ஸ்ரீ:

திருச்சந்தவிருத்தம்


திருமழிசைப்பிரான் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்கள் இரண்டினுள் இரண்டாவது- இது. முதலாவது- நான்முகம் திருவந்தாதி. அது நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாகிய ‘இயற்பா’ என்பதில் சேர்க்கப்பட்டுள்ளது; இது- முதலாயிரத்தைச் சேர்ந்தது.

விருத்தம்- வ்ருத்தமென்கிற பதமே இங்கு விருத்தமெனத் திரிந்திருப்பதாகக் கொள்க. செய்யுளைக் குறிக்கிற இப்பொதுமொழி, இங்கே சிறப்பாய் (எழுசீர்க்கழி நெடிலடி) ஆசிரியவிருத்த மென்னும் ஒருவகைச் செய்யுளை உணர்த்தி நூலுக்குக் கருவியாகு பெயராய்த்து.

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என ஆறு உறுப்புகளைப் பெற்று வருகிற பா- வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நால்வகைப்படு மென்பதும், இப்பா நான்கிற்கும்- துறை, தாழிசை, விருத்தம் என இனம் மூன்று உளவென்பதும் யாப்பிலக்கணம் பயின்றவர் எளிதிலறிந்ததேயாம். ஆகவே, பாலினம் மூன்றலுள் ஒன்றான விருத்தத்தின் பாற்படும் ஆசிரியவிருத்தமாகிய இத்திவ்யப்ரபந்தம்- பொதுப்பெயராற் குறிக்கப்பட்டுளதென்றறிக.

இனி, சந்தவிருத்தமாவது ஏன்? எனில்; கலிவிருத்தம், வஞ்சிவிருத்தம், ஆசிரியவிருத்தம் என்றாற்போலத் தனியே சந்தவிருத்தமென்று ஒன்று கிடையாது. இனிய ஓசையால் அமைந்த விருத்தமே சந்தவிருத்தமெனப்படும். ஆசிரியவிருத்ததால் அமையும் மற்ற பாசுரங்களிலும் இத்திவ்ய ப்ரபந்தத்திற் பாசுரங்கள் மிகவும் இனிய ஓசையை உடையனவாயிருத்தலால், இதனைச் சந்தவிருத்தமென்றது தகுமென்க. எனவே, பெரும்பாலும் ஒன்றுமுதல் ஆறு சீர்கள் மாச்சீர்களும், எழாஞ்சீர் விளச்சீருயாமன கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரியச் சந்தவிருத்தமென்றதாயிற்று. தான தான தான தான தான தான தானனா-என்பது இப்பிரபந்தத்திற்குப் பெரும்பாலும் சந்தக்குழிப்பாம்.

இனி, இப்பிரபந்தத்தைக் கலி விருத்தமாகக் கொள்வாருமுளர். எந்தவிருத்தமாகக் கொண்டாலும் ஓசையின் இனிமை ஒப்பற்றதாகையால் சந்தவிருத்தமென்கை சிறப்புடைத்தேயாம்.


திருச்சந்த விருத்தத்தின் தனியன்கள்


தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர்தீரத்

திருச்சந்த விருத்தஞ்செய் திருமழிசைப் பரன்வருமூர்

கருச்சந்துங் காரகிலுங் கமழ்கோங்கு மணநாறுந்

திருச்சந்தத் துடன்மருவு திருமழிசை வளம்பதியே.


தரு சந்தம் பொழில் தழுவு தாரணியின் வ்ருக்ஷங்களினுடைய அழகையுடைய சோலைகளாலே சூழப்பட்ட பூமியிலே உள்ளவர்களுடைய
துயர் தீர துக்கம் தீரும்படியாக
திருச்சந்த விருத்தம் செய் ‘திருச்சந்த விருத்தம்’ என்னும் திவ்யப்ரபந்தத்தைச் செய்தருளிய
திருமழிசை பரன் வரும் ஊர் திருமழிசைப்பிரான் திருவவதரித்த திவ்ய தேசம் எதுவென்றால்
கரு சந்தும் பெருமை பொருந்திய சந்தன மரங்களும்
கார் அகிலும் கறுத்த அகிற்கட்டைகளும்
கமழ் கோங்கும் மணம்மிக்க கோங்குமரங்களும்
மணம் நாறும் பரிமளம் வீசப்பெற்றதாய்,
திரு பெரிய பிராட்டியார்
சத்தத்துடன் அபிநிவேசத்தோடு
மருவு பொருந்திவாழப்பெற்றதான
திருமிழிசை வளம் திருமழிசை என்றும் செல்வம் மிக்க திருநகரியே
பதியே யாம்.

***- எம்பெருமானைக் காட்டிலும் அவன் உகந்து எழுந்தருளியிருக்கும் திருப்பதிகளே பரமோத்தேச்யம் என்னுமிடம் தோற்றக் “கண்டியூரரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லையென்று, மண்டினார் உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே” என்றும், “விண்ணகரம் வெஃகா விரி திரைநீர் வேங்கடம்” என்றும் “திருநறையூர் மணிமாடஞ் சேர்மின்களே” என்றும் “பதியே பரவித் தொழும் (தொண்டர் தமக்குக் கதியே!” என்றும் அருளிச் செய்திருப்பதுபோல, ஆழ்வார்களைக் காட்டிலும் அவர்கள் திருவதார ஸ்தலங்களே ப்ரபந்நர்க்குப் போற்றத்தக்கவை என்பதை விளக்குவதற்காகத் திருமிழிசையாழ்வார் பக்கலுள்ள பக்திப்ரகர்ஷத்தின் பரீவாஹமாக அவருடைய திருவவதார ஸ்தலத்தைப் புகழ்ந்து பேசுவது- இப்பாட்டு.


திருநக்ஷத்ரத் தனியன்


மகாயாம்மகரேமாஸி சக்ராம் சம்பார்க்கவோத்பவம்

மஹீஸாரபுராதீசம் பக்திஸாரமஹம்பஜே


தனியன்.

சக்திபஞ்சமயவிக்ர ஹாத்மநே சுக்திஹாரஜிதசித்தஹாரிணே முத்திதாயகமுராரிபாதயோர் பக்திஸாரமுநயேநமோநம:


உலகு மழிசையு முள்ளுணர்ந்து தம்மிற்

புலவர் புகழ்கோலால் தூக்க – உலகுதன்னை

வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே

வைத்தெடுத்த பக்கம் வலிது.


புலவர் ஸர்வஜ்ஞராகிய சதுர்முகர்,
உலகும் (திருமழிசை தவிர மற்ற) எல்லா வுலகங்களையும்
மழிசையும் திருமழிசையையும்
தம்மில் உள் உணர்ந்து (தனித்தனியே) தம்நெஞ்சில் ஆராய்ந்து (விச்வகர்மாவைக் கொண்டு)
புகழ் கோலால் துக்க துலாக்கோல் நாட்டி நிறுப்பிக்க
உலகுதன்னை வைத்து எடுத்த பக்கத்து உலகங்களை எல்லாம் வைத்து நிறுத்த தட்டிற்காட்டிலும்
மா நீர் மழிசை வைத்து எடுத்த பக்கமே வலிது சிறந்த நீர்வளம் மிக்க திருமழிசையை வைத்து நிறுத்த தட்டே வலிமிக்கதாயிருந்தது (தாழ்ந்தது.)

***- ஸ்ரீபக்திஸார முநிவரர் திருவவதரித்த திவ்ய க்ஷேத்ரமாகிய திருமழிசையின் அநந்ய ஸாதாரணமான ஏற்றம் இதனால் கூறப்படுகின்றது.

பண்டொருகால், வஸிஷ்டர் பார்க்கவர் முதலிய பல ப்ரஹ்மர்ஷிகள் ஸத்யலோகத்தைச் சார்ந்து அங்குத் தலைமைபூண்டு வீற்றிருக்கின்ற சதுர்முக ப்ரஹ்மாவைத் திருவடி தொழுது கூப்பியகையராய் “இஹபர மோக்ஷமாகிற மூன்றிடங்களின் பேற்றையும் பெறுதற்கு ஏற்ற முயற்சி செய்யத்தக்க தலமாக விருத்தலால் அனைத்துலகங்களுள்ளுஞ் சிறந்ததான, பூலோகத்திலே ச்லாக்கியமான க்ஷேத்ரம் இன்னதென்று தெரிந்து அங்குச்சென்று பெருந்தவமியற்றக் கருதி இப்பொழுது ஈங்கு வந்த எங்களுக்கு அத்தகைய திவ்யஸ்தானம் இன்னதென்று துணிந்து உரைத்தருள வேண்டும்” எனவேண்ட, அவ்வேண்டுகோளுக்கு இரங்கிய த்ரிபுவநகர்த்தாவாகிய சதுர்முகர் உடனே தேவசிற்பியான விச்வகர்மாவை வரவழைத்து “இம்முனிவர்கள் காணத் துலாக்கோள் காட்டி அதன் ஒரு தட்டில் ஐம்பது கோடி யோஜனை விஸ்தீர்ணமான பூமி முழுவதையும், மற்றொரு தட்டின் திருமழிசையென்னும் புண்யக்ஷேத்ரமொன்றையும் வைத்து நிறுப்பாய்” என்று சொல்ல, அங்ஙனம் அவன் செய்தவளவிலே, மண்ணுலக முழுவதையும் நாட்டியதட்டு இலேசுபட்டு மேலோங்கி நிற்க, திருமழிசைப் பதியையிட்டதட்டு கனம்பெற்றுத் தாழ்ந்துநின்றது. அவ்வேறுபாட்டை நான்முகன் அந்த முனிவர்கட்கு நன்கு எடுத்துக்காட்டி அந்த மழிசைப்பதிக்கு மஹீஸார க்ஷேத்ரமென்று காரணப் பெயர்கூறி, அதிற்போயிருந்து தவம் புரிந்து உயர்கதிபுகுமாறு அநுமதிதந்து அவர்களை அனுப்ப; அங்வண்ணமே அம்முநிவரர்கள் அவ்விடத்தை யடைந்து தவம்புரிந்தனர் என்ற புராண வரலாறு இங்கு அறியத்தக்கது. :

ஸகலபூதலங்களிற்காட்டிலும் திருமழிசை மிக்க வீறு பெற்றது என்பதைப் பிரமன் முந்துற முன்னமேதான் ஆராய்ந்து நெஞ்சிற் கொண்டனனாதலால், “புலவர் உலகுமழிசையும் தம்மில் உள்ளுணர்ந்து” எனப்பட்டது. இங்கு, புலவர் என்றது- உலகங்களையெல்லாம் படைக்கவல்ல ஸாமர்த்தியம் பெற்ற ப்ரஹ்மாவை. இங்ஙனன்றி- “பார்க்கவாதி மஹர்ஷிகளான மஹாகவிகள்” என்பது பிள்ளைலோகஞ்ஜீயர் வியாக்கியானம்.

புகழ்க்கோல்- பெருமையை விளக்கம் துலாக்கோல். தூக்க- பிறவினைப் பொருளில் வந்த தன்வினை. துலாக்கோல்நாட்டி நிறுத்தவன் விச்வகர்மாவாயினும், அவன் ப்ரயோஜ்யகர்த்தாவாகவும் சதுர்முகன் ப்ரயோஜக கர்த்தாவாகவு மிருந்தலால் தூக்க என்னக் குறையில்லையென்க.

தனியன் உரை முற்றிற்று.


திருச்சந்தலிருத்தவுரையின் அவதாரிகை.


யதுகுலத்திலே பிறந்து ஆய்க்குலத்திலே வளர்ந்த கண்ணபிரானைப்போல, ரிஷிபுத்திரராய்ப் பிறந்து தாழ்ந்தகுலத்திலே வளர்ந்தருளின பரமதயாளுவான திருமழிசைப்பிரானுக்கு ஸர்வேச்வரன் நிர்ஹேதுகமாக *மயர்வறமதி நலமருளி, தன்னுடைய திவ்யாத்மஸ்வரூபத்தையும், ஞானம் சக்தி முதலிய கல்யாணகுணங்களையும், இவற்றுக்கு ப்ரகாசமான திவ்யமங்கள விக்ரஹகத்தையும், அதுக்கு அலங்காரமான திவ்யபூஷண திவ்யாயுதங்களையும், இவையெல்லாம் காட்டிலெறிந்த நிலாவாகாதபடி அருகேயிருந்து அனுபவிக்கிற பரிஜநவர்க்கத்தையும் இப்போகத்தை நித்யமாக வளர்க்கிற பரமபதத்தையும் ஸாக்ஷத்தாக ஸேவைஸாதிப்பித்தருளி, படைப்பு அளிப்புத் துடைப்புத் தொழில்களை நடத்திப்போருகிற தன் படிகளையுங் காட்டிக்கொடுத்து, ஆகவிப்படி, உபயவிபூதிநாதனான எம்பெருமான் தன் பெருமைகளை யெல்லாம் காட்டித் தந்தருளுகையாலே, இவ்வாழ்வார் இடைவிடாது அவ்வெம்பெருமானை அநுபவிப்பதிலேயே ஊன்றினவராய், மார்க்கண்டேயன் முதலானாரைப்போல் நெடுங்காலம் இவ்விபூதியிலேயே எழுந்தருளியிருந்து, “பரமபோக்யமாய்ப் பரமஸுலபமான இந்த பகவத் விஷயாநுபவத்தை நம்மைப்போலே எல்லாரும் பெறலாமாயிருக்க, பலர் இழந்து வம்ஸாரிகளாய்ப் பட்டுப்போவதற்கு அடி என்?” என்று ஆராய்ந்து ஸம்ஸாரிகள் பக்கலிலே கண்வைத்தார்.

தாம் சுத்தஸத்வநிஷ்டராயிருப்பதற்கு எதிர்த்தடையாக அவர்கள் ரஜோகுணத்தாலும் தமோகுணத்தாலும் கலங்கி ராஜஸதாமஸ புராணங்களிலே ஊன்றி, தலையறுத்துப் பாதகியானவனும் தலையறுப்புண்டு வருந்திநின்றவனுமான தேவதாந்தரங்கள் பக்கலிலே பரத்வபுத்தி வைத்து அதுவே காரணமாக அநர்த்தப்படுகிறபடியை உணர்த்து அது பொறுக்கமாட்டாமே “ஸ்ரீமந்நாராயணனே பரதத்துவமென்னும் அர்த்தத்தை இவர்களுக்கு உபதேசித்தால் இவர்கள் உஜ்ஜீவிக்க விரகாம்” என்று திருவுள்ளம்பற்றி “நான்முகனை நாராயணன் படைத்தான்” என்று தொடங்கித் திருவந்தாதிமுகமாக ஸ்ரீமந்நாராயணனது பரத்துவத்தைப் பலவாறாக அருளிச்செய்தவிடத்தும், அவர்கள் இச்சுவடறிந்து திருந்திவரக் காணாமையாலே,


“ஆரானு மாதானுஞ்செய்ய, அகலிடத்தை

ஆராய்ந்து அதுதிருத்தலாவதே! – சீரார்

மனத்தலை, வன்துன்பத்தை மாற்றினேன், வானோர்

இனத்தலைவன் கண்ணனால் யான்”


என்று பெரிய திருவந்தாதியில், நம்மாழ்வார், பிறர் துன்பத்திற்குக் கரைவது தவிர்ந்து தான்பெற்ற பேற்றிற்கு உகந்தருளினாற்போலவும், திருவாய்மொழியில் “அணைவதரவணைமேல்” என்னுந் திருவாய்மொழியினால் எம்பெருமானுடைய மோக்ஷப்ரதத்வத்தை ஸம்ஸாரிகட்குப் பரக்க உபதேசித்தவிடத்தும் அவர்கள் திருந்திவந்து சேரக்காணாமல் “கார்முகில்போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே” என்று – தாம் பெற்ற பேற்றை இனிதாகப் பேசி மகிழ்தாற்போலவும், இவரும், “ஆ! எம்பெருமானுடைய திருவருள் நம்மேல் ப்ரவஹித்தவாறு என்கொல்! மற்ற பேரைப்போலே நாமும் விஷயாந்தரங்களிலும் தேவதாந்தரங்களிலும் கால்தாழ்ந்து பாழ்பட்டொழியாமே அவ்வெம்பெருமானுடைய பரவ்யூஹவிபவாந்தர்யாம் யர்ச்சாவதாரங்களென்னும் நிலைகளிற் பெருமையை வாய்வெருவுவதே நமக்குப் போதுபோக்காம்படி நாம் பெற்ற பாக்கியம் என்னே!” என்றிப்புடைகளிலே, தமக்குப்பிறந்த லாபங்களைப் பேசுகிறார். இத்திருச்சந்த விருத்தத்தால்.


வாழித் திருநாமம்

அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே

அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே

இன்பமிகு தையின் மகத் திங்குதித்தான் வாழியே

எழிற்சந்த விருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே

முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே

முழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே

நன்புவியில் நாலாயிரத்து முந்நூற்றான் வாழியே

நங்கள் பக்தி சாரரிரு நற்பதங்கள் வாழியே.


Dravidaveda

back to top