினால் வாளா இருந்திட்டான், சக்ரவர்த்தி திருமகன் ஸமுத்ரராஜனைச் சரணம்புகுந்து வழிவிடுமாறு வேண்டினவிடத்தும் அக்கடலரையன் இறுமாப்பையே பாராட்டி முகங்காட்டாமல் அலக்ஷியஞ் செய்துகிடக்க, பெருமாள் சீறிச் சிவந்த கண்ணினராய் “ஸாகரம் சோஷயிஷ்யாமி – சாபமாநய ஸௌமித்ரே – பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா – இதோ இக்கடலை வற்றச்செய்துவிடப்போகிறேன், லக்ஷ்மணா! சார்ங்க வில்லைக்கொண்டுவா, – வாநர முதலிகள் காலாலே நடந்து செல்லட்டும், ஒரு க்ஷணத்திலே இக்கடல் படுகிற பாடு பாருங்கள்“ என்றருளிச் செய்து ஸமுத்ரராஜனை அழிக்க முயன்றாப்போலே, இவ்வாழ்வாரும் ‘நமது அபேக்ஷிதத்தை நிறைவேற்றாத எம்பெருமான் ஏதுக்கு? அவனுடைய ஸ்வரூப குண விபூதிகளையும், அவன் உகந்து எழுந்தருளியிருக்கு மிடங்களையும் அழித்துவிடுவோம்‘ என்று அவற்றை அழிக்கப் பார்த்தார் சிறிய திருமடலிலும் பெரிய திருமடலிலும்.
அதுகண்ட எம்பெருமான் ‘இனி இவர்க்கு நாம் முகங்காட்டாதொழியில் ஜகத்து ஈச்வரனற்றதாய்விடும்‘ என்று நிச்சயித்து ப்ரஹலாதாதிகளுக்கு முகங்காட்டினாப் போலே இவர்க்கும் முகங்காட்டித் தானும் இவரும் ஜகத்தும் உண்டாம்படி பண்ணியருள அதனாலுண்டான ஸந்தோஷாதிசயத்தைப் பேசித் தலைக்கட்டுகிறார் இத்திருநெடுந்தாண்டகத்தில்.
இப்பிரபந்தம் முப்பது பாசுரங்கள் கொண்டது. இது விஷய வைலக்ஷண்யத்தாலே, முதற்பத்து, தாமான தன்மையிலே அருளிச்செய்த்து, இரண்டாம்பத்து திருத்தாயார் வார்த்தையாக அருளிச்செய்த்து, மூன்றாம்பத்து, தோழியோடே வ்ருத்த கீர்த்தநம் பண்ணுகிற தலைமகள் வார்த்தையாக அருளிச்செய்த்து.
கூரத்தாழ்வான் திருக்குமாரரான பட்டர் இத்திருநெடுந்தாண்டகத்திலே மிகவுங் கருத்து ஊன்றி இதன் அழ்பொருளில் ஈடுபட்டு ‘திருநெடுந்தாண்டக சாஸ்திரம் வல்லவர்‘ என்று ஒரு பெயர் பெற்றவராய் இப்பிரபந்த்த்தின் அர்த்தத்தை தமது திருவோலக்கத்திலே பலகாலும் பரக்க உபந்யஸிப்பராம். அதுகேட்டு எம்பெருமானாருடைய பஞ்சாசாரியர்களுள் ஒருவரான திருவரங்கப்பெருமாளரையர் மிகவியந்து ‘முன்பு ஓர் ஆசாரியரிடத்திலும் இப்படி பொருள்கேட்கப் பெற்றதில்லை, இப்பொழுது இவரிடத்திலே இது கேட்கப்பெற்றோம்‘ என்று கொண்டாடிப் பட்டரை மிகவும் நன்கு மதிக்கலானார் என்று பிரஸித்தம்.
தாண்டகம் என்பது ஓர்வகைப் பிரபந்தம். இது அறுசீராலாவது எண்சீராலாவது இஷ்டதேவதையைப் புகழ்ந்துபாடுவது. அறுசீர்கொண்டது குறுந்தாண்டகம், எண்சீர் கொண்டது நெடுந்தாண்டகம். நெடுந்தாண்டகத்தில் அடிதோறும் (மெய்யெழுத்துப்பட) இருபத்தாறெழுத்துக்ள் குறைவின்றி யிருக்கவேணுமென்கிற நிர்ப்பந்தமு முண்டு.