ஸ்ரீ:

குலசேகராழ்வார் திருநக்ஷத்ர தனியன்.


कुम्भे पुनर्वसौ जातं केरले चोलपट्टणे।
कौस्तुभांश धराधीश कुलशेखरमाश्रये ॥

கும்பே4 புநர்வஸௌ ஜாதம் கேரளே சோளப்பட்டணே|
கௌஸ்துபா4ம்ஶம் த4ராதீ4ஶம் குலஶேக2ரமாஶ்ரயே||


घुष्यते' यस्य नगरे रङ्गयात्रा दिनेदिने ।
तमहं शिरसा वन्दे राजानं कुलशेखरम् ॥

குஷ்யதே பஸ்ய நகரே ரங்கயாத்ரா தி3நேதி3நே |
தமஹம் ஶிரஸா வந்தே3 ராஜாநம் குலஶேக2ரம் ||


வாழித்திருநாமம்.


அஞ்சனமாமலைப்பிறவி ஆதரித்தான் வாழியே
அணியரங்கர் மணத்தூணை அமர்ந்தசெல்வன் வாழியே
வஞ்சிநகரந்தன்னை வாழ்வித்தான் வாழியே
மாசி தனிற்புனர்ப்பூசம் வந்துதித்தான் வாழியே
அஞ்சலெனக்குடப்பாம்பில் அங்கையிட்டான் வாழியே
அனவரதம் ராமகதை அகமகிழ்வோன் வாழியே
செஞ்சொன்மொழிநூற்றஞ்சும் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே.


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.


ஸ்ரீ:

குலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்.


மயர்வற மதிநல மருளப்பெற்ற
குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த
பெருமாள் திருமொழி.


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.


பெருமாள் கோயில் பிரதிவாதிபயங்கரம் செந்தமிழ்ச்செல்வர் -
அண்ணங்கராசார்ய ஸ்வாமிகளால்,

இலக்கண முறைமைக்கு இணங்கும் வகையால் எல்லார்
தமக்கும் இன்பம் பயக்குமாறு எளிய நடையில் தெளிய
எழுதப்பட்ட “அருளிச்செயலமுதம் " என்னும் உரையுடன்


குலசேகராழ்வாரைக் குலசேகரப் பெருமாள் என்று வழங்கும் ஸம்ப்ரதாய முளதாதலால் இங்குப் பெருமாள் என்றது குலசேகராழ்வாரை எனக் கொள்க. திருமொழி என்பதற்குச் சிறந்த வார்த்தை என்பது பொருள் ; ஸ்ரீ குலசேகராழ்வாருடைய ஸ்ரீஸுக்தி என்றதாயிற்று. பெருமாளென்னும் மறு பெயரையுடைய குலசேகராழ்வார் திருவாய்மலர்ந்தருளிய திவ்யப் ப்ரபந்த மென்பது கருத்து. குலசேகராழ்வார் க்கு - பெருமாள் ' என்ற திருமாலின் பெயர் வழங்கிய காரணம் அவரது சரித்திரத்தில் விளக்கப்பட்டது.

இங்ஙனன்றி ‘பெருமாள் திருமொழி' என்பதற்கு - திருமாலின் விஷயமான திவ்ய ப்ரபந்தமென்றும் பொருள் கொள்ளலாமாயினும் அது ஸம்ப்ரதாயமன்று. அன்றியும், அங்ஙனம் பொருள் கொள்ளுமிடத்து, இத் தொடர்மொழி, வைஷ்ணவ திவ்ய ப்ரபந்தங்கட்கெல்லாம் திருநாமமாகத் தக்கதாய், இந்த ஒரு பிரபந்தத்துக்கு மாத்திரம் காரணப் பெயராவதற்கு ஏலாதாம். ‘பெரியாழ்வார் திருமொழி' ‘நாச்சியார் திருமொழி' என்ற இடங்களிற்போல, ‘பெருமாள் திருமொழி' என்ற பெயரிலும், தொக்குநின்ற ஆறாம் வேற்றுமையுருபு - செய்யுட்கிழமைப் பொருளதென அறிக.

தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்யப்ரபந்தத்துள் முதலாயிரத்தில் ஐந்தாவது பிரபந்தமாகிய இத்திவ்ய ப்ரபந்தம் ஸ்ரீராமாயண ஸாரமெனப்படும்.

இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை மணிப்ரவாள நடையில் சிறந்த வியாக்கியானஞ் செய்துள்ளார்; அதனைத் தழுவி வேறுவிஷயங்களையுஞ் சேர்த்து இதற்கு அடியேன் ஓர் உரை எழுதத் தொடங்குகின்றேன்; குற்றங் குறைகளைப் பெரியோர் பொறுத்தருள்வாராக.



இந்நூலாசிரியராகிய
குலசேகராழ்வார் வைபவம்.


சேரநாட்டில் கோழிக்கூடு என்னும் ராஜதானியில் அரசாண்ட த்ருடவ்ரதன் என்ற அரசன் வெகுநாளளவும் பிள்ளையில்லாத குறையால் திருமாலுக்கு விசேஷமான ஆராதகத்கைச் செய்ய, அதன்பயனாக அவனுக்கு ஒரு குமாரன் கலியுகம் பிறந்த 28 - ஆம் வருஷமான பராபவ வருஷத்து மாசிமாதத்தில் புனர்வஸு நக்ஷத்திரத்திலே, பட்டத்து இராணியினிடத்தில் திருவஞ்சிக்களமென்ற ஊரிலே கௌஸ்துபாம்ஶமாய் அவதரித்தனன். அச்செய்தியை அறிந்த அரசன் ஆநந்தக் கடலில் ஆழ்ந்து, உரிய காலத்தில் நாமகரணஞ் செய்யத் தொடங்கி இம்மகன் தன் குலத்துக்குச் சிரோபூஷணம் போலச் சிறப்புத்தந்து யாவராலுங் கொண்டாடத் தக்கவனெனக் கொண்டு ‘குலசேகரன்’ எனப் பெயரிட்டான்.

பின்பு அவ்விள மகன் நாளொருவண்ணமும் பொழுதொரு மேனியுமாகச் சுக்கிலபக்ஷத்துச் சந்திரன் போல வளர்ந்து சௌளமும் உபநயமும் தக்க பருவங்களில் தந்தையாற் செய்விக்கப் பெற்று, நல்லாசிரியரைத் துணைக்கொண்டு நான்கு வேதங்களையும் ஆறு சாஸ்திரங்களையும் தநுர்வித்தையையும் மற்றும் அரசர்க்கு உரிய நீதி நூல்களையும் யானை குதிரை தேர் முதலியவற்றின் நூல்களையும் சிறிது காலத்திலேயே ஐயந்திரிபற முற்றுங்கற்று வல்லவனாயினான். அம்மைந்தனது திறத்தைக் கண்டு களிப்புக் கொண்ட காவலன் அவனுக்கு இளவரசு முடி சூட்டினன்.

பின்னர், குலசேகரன் பராக்கிரமத்தாற் பகைவெல்லலுற்று நால்வகைச் சேனையோடு புறப்பட்டுச் சென்று, சோழபாண்டியர் முகலிய அரசர்களனைவரையும் புறங் கொடுத்தோடுமாறு வென்று அவர்களைக் கீழ்ப்படுத்தி அவர்கள் நாடுகளைத் தம் வசப்படுத்தி, இங்ஙனம் சேர சோழ பாண்டியமென்னும் தமிழ்நாடு மூன்றுக்கும் தலைமை பூண்டதனால் கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன்" என்னும்படி பலபிருதுகளைப் பெற்று மீண்டுவந்தனன். பிறகு, த்ருடவ்ரத மஹாராஜா குமாரனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்து ராஜ்ய பாரம் முழுவதையும் அம்மகன் தோளில் நிலை நிறுத்தி க்ஷத்ரிய ஜாதி முறைப்படியே தான் தவஞ்செய்து உயர்கதி பெறுதற் பொருட்டுத் தவவனஞ் சென்றான்.

தந்தையின் பிரிவுக்கு ஆற்றாது வருந்தி மந்திரிகள் தேற்றத் தேறிய மன்னவ குமாரன், மத்யஸ்த நிலைமை தவறாது, சிறியவற்றைப் பெரியவை நலியாதபடி சாமராஜ்யம் என்னுமாறு எதிரின்றி அரசாண்டு ஒரு பெண்மணியை மணந்து, கிருமாலின் தேவிமார் மூவருள் நீளாதேவியின் அம்சமான இளை என்னும் ஒரு புத்திரியையும், த்ருடவ்ரதனென்று பிதாமஹன் பெயரையே பெறும் ஒரு புத்திரனையும் பெற்றுக் கவலையற்றிருக்கையில், இம்மை மறுமை வீடு என்னும் மும்மை யின்பங்களையும் தரவல்லனாய் முதலும் முடிவும் அற்ற முழுமுதற் கடவுள் யாரோ? என்று பரதத்வ விசாரம் பண்ணத் தொடங்கிப் பலபண்டிதர்களுடனே ஶ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம் முதலிய ஸகலகலைகளையும் பரிசோதித்துப் பார்த்து வர, அதுவே ஸமயமென்று அவ்வரசனை ஆட்கொண்டு உய்விக்கக் கருதிய கருணாநிதியான கமலக் கண்ணனது திருவருள் நோக்கத்தால் ஸ்ரீமஹாவிஷ்ணுவே சிறந்த தெய்வமென்கிற ஸத்யமான ஸித்தாந்தம் அவனது ஞானக் கண்ணுக்குத் தெள்ளிதிற் புலப்பட்டது.


இப்படி எம்பெருமானை எல்லாவுயிர்கட்கும் இறைவனாக அறிந்து அப்பிரானது அநந்த கல்யாண குணகணங்களாகிய பெருங்கடலில் ஆழ்ந்து நெஞ்சுருகி ஈடுபட்ட இந்தக் குலசேகராழ்வார், திருமாலின் விபவாவதாரங்களில் ஸ்ரீராமாவதார கிருஷ்ணாவதாரங்களி னிடத்திலும் அர்ச்சாவதாரத்தில் திருவரங்கம் திருவேங்கடம் முதலிய திவ்யதேசத்து எம்பெருமான்களிடத்திலும் மிக்கபக்கிப்பெருங்காதல் கொண்டு, ஸ்ரீராமாயண காலக்ஷேபத்தையே எப்போதும் தமக்குப் போது போக்காகப் பெற்றும் ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்டால் எதிர்கொண்டு அழைத்து வந்து விசேஷமாக உபசரித்தும் தமது திருமாளிகைத் திருவாராதநத்தில் எழுந்தருளியுள்ள இராமபிரானுக்கும் ஸ்ரீராஜகோபாலனுக்கும் நித்யநைமித்திக உதஸவங்களைக் குறையறச் செய்துகொண்டு மிருந்தார்.


இவர், ஒருநாள் ஸ்ரீராமாயண காலக்ஷேபஞ் செய்து வருகையில், ஆரண்ய காண்டத்தில் 'இராவணன் தங்கையான சூர்ப்பணகை மூக்கு அறுப்புண்டு (தனக்குத் துணையாக இராவணனால் நியமிக்கப்பட்டு) ஜநஸ்தாநத்திலிருந்த கரதூஷணாதியரிடத்திற் போய் முறையிட்டதை யறிந்து அவர்கள் அதிஉக்ரமாக எண்ணிறந்த சேனைகளைத் திரட்டிக்கொண்டு படையெடுத்துவந்த சமயத்தில், பெருமாள், பிராட்டிக்கு காவலாக இருக்கும்படி இளைய பெருமானைப் பர்ணசாலையிலே நிறுத்தி விட்டு, தமக்கு ஒருவருந்துணையின்றித் தாம் தனியே அவ்வரக்கர்கனைவரோடும் போர்க்குச் சென்று நின்றார் என்று பௌராணிகர் சொல்லக் கேட்டவுடனே, ஸ்ரீராம சரித்திரத்தில் தமக்குள்ள மிக்க அன்பினால் வெகுகாலத்துக்கு முன்பு நட ந்த அந்தச் சரித்திரத்தை அன்று தான் நடக்கின்றதாக நினைத்து, இப்படிப்பட்ட ஸங்கட காலத்தில் எம்மால் இயன்ற உதவியைச் செய்யாது விடுவது சிறிதும் தக்கதன்று' என்று துணிந்து, தமது ஸேனைகளை யெல்லாம் போர்க்குச் சித்தமாய் முன் செல்லும்படி பணித்துத் தாமும் ஜநஸ்தாநத்தை நோக்கிப் புறப்பட்டார். அச்சமயத்தில் யாவரும் இன்னதென்று அறியாது திடுக்கிட்டு நிற்கையில், அதி நிபுணரான ஆசிரியர், இராமபிரான் தாம் ஒருவராகவே நிர்ப்பயமாகப் பெரும் போர் செய்து சத்துருக்களத்தனை பேரையும் வென்று தமது ஆச்ரமத்துக்கு மீண்டுவர, அவரைச் சீதாதேவி களிப்புடன் அணைத்து அவரது இளைப்பைத் தணித்தாள்' என்ற செய்தியை எடுத்துக் கூற, அதுகேட்ட ஆழ்வார் ஆனந்தமடைந்து ஸேனையைத் திருப்பிக்கொண்டு தாமும் பிரயாணத்தை நிறுத்தினார்.


அது முதல், இராமாயணங் கூறுபவர், எந்தெந்தப் பாகத்தில் இராமனது விஜயப்ரஸ்தாவம் வருகின்றதோ, அந்தந்தப் பாகத்தையே வளர்த்தி பயுரைத்தும், அரக்கராகியரால் இராமபிரானுக்குத் துன்பம் நேர்ந்த இடங்களை யெல்லாம் சுருக்கி யுரைத்தும் வந்தனர். இப்படி யிருக்கையில், ஒருநாள் அந்தக் குரு வேறொரு காரிய நிமித்தம் அவசியமாக வேறிடஞ் செல்லவேண்டி வந்ததனால், காலக்ஷேபஞ் சொல்லுதற்குத் தாம் வாராமல் தமது குமாரரை அனுப்பினார்.


அவர், குலசேகரருடைய இயற்கையை உணராமல் இராவணன் ஸீதையை எடுத்துப்போன வ்யஸநகரமான செய்தியை உபந்யாஸஞ் செய்ய, அது செவியிற் பட்டவுடனே குலசேகரர் மனங்கொதித்து நான் இப்பொழுதே வெகு விரைவாகச் சென்று கடல் கடந்து இலங்கையை நீறுப்படுத்தி ராக்ஷஸராஜனைப் பந்து மித்திரசோடும் போரில் தொலைத்து எனது அன்னையை மீட்டுவருவேன்' என்று சொல்லி யெழுந்து ஆயுதங்களை யெடுத்துக்கொண்டு ஸேநாஸமூஹத்தோடு இலங்கை நோக்கிப் பிரயாணமானார். அப்பொழுது விண்ணுலகத்தாரும் மண்ணுலகத் தாரும் இதைக் கண்டு பெரு வியப்புக்கொண்டு - இதன் முடிவு என்னாகுமோ?' என்று பெருங் கவலையோடு பார்த்து நின்றனர். ஆழ்வார் கடலை மநீந்தியே கடக்க நிச்சயித்துக் கழுத்தளவினதான தண்ணீரில் இறங்கிநின்ற சமயத்தில், இவரது அன்புக்கு இடமான இராமமூர்த்தி, இவரைத் தடுப்பதற்கு வேறுவகை யொன்றும் இல்லாமையைக் கருதி, தாம் நேரிலே சீதையைக் கைப்பற்றிக்கொண்டு இலக்குமணனோடு எதிரில் வந்து நின்று தரிசனந்தந்து, தமது போர் வெற்றியையும் சத்துரு விநாசத்தையும் தேவியை மீட்டதையும் தெளிவாகக் கூறி, பிறவிப் பெருங் கடலினின்று கரையேற்றுதற்கு ஒரு அறிகுறியாகுமாறு இவரைக் கரையேற்றி நகரினுட் செலுத்திவிட்டு, பின்பு மறைந்தருளினர்.

இப்படி எம்பெருமானுடைய திவ்ய சரித்திரங்களைக் கேட்பதில் மிக்க அன்புடையரான குலசேகரர், புராணங்களிற் கூறப்பட்ட ஸ்ரீரங்க க்ஷேத்ர மேன்மையைக் கேட்டு, திருவரங்கத்தை நோக்கிப் பிரயாணப்பட்டுச் செல்லுதலும், அத்திருப்பதிக்குச் செல்ல வேண்டுமென்ற விருப்பமும் ஸகல கருமங்களையும் தொலைக்கும்' என்ற தன்மையையும், அக்கோயிலில் நித்யவாஸஞ் செய்தலும் நம்பெருமாளைக் கண்ணாரக் கண்டு களித்தலும் பேரின்பத்தைத் தரும்' என்ற தகைமையையும் உணர்ந்து அங்குப் போவதற்கு மிக்க குதூஹலமுடையாய்ப் பரிவாசங்களோடு புறப்படுபவரானார்.


இவர் இவ்விடத்தை விட்டு அவ்விடத்துச் சென்று பெரிய பெருமாளைச் சேவிப்பாராயின் பின்பு இங்கு மீளுதல் அரிது என்றும், அங்குத்தானே நித்யவாஸஞ் செய்யக்கருதி விடுவரென்றும் நினைத்து அந்த யாத்திரையைத் தடுப்பதற்கு ஆலோசித்து மந்திரிகள் ஒருபாயஞ் செய்தனர் : அது யாதெனில் :- இவர் ஸ்ரீவைஷ்ணவர்களை உபசரிப்பதில் மிக்க விருப்பமுள்ளவராதலால் அநேக பாகவதர்களை அமைச்சர்கள் வரவழைத்து இவர் முன் செலுத்த இவர் அறுபதினாயிரம் வருஷகாலம் விஷ்ணுவை ஆசாதநஞ்செய்த பயனும், ஒருகால் வைஷ்ணவர்களைப் பூஜித்த பேற்றுக்கு ஈடாகாது' என்ற சாஸ்திர முறைமையை அறிந்தவராதலால் ஸ்ரீரங்க யாத்திரையை நிறுத்தி, ஷோடசோபசாரத்தோடு திருமாலடியார்களைப் பலவாறு உபசரித்தார். இவ்வாறு இவர் திவ்யதேச யாத்திரை தொடங்கும் பொழுதெல்லாம் மந்திரிகள் மெய்யடியார்களைக் கொணர்ந்துவிட்டுத் தடுத்துவந்தனர். ஆழ்வார் இங்ஙனம் அவர்களை அகங்கனிந்த அன்போடு கொண்டாடி வருகையில் அந்நாடெங்கும் ஸ்ரீவைஷ்ணவர் திரள் மிக்கது.


அரண்மனையினுள்ளும் ஆலோசனைச் சபா மண்டபத்திலும் இன்னும் அந்தரங்கமான இடங்களிலும் பாகவதர்கள் எக்காலத்திலும் சிறிதும். தடையின்றிப் போக்குவாவு செய்தலையும் தமது அரசன் பக்கல் இவர்கள் வரம்பு கடந்த ஸ்வாதந்திரியம் பாராட்டுதலையுங்கண்டு பொறாமை கொண்ட மந்திரிகள், இவர்களிடத்துக் குலசேகார்க்கு வெறுப்பை உண்டாக்கக் கருதினர். இவ்வாறு இருக்கையில், அனைவருங் கொண்டாடத்தக்க ஸ்ரீராமநவமி மஹோத்ஸவம் வந்தது. அதன் பொருட்டு, தோரணம் காட்டியும் கொடிகள் கட்டியும் வாழைமரங்களை நிறுத்தியும் நகர் முழுவதும் அலங்கரிக்கப்பட்டது. பின்பு திருக்கோயிலில் - அர்ச்சகர் இராமமூர்த்திக்கும் மற்றும் விக்ர ஹரூபமாயுள்ள எம்பெருமான் கட்கும் திருமஞ்சனஞ் செய்தற்பொருட்டு அவர்களுடைய திவ்யாபாணங்களை யெல்லாம் களைந்து வைத்தனர். பின்பு வேத கோஷத்தோடும் வாத்ய கோஷத்தோடும் திருமஞ்சனம் நடந்தேறிற்று. அச்சமயத்தில் யாவரும் ஸ்வாமி ஸேவையிலே கருத்து ஊன்றி நிற்கையில், மந்திரிகள் ஒரு நவரத்நமாலையைத் திருவாபரணத் திரையிலிருந்து எடுத்து ஒளித்துவைத்திட்டனர். பின்பு பெருமாளுக்கு அலங்காரஞ் செய்யும் பொழுது அவ்வணிகலத்தைக் காணாமல் அர்ச்சகர் கவலைப்பட்டு அரசரிடத்து அறிவிக்க, அது கேட்டு ஆழ்வார் மனங்கலங்கி மந்திரிகளை அழைப்பித்து - ‘ கள்வனை விரைவில் தேடிப்பிடியுங்கள் ' என்று கட்டளையிட்டார். அதுவே வியாஜமாக, அவர்கள் இது கொண்டுபோனவர் வைஷ்ணவரேயன்றி வேறு எவருமல்லர்; இவர்களே எப்பொழுதும் இங்கு எங்கும் தட்டின்றித் திரிகின்றவர் ; பிற னொருவன் புதியனாக வந்து அஞ்சாது இத்தொழில் செய்யான் ' என்று பாகவதர் மீது அடாப்பழி சுமத்தினர். நாராசம் புக்கது போல அக்கடுஞ் சொல் செவி புகப்பெற்ற ஆழ்வார் ஹரிபக்தர்களின் நற்குண நற்செய்கைகளை நன்றாக அறிந்தவராதலால் அவர்கள் மேற்சிறிதும் சங்கை கொள்ளாமல் அவர்களின்மீது குற்றங் கூறின தமது மந்திரிகளையே கடிந்து, வைஷ்ணவ சிகாமணிகள் ஒருபோதும் இத்தகைய கடுந்தொழிலை நினைதலுஞ் செய்யார் ; இது திண்ணம் ; இதனை உங்கட்கு உறுதிப்படுத்து தற்காக, யானே பிரமாணங்காட்டுவேன்' என்று சொல்லி, பாம்பை உள்ளிட்ட தொரு குடத்தைச் சபைமுன்பே தருவித்து, “ ஸ்ரீவைஷ்ணவர் மனம் மொழி மெய் யென்னும் த்ரிகாணத்தாலும் சுத்தராயின், இப்பாம்பு என்னை யாதொன்றுஞ் செய்யாது; இல்லையாயின், இங்நாகம் இப்பொழுதே என்னைத் தீண்டிக் கொல்லுக' என்று சபதஞ்செய்து அக்குடத்தினுள்ளே கையிட்டனர். அப்பொழுது, ஸத்யத்துக்குக் கட்டுப்படுந் தன்மையதான ஸர்ப்பம் சிறிது கொடுமையும் புரியாது தணிந்திருந்தது. அது நோக்கி, மந்திரிகள் தமது சூழ்ச்சி சிறிதும் பலியா தொழிந்ததே! என்று வருத்தமும், தேர்ந்த ஆராய்ச்சியின்றி இங்ஙனம் தவறு செய்து விட்டோமே! என்று அநுதாபமும், இனி நமது கதி என்னாகுமோ என்று பேரச்சமுங் கொண்டு நடுநடுங்கி, தாம் கவர்ந்திட்ட அந்த ஆபரணத்தை உடனே கொணர்ந்து. ஸமர்ப்பித்து, தாம் அறியாது செய்த அப்பெரும் பிழையைப் பொறுத்தருளுமாறு பிரார்த்தித்து, ஆழ்வாரது திருவடித்தாமரைகளைச் சரணமடைந்தார்கள். ஆழ்வார் மிக்க பொறுமையுடையவராதலால் மந்திரிகளின் பிழையைப் பொறுத்து, இனி நீவிர் பாகவதர்கட்கு எப்பொழுதும் பணிவிடை செய்வதே, நமது குற்றம் தீரும் வகை' என்று சொல்லிவிட, அவர்கள் அங்ஙனமே அடியவர்க்கு அடியாய்க் குறிப்பறிந்து குற்றேவல் புரிந்து பேறு பெற்றனர்.


பின்பு குலசேகரர் பொய்ம்மைக்கு இடமான அரசாட்சியில் இருப்பதற்கு இஷ்டப்படாமல் தமது குமாரனான த்ருடவ்ரதனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்து வைத்துத் தாம் திருவரங்கம் பெரியகோயிலுக்குச் சென்று நம்பெருமாளைச் சேவித்து, அவ்வழகிய மணவாளனையே தனக்கு உரிய மணவாளனாகக் கருகிய தம் திருமகளை அப்பெருமானுக்கே உரிய பொருளாகக் கொடுத்து மணஞ் செய்வித்து, பகவத் பாகவத கைங்கரியங்களை விதிமுறை வழுவாது நித்தியஞ்செய்து கொண்டு அத்திருப்பதியிற்சிலகாலம் இருந்தனர்.


பிறகு மற்றுஞ் சில திவ்யதேசங்கட்கும் யாத்திரை செய்ய எண்ணி, திருவேங்கடம் திருவயோத்தி தில்லைத் திருச்சித்திரகூடம் திருக்கண்ணபுரம் திருமாலிருஞ்சோலை திருவித்துவக்கோடு முதலிய திருப்பதிகட்குச் சென்று ஆங்காங்கு எழுந்தருளியிருக்கின்ற பெருமாளைக் கண்ணாரக்கண்டு ஸேவித்து, அப்பால், நம்மாழ்வாரது திருவவதாரஸ்தலமான திருக்குருகூர்க்கு அருகிலுள்ள பிரமதேச மென்னும் ஊரை யடைந்து, அங்கு ஸ்ரீராஜகோபாலஸ்வாமி ஸந்நிதியிற் சிலகாலம் திருத்தொண்டு செய்து கொண்டிருந்து தமது அறுபத்தேழாவது பிராயத்திற் பரம பதமடைந்தனர்.


இவர் எம்பெருமானை அநுபவிக்கும் போது அவ்வநுபவத்தாலாகிய ஆநந்தம் உள்ளடங்காமையால் அதனை வெளியே வழியவிடுவாராகி அருளிச்செய்த திவ்ய பிரபந்தங்கள் (முகுந்தமாலை என்னும் வடநூலும்), பெருமாள் திருமொழி என்னும் தமிழ் நூலுமாம்.


"அரசமர்ந்தா னடி சூடுமாசையல்லால் அரசாகவெண்ணேன் மற்றரசுதானே'' என்று கோவிந்த பாதாரவிந்தத்தைச் சிரமேற்கொள்ளுதலையே கிரீடாபிஷேகமாகப் பாவிக்கின்ற இவர், பெருமாளுடைய [இராமபிரானுடைய இன்ப துன்பங்களைத் தமது சுகதுக்கங்களாகக் கருதியதனால் இவர்க்குப் பெருமாள் என்றும் ஒரு பெயர் வழங்கும்.

இவ்வாழ்வார், “ செடியாய வல்வினைகள் தீர்க்குந் திருமாலே!. நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாயில், அடியாரும் வானவரும் அரம்பையருங் கிடந்தியங்கும், படியாய்க் கிடந்து உன்பவளவாய் காண்பேனே '' என்று வேண்டியமை பற்றி விஷ்ணுவாலயங்களில் கோயிலினுள் வாயிற்படி குலசேகரன்படி என்று இவர் பெயசையிட்டு வழங்கப்படும்.


குலசேகராழ்வார் வைபவம் முற்றிற்று.


“ மாசிப்புனர்பூசங் காண்மினின்று மண்ணுலகீர்
தேசித்திவசத்துக்கே தென்னில் பேசுகின்றேன்
கொல்லி நகர்க்கோன் குலசேகரன் பிறப்பால்
நல்லவர்கள் கொண்டாடும் நாள் ”


குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்


ஸ்ரீ:

குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள்
திருமொழி.

(பெருமாள் கோயில் பிரதிவாதி பயங்கரம்
அண்ணங்கராசாரியார்

இயற்றிய உரையோடு கூடியது.)


பெருமாள் திருமொழித் தனியன் உரை.


உடையவர் அருளிச் செய்த தனியன்.

(இருவிகற்ப நேரிசை வெண்பா.)


இன்ன முதமூட்டுகே னிங்கேவா பைங்கிளியே!
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் –
பொன்னஞ் சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோ
னெங்கள் குலசேகர னென்றே கூறு


பைங் கிளியே - பசுமைதங்கிய கிளியே!
இன் அமுதம் ஊட்டுகேன் - (உனக்கு) இனிமையானதோர் அம்ருதம் உண்ணத்தருகிறேன்
இங்கே வா - என்னருகே வருவாயாக;
தென் அரங்கம் - தென் திருவரங்கத்தைக்குறித்து
பாடவல்ல - (இனிய கவிகளை) அருளிச்செய்யவல்ல
சீர் - கல்யாண குணசாலியான
பெருமாள் - மஹாநுபாவர்
பொன் அம் சிலை சேர் நுதலியர் வேள் - விரும்பத்தக்கதாய் அழகியதான புருவத்தை நெற்றியிலே யுடைய
மாதர்கட்கு மநோஹரரானவர் --
சேரலர் கோன் - சேரவம்சத்தவர்களுக்கெல்லாம் ராஜா
எங்கள் குலசேகரன் - ப்ரபந்நரான நம்முடைய குலத்துக்குச் சிரோபூஷணமான குலசேகராழ்வார்
என்றே கூறு - என்று இதையே நீ வாய்பிதற்ற வேணும்.

கருத்துரை :-

ஸ்ரீராம பக்தரான குலசேகரப் பெருமாள் அவ்விராமபிரானது திருநாமங்களைக் கிளிக்குக் கற்பித்துவைத்து அதன் முகத்தினின்று அவற்றைக் கேட்க விரும்புமாபோலே, குலசேகர பக்தரானவர்கள் அக்குலசேகரருடைய திருநாமங்களைக் கிளிக்குக் கற்பித்து அதன் முகமாகக் கேட்க விரும்புகிறபடி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிளியை வளர்ப்பதும் அதற்கு நல்ல திருநாமங்களைக் கற்பித்து வைப்பதும், தம் வாயால் திருநாம ஸங்கீர்த்தநம் பண்ண முடியாதபடி தாம் தளர்ச்சியடைந்த காலத்து அக்கிளியைப் பேசவிட்டுச் செவிக்கினிதாகக் கேட்டுக் கொண்டிருப்பதும் வழக்கம்: " திருமாலைப் பாடக் கேட்டு, வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருகவென்று மடக்கிளியைக் கைகூப்பிவணங்கினாளே" என்ற திருநெடுந்தாண்டக மறிக. " இன்னடி சிலொடு பாலமுதூட்டி யெடுக்க வென் கோலக்கிளியை" என்றாள் ஆண்டாளும், இவ்விடங்களில் கிளி என்றது சிஷ்யனைக் கூறியபடி, “ இன்னமுத மூட்டுகேன் ” என்றது - “தொண்டர்க் கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் " (திருவாய்மொழி) என்றபடி அமுதமன்ன [--பரம போக்யமான] அருளிச் செயல்களைக் கற்பிக்கிறேன் என்றபடி. அதாவது - பிள்ளாய்! குலசேகராழ்வாருடைய திருநாமங்களை நீ செவிக்கினியவாகச் சொல்வாயாகில் கைம்மாறாக. உனக்கு அருளிச் செயல்களைக் கற்பிப்பேன் என்று சிஷ்யனை நோக்கிக் கூறுகிறபடி, இத்தனியன் எம்பெருமானார் அருளிச்செய்த தாகையால் “பைங்கிளியே!" என்ற விளி - கூரத்தாழ்வானைக் கருதிய தென்ப.

அரங்கனடியிணை தங்கு சிந்தைத் தனிப் பெரும்பித்தனாம் கொங்கர் கோன் குலசேகரன் "***" இத்யாதியை அடியொற்றித் தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் எனப்பட்டது.


"பொன்னஞ்சிலை சேர்” என்றவிடத்து, சிலை என்ற சொல் - வில் போன்ற புருவத்துக்கு வாசகமாதலால், உவமவாகு பெயர், …………. ………………………. ……………………… ……………….(*)



(மணக்கால் நம்பி அருளிச் செய்தது.)
கட்டளைக் கலித்துறை.


ஆரங்கெடப் பரனன்பர் கொள்ளாரென் றவர்களுக்கே
வாரங்கொடு குடப்பாம்பிற் கையிட்டவன்- மாற்றலரை
வீரங்கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே.


பதவுரை

ஆரம்கெட - நவரத்தின மாலையொன்று கெட்டுப்போக,
(அதனை ஸ்ரீவைஷ்ணவர்கள் களவு செய்ததாகக் கள்ள மந்திரிகள் கூற)
அவர்களுக்கே வாரம் கொடு - அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் விஷயத்திலே பக்ஷபாதம் பூண்டு
பரன் அன்பர் கொள்ளார் என்று - “பாகவதர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் களவு செய்யமாட்டார்கள்“ என்று சொல்லி
குடப்பாம்பில் கை இட்டவன் - பாம்புக்குடத்தில் கையிட்டருளியவர்,
மாற்றலரை - சத்துருக்களை
வீரம் கெடுத்த செங்கோல் - பரிபவப்படுத்திய செங்கோன்மையை உடையவரும்
கொல்லி காவலன் - கொல்லி என்கிற நகருக்கு நிர்வாஹகரும்
வில்லவர் கோன் - தநுர்வித்யை பயின்றவர்களில் தலைவரும்
சேரன் - சேரதேசத்தரசரும்
முடி வேந்தர் சிகாமணி - முடியுடை மன்னர்களிற் சிறந்தவருமான
குலசேகரன் - குலசேகராழ்வாராவர்.

கருத்துரை:--

குலசேகராழ்வார்க்குள்ள ஸ்ரீவைஷ்ணவ பக்ஷபாதாதிசயத்தைக் கூறுவது இது.

இவ்வாழ்வார் அச்சாட்சி புரியுங்காலத்து அரண்மனையினுள்ளும் ஆலோசனைச் சபாமண்டபத்திலும் இன்னும் அந்தரங்கமான இடங்களிலும் ஸ்ரீவைஷ்ணவர்கள் எப்போதும் தடையில்லாமல் போக்கு வரவு செய்தலையும், அவர்கள் எது செய்தாலும் குலசேகரர் அதனைப் பரமபோக்யமாகக்கொள்ளும்படி அவர்கள் திறத்தில் மிக்க அன்புடையரா யிருத்தலையுங்கண்டு பொறாமைகொண்ட மந்திரிகள், அந்த ஸ்ரீவைஷ்ணவர்களிடத்துக் குலசேகரர்க்கு வெறுப்பையுண்டாக்கக் கருதி, குலசேகரருடைய க்ருஹாராதனைப் பெருமாளுடைய ஒரு நவரத்நமாலையைக் தாங்கள் களவு செய்துவிட்டு அப்பழியை ஸ்ரீவைஷ்ணவர்கள் மீது ஆரோபிக்க, இஃகறிந்த குலசேகரர் ஸ்ரீவைஷ்ணவர்களின் நற்குண நற்செய்கைகளை நன்கறிந்த வராதலால் அவர்கள் மீது சிறிதும் சங்கை கொள்ளாமல் - ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒரு போதும் கெட்ட காரியஞ்செய்யார்' என்று குடப்பாம்பிற் கையிட்டு சபதம்பண்ணின வரலாறு சரித்திரத்தில விசதம்.


ஆரம் - ஹாரம் என்ற வடசொல்விகாரம். வாரம்- ப்ரீதி. கொடு= கொண்டு என்பதன் சிதைவு. குடப் பாம்பில்---பாம்புக்குடத்தில் என மொழிமாற்றுக, வில்லவர்-- வில்லவர் என்று ஒரு ராஜவகுப்பைக் கூறியவாறுமாம்.


தனியன் உரை முற்றிற்று

பெருமாள் திருமொழியின் உள்ளுறை.


திருமகள் கொழுநனான ஸர்வேச்வரன், தனக்கு அடிமை செய்து உய்தற்கு இட்டுப்பிறந்த ஆத்மாக்களை யெல்லாம் ஆட்கொண்டு உய்விக்கும் பொருட்டுப் பரமகிருபையால் (பயிர் செய்பவன் பயிர்த் தலையிலே குடிசை யமைத்துக்கொண்டு அதில் இருந்து கொண்டு அப்பயிரைப் பாதுகாப்பது போல) இந் நிலவுலகத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கிற திவ்ய தேசங்கள் நூற்றெட்டினுள் முதலதும் தலைமை பெற்றதுமான திருவரங்கம் பெரிய கோயிலில் எழுந்தருளி யிருக்கிற அடியவர்க் கெளியனான நம்பெருமாள் விஷயமாக முதல் மூன்று திருமொழிகள் ; திருவேங்கட முடையான் விஷயமாக நான்காவது திருமொழி; மலை நாட்டில் திருவித்துவக் கோட்டம்மான் விஷயமாக ஐந்தாவது திருமொழி; ஆக இப்படி அர்ச்சாவதாரங்களிலே ஈடுபட்டு பக்திபரீவாஹமாக விண்ணப்பஞ்செய்த குலசேகராழ்வார், அர்ச்சாவதாரங்களிற் போலவே விபவாவதாரங்களுள்ளும் ராமாவதாரத்திலும் க்ருஷ்ணாவதாரத்திலும் மிக்க ஈடுபாடுடையராதலால், அவற்றிற் கருத்தைச் செலுத்தி, அவற்றுள்ளும் தமக்குச் சிறிது காலமே முந்தின தாதலாற் சமீபத்ததான க்ருஷ்ணாவதாரத்தை நினைத்து, அதில் அப்பெருமானைத் தாம் அநுபவிக்கப் பெறாமற் போனமைக்கு இரங்கி, அவ்விரக்கத்தை அவ்வவதாரத்திலே ஆய்ச்சியர்கள் கண்ணபிரானோடு ஊடல்கொண்டு உரைத்த பேச்சுக்களால் ஆறாந் திருமொழியையும், கண்ணபிரானுடைய குழந்தைத் திருவிளையாடல்களை யசோதை கண்டு களித்தாற் போலத் தேவகி தானுங் கண்டு களிக்கப் பெறாமல் இழந்த தேவகிப் பிராட்டி பின்பு கண்ணனைக்கண்ட பொழுது கழிவிரக்கத்தோடு பேசின பேச்சுக்களால் எழாந் திருமொழியையும், அதன் பிறகு ஸ்ரீ ராமாவதாரத்தில் மனஞ்செல்லப் பெற்றவராய், அவ்வவதாரத்தில் கௌஸல்யை பெற்ற பேற்றைக்கருக அவள் அவ்விராமபிரானைத் தொட்டிலி லிட்டுத் தாலாட்டுக் கூறின முகத்தால் எட்டாவது திருமொழியையும், தாம் அக்காலத்தில இராமபிரானை அநுபவிக்கப் பெறாமல் இழந்தது - மைந்தனான அப்பெருமானைப் பாலப்பிராயத்திலெல்லாம் அநுபவித்து யௌவநபருவத்தில் அநுபவிக்கப் பெறாதே இழந்த தந்தையான தசரத சக்கரவர்த்தியின் தன்மை போலுதலால், இராமன் வநவாஸம் புகுமளவில் அச்சக்கரவர்த்தி அப்பிரிவை ஆற்றமாட்டாது புலம்பிய புலம்பல் முக மாக ஒன்பதாந் திருமொழியையும், செல்வச் செருக்காலும் அதிகாரத்தாலும் அஹங்கார மமகாரங்களை அடைதற் குரிய ராஜகுலத்திலே பிறந்திருந்தும் பகவானுடைய கருணையினாலும் ஆசார்யோப தேசத்தாலும் அந்தத் துரபிமானங்கள் சிறிதுமில்லா தொழியப் பகவானிடத்திற் பக்தியையும் அப்பெருமானது அடியார் களிடத்திற் பிரதிபத்தியையுமே விசேஷமாகப் பெற்றவரான இவ்வாழ்வார் “ கற்பாரி ராமபிரானை யல்லால் மற்றுங்கற்பரோ ” என்றபடி ஸ்ரீராமாவதார வைபவத்தில் மிகவு மீடுபட்டு எப்பொழுதும் ஸ்ரீராமாயணத்தையே பாராயணஞ் செய்பவரா யெழுந்தருளியிருந்தமையால் அந்த ஸ்ரீராமாயண கதையைப் பின்புள்ளாரும் எளிதாக உணர்ந்து உய்யுமாறு எல்லையில் சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற்றது முதலாத் தன்னுலகம் புக்க தீறாகவுள்ள சரித்திரங்களைச் சுருக்கமாக உணர்த்தவல்ல பத்தாந்திருமொழியையும் அருளிச்செய்து இத்திவ்ய ப்ரபந்தத்தைத் தலைக்கட்டி யருளினார்.'

Dravidaveda

back to top