ஸ்ரீ:

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

 

ப்ரபந்நஜக கூடஸ்தரான

நம்மாழ்வார் அருளிச்செய்த

திருவிருத்தம்.

 

பெருமாள் கோயில், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசாரியர்

இயற்றிய திவ்யார்த்த தீபிகையுடன்,

 

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

 

திருவிருத்தம்.

 

இத்திவ்யப்பிரபந்தம் – மயர்வறமதிநல மருளப்பெற்ற ஆழ் வார்களுள் தலைவரும் ப்ரபந்தஜக கூடஸ்தருமான நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு திவ்யப்ரபந்தங்களுள் முதற்பிரபந்தம். திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்ற நான்கு பிரபந்தங்களும் நம்மாழ்வாருடைய திவ்ய ஸூக்திகளாம். இந்நான்கும் முறையே நான்கு வேதங்களின் ஸாரமாம். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் இது ஐந்தாவதாகும். ருக்வேதஸாரமுமாம்.

இப்பிரபந்தத்திற்குத் திருவிருத்தமென்று திருநாமமாயிற்று என்னென்னில்; இந்நூலில் ஆழ்வார் தமது அன்பு மிகுதி முதலிய செய்திகளை எம்பெருமான் முன்னிலையில் விண்ணப்பஞ்செய்கையால் இதற்கு இத்திருநாமமாயிற்று. வடமொழியிலுள்ள ‘***’= “வ்ருத்தம் என்னுஞ்சொல்- 1″அவற்றுள், ஏழாமுயிரிய்யுமிருவும்” என்ற – நன்னூல் விதியின்படி விருத்தமெனத் திரிந்தது. பல பொருள்களையுடைய இச்சொல் இங்கே செய்தி’ என்னும் பொருள் கொண்டது, ஆழ்வார் தமது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமானை நோக்கி – “தேவரீரை அநுபவிக்கைக்கு விரோதியான தேஹஸம்பந்தத்தைப் போக்கியருளவேணும்” என்று ஸம்ஸாரஸம்பந்த நிவ்ருத்தியை அபேக்ஷிக்கும் முகத்தால் இவ்விருள் தருமாஞாலத்தில் இருப்பு தமக்கு மிகவும் அஸஹ்யமாயிருக்கிற செய்தியையும் எம்பெருமானுடைய நித்யாநுபவத்திலேயே தமக்குக் காதல்கிளர்ந்த செய்தியையும் சொல்லுகிறதாயிற்று இப்பிரபந்தம். ‘திரு’ என்னுஞ்சொல் வடமொழியிலே ஸ்ரீ, என்பதுபோல, தமிழிலே, மேன்மையையுடைய எப்பொருள்கட்கும் விசேஷண பதமாகி அவற்றிற்கு முன்னே மகிமைப்பொருளைக் காட்டிவரும். விருத்தமென்னுஞ்சொல் செய்தியைச் சொல்லுவ தாயினும், காரியவாகுபெயராய், செய்தியைக்கூறும் நூலை உணர்த்துகின்ற திங்கு. [1 பதவியல்-20].

இப்பிரபந்தம் கட்டளைக் கலித்துறையி லமைந்த தாதலால், சைவசமயத்தில் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்திருமுறை, பட்டணத்துப்பிள்ளையார் பாடல் திருமுறை என்பவற்றில் கட்டளைக்கலித்துறையைத் திருவிருத்தமென வழங்கும் மரபு உள்ளதாதலால் அங்கனமே இதற்கும் திருநாமமாயிற்றென்று இக்காலத் துச் சிலரது கொள்கை. வடமொழியில் செய்யுளைக்குறிக்கிற வ்ருத்தமென்கிற பொதுமொழி, இங்கே சிறப்பாய்க் கட்டளைக் கலித்துறையென்னும் ஒருவகைச் செய்யுளையுணர்த்தி நூலுக்குக் கருவியாகு பெயராயிற்றென்பது இக்கொள்கையின் தேர்ந்த கருத்து. தாழிசை, துறை, விருத்தம் என்ற பாவின் இனம் மூன்றனுள் ஒன்றான துறையின் பாற்படுங் கட்டளைக்கலித்துறை யாகிய நூலை விருத்தமென்பது பொருத்துமோ? என்று சங்கை உண்டாகக்கூடியது. ஆனால், இங்கே விருத்தமென்னுஞ் சொல் அவ்வின மொன்றை உணர்த்துவதன்றிச் செய்யுட் பொதுப்பெயராகக் கொள்ளப்படுதலால் கட்டளைக்கலித்துறையாகிய இந்நூலை விருத்தமென்னலாம் என்று உபபத்தி சொல்லிவிடக்கூடுமாயினும் முதற்சொன்ன பொருளே மிகச்சிறக்கும். “இந்நின்ற நீர்மை யினியாமுறாமை-அடியேன் செய்யும் விண்ணப்பம் – மெய்ந்நின்று கேட்டருளாய்” என்று தம்முடைய செய்தியைக் கூறுவதாகவே தொடங்கும் ஸ்வாரஸ்யத்தை நோக்கியே நம் பூருவாசாரியர்கள் இதற்குத் திருவிருத்தமென்று திருநாமஞ் சாற்றினரென்க.

அன்றியும், இப்பிரபந்தத்திற் பெரும்பாலும் ஆழ்வார் தம்மைப் பிராட்டியாகவைத்துத் தமது வ்ருத்தத்தை [=செய்தியை]க் கூறுகின்றாராதலால் திருவிருத்தமென்பதற்கு – திருமகளின் நிகழ்ச்சியைக்கூறும் நூல் என்று பொருளாகலாமென்றும் சிலர் கருதுவர்.

அந்தாதித்தொடையாக அமைந்த நூறு பாசுரங்களையுடையதான இப்பிரபந்தம் முதற்பாசுரமும் கடைப்பாசுரமும் நீங்கலாக மற்றைய தொண்ணூற்றெட்டுப் பாசுரங்களிலும் அகப்பொருளிலக்கணத் துறைவகைகள் அமையப் பெற்றுள்ளது. வெளிப் படைப்பொருளென்னும் அந்பதேசமும், உள்ளுறைபொருளென்னும் ஸ்வாபதேசமும் ஆகிய இருவகைப்பொருளுமுள்ளது. சொற் செறிவு, பொருட்பொலிவு, ஆழ்ந்த கருத்து, தொனிப்பொருள், கற்பனையலங்காரம் முதலிய சிறப்புக்களால் ஒப்புயர்வின்றி விளக்குவது. தன்னைக்கற்பார்க்குப் பிறவித்துயரறுத்து அந்தமில் பேரின்ப மளிக்கவல்லது. எம்பெருமானை அகப்பொருள் நெறியால் அதுபவிக்குத் திறத்திற்கு வழிகாட்டியாயுள்ளது.

[சைவசமயத்து மாணிக்கவாசகர் இயற்றிய திருச்சிற்றம்பலக் கோவையாரென்னுக் திருக்கோவையாரும் இத்திருவிருத்தமும் ஒரு சாயையாயிருக்கும்.]

ஆழ்வார்களோ பக்திரஸத்தையே மேற்கொண்டவர்கள். இவர்களது திவ்யப் பந்தங்களோ ஞான நூல்கள். ச்ருங்கார ரஸத்தையே பிரதானமாகக்கொண்ட கிளவித்துறைகளை ஞான நூலாகிய இதனிற்கூறுவது எதுக்கு? என்று சிலர் சங்கிப்பர்; மருந்துண்ண மாட்டாதவர்களை மருந்தை வெல்லக்கட்டியினால் பூசி உண்பிப்பது போல, சிற்றின்பம் கூறும்வகையால் பேரின்பத்தைக் காட்டி நாட்டுகின்றாராழ்வார் என்று கற்றுணர்ந்த பெரியோர் கூறுவர். 1. “***” என்றும், 2. “****” என்றும் ஸ்ரீமத் வேதாந்ததேசிக னருளிச் செய்தவை இங்கு அது ஸந்தேயம். ஆழ்வார்களுக்கு பக்திரஸமே ச்ருங்காரரஸமாகப் பரிணமிக்கின்ற தென்றவாறு. [1. கோதாஸ்துதி–7. 2. த்ரமிடோபநிஷத் தாத்பர்யாத்நாவளீ.]

ச்ருங்காரரஸத்தின் பரிமாற்றம் ஆண்பெண்களுக்கன்றோ உண்டாகக்கூடியது; சேஷத்வகாஷ்டையில் நிற்கின்ற ஆழ்வார் புருஷோத்தமனை நோக்கிக்கூறும் பிரபந்தத்தில் ச்ருங்கார ரஸம் வந்து புகும்வழி எங்கனே? என்னில் ; கேண்மின் ;–

பக்தியினால் எம்பெருமானை யநுபவித்தல் பலவகைப்பட்டிருக்கும். அவனுடைய திருநாமங்களைச் சொல்லி யநுபவித்தல், வடி வழகை வருணித்து அனுபவித்தல், அவனுகந் தருளின திவ்ய தேசங்களின் வளங்களைப் பேசியநுபவித்தல், அங்கே அபிமாந முள்ள ஸ்ரீவைஷ்ணவர்களின் பெருமையைப் பேசி யநுபவித்தல் என்றிப்படி பலவகைப்பட்டிருக்கும் பகவதநுபவம். இவ்வகைகளில் பரமவிலக்ஷணமான மற்றொருவகையுமுண்டு; அதாவது ஆழ்வார் தாமான தன்மையைவிட்டுப் பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு வேற்றுவாயாலே பேசி யநுபவித்தல். இப்பிரபந்தத்தில் இத்தகைய அநுபவம் பெரும்பான்மையா யிருக்கும். இவ்வகையாலே ச்ருங்காரரஸத்தின் பரிமாற்றம் வந்து புகுந்ததென்க.

இப்படிய நுபவிக்குந் திறத்தில், தாய் பாசுரம், தோழி பாசுரம், தலைவி பாசுரம் என்று மூன்று வகுப்புகளுண்டு. அப்போது ஆழ் வார்க்குப் பராங்குசர் என்ற ஆண்மைப் பெயர் நீங்கி, ‘ பராங்குச நாயகி’ என்று பெண்மைப் பெயர் வழங்கப்பட்டுவரும். தாய் சொல்வது போலவும் தோழி சொல்வது போலவும் மகள் சொல்வது போலவும் பாசுரங்கள் வெளிவந்தாலும், பாசுரம் பேசுகிறவர் ஆழ்வாரேயாவர். “நல்லார் நவில் குருகூர் நகரான்……..மாறன் விண்ணப்புஞ்செய்த சொல்லார்தொடைய லிந்நூறும்” என்று தலைக்கட்டுதல் காண்க. ஒரு ஆறானது பல வாய்க்கால்களாகப் பெருகும் போது பல சிறு பெயர்களிருந்தாலும் அவற்றுக்குப் பிரதானமான பெயர் ஒன்றேயாயிருக்குமாபோலே, மேற்சொன்ன மூன்று நிலைமைகளாகச் சொல்மாலை வழிந்து புறப்பட்டாலும் ஆழ்வார்பாசுரமாகவே தலைக்கட்டும்.

ஆழ்வார் தாமான தன்மையை விட்டிட்டு ஸ்த்ரீபாவநையை எறிட்டுக்கொள்ளுதல் ஏதுக்காக? அப்படி ஏறிட்டுக்கொள்ளுதல் தான் கூடுமோ ; எனின் ; ஆழ்வார் தாமாக ஏறிட்டுக்கொள்ளுகிறா ரல்லர் ; அந்த அவஸ்தைதானே பரவசமாக வந்து சேருகின்றது. புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்மைக்குமுன் உலக மடங்கப் பெண் தன்மையதா யிருக்கையாலும், ஜீவாத்மாவுக்கு ஸ்வாதந்திரிய நாற்றமேயின்றிப் பாரதந் திரியமே வடிவாயிருக்கையாலும் இவ்வகைகளுக்கேற்ப ஸ்த்ரீபாவநை வந்தேறியன்று என்றே கொள்ளலாம். தண்டகாரண்ய வாஸிகளான முனிவர் இராமபிரானது ஸௌந்தர்யத்திலீடுபட்டுப் பெண்மை விரும்பி மற்றொருபிறப்பில் ஆயர்மங்கையராய்க் கண்ணனைக் கூடினர் என்ற ஐதிஹ்யமு முண்டு. ஆழ்வார்கள் அப்படியன்றியே அப்போதே பெண்மையையடைந்து புருஷோத்தமனை யநுபவிக்கக் காதலிக்கின்றனர்.

ஆண் பெண் என்ற வியவஹாரங்கள் சிற்றின்ப நுகர்ச்சிக் கன்றோ ஏற்பட்டவை ; பேரின்ப வநுபவத்திலே ஊன்றின ஆழ்வார்கள் பெண்மை யெய்துவதாகவும் கொங்கை முதலிய சொற்களை யிட்டுப் பாசுரங்கூறுவதாகவும் நிகழ்கிற விது என்னோ ? எனின் ; விஷயாந்தர காமம் என்றும் பகவத்விஷய காமம் என்றும் காமம் இருவகைப்படும்; வேதாந்தங்களில் விதிக்கப்பட்ட பக்தியே ஆழ்வார்களுக்கு ச்ருங்காரமுறைமையில் உருவெடுத்து நிற்கும். சிற்றின்பவ நுபவத்திற்குக் கொங்கை முதலியன ஸாதனமாயிருப்பதுபோல, பகவத் விஷயா நுபவத்திற்குப் பரபக்தி பரஜ்ஞாக பரமபக்திகள் இன்றியமையாதனவா யிருப்பதால் அவையே கொங்கை ‘முதலிய சொற்களால் அருளிச்செயல்களிற் கூறப்படு கின்றனவென்று கொள்க.

ச்ருங்கார ரஸத்தின் ஸம்பந்தம் சிறிதுமின்றியே கேவலம் சுத்த பக்தி ரஸமாகவே பாசுரங்கள் அருளிச்செய்யக் கூடுமாயினும் ச்ருங்கார ரஸத்தையுங் கலந்து பாசுரங்கள் பேசுவதற்குக் காரணம் கீழே சொல்லப்பட்டது. [ஆரோக்யத்திற்குக் காரணமாகிய வேப்பிலை யுருண்டையை உட்கொள்ள இறாய்க்குமவர்களுக்கு வெல்லத்தை வெளியிற் பூசிக் கொடுத்துத் தின்பிப்பது போல.]

இப்பிரபந்தம் அந்தாதித் தொடையாற் பாடப்பட்ட நூலாதலால், சொற்றொடர்நிலை பொருட்டொடர்நிலை என்னும் இருவகையுள் சொல் தொடர் நிலையாம். இதன் பாசுரங்கள், பொருளில் ஒன்றையொன்று தொடர்ந்து நிற்றல் தோன்றப் பூருவாசாரியர்கள் அவதாரிகையிட்டு வியாக்கியானமருளி யிருக்கின்றமையால் இது பொருட்டொடர் நிலையுமாம். “பொருளினுஞ் சொல்லினு மிரு வகை தொடர்நிலை” என்னும் தண்டியலங்காரச் சூத்திரத்தின் உரையில் – “இரண்டென்னாது வகையென்ற மிகையான் மூன்றாவது பொருளினுஞ் சொல்லினுந் தொடர்தலுமுண்டெனக் கொள்க” என்றதுகாண்க. ஆகவே இப்பிரபந்தம் சொற்பொருட்டொடர் நிலை. இதில் தொடக்கப் பாசுரத்தில் பொய்க்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்பு மிந்நின்ற நீர்மை யினியா முறாமை…………. அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்று பிரகிருதி ஸம்பந்த நிவ்ருத்தியைப் பிரார்த்தித்து, (முடிவில்) நிகமநப் பாசுரத்திலும் மாறன் விண்ணப்பஞ்செய்த “சொல்லார் தொடைய லிந்நூறும் வல்லாரழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே” என்று பிரகிருதி ஸம்பந்த நிவ்ருத்தியையே இப்பிரபந்தம் கற்றார்க்குப் பலனாக அருளிச் செய்து தலைக்கட்டி யிருப்பதனால், இப்பிரபந்தம் முமுக்க்ஷுத்வத்தையும் முக்தியையும் உண்டாக்குவதற்கு ஏற்றதாம்.

 

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

 

தனியன் உரை.

 

கிடம்பியாச்சா னருளிச் செய்த தனியன்

(கட்டளைக் கலித்துறை)

 

கருவிருத்தக் குழிநீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து

ஒருவிருத்தம் புக்குழலுறுவீர்!, உயிரின் பொருள்கட்

கொருவிருத்தம் புகுதாமல் குருகையர்கோனுரைத்த

திருவிருத்தத் தோரடிகற்றிரீர் திருநாட்டகத்தே.

 

பதவுரை.

 
கரு கர்ப்பமாகிறகர்ப்பமாகிற
விருத்தம் குழி வட்டமான குழியை
நீத்தபின் விட்டபின்பு [கர்ப்பத்தில் நின் றும் வெளிப் பட்டுப் பிறந்த பின்பு]
காமம் கடு குழி வீழ்ந்து சிற்றின்பநுபவமாகிய கொடிய குழி வீழ்ந்து
ஒரு விருத்தம் புக்கு ஒப்பற்ற [மிக்க] கிழத்தனத்தையடைந்து
உழலுறுவீர் அலைந்து கொண்டிருக்கும் ஜனங்களே!,
உயிரின் பொருள் கட்கு (உங்களுடைய) உயிர் அடைதற்குரிய பயன்களுக்கு
ஒரு விருத்தம் புகுதாமல் இடையூறு சிறிதும் புகுதாமல் நேரிடாதபடி
குறுக்கையர் கோன் உரைத்த திருவிருத்தது ஓர் அடி கற்று திருக்குருகூரிலுள்ளாருக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச் செய்த திருவிருத்தமென்னும் நூலில் ஒரு பாதத்தை அப்யஸித்து உணர்ந்து
திருநாடு அகத்தே இரீர் பரமபதத்தில் வாழ்ந்திருப்பீராக.
 

* * * – மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து இறந்து ஸம்ஸார ஸாகரத்தில் அலைகின்ற ஜனங்களை நோக்கி – இனி உங்களை அந்தத் துக்கம் தொடராமல் நீங்கள் மோக்ஷஸாம்ராஜ்யம் பெற்று நித்யாநந்தம் அநுபவிக்க விரும்புகிறீர்களாகில் நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய திருவிருத்தமென்னுந் திவ்யப்ரபந்தத்தில் ஓரடியையாவது கற்றுக் கொள்ளுங்கள் என்று கிடம்பியாச்சானென்னு மாசிரியர் உபதேசிக்கிறார். (சிலர் சீராமப்பிள்ளை யென்பர்; சிலர் ஆளவந்தார் என்பர்.)

ஸ்ரீவைகுண்டம் எல்லா நாடுகளினுஞ் சிறந்ததாதலால் திரு நாடு என்று சிறப்பித்துக் கூறப்படும். ‘ உயிரின் பொருள்கட்கு ஒருவிருத்தம் புகுதாமல் கற்று ‘ என்று அக்வபிப்பது. ‘ புகுதாமல் குருகையர் கோனுரைத்த’ என்று மந்வயிக்கலாம். கர்ப்ப ஜந்ம பால்ய யௌவந ஜரா மரண நரகங்களாகிற ஏழு அவஸ்தை களையும் “ கருவிருத்தக் குழி நீத்தபின் காமக் கடுங்குழி வீழ்ந் தொரு விருத்தம் புக்குழலுறுவீர்” என்றதனாற் குறித்தவாறு.

“***”- மென்னும் வடசொல் கரு எனச் சிதைந்தது. விருத்த மென்ற வடமொழித்திரிபு- அடிதோறும் தமிழில் எழுத்தொப்புமை யுடைய தாயினும் முதலடியிலும் ஈற்றடியிலும் “***’ என்றது திரிந்ததாகவும், இரண்டாமடியில் “***” என்றது திரிந்ததாகவும், மூன்றாமடியில் “***” என்றது திரிந்ததாகவும் விவேகித்துணர்க. முதலடியில் வரத மென்றது வ்ருத்தாகாரத்தை [உருண்டை வடிவை]ச் சொன்னபடி. இரண்டாமடியில் “***” மென்றது கிழத்தனத்தைச் சொன்னபடி. மூன்றாமடியில் “***” மென்றது ஸ்வரூபத்திற்குத் தகாததைச் சொன்னபடி. இனி, முதலடியில் – கரு “***” குழி, எனக்கொண்டு கர்ப்ப மாகிய தகாத குழியென்றும், “கரு இருத்து அக்குழி” என எடுத்து கர்ப்பத்தில் இருக்கச் செய்தலாகிய அந்தக் குழியென்றும், இரண்டாமடியில் ‘ஒரு வரதம் புக்கு’ எனக்கொண்டு, வெறுக்கத்தக்க பொல்லா வொழுக்கத்திலே புகுந்து என்றும், மூன்றாமடியிலும் ‘ ஒரு வரதம் புகுதாமல் ‘ எனக்கொண்டு (தீங்காகிய) செயலொன்றும் நிகழாதபடி யென்றும் உரைத்தலும் பொருந்தும். எதுகையை யடுத்து ‘விருத்தம்’ என்ற ஒரு சொல் வெவ்வேறு பொருளில் வந்தது திரிபின்பாற்படும். (யமகம்.)

‘புகுதாமல்’ என்றதில், து-சாரியை. “***” என்னும் வடசொல் குருகையென ஐயீறாயிற்று. இரீர் – ஏவற்பன்மை. இரண்டாமடியில் – உயிரின் பொருளுக்கு’ என்பது பாடபேதம். *

 

தனியன் உரை முற்றிற்று.

ஜீயர் திருவடிகளே சாணம்.

Dravidaveda

back to top