ஸ்ரீ:
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ப்ரபந்நஜநகூடஸ்தரான
நம்மாழ்வார் அருளிச் செய்த
திருவாசிரியம்.
பெருமாள் கோயில்
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர்
இயற்றிய
திவ்யார்த்த தீபிகையென்னும்
உரையுடன் கூடியது.
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
திருவாசிரியம்.
திருவாசிரியம் – முன்னுரை
இது – மயர்வற மருளப்பெற்ற ஆழ்வார்களுள் தலைவரும், ப்ரபந்தநஜநகூடஸ்தருமான நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு திவ்யப்ரபந்தங்களுள் இரண்டாவதான பிரபந்தம். திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி என்ற நான்கு வேதங்களின் ஸாரமாம். நாலாயிரப் பிரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் இது ஆறாவதாகும். யஜுர்வேத ஸாரமுமாம்.
ஆழ்வார் தமது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமானை நோக்கி. ‘தேவரீரை அநுபவிப்பதற்கு இடையூறான தேஹ ஸம்பத்த்தை அறுத்துத் தந்தருளவேணும்‘ என்று ஸம்ஸார ஸம்பந்த நிவ்ருத்தியை அபேக்ஷித்தார் – முதற் பிரபந்தமாகிய திருவிருத்தத்தில். ஆழ்வார் அப்படி பிரார்த்தித்தபோதிலும், எம்பெருமான் இவ்வாழ்வாரைக்கொண்டு நாட்டுக்கு நன்மையாகச் சில திவ்யப்ரபந்தங்களை வெளியிடுவித்து சம்சாரிகளைத் திருத்திப் பணி கொள்ளத் திருவுள்ளம் பற்றினவனாகையாலே “பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்புமிந்நின்ற நீர்மை இனியாமுறாமை“ என்று இவர் அபேக்ஷித்த இந்த ஸம்ஸாரத்தை விட்டு விலகி ஒரு * நலமந்தமில்லதோர் நாட்டிலே போய்ச்சேரவேணுமென்று பாரிப்பது நம்முடைய குணங்களை அநுபவிப்பதற்காகவேயன்றி வேறொன்றுக்காகவன்றே : அந்த குணாநுபவத்தை இவர்க்கு நாம் இவ்விடத்திலேயே வாய்க்கச் செய்வோம், இங்கே தானே இவர் குணானுபவனம் பண்ணிக் களித்தாராய், அவ்வநுபவம் உள்ளடங்காமல் புறவெள்ளமிட்டுப் பிரபந்தங்களாகப்பெருகி லோகோபகாரமும் செய்தாராகட்டும்“ என்று எம்பெருமான் திருவுள்ளம்பற்றித் தனது ஸ்வரூப ரூபகுண விபூதிகளைக் காட்டிக்கொடுக்க ஆழ்வார் அவற்றைக்கண்டு பரமானந்ந்தம் பொலிய அநுபவிக்கிறார் இத்திருவாசிரியத்தில். ஸம்ஸார ஸம்பந்தங் கழிந்து பரமபத்த்திலே போனபின்பு அநுபவிக்க்க்கூடிய எம்பெருமானது மேன்மையையும் நீர்மையையும் வடிவழகையும் இங்கிருந்துகொண்டே சுருக்கமாக ஏழு பாட்டாலே அநுபவிக்கிறாராயிற்று.
ஆசிரியப் பாக்களினாலமைந்த இத்திவ்யப் பிரபந்த்த்திற்குத் திரு ஆசிரியம் எனத் திருநாமம் வழங்கலாயிற்று. அடியொன்றுக்கு நான்கு சீராய் இயற்சீர் பயின்றும் வெண்சீர் விரவியும் மூன்றாமடிக்குக் குறையாமல் பலவடிகளால் அகவலோசையுற்று இறுதியில் ஏ யென்னும் அசையுடன் முடிவது அசிரயப்பாவாம். இது –நேரிசையாசிரியப்பா, நிலைமண்டில வாசிரியப்பா முதலிய நான்கு வகைகளையுடையது, எல்லாவடிகளும் நாற்சீராய் ஈற்றயலடி முச்சீராய் முடிவது நேரிசையாசிரியப்பா. எல்லாவடிகளும் நான்கு சீராலேயே முடிவது நிலைமண்டிலவாசிரியப்பா. இப்பிரபந்தத்தில் 1,2,3,6-ஆம் பாசுரங்கள் நேரிசையாசிரியப்பாக்கள். 4,5,7-ஆம் பாசுரங்கள் நிலைமண்டில வாசிரியப்பாக்கள். அந்தத்தித் தொடையால் அமைந்ததாம் இப்பிரபந்தம்.
தனியன் உரை.
அருளாளப்பெருமாளெம்பெருமானார் அருளிச்செய்தது.
(கலி விருத்தம்.)
காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து
ஆசிரியப்பாவதனா லருமறைநூல் விரித்தானைத்
தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரனை
மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துமே.
காசினியோர் தாம் | – | பூலோகத்திலுள்ளவர்கள் |
வாழ | – | உஜ்ஜீவிப்பதற்காக |
கலியுகத்தே | – | இக்கலியுகத்தில் |
வந்து உதித்து | – | இந்நிலத்தில் வந்து அவதரித்து |
அருமறை நூல் விரித்தானை | – | தெரியவரிதான வேதசாஸ்த்ரங்களை விவரித்தவரும் |
தேசிகனை | – | ஆசார்யரும் |
திகழ் வகுளம் தாரானை | – | விளங்குகின்ற மகிழ்மாலையை அணிந்துள்ளவருமான |
பராங்குசனை | – | நம்மாழ்வாரை |
மாசு அடையாமனத்து வைத்து | – | அஹங்கார மமகாரங்களாகிற குற்றங்களற்ற மனத்திலே வைத்து |
மறவாமல் | – | ஒருகாலும் மறவாமல் |
வாழ்த்துதும் | – | மங்களாசாஸநஞ்செய்வோம். |
-***- இவ்விருள் தருமாஞாலத்திலே ஸம்ஸாரிகளாய்த் தடு மாறுகிற நம்போல்வாரை உஜ்ஜீவிக்கச் செய்வதற்காக இக்கலியுகத் திலே இப்பூமண்டலத்திலே வந்து திருவவதரித்துத் திருவாசிரிய மென்னுமித் திவ்யப்ரபந்தத்தை அருளிச்செய்து இதன் மூலமாக வேதார்த்தங்களை வெளியிட்டவரும், ” ஆத்யஸ்ய ந: குலபதே : ” என்று ஆளவந்தாரருளிச்செய்தபடி ஸ்ரீவைஷ்ணவகுல கூடஸ்த ராய்க்கொண்டு ப்ரதமாசார்யரும், மகிழ்மாலையை நிரூபகமாகச் சாத்திக்கொண்டிருப்பவரும், புறமதத்தவர்களைக் கண்டித்து ஒழித்த தனாலே பராங்குசர் என்று திருநாமம் பெற்றவருமான நம்மாழ்வாரை நிஷ்கல்மஷமான நெஞ்சிலேவைத்து நித்தியம் வாழ்த்துவோமென்றதாயிற்று. பராங்குசன் என்பதற்கு மாஞானிகள் சொல்லும் அர்த்தமும் ஒன்றுண்டு ; பரர்கட்கு அங்குசம் (மாவட்டி) போன்றவர்,- மதாந்தரஸ்தர்களை அடக்குகிறவர் என்கிற பொருள் ஒருபுறமிருக்கட்டும். பரன் என்று பரமபுருஷனான எம்பெருமானைச் சொல்லுகிறது. அவனைத் தம்முடைய ஸ்ரீஸுக்திகளாகிற மாவட்டியினால் வசப்படுத்திக்கொள்ளவல்லவர் என்கை. * “வலக்கையாழி இடக்கைச் சங்கமிவையுடை மால்வண்ணனை, மலக்கு நாவுடையேற்கு” என்று தாமே அருளிச்செய்தார். சில குத்ருஷ்டிகள் மறைகுலையச் சாது சனங்களடங்கத் தருக்கச் செருக்காலே எம்பெருமானுடைய பாத்வத்தை இல்லை செய்தவளவிலே ஸர்வேச்வரன் அதுகண்டு நடுங்கி “நான் பரதத்வமல்லேன், நான் பரதத்வமல்லேன்’ என்று பின் வாங்க, ஆழ்வார், “ஒன்றுந்தேவுமுலகும்” என்கிற திருவாய்மொழி யாகிற மாவட்டியையிட்டு அவ்வெம்பெருமானாகிற களிற்றை ஓடவொட்டாதே நிலை நிறுத்திப் பரத்வஸ்தாபனம் பண்ணினபடியாலே பராங்குசரென்கிறது என்று கருத்து.
ஆழ்வார் திருவடிகளே சரணம்.