ஸ்ரீ:
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
திருவெழுகூற்றிருக்கை
திருவெழுகூற்றிக்கை என்னும் இத் திவ்யப்பிரபந்தமானது இந்த உலகில் இருள் நீங்க வந்துதித்து அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்களுள் பிரதானரான நம்மாழ்வாரருளிச் செய்த சதுர்வேத ஸாரமான நான்கு திவ்யப்ரபந்தங்களுக்கு ஆறங்கங் கூற அவதரித்த திருமங்கையாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய ஆறு திவ்யப்ரபந்தங்களுள் ஒன்றாம். (பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிகை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம்- என்பன ஆறு திவ்ய ப்ரபந்தங்களாம்.)
ஸ்ரீமந் நாதமுனிகள் வகுத்தருளின அடைவில் மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் எட்டாவது பிரபந்தமாக அமைந்த்து இது.
திருவெழுகூற்றிருக்கை முன்னுரை
“வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி வேற்கணார் கலவியே கருதி, நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன்“ என்றும் “சாந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்தாழ்ந்தேன்“ என்றும் தாமே அருளிச்செய்தபடி விஷய ப்ரவணராய்த் திரிந்துகொண்டிருந்த இவ்வாழ்வார்தம்மை எம்பெருமான் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம்பற்றி ‘விஷயங்களில் ஆழ்ந்து திரிகிற இவரை சாஸ்த்ரங்களைக் காட்டித் திருத்த முடியாது, நம் அழகைக் காட்டியே மீட்கவேணும்‘ என்று கொண்டு தன் அழகைக் காட்டிக்கொடுக்க, ஆழ்வாரும் அதைக்கண்டு ஈடுபட்டு “வேம்பின் புழு வேம்பன்றி யுண்ணாது, அடியேன் நான் பின்னுமுன் சேவடியன்றி நயவேன்“ என்னும்படி அவகாஹித்தார்.
இவர் இப்படி தன் பக்கல் அவகாஹிக்கக் கண்ட எம்பெருமான் “இப்போது இவர்க்கு நம்மிடத்து உண்டான பற்று மற்ற விஷயங்களிற் போலல்லாமல் ஸம்பந்த வுணர்ச்சியை முன்னிட்டுப் பிறந்ததாக வேணும், இல்லையேல் இப்பற்று இவர்க்கு நிலை நிற்காதொழியினும் ஒழியும்“ என்றெண்ணி எல்லாப் பொருள்களையும் விளக்குவதான திருமந்த்ரத்தையும் தனது ஸௌசீல்யம் முதலிய திருக்குணங்களையும் திருமந்த்ரார்தத்துக்கு எல்லை நிலமான திவ்ய தேசங்களையும் ஆழ்வார்க்குக் காட்டிக் கொடுக்க, அவரும் “வாடினேன் வாடி“ என்று தொடங்கி எம்பெருமானுகந்தருளின இடமே பரமப்யமென்று அநுபவித்தார்.
இங்ஙனம் அனுபவித்த ஆழ்வார்க்கு இவ்வநுபவம் நித்யமாய்ச் செல்லுகைக்காக இவரைத் திருநாட்டிலே கொண்டுபோக வேணுமெனக் கருதிய எம்பெருமான் ஸம்ஸாரத்தில் இவர்க்கு ஜிஹாஸை பிறக்கும்படி அதனுடைய தன்மையை அறிவிக்க, அறிந்தவிவர் அஞ்சி நடுங்கி “மாற்றமுள“ என்னுந் திருமொழியிலே “இருபாடெரி கொள்ளியினள் ளெறும்பேபோல்“ பாம்போடொரு கூறையிலே பயின்றாற்போல்“ “வெள்ளத்திடைப்பட்ட நரியினம் போலே“ என்று தமது அச்சத்திற்குப் பலவற்றை த்ருஷ்டாந்தமாகச் சொல்லிக் கதறினார்.
இப்படி இவர் கதறிக்கதறி “பணியாயெனக் குய்யும் வகை பரஞ்சோதி!“ என்றும், “அந்தோ வருளாய் அடியெற்குன்னருளே“ என்றும் சொல்லி வேண்டினவிடத்தும், சிறு குழந்தைகள் பசி பசி என்று கதறியழுதாலும் அஜீரணம் முதலியவை கழிந்து உண்மையான பசி உண்டாமளவும் சோறிடாத தாயைப்போலே, எம்பெருமான் ‘இவர்க்கு முற்ற முதிர்ந்த பரமபக்தி பிறக்குமளவும் நாம் முகங்காட்டுவோமல்லோம்‘ என்று உதாஸீநனாயிருக்க, ஒரு க்ஷணமும் அவனைப் பிரிந்திருக்கமாட்டாத ஆழ்வார், மிகுந்த தாஹங்கொண்டவர்கள் நீரிலே விழுந்து நீரைக்குடிப்பதும் நீரை வாரி மேலே இறைத்துக்கொள்வதும் செய்யுமாபோலே, அவ்வெம்பொருமானை வாயாலே பேசியும் தலையாலே வணங்கியும் நெஞ்சாலே நினைத்தும் தரிக்கப்பார்த்தார் – திருக்குறுந்தாண்டக மென்னும் திவ்யப்ரபந்தத்திலே.
தாஹம் அளவற்றதாயிருக்கச் சிறிது குடித்த தண்ணீர் த்ருப்தியை உண்டுபண்ணாமல் மேலும் விஞ்சிய விடாயைப் பிறப்பிக்குமாபோலே, இவர் திருக்குறுந்தாண்டகத்தில் அநுபவித்த அநுபவம் பழைய அபிநிவேசத்தைக் கிளப்பிப் பெரிய ஆர்த்தியை உண்டாக்கவே, “நின்னடியிணை பணிவன் வருமிடரகல மாற்றோ வினையே“ என்று ஆர்த்தராய்ச் சரணம் புகுகிறார் – இத்திருவெழு கூற்றிருக்கை யென்னும் திவ்யப்ரபந்தத்திலே.
“திருவெழுகூற்றிருக்கை“ என்றால் என்ன?
இத்திருமங்கையாழ்வார், தமிழ்க் கவிகளில் தலையானவர் என்பது உலகறிந்த விஷயம். ஆசுகவி என்றும், மதுரகவி என்றும், சித்திரக்கவி என்றும், வித்தாரக்கவி என்றும் கவிகளில் நான்கு வகைகள் உண்டு. அருமைப்பட்டுச்சொற்களைச் சேர்த்து மஹாப்ரயாஸாமாய்ப் பாடுகையன்றியே பல நிபந்தனைகளோடு கூடிய பாடல்களையும் விரைவில் பரவசமாகப் பாடுதலாகிற ஆசுகவித்வமும், தொடையும் தொடைவிகற்பமும் செறியச் சொற்சுவையும் பொருட்சுவையும் விளங்கப் பலவகை அலங்காரங்களும் பொலியப் பாடுதலாகிற மதுரகவித்வமும், கலிவெண்பா முதலியன விரித்துப் பாடுதலாகிற விஸ்தார கவித்வமும் இவ்வாழ்வாருடைய திவ்ய ப்ரபந்தங்களாகிய பெரிய திருமொழி திருத்தாண்டகங்கள் திருமடல்களாமவற்றில் நன்கு விளங்கும்
இனி மிகுந்துள்ளது சித்ரகவித்வம். இதன் வகைகள் பல, “ஏகபாதமும் எழுகூற்றிருக்கையும், காதைக்கரப்பும் கரந்துறைச் செய்யுளும், கூடச்சதுக்கமும், கோமூத்திரியும், இவை முதலாவன சித்திரக்கவியே“ என்றும், “மாலைமாற்றே சக்கரஞ் சுழிகுளம், ஏகபாதம் எழுகூற்றிருக்கை, காதைகரப்பே கரந்துறைப்பாட்டே, பாதமயக்கே பாவின் புணர்ப்பே, கூடசதுக்கம் கோமூர்த்தியே, ஓரினத்தெழுத்தாலுயர்ந்த பாட்டே, ஒற்றுப்பெயர்த்தல் ஒரு பொருட்பாட்டே, சித்திரப்பாவே விசித்திரப்பாவே, விகற்பநடையே வினாவுத்தரமே, சருப்பதோபத்திரம் சார்ந்தவெழுத்தே, வருக்கமுமற்றும் வடநூற்கடலுள், ஒருக்குடன் வைத்த உதாரண நோக்கி, விரித்து மறைத்தும் மிறைக்கவிப்பாட்டும், தெரித்துப் பாடுவது சித்திரக்கவியே“ என்றும் இலக்கண நூல்களில் அவ்வகைகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே, எழுகூற்றிருக்கை யென்பது சித்திரக்கவிகளிற் சேர்ந்ததாம்.
சக்ரபந்தம், பத்மபந்தம், முரஜபந்தம், நாகபந்தம், ரதபந்தம் என வடமொழிப் புலவர்கள் கவநஞ்செய்வதுபோலவே தமிழர்களுஞ் செய்வதுண்டு, இவற்றின் லக்ஷணங்களும் இலக்கண நூல்களிற் கூறப்பட்டுள்ளன. ஸம்ஸ்ருத்தத்தில் சிசுபாலவத மஹா காவ்யம், யமகரத்நாகரம், பாதுகாஸஹஸ்ரம், லக்ஷ்மீஸஹஸ்ரம், ப்ரதாபருத்ரீயம் முதலிய நூல்களில் பலபல பந்தங்களில் விசித்திரமாக ச்லோகங்களை யமைத்துக் கவனஞ் செய்திருப்பதுபோலத் தமிழிலும் சில புலவர்கள் சித்திரக்கவிகள் பாடியிருக்கின்றனர். எழுகூற்றிருக்கை என்பது ரதபந்தத்தில் அமைக்கத்தக்க ஒரு பாசுரம். (ரதமாவது தேர்.) தேரின் உருவந்தோன்றக் கட்டங்கள் போட்டு அவற்றில் எண்முறையே பாசுரப்பகுதிகளை அடக்கவேண்டும். தேரானது மேற்பாகமென்றும் கீழ்ப்பாகமென்றும் இரண்டு பாகங்கொண்டதாயிருக்கும். ஒவ்வொரு பாகத்திலும் ஏழுகூறுகள் உண்டாம்படி கீறவேண்டும். அப்படி கீறும்போது, முதற்கூறு மூன்று அறையும், இரண்டாங்கூறு ஐந்து அறையும், மூன்றாங்கூறு ஏழு அறையும் நான்காங்கூறு ஒன்பது அறையும், ஐந்தாங்கூறு பதினோரறையும் ஆறாங்கூறு பதின்மூன்றையும் ஏழாங்கூறும் அங்ஙனமேயாக இப்படி ஒன்றற்கொன்று இரண்டறை மேற்பட முறையே கீறவேண்டும். மேற்பாகத்தில் தலையிலிருந்தும் கீழ்பாகத்தில் அடியிலிருந்தும் இந்த க்ரமங் கொள்ளத்தக்கது.வீரசோழியம் முதலிய இலக்கண நூல்களில் இதன் லக்ஷணம் மிக்க சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.
1 ஒன்றிய மனத்தால் | 1 ஒன்றாய் விரிந்து நின்றனை | |||||
1 ஒன்றினில் | 2 ஈர் அடி | 3 இரு வகைப் பயனாய் | ||||
1 ஒருதனி வேழந்தரந்தையை | 2 இரண் டவை அகற்றி | 3 முந்நீர் வண்ண நின் | 4 மூன்றாய் | |||
1 ஒரு மாணாகி | 2 இரு செவி | 3 முக் குணத்து | 4 நால் தோள் | 4 நான்கு அவை யாய் மூர்த்தி | ||
1 ஒருசிலை | 2 இரு பிறப்பு | 3 மும் மதத்து | 4 நான்கு உடன டக்கி | 5 ஐம்படை அங்கை யுள மர்ந் தனை | 5 ஐம்பால் ஓதியை ஆகத் திரு த்தினை | |
1 ஒரு முறையயனை யீன்றனை | 2 இரு கால் வளைய | 3 முப்புரி நூலோடு மாலூரி யிலங்கு. | 4 நால்வாய் | 5 ஐம்புலன் கத்திலுள்செறுத்து | 6 அறுசுவைப் பயனுமாயினை சுடர் விடும் | 6 அறுவகைச் சமயமுமறி வருநிலை யினை |
2 இரு மலர் தவிசில் | 3 மும்மதி ளிலங்கை | 4 நால் நிலம் வேண்டி | 5 அஞ்சிறை ப்பறவை யேறி | 6 அறுதொழ லந்தணர் வணங்… | 7 எழுலகெ யிற்றினில்கொண்டனை கூறிய | 7 எழ்விடை அடங்கச் செற்றனை |
1 ஒரு பேருந்தி | 2 இருசுடர் மீதினி லியங்கா | 3 மூவடி | 4 நால்திசை நடுங்க | 5 ஐவகை வேள்வி | 6 ஆறு பொதிசடை யோ னறிவ… | 6 அறுபத முரலும் கடந்தல் காரணம் |
1 ஒருமுறை | 2 ஈர்எயிற் றழல் வாய் வாளியி னட்டனை | 3 மூவுல களந் தனை | 4 நால்மறை | 5 ஐவாய் அரவோடு | 5 ஐம்பெரும் பூதமும் நீயே | |
1 ஒன்றிய | 2 ஈர் அடி | 3 முத்தீ | 4 நால் தோள் | 4 நால் வகைவரு ணமும் ஆயினை | ||
1 ஒரு முறை | 2 இருநீர் முடுவுள் தீர்த்தனை | 3 முக்கண் | 3 மும்பொழு தும் வருட அறிதுயி. | |||
1 ஒரு நாள் | 2 இருபிறப்பு அறுப்போர் அறியும் | 2 இருவரும் மலரன அங் கையில் | ||||
1 ஒன்றி நின்று ஆங்கு | 1 ஒருமதி முகத்து மங்கையர் | |||||
1 ஒன்றாய் விரிந்து நின்றனை | 1 ஒன்றிய மனத்தால் | |||||
2 இரு வகைப் பயனாய் | 2 ஈர் அடி | 1 ஒன்றி னில் | ||||
3 மூன்றாய் | 3 முந்நீர் வண்ண நின் | 2 இரண் டவை அகற்றி | 1 ஒருதனி வேழந்தரந்தையை | |||
4 நான்கு அவை யாய் மூர்த்தி | 4 நால் தோள் | 3 முக் குணத்து | 2 இரு செவி | 1 ஒரு மாணாகி | ||
5 ஐம்பால் ஓதியை ஆகத் திரு த்தினை | 5 ஐம்படை அங்கை யுள மர்ந் தனை | 4 நான்கு உடன டக்கி | 3 மும் மதத்து | 2 இரு பிறப்பு | 1 ஒருசிலை | |
6 அறுவகைச் சமயமுமறி வருநிலை யினை | 6 அறுசுவைப் பயனுமாயினை சுடர் விடும் | 5 ஐம்புலன் கத்திலுள் செறுத்து | 4 நால்வாய் | 3 முன்புரி நூலோடு மாலூரி யிலங்கு… | 2 இரு கால் வளைய | 1 ஒரு முறை யயனை யீன்றனை |
7 எழ்விடை அடங்கச்செற்றனை | 7 எழுலகெ யிற்றினில்கொண்டனை கூறிய | 6 அறுதொழ லந்தணர் வணங்… | 5 அஞ்சியை ப்பறவை யேறி | 4 நால் நிலம் வேண்டி | 3 மும்மதி ளிலங்கை | 2<brஇரு மலர் தவிசில் |
6 அறுபத முரலும் கடந்தல் காரணம் | 6 ஆறு பொதிசடை யோ னறிவ… | 5 ஐவகை வேள்வி | 4 நால்திசை நடுங்க | 3 மூவடி | 2 இருசுடர் மீதினி லியங்கா | 1 ஒரு பேருந்தி |
5 ஐம்பெரும் பூதமும் நீயே | 5 ஐவாய் அரவோடு | 4 நால்மறை | 3 மூவுல களந் தனை | 2 ஈர்எயிற் றழல் வாய் வாளியி னட்டனை | 1 ஒருமுறை | |
4 நால் வகைவரு ணமும் ஆயினை | 4 நால் தோள் | 3 முத்தீ | 2 ஈர் அடி | 1 ஒன்றிய | ||
3 மும்பொழு தும் வருட அறிதுய | 3 முக்கண் | 2 இருநீர் முடுவுள் தீர்த்தனை | 1 ஒரு முறை | |||
2 இருவரம் மலரன அங் கையில் | 2 இருபிறபபு அறுப்போர் அறியும் | 1 ஒரு நாள் | ||||
1 ஒருமதி முகத்து மங்கையர் | 1 ஒன்றி நின்று ஆங்கு |
நாலாயிரத் திவ்யப்ரபந்த மூலப்பதிப்பில், இத்திருவெழுகூற்றிருக்கைப் பிரபந்தத்திற்குச் சார்பாக ரதபந்தம் அழகாக அச்சிட்டுச் சேர்க்கப்பட்டிருப்பதைப்பதைப் பலரும் கண்ணுற்றிருப்பார்கள். நாமும் இங்கே சுருக்கமாகப் பந்தமிட்டுக் காட்டினோம்.
தேரின் உருவந்தோன்றவும், அந்தத் தேரின் மேற்பாகத்தில் ஏழுகூறுகள் தோன்றவும் கீழ்ப்பாகத்திலும் அப்படியே ஏழு கூறுகள் தோன்றவும், முதற் கூறு மூன்று அறையும் இரண்டாங்கூறு ஐந்தறையும்… ஒன்றற்கொன்று இரண்டறை மேற்படக் கீறியுள்ளமை தோன்றவும் இந்தப் பந்தம் அமைக்கப்பட்டிருக்குமாறு காண்க. இதில் இலக்கணப்படி எண்களை நிரப்பிக்காட்டியிருக்கிறோம். இந்த எண்களை அர்த்த சக்தியாலாயினும் சப்த சக்தியாலாயினும் நினைப்பூட்டும் சொற்கள் திருவெழுகூற்றிருக்கைப் பிரபந்தத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. முதலில் குறிப்பிட்ட பந்தத்தில் எண்கள் அமைத்திருக்கிற முறைமையாகவே அந்தந்த அறைகளில் அந்தந்த எண்களைக் காட்டுஞ் சொற்கள் கொண்ட வாக்கியங்களை நிரப்பிக் கொள்ளவேண்டும். அங்ஙனம் நிரப்பிக் காட்டிய பந்தமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இங்ஙனம் பாடியதில் என்ன விசித்திரமென்றால், பல விசித்திரங்களுண்டு. அவற்றையெல்லாம் இங்குத்தெளிவாக எழுதிக் காட்டப்புகுந்தால் மிக்க விரிவாகும். ஸாமாந்ய புத்திமான்களும் தாங்களே உற்றுநோக்கினால் எல்லா விசித்திரங்களும் நன்கு புலப்படும். அன்றி வல்லார் வாயினும் கேட்டறியலாம். 1.2.3.4.5.6.7. எண்கள் தேரைச்சுற்றி ஒன்றன்பின் ஒன்றாய் மாலையாக அமைந்திருத்தல் இதில் முக்கியமான அழகு. அந்த எண் முறையே சொற்கள் அமையவும் பொருள் சிறக்கவும் தொடுத்திருத்தல் மிக்க வல்லமை.
இப்பிரபந்த்த்தில் சில இடங்களில் எண்ணுக்கு வாசகமான சொல் இன்றியே ஸ்மாரகமான சொல் இருந்தாலும் குற்றமில்லை. அதாவது – “ஒரு பேருந்தி இருமலர்த்தவிசில்“ என்ற விடத்து இரு என்ற சொல்லானது இரண்டு என்னும் எண்ணுக்கு வாசகமன்றியே பெருமைப் பொருளதாய் சப்த சக்தியால் மாத்திரம் எண்ணை நினைப்பூட்டுகின்றது. இங்ஙனமே, ஒன்றிய, அஞ்சிறை, நால்வாய், இருநீர், ஒன்றி, ஆறுபொதி, என்ற விடங்களும் நோக்கத்தக்கன. அர்த்த சக்தியினாலேயே எண்ணைக் காட்டவேணுமென்னும் நியதி இல்லை. சப்த சக்தியாலும் காட்டலாம். வடமொழியிலும் இங்ஙனேயுண்டு. ஒரிடங் காட்டுவோம், ஸ்ரீ ஸுதா்சந சதகத்தில் “***“ (ஏகம் லோகஸ்ய சக்ஷு:) என்ற பத்தாம் ச்லோகத்தில் (1.2.3.4.5.6.7.8.9.10.100.1000. என்கிற எண்களைக் காட்டும் முறையாகச் சொற்களையடுக்கி வருகையில் ஒன்பது என்னும் ஸ்தாநத்தில் பிரயோகிக்கப்பட்ட நவ என்னுஞ் சொல்லானது அவ்விடத்தில் அந்த எண்ணுக்கு வாசகமன்றியே நூதனமென்னும் பொருளில் வந்தமையும் மற்றுங் காண்க. [ “నవ కిరణ శ్రేణిరజ్యద్దశాశమ్”]
எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலியவற்றை விசதமாக அனுபவித்து அவ்வநுபவம் உள்ளடங்காமல் வழிந்து புறப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளாகிய திவ்ய ப்ரபந்தத்தில் இவ்வகையான இலக்கணங்கள் வழுவாமே அமைந்தது எதுபோல வென்னில், துக்கம் உள்ளடங்கமாட்டாமல் வால்மீகி முனிவர் வாயினின்றும் வெளிவந்த “மாநிஷாத ப்ரதிஷ்டாம்“ என்கிற ச்லோகம் அவருடைய நினைவாலன்றியே நான்முகக் கடவுளின் ப்ரஸாதத்தால் லக்ஷணக் குறையின்றியே அவதரித்தாற்போல் எம்பெருமானது திருவருளால் இவ்வகையான விசித்திரப் பிரபந்தம் திருவவதரித்த தென்க. ஸாமாந்யனான பிரமனது அநுக்ரஹமே அவ்வளவு செய்த தென்றால், ஸாக்ஷாத் எம்பெருமானுடைய திருவருள் எவ்வளவு செய்யுமென்பதில் வாய்திறக்கவுண்டோவழி. எனவே, இது ஸ்வப்ரயத்ந பூர்வகமான பிரபந்தமன்றென்றதாயிற்று.
ஆழ்வார்களுள் திருமங்கைமன்னனொருவர்தாம் இவ்வகையான சித்திரக்கவி பாடியருளினர். பிற்பட்டவர்களில் திருக்குருகைப்பெருமாள் கவிராயர் என்னும் பரமபண்டித பாகவதோத்தமர் தாம்பாடியமாறனலங்கார மென்னும் சிறந்த நூலில் சொல்லணியியலில் (நம்மாழ்வார் விஷயமாக) ஒரு எழுகூற்றிருக்கை பாடியுள்ளார். “ஒருநனித்திகிரியினிரு விசும்பொழுக்கத், தொரு ஞான்றொருபக லொடியாவுழப்பின்“ என்று தொடங்கி, “ஞானபூரண சுகோதய நாவீற, மான பூடண குருகாபுரிவரோதய…….கைம்மாறெவனீகைக்கொண்டதுவே” என்று தலைக்கட்டியுள்ள பாசுரங்காண்க.
சைவசமயசிரியர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் இயற்றிய தோவாரப் பதிகங்களுள்ளும் (முதல் திருமுறையில்) ஒரு எழுகூற்றிருக்கை யுண்டு. “ஒருருவாயினை மானாங்காரத்திரியல்பாயொருவிண் முதல் பூதலம்“ என்று தொடங்கி “நின்னை நினையவல்லவரில்லை நீணிலத்தே“ என்று முடிக்கப்பட்டுள்ளமை காண்க. பதினோராந் திருமுறையிலும் நக்கீரர் பாடிய ஒரு எழுகூற்றிருக்கை யுண்டு. “ஒருடம்பீருருவாயினை“ என்று தொடங்கி “பாதஞ் சென்னியிற் பரவுவன் பணிந்தே“ என்று முடிக்கப்பட்டுள்ளமை காண்க.
ஆக ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இரண்டும், சைவசமயத்தில் இரண்டுமாக நான்கு எழுகூற்றிருக்கைப் பிரபந்தங்கள் இதுகாறும் அவதரித்தனவாகக் காண்கின்றன. இன்னமு முண்டேற் கண்டுகொள்வது.
முற்கூறியபடியே கோடுகள் கீறி அறைகளில் எண்களை நிரப்ப வேணுமென்ற நியமமின்றியே ஒவ்வொரு அறையில் ஒவ்வோரெழுத்தை நிரப்பி விசித்திரப்படுத்துதலாகிற வேறுவகையான ரதபந்தமும் உண்டு. மாறனலங்காரம் முதலிய நூல்களில் அதுவும் காணத்தகும். எண்கள் நிரம்பக்கொண்ட ரதபந்தமே ஏழுகூற்றிருக்கை யெனப்படும்.
இத்திவ்யப் ப்ரபந்தத்தில் “ஒரு பேருந்தி“ என்று தொடங்கி “இருவகைப்பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை“ என்னுமளவுமே அறைகளில் அடைக்கத்தகுவன, அதற்குமேல் குன்றா மதுமலர்ச் சோலை“ என்று தொடங்கி யுள்ளவை ஸ்தோத்ர ஸமாப்தி. அதனைத் தேரின் நடுமண்டபத்தில் அமைத்துக்கொள்ளலாம்.
இத்திவ்யப் பிரபந்தம் நாற்பத்தாறடிகளினாலமைந்த ஒரு ஆசிரியப்பா. அடியொன்றுக்கு நான்கு சீராய் இயற்சீர் பயின்றும் வெண்சீர் விரவியும் மூன்றடிக்குக் குறையாமல் பலவடிகளால் அகவலோசையுற்று இறுதியில் ‘ஏ‘ யென்னு மசையுடன் முடிவது ஆசிரியப்பாவாம்.
இவ்வாசிரியப்பா – நேரிசை யாசிரியப்பா, நிலைமண்டில வாசிரியப்பா முதலிய நான்கு வகைகளையுடையது. எல்லாவடிகளும் நாற்சீராய் ஈற்றயலடி முச்சீராய் முடிவது நேரிசையாசிரியப்பா. எல்லா வடிகளும் நான்கு சீராலேயே முடிவது நிலைமண்டில வாசிரியப்பா. இப்பிரபந்தம் எல்லாவடிகளும் நாற்சீராய் முடிந்தமையால் நிலைமண்டிலவாசிரியப்பா வாயிற்று.
ஸ்ரீ:
திருவெழுகூற்றிருக்கையின் தனியன்
வாழி பரகாலன் வாழி கலிகன்றி வாழி குறையலூர் வாழ்வேந்தன் – வாழியரோ மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன் தூயோன் சுடர்மான வேல்.பதவுரை
பரகாலன் | – | புறமதத்தவர்கட்கு யமன்போன்ற திருமங்கை யாழ்வார் |
வாழி | – | வாழ்ந்திடுக |
கலிகன்றி | – | கலியைக் கெடுத்த திருமங்கை யாழ்வார் |
வாழி | – | வாழ்ந்திடுக |
குறையலூர் | – | திருக்குறையலூரில் |
வாழ் | – | வாழ்கின்ற |
வேந்தன் | – | அரசரான திருமங்கையாழ்வார் |
வாழி | – | வாழ்ந்திடுக |
மாயோனை | – | எம்பெருமானிடத்தினின்று |
வாள் வலியால் | – | தமது வாளின் வலிமையினால் |
மந்திரம் கொள் | – | திருமந்திரத்தைப் பெற்றவராயும் |
தூயோன் | – | பரமபரிசுத்தராயுமிருக்கிற |
மங்கையர் கோன் | – | திருமங்கை யாழ்வாரது |
சுடர் | – | ஒளிபொருந்தியதும் |
மானம் | – | பெருமை பொருந்தியதுமான |
வேல் | – | கொற்ற வேலானது |
வாழி | – | வாழ்ந்திடுக |
***- எம்பெருமானுக்குத் திருமதிள்போல் அரணாயிருப்பவையான ஆறு திவ்யப்ரபந்தங்களைச் செய்தருளின திருமங்கை யாழ்வரையும் அவரது திவ்யாயுதத்தையும் வாழ்த்துகிறது இது.
எம்பெருமானது வைபவங்களைப் பொறாத பாவிகளைக் கண்டித்து ஒழிப்பவரும், கலிதோஷம் நீங்கும்படி உலகை வாழ்விப்பவரும், திருக்குறையலூரைத் திருவவதாரஸ்தலமாகவுடையவரும் மங்கைநகர்க்கு அரசருமான திருமங்கையாழ்வார் பல்லாண்டு பல்லாண்டு வாழவேணும். அவரது திருக்கையிலே திகழ்வதும், எம்பெருமானை வெருட்டித் திருமந்திரோபதேசம் செய்வித்துக்கொண்டதுமான வேலும் வாழி என்றதாயிற்று.
பின்னடிகளில் அறியவேண்டிய வரலாறு – ஸ்ரீமந்நாராயணன் இவரை விசேஷகடாக்ஷம் பண்ணி அங்கீகரிக்கத் திருவுள்ளம்பற்றி ஒரு பிராமண வேடங்கொண்டு பல அணிகலங்களைப்பூண்டு மணவாளக்கோலமாய் மனைவியுடனே இவரிருக்கிறவழியிலேயெழுந்தருள, திருமணங்கொல்லையில் அரசமரத்தின் கீழ்ப்பதிலிருந்த இவர் கண்டு எதிரே ஓடிச்சென்று தம்வாளை யுருவி வெருட்டி அவர்களுடைய ஸகல ஆபரணங்களையும் பறித்துக்கொண்டு திருவடி விரலிலணிந்த அறுகாழியையும் பறித்துக்கொள்ளப் பற்களால் கடித்திழுத்தும் வரக்காணாமல் எழுந்திருந்து ‘இது கழற்றவெண்ணாமல் நீ ஏதோ மந்த்ரவாதம் பண்ணினாய் போலும், அந்த மந்திரத்தை எனக்குச்சொல்‘ என்று தம்முடைய வாள்வலியாலே நிர்ப்பந்தித்துக்கேட்க, பெரிய பெருமாளும் “அந்த மந்திரத்தை உமக்குச் சொல்லுகிறேன், வாரும் என்று ஆழ்வாருடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு ஸகல வேதஸாரமான திருவஷ்டாக்ஷர மஹாமந்த்ரத்தை வலது திருச்செவியில் உபதேசித்தருளினன் என்பதாம்.
தூயோன் – ஆழ்வார் பலவகைக் களவுகள் செய்தாலும் அவையெல்லாம் பகவத்பாகவத ஸமாராதனத்தில் விநியோகிக்கப்பட்டமையால் அச்செயல்களால் யாதொரு அவத்யமும் உண்டாகவில்லையென்பதும், பரம பரிசுத்தியே ஆயிற்றென்பதும், பரம பரிசுத்தியே ஆயிற்றென்பதுந் தோன்றத் தூயோன் என விசேஷிக்கப்பட்டார் என்க.