ஸ்ரீ
பேரருளாளன் பெருந்தேவித்தாயார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
திவ்யப்ரபந்த திவ்யார்த்த தீபிகையின்
முகவுரை
நெடியானருள்சூடும் படியான்சடகோபன்
அடிசேரடி யார்கட் கடையாவிடர்தானே.
அருமறைமுடியி னரும்பொருள்தந்த
வரவரமுனியின் திருவடிவாழிய.
வரவரமுடியடி வணங்கும்வேதியர்
திருவடியிணைகளென் சிரமேற்சேர்கவே
அந்தமிழி லாழ்வார்க் ளாய்ந்தளித்த வாரமுதப்
பந்தலெனும் பாமாலைப் பல்பொருளைப் பலரறிய
அந்தமில்சீ ராரியர்க ளாழ்கடல்போ லளித்தனரால்
புந்தியினிற் பொருள்புகவே புல்லுரையொன் றுரைக்கேனே.
இல்லறத்தி னியற்கைதனை யிகழ்ந்துநெஞ்சா
லிறுதியிலாச் சிரம்ஞ்சே ரிளையாழ்வார்போல்
அல்லிமக ளன்பனடிக் கடிமைசெய்யு
மழகியநன் மணவாளச் சீயர்தாமும்
வல்லபா வாதிபயங் கரனார்வம்சத்
தணிவிளக்கா மனந்தகுரு வரனார்தாமும்
நல்லறிவை நாடோறு மடியனேற்கே
நல்குவரென் றையமற நம்புகேனே.
பொய்கைமுனி பூதம்பேய் மழிசையர்கோன்
புகழ்க்குருகை நகரரசன் புதுவையர்கோன்
துய்யபுகழச் சேரலர்கோன் தொண்டர்தாள்தூள்
தூமதிசேர் பாண்பெருமாள் மங்கையர்கோன்
செய்யவிசை மதுரகவி சீர்கொள்கோதை
சீரரங்கத் தமுதனெடுஞ் சீயர்சொன்ன
செய்யதமிழ்ச் செழுங்கவியிற் சேர்கருத்தைச்
சிறக்கவுரை செய்திடநான் சிந்தித்தேனே.
குருகையர்கோன் நாதமுனி முனிவர்கோமான்
கூர்மதிசேர் கூரநாதர் குமரர்பட்டர்
அருளுடைய நஞ்சிய ரடிசேர்பிள்ளை
அணிவடக்குத் திருவீதி யமரும்பிள்ளை
திருமருவு முலககுரு வருளால்வாழுஞ்
சீர்திருவாய் மொழிப்பிள்ளை சீயர்காத்த
அருமறையா மாழ்வார்க ளருளால்வந்த
அந்தமிழி னாழ்பொருளை யறிவாராரே.
முன்னோர்க ளருளியவவ் வுரைகள் தன்னில்
மொழியாக தொன்றில்லை முழுதுங்கண்டோம்
என்னோவின் றிவனொருவ னிறுமாந்தொன்றை
யியம்புகின்றா னென்றிகழ்வீ ரீதுகேண்மின்
பின்னோர்கள் பேதைமையின் பெருமைதன்னால்
பேருரையிற் பயனிறையும் பெறமாட்டாரென்
றிந்நோக்கா டிவ்வுரைநா னெழுதப்புக்கே
னெழின் மதியோ ரெஞ்ஞான்று மிகழார்தாமே.
பதவுரையிற் பொருள்விரியாப் பாசுரத்திற்
பரக்கவதன் கருத்தையிதிற் பொழித்துரைப்பேன்
மிதமறச்சொல் மூலத்திற் கதைகள் தம்மைப்
புராணவழிக் கண்டெடுத்து விரியச்சொல்வேன்
விதவிதமா விருத்தவிலக் கணங்கள்சொல்வேன்
வேண்டிடத்துத் துறைபகுதி விகுதிசொல்வேன்
மதியிலியே னாயினுநான் மதியால்மிக்க
வல்லார்வாய் வழிகேட்டு வரைகின்றேனே.
நன்னூலை நன்றா நலின்றிலேன் நாவில்நான்
தொன்னூலுந் தொட்டறியேன் தூய்மையிலேன் – எந்நாலும்
ஆய்ந்துணரு மாரியர்த மாரருளி லாழ்ந்தடியேன்
வாய்ந்தனனே வல்லவனாய் வந்து.
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் சிறந்த மெய்யடியார்களென்று கொண்டாடப்படுகின்ற ஆழ்வார்கள் பதின்மர். அவர்களாவார், – பொய்கையார், பூதத்தார், பேயார், திருமழிசைப்பிரான், நம்மாழ்வார், குலசேகரப்பெருமாள், பட்டர்பிரான், தொண்டரடிப்பொடிகள், திருப்பாண்பெருமாள், கலியன் என்பார் நம்மாழ்வார் திருவடிகளான ஸ்ரீமதுரகவிகளையும் பட்டர்பிரானென்னும் பெரியாழ்வாரது திருமகளாரான சூடிக்கொடுத்தநாச்சியாரையுஞ் சேர்த்து ஆழ்வார்கள் பன்னிருவர் என்றும் சொல்லுவதுண்டு.
முகவுரை
சந்தனப்பொதியச் செந்தமிழ்த் தடவரையையுடைய தென்னாட்டிலே அருந்தமிழாய்ந்தறிந்த ஆரியர்காள்! ஸ்ரீவைஷ்ணவ ஸமயத்திற்சிற்ந்த மெய்யடியார்களென்று கொண்டாடப்படுகிற ஆழ்வார்கள் பன்னிருவர். புறவிருளைப் போக்குகின்ற த்வாதசாதித்யர்களிற் காட்டிலும் பெருமைபெற அகவிருளொழித்த இவ்வாழ்வார்களுடைய சரி தவிபவங்களுக்கு ஓர் எல்லையில்லை. அவை வடமொழியில் ப்ரஹ்மாண்டம், ப்ரத்மம், மார்க்கண்டேயம் முதலிய புராணங்களிலும், பார்க்கவம் வ்ருத்தபாத்மம் முதலிய உபபுராணங்களிலும் எதிர்கால வரலாறுகளை விவரிக்குமிடத்துக் கூறப்பட்டுள்ளனவாகப் பிரசித்தமாயிருத்தல் மாத்திரமன்றி, திவ்யஸூரி சரிதம், ப்ரபந்நாம்ருதம் என்ற வடநூல்களிலும், குருபரம்பரா ப்ரபாவமென்கிற மணிப்ரவாளக்ரந்தத்திலும் பேசப்பட்டுள்ளன. இவற்றிற் கூறப்படாமல் பிற நூல்களாலும் கர்ணபரம் பரையாலுமே அறியத்தக்க ஐதிஹ்யங்களும் பலவுள்ளன.
எல்லாவுலகங்களினும் மேம்பட்டு மேலிடத்துள்ளதாய், ஒப்புயர்வின்றி விளங்கும் இயற்கைப்பேரொளியுடையதாய், கமலக்கண்ணனது கருணைப் பெருக்கின் வடிவமான ‘விரஜை’ என்னும் விமலநதியை எல்லையாகப் பெற்றதாய “சிறுகாலையிலா நிலையோதிரியா, குறுகாநெடுகா குணம் வேறுபடா, உறுகால்கிளர் பூத்மெலாமுகினும் மறுகாநெறி” என்றபடி கலை முகூர்த்தம் முதலிய காலபரிணாமங்களும் நிலைவேறுபாடும் சுருக்கமும் பெருக்கமும் குணவேற்றுமையும் உற்பத்திவிநாசங்களுமின்றி என்று மொருபடிப்பட விருப்பதாய் அந்தமில் பேரின்பத்தை அனுபவிக்குமிடமாய், மனமொழிகளுக்கு எட்டாத மகிமையுடையது, பரமபதமென்கிற திவ்யலோகம்.
“நலமந்தமில்லதோர்நாடு“ என்னப்படுகிற ஸ்ரீவைகுண்ட நகரிலே செம்பொன் செய்கோயிலிலே திருமாமணி மண்டபத்திலே ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலா வடிமைகள் செய்கிற ஆதிசேஷனது ஸ்வரூபமான சீரிய சிங்காசனத்திலே ஸ்ரீ பூமி நீளைகளென்னும் தேவிமார் மூவரோடுங் கூடி வீற்றிருந்து நித்யமுக்தர்களுக்கு அளவிலாத ஆநந்தத்தை அநுபவிப்பித்தருளுகிற ஸகலகல்யாணகுண பரிபூர்ணனான ஸர்வேச்வரன் அவ்விபூதியிலுள்ளார் எப்போதும் பரமாநந்தத்தையே அநுபவித்து வருதல்போல, இந்நிலவுலகத்திலுள்ளவுயிர்களும் தம்தம் முயற்சியால் அப்பெரும்பதவியைப் பெற்று இன்புற்று வாழலாம்படியிருக்க, இதற்கு உபயோகமாகவே தான் கொடுத்தருளின கரணகளேபரங்களையும் சப்தாதி விஷயாந்தரங்களிலே செல்லவிட்டு மாரனார் வரிவெஞ்சிலைக்கு ஆட்செய்து மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து இறந்து கரையற்ற கருமப் பெருங்கடலினுள் அமிழ்ந்து வருந்தி அலைவதை உற்றுநோக்கி அவ்வான்மாக்களையும் அழிவில்வீட்டை அடைவித்துக்கொள்ள வேண்டுமென்று இயல்பாக எழுந்த இன்னருளாலே அவ்வுயிர்கள் நல்வழி தீவழிகளை நன்றாகப் பகுத்துணர்ந்து நடக்குமாற்றை அறிவித்தற்பொருட்டு, தன் கட்டளை ரூபமான வேதங்களை வெளியட்டருளி, அரியபெரிய அவ்வேதங்களின் வௌயிட்டருளி, அரியபெரிய அவ்வேதங்களின் ஆழ்ந்தமறைபொருளைச் சில்வாழ்நாட் பலபிணிச் சிற்றறிவினராகிய நம்போன்றவர்களும் தெள்ளிதில் தெரிந்துகொள்ளுதற்கு உபயோகமாம்படி அவற்றிற்கு அங்கமான அனேக சாஸ்திரங்களையும் முனிவர் முதலானாரைக்கொண்டு வெளியிட்டருளினான்.
பேரிருளிலே திரிவார்க்குப் பொருள்விளக்கம் பிறக்குமாறு கைவிளக்குக் கொடுத்தாற்போல, அநாதி அஜ்ஞாநாந்தகாரத்தில் அகப்பட்டவர்க்கு அர்த்தஜ்ஞாந ப்ரகாசமுண்டாகுமாறு இப்படி சாஸ்திரதீபத்தைக் காட்டிக்கொடுக்கவும், விழியிலார்க்கு விளக்குப் பயன்படாதவாறுபோல, பகவத் பக்தியாகிற ஸித்தாஞ்ஜநத்தினால் நெஞ்சென்னும் உட்கண்ணின் குருடுதீராத உலகத்தார் பலர்க்கு அந்த ப்ரமாண ப்ரதீபமும் முழுப்பயன்படாதாயிற்று. அவர்கள் சாஸ்திரங்களின் ஸித்தாந்தத்தைத் தீரத்தெளிய ஆய்ந்து ஓய்ந்து உணராமல் நுனிப்புல் மேய்ச்சலாக மேல்நோக்காப் பார்த்தறிந்து நிலையில்லாதவற்றை நிலையுடையன வென்றும், நிலையினவற்றை நிலையில வென்றும் விபரீதமாகத் துணிந்து அர்த்தகாமங்களில் மிகவுமபிமுகரும் மோக்ஷத்தில் அதிவிமுகருமாய் அழிந்துபோவதை ஆலோசித்து, கருணைக்கடலான எம்பெருமான், தன் ஆணை செல்லாத இடங்களில் அரசன்தானே நேரிற்சென்று தண்டம் நடத்துதல் செல்லாத இடங்களில் அரசன்தானே நேரிற்சென்று தண்டம் நடத்துதல் போலவும், கிணற்றினுள் வீழ்ந்த குழந்தையையெடுக்கத் தாய்தானு மதனுட் குதித்தல் போலவும், தானே ராமக்ருஷ்ணாதிரூபத்தால் * ஆதியஞ்சோதியுருவை யங்குவைத்திங்குப் பிறந்து பரத்வத்தை இருந்தது தெரியாதபடி விட்டு ஸௌலப்யத்தையே தலைமைக் குணமாகக்கொண்டு உலகத்தோடொத்து வாழ்ந்து துஷ்டநிக்ரஹ சிஷ்ட பரிபாலனஞ்செய்து அறத்தை நிலைநிறுத்தித் தன்வடிவழகாலும் உபதேசமுகத்தாலும் அனுட்டான மூலமாகவும் ப்ரஜைகளைத் தன்வசப்படுத்தத் தொடங்கிய வளவிலும், பலர் அநாநி கர்மவாஸனையாலே சீர்திருந்தாமல் அத்திருவவதார மூர்த்திகள் திறத்து மநுஷ்யபுத்தியையே பண்ணித் தம்மைப்போலவே அவர்களைப் பாவித்து எதிரம்புகோத்துப் போருக்கு நின்றும், * கேட்பார் செவிசுடு கீழ்மைவசவுகளையே வைதும் விச்வரூபத்தையு முட்பட இந்திரஜாலமென்று இகழ்ந்தும் அதம கதிகளை அடையலாயினர்.
அதுகண்டு திருமால் திருவுள்ளமிரங்கி ‘இனி இவர்களை வசீகரித்தற்கு வழியாதோ?‘ என்ற திருமகளோடு தீர்க்காலோசனைசெய்து ‘தீபங்காட்டி மிருகம்பிடிப்பார்போல, இவர்களினத்தவ ரென்னலாம்படியான சேதநரைக்க கொண்டு இவர்களைக் கைப்பற்றுவதே உத்தமமான உபாயம்‘ என்றறுதியிட்டு ஸ்ரீபூமிநீளாதேவிகளையும் ஸ்ரீபஞ்சாயுதங்களையும் ஸ்ரீவத்ஸ கௌஸ்துப வநமாலாதி சிஹ்நங்களையும் அநந்தகருட விஷ்வக்ஸேநாதியரையும் பார்த்து, ‘நீங்கள் ஏற்றபடி பூலோகத்தில் பலசாதிகளிலும் பிறந்து பிரபஞ்சத்தவரைப் பிறவிப்பெருங்கடலினின்று கரையேற்றி வாருங்கள்‘ என்று ஆணையிட்டனுப்ப, அவர்கள் அப்பணியைச் சிரமேற்கொண்டு ஆழ்வாராதியராக அவதரித்தார்கள்.
இவர்கள், எம்பெருமானுடைய ஸகல மங்கள குணங்களாகிய அமுதவெள்ளத்திலே முழுகி மிகவும் ஈடுபட்டு நன்றாக ஆழ்ந்திடுபவராதலால் இவர்களுக்கு ‘ஆழ்வார்‘ என்று திருநாமம் வழங்குதல் மரபு.
இவர்கள், ரிஷிகள்போலத் தாமாக மிகமுயன்று தத்துவஞானத்தைப் பெறுதலின்றி எம்பெருமான் தானேவந்து தன்னைக் காட்டிக்கொடுக்கக்கண்டு ஜ்ஞாநபக்தி விரக்திகளை எளிதிற்பெற்று, சிலர்க்கு விலக்காக மறுக்கப்படுகிற வேதம்போலன்றி யாவர்க்கும் ஒருங்கே உதவும்படி ஸகலவேத வேதாங்க ரஹஸ்யார்த்தங்களைத் தமிழ்த் திவ்யப்பிரபந்தங்களாக அருளிச்செய்து தம்முடைய அநுபவத்தைப் பிறர்க்கு உணர்த்தி உலகத்தை வாழ்வித்தருளுதலால் கூறுதற்கரிய வீறுபெறுவர்.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என ஆழ்வார்கள் பதின்மர். நம்மாழ்வார் திருவடிகளான மதுரகவிகளையும், பெரியாழ்வார் திருமகளான ஆண்டாளையுங்கூட்டி ‘ஆழ்வார்கள் பன்னிருவர்’ என்பது ஸம்ப்ரதாயம்.
முகவுரை
திருமாலின் வேறு தசாவதார மென்னலாம்படியான வீறுபாடுடைய
இவ்வாழ்வார்களது திருவவதாரக்கிரமம்.
“பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
அய்ய னருள்மாறன் சேரலர்கோன் – துய்யபட்ட
நாதனன்பர் தாள்தூளி நற்பாணன் நன்கலியன்
ஈதிவர்தோற்றத் தடைவா மிங்கு“
என்று முறைமை பெற்றிருக்கும்.
இவர்களுள் நம்மாழ்வார், மற்றையாழ்வார்களைப் போல இவ்வுலகவுணர்ச்சி நடையாடாநிற்க எம்பெருமானருளால் ஒரு கால விசேஷத்திலே தத்துவஞான முதலிய தோன்றப்பெற்று அநுபவித்தவரன்றி, திருத்துழாய் மணத்தோடே முளைக்குமாபோலே அவதரிக்கும்போதே இயற்கையில் ஞாநபக்திகளை உடையராய் அந்நிலை என்றும் மாறாதிருந்ததனால் தலைவராகக் கூறப்பட்டு, இதுவே காரணமாக அவரை அவயவியாகவும், மற்றையாழ்வார்களை அவர்க்கு அவயவமாகவுமும் பூருவர்கள் நிரூபித்தார்கள்.
அங்ஙனம் உருவகப்படுத்துமிடத்து, நம்மாழ்வாருக்கு, பூதத்தாழ்வாரைத் திருமுடியாகவும், பொய்கைபேயாழ்வார்களைக் கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரைக் கழுத்தாகவும், குலசேராழ்வாரையும் திருப்பாணாழ்வாரையும் கைகளாகவும், தொண்டரடிபொடியாழ்வாரை மார்பாகவும், திருமங்கையாழ்வாரைக் கொப்பூழாகவும், மதுரகவியாழ்வாரைத் திருவடியாகவும் உரைத்தனர்.
இப்படி ஒப்புயர்வற்ற இவ்வாழ்வார்கள் * உயர்வறவுயர் நலமுடையவனான அயர்வறுமமரர்களதிபதியால் மயர்வற மதிநலமருளப்பெற்று அருளிச்செய் தருளின திவ்யப்ரபந்தங்களின் விவரம்
முகவுரை
(1) பொய்கையாழ்வார் அருளிச்செய்தது முதல்திருவந்தாதி; பாட்டு 100
(2) பூதத்தாழ்வார் – இரண்டாந்திருவந்தாதி; பாட்டு 100
(3) பேயாழ்வார் – மூன்றாந்திருவந்தாதி; பாட்டு 100
(4) திருமழிசையாழ்வார் – நான்முகன்றிருவந்தாதி; பாட்டு 96, திருச்சந்தவிருத்தம்; பாட்டு 120
(5) நம்மாழ்வார் – திருவிருத்தம்; பாட்டு 100, திருவாசிரியம்; பாட்டு 7, பெரியதிருவந்தாதி; பாட்டு 87, திருவாய்மொழி; பாட்டு 1102
6) குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி; பாட்டு 105
(7) பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு; பாட்டு 12 பெரியாழ்வார் திருமொழி; பாட்டு 461,
(8) தொண்டரடிப்பொடியாழ்வார் – திருமாலை; பாட்டு 45, திருப்பள்ளியெழுச்சி; பாட்டு 10,
(9) திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான்; பாட்டு 10
(10) திருமங்கையாழ்வார் – பெரியதிருமொழி; பாட்டு 1084
திருக்குறுந்தாண்டகம்; பாட்டு 20
திருநெடுந்தாண்டகம்; பாட்டு 30
திருவெழுகூற்றிருக்கை; பாட்டு 1
சிறிய திருமடல் – 1, பெரியதிருமடல் – 1
(11) மதுரகவியாழ்வார் – கண்ணிநுண் சிறுத்தாம்பு ; பாட்டு 11
(12) ஆண்டாள் – திருப்பாவை; பாட்டு 30
நாய்ச்சியார் திருமொழி; பாட்டு 143
ஆக, ஆழ்வார்கள் பன்னிருவர் அருளிச்செய்த
திவ்யப்ரபந்தங்கள் இருபத்து நான்குக்கு; பாட்டு 3776
எம்பெருமானார் விஷபமாகத் திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த
இராமாநுசநூற்றந்தாதியின் நூற்றெட்டுப்பாட்டுகளையுங் கூட்டிக் கணக்கிடின் 3884
[இங்கு அபிப்ராயபேதங்கள்]
தென்கலை ஸம்ப்ரதாயஸ்தர்களுள் சிலருடைய கொள்கை – ஸ்ரீமண வாளமாமுனிகள் திருவடிகளாகிய அஷ்டதிக்கஜங்களுள் ஒருவரான அப்பிள்ளை அருளிச்செய்த ஆழ்வார்கள் வாழித்திருநாமங்களுள் கலியன் வாழித் திருநாமத்தில், “இலங்கெழுகூற்றிருக்கை யிருமடலீந்தான் வாழியே இம்மூன்றில் பாட்டிருநூற்றிருபத்தேழிசைத்தான் வாழியே ” என்று திருமடல்களிரண்டையும் இருநூற்றிருபத்தாறு பாட்டாகப்பிரித்து, (இராமாநுச நூற்றந்தாதி யொழியவே) நாலாயிரமாகக் கணக்கிட்டுள்ளா ராதலால், சிறிய திருமடலை, 77 – பாட்டாகவும், பெரிய திருமடலை, 148 – பாட்டாகவுங் கொண்டு கணக்கிட்டு, நாலாயிரம்’ என்று நாடெங்கும் வழங்குவதை நலமாக்கவேணுமென்பர் ;
இதற்கு, ஆராய்ந்துணர்ந்த அறிஞர்கள் அருளிச்செய்யும்படி : – இப்போது அச்சிடுவிக்கப்பட்டுள்ள ஆழ்வார்கள் வாழித்திருநாமங்களை அபியுக்தஸார்வபௌமரான அப்பிள்ளை அருளிச்செய்தாரென்பது, இலக்கண நெறியறியாதார் கொள்கை; ஏனெனில் அவ்வாழித் திருநாமங்களில் இலக்கண நடைக்கு இணங்காத அம்சங்களைக் கூறியிருப்பதுந்தவிர அவற்றிலுள்ள பலவடிகள் யாப்பிலக்கணத்துக்கு எதிராகக் காணப்படாநின்றன, எங்கனே யென்னில்; நம்மாழ்வார் வாழித்திருநாமத்தில், ‘ஈனமறவந்தாதி யெண்பத்தேழீந்தான் வாழியே, இலகு திருவாய்மொழி யாயிரத்தொருநூற்றிரண்டுரைத்தான் வாழியே” என்பது இரண்டாமடியாகக் காண்கிறது. ஆசிரிய விருத்தமாகிய இப்பாட்டில், ஒன்று மூன்று நான்காமடிகள் எண்சீர்க்கழிநெடிலடிகளாக அமைந்திருக்க, இவ்விரண்டாமடி யொன்றுமே பத்துச் சீர்கள் கொண்டுள்ளதனாலும், கீழ்க்குறித்த கனியன் வாழித் திருநாமத்திலும் “இலங்கெழு கூற்றிருக்கை யிருமடலீந்தான் வாழியே இம்மூன்றிற்பாட்டிருநூற்றிருபத்தேழிசைத்தான் வாழியே” என்ற மூன்றாமடியில் அங்கனமே சீர்கள் மிகுந்துள்ளதனாலும், இவைபோல்வன மற்றும் பலபிழைகள் காணப்படுதலாலும், இலக்கணம்படியாத பரமைகாந்திகள் பணித்த இவ்வாழித் திருநாமங்களை அப்பிள்ளை அருளிச்செய்தாரென்பது ஏசலுக்கிடமாம்.
அன்றியும், திருமடல்களை ஒவ்வொரு பாட்டாகக் கொள்ளாமல் அரையுங் காலும் முக்காலுங்கூடின பலபாட்டுக்களாகக் கொள்ளுதல் இலக்கண நெறிக்கு இறையேனு மிணங்காதென்பதையுஞ் சிறிது விவரிக்கின்றேன் – ஈற்றடி முச்சீரடியாகவும் மற்றையடி நாற்சீரடியாகவும் பெற்று, காய்ச் சீரும் மாச்சீர்விளச்சீர்களும் இருவகை *1 வெண்டளைகளுங்கொண்டு, மற்றைச்சீருந் தளையும் பெறாமல், நாள் மலர் என்ற ஓரசை வாய்பாடுகளுள் ஒன்றினாலாவது, காசு பிறப்பு என்ற ஈரசைவாய்பாடுகளுள் ஒன்றினாலாவது முடிந்து, ஒருவிகற்பத்தாலாயினும் இருவிகற்பத்தாலாயினும் வருவது வெண்பாவென்று பொதுப்படக்கூறி, இரண்டடியால் வருவது குறள் வெண்பாவெனறும், மூன்றடியால் வருவது சிந்தியல் வெண்பாவென்றும், நான்கடிகளாய இரண்டாமடியின் இறுதிச்சீர் முதலிரண்டடிகளின் எது கையையுடைய தனிச்சொல்லாய்வர நிற்பது நேரிசை வெண்பா வென்றும், நான்கடிகளாய்த் -2 தனிச்சொல் இன்றிவருவது இன்னிசை வெண்பாவென்றும், ஐந்தடி முதல் பன்னிரண்டடியளவும் வருவது பஃறொடைவெண்பா வென்றும், பன்னிரண்டடிக்கு மேற்படின் கலிவெண்பா வென்றும் விசேஷித்து யாப்பிலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ளமைக்கேற்ப, திருமடல்களிரண்டையும் கலிவெண்பாவாகக்கொண்டு ஒவ்வொரு மடலையும் ஒவ்வொரு பாட்டாகக் கொள்ளுவதே ஏற்கும். இம்மடல்களிரண்டிலும் முற்றும் ஒரே எதுகையாக அமைந்தமையையும், ஈற்றடி மூச்சீராகவந்தமையையும் நன்குநோக்குக.
* “காய்முன் நேரும் மாமுன் நிரையும், விளமுன் நேரும் வருவது வெண்டளை”
தனிச்சொல் பெற்றாலும் பலவிகற்பத்தால்வரின் இன்னிசை வெண்பாவேயாம்.
இரண்டாமடியொழிந்த அடிகளில் தனிச்சொற் பெற்றுவருவதும் இதுவே.
அன்றியும், சங்கத்துச்சான்றோர் இயற்றிய ‘பன்னிருபாட்டியல்’ என்ற இலக்கண நூலில் இனவியலில் மடலிலக்கணஞ் சொல்லுமிடத்து ”பாட்டுடைத் தலைமக னியற்பெயர்க் கெதுகை, நாட்டிய வெண்கலிப்பாவதாகி ……. காமங் கவற்றக் கரும்பனை மடன்மா , ஏறுவ ராடவ ரென்றனர் புலவர்” என்றதையுங் கண்டு தெளியலாம்.
இனி, தூப்புல் வேதாந்ததேசிகன் அருளிச்செய்த பிரபந்தசார’ மென்னும் பிரபந்தத்தில், “சிறிய மடல் பாட்டு முப்பத்தெட்டிரண்டும்” என்று சிறிய திருமடலை நாற்பது பாட்டாகவும், பெரியதிருமடலை “சீர்பெரியமடல்தனிற் பாட்டெழுபத்தெட்டும்” என்று எழுபத்தெட்டுப் பாட்டாகவும் பிரித்தருளிச்செய்து, “பரகாலன் சொல், அத்தனுயர் வேங்கடமாற்காயிரத் தோடான விருநூற்றோ ரைம்பத்து மூன்றும், முத்திதருமெதிராசர் பொன்னடிக்கே மொழிந்த வமுதர் பாடல் நூறுமெட்டும், எத்திசையும் வாழ விவைபாடிவைத்த வென்பவை நாலாயிரம் மெங்கள்வாழ்வே” என்று இராமாநுச நூற்றந்தாதியையுங்கூட்டி நாலாயிரம் பாட்டாகக் கணக்கிட்டுள்ளார்; இதற்குப் போக்கென்? என்பர் – வடகலை ஸம்ப்ரதாயஸ்தர் சிலர் :-
*** என்று அந்தத் தூப்புல் பிள்ளைதாமே அதிகரணஸாராவளியில் அருளிச் செய்த ச்லோகத்தை இங்குநினைக்கப் பெற்றேன். இதொழிய வேறு உத்தரம் சொல்லவல்லேனல்லேன்.
“திருமடலை அவரவர்கள் தம்தம் கருத்தின்படி பலபாட்டுக்களாகப் பிரித்தற்கு இலக்கண நூல்கள் இறையாயினும் இசைந்து இடந்தருமோ வென்று எனது சிற்றறிவுக்கெட்டியவரை ஆராய்ந்து பார்த்து மறிந்ததொன்றில்லை” என்றருளிச்செய்வர். இதுநிற்க.
இங்ஙனமாகில், ‘நாலாயிரம் என நாடெங்கும் வழங்குவது சேரும் படி யெங்கனே யேன்னில்; நாலாயிரக்கணக்குக்கு நூறு இருநூறு குறைந்தாலும் மிகுந்தாலும் நாலாயிரமென்றே வழங்கலாம்; (உதாரணம்.) நம் ஆழ்வார்கள் “வாணனாயிரந் தோள் துணித்த” என்றும், “இண்டவாணனீ ரைஞ்நூறு கோள்களைத் துணித்த” என்றுமருளிச்செய்தமை அனைவருமறிவர்; பரமசிவன் பிரார்த்தனையால், 1பாணாஸுரனை நான்குகைகளோடும் உயிரோடும் எம்பெருமான் விட்டருளினனென்பது ஸ்ரீபாகவதாதிகளில் ப்ரஸித்தம்; இனி, கீழ்க்குறித்த ஆழ்வார் பாசுரங்களுக்கும் இப்புராணவரலாற்றுக்கும் ஐக்கண்டியம் பண்ணப்புக்கால், ஆயிரத்துக்கு நாலைந்து குறையினும் ஆயிரமென்றே சொலலாமென்று அனைவருமங்கீகரிக்கவேண்டுமே. இனி, திரு வாய்மொழி ஆயிரத்து நூற்றிரண்டு பாட்டாயிருக்க, ஆழ்வார் தாமே “குரு கூர்ச்சடகோபன் சொன்ன ஓராயிரம்” என்று பலவிடங்களிலும் அருளிச் செய்தமை சேரும்படி
ஹரிவம்ச விஷ்ணுபர்வத்தில், 485-வது அத்தியாயத்தில், இரண்டுகைகளோடு விட்டருளினதாக வரலாறு காண்கிறது; ப்ரக்ருதத்தில் இரண்டுவகையும் துல்யம்.யெங்ஙனே? யென்று கேட்பார்க்கும், நூற்றெட்டுப் பாட்டுக்களமைந்த பிரபந்தத்தை ‘இராமாநுச நூற்றந்தாதி யென்கை சேரும் படியெங்கனே! யென்று கேட்பார்க்கும் – ஆயிரத்துக்கு நூறு ஐம்பது மிகுந்தாலும் ஆயிரமென்றே வழங்கலாமென்றும், நூற்றுக்குப் பத்து எட்டு மிகுந்தாலும் நூறென்றேவழங்கலாமென்றும் மறுமொழியுரைத்தலில் மயங்குவாரில்லையே. இவ்வாறாகவே நாலாயிரமென்ற வ்யவஹாரத்தையுஞ் சேர்வித்துக்கொள்ள வேண்டுமென்று
முன்னோர்மொழிந்தமுறை. இவ்வாறு வடநூல்கள் பலவற்றிலுங் காண்கிறது; ஆயிரத்தெட்டு ச்லோகங்களமைந்த ஸ்தோத்ரத்தைப் பாதுகாஸஹஸ்ரமென்றும், எழுபத்தினான்கு சலோகங்களமைந்த ஸ்தோத்ரத்தை யதிராஜஸப்ததி யென்றும், இவை போல்வன பலவழக்கங்களுங்காணலாம். ஆகையால், திருமடல்களை ஒவ்வொருபாட்டாகக் கொள்ளிலும் நாலாயிரரென வழங்குதற்கு வசையொன்று மில்லையென்க. இதுஒழிய.
இத்திவ்யப்ரபந்தங்களுட் சிலவற்றுக்கும் பலவற்றுக்கும் வியாக்கியமான மருளிச்செய்தவர்கள், – திருக்குருகைப்பிரான் பிள்ளான், நஞ்சீயர், வடக்குத் திருவீதிப்பிள்ளை அழகிய மணவாளப்பெருமாள் நாயனார், வாதிகேஸரி அழகிய மணவாளசீயர், திருவாய்மொழிப்பிள்ளை, மணவாளமாமுனிகள், அப்பிள்ளை, பிள்ளைலோகஞசீயர். நாலாயிரத்திற்கும் பரிபூர்த்தியாக வியாக்கியான மருளிச்செய்தவர் பெரியவாச்சான் பிள்ளை யொருவரே. பெரியாழ்வார். திருமொழியில் நானூற்றுச்சொச்சம் பாட்டுவரையில் பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானம் லோபித்துப் போனமையால் அப்பகுதி ஸ்ரீமணவாளமாமுனிகள் பரமபோக்யமான வியாக்கியான மருளிச்செய்தார். (வடகலை ஸம்ப்ரதாயத்துக்குச்சேர, சிற்சில திவ்யப்ரபந்தஙகளுக்குப் பெரிய பரகாலஸ்வாமி, வேதாநதராமாநுஜஸ்வாமி, ரங்கராமாநுஜஸ்வாமி முதலானார் ஸங்க்ஷேபவியாக்கியானங்கள் செய்துள்ளார்) ஆகிய இப்பூருவர்களருளிச்செய்த வியாக்கியானங்களுள் ஒன்றேனும் தமிழலக்கண நடையை அடியொற்றிப் பதவுரைவிளக்கிப் பொழிப்புரைவிரிக்கத் தலைப்படவில்லை, பெரும்பாலும் ரஸாநுபவத்தையே தலைமையாகக் கொண்டருளிச் செய்யப்பட்ட கம்பீரமான அரிய பெரிய வியாக்கியானங்களாயிராநின்றன. சில பின்புள்ளார், அந்த வியாக்கியானங்களை அச்சிடுவிக்கும்போது ஒரு பதவுரையுமெழுதிக் கூடவச்சிட்டு வெளியிட்டுள்ளார். அதுபற் பலவிடங்களில் இலக்கணநடையைத் தொடரப்பெறாமலும், மயங்கவைத்தலென்னுங் குற்றத்துக்குக் கொள்கலமாகவுங் காணப்படாநின்றமையை அறிஞரனைவருமாராய்ந்துணர்வர், “பன்னியுரைக்குங்காற் பாரதமாம்.“
வடமொழியுந் தென்மொழியும் விரவிய மணிப்ரவாளநடையில் எழுதப்பட்டுள்ள பூர்வாசார்ய வ்யாக்யாநங்க ளெல்லாவற்றையும் அரும்பத வுரைகளையுந்தழுவித் தமிழ்நடையில் ஓருரை இயற்றப்புகின் வெகுவிரிவாய் விடுமாதலால், அங்ஙனஞ் செய்யாது, அவற்றைப் பெரும்பாலுந் தழுவிச் சிறுபான்மை உசிதமாக வேறு சில விஷயங்களையும் புதிதாகச் சேர்த்து எனது சிற்றறிவுக்கு ஏற்ப ஒருரையெழுதத் தொடங்கலாயினேன்.
இதில், அவசியமான பதப்ரயோஜனங்களையும், இன்றியமையாத இலக்கணக்குறிப்புகளையும், முக்கியமான புராணவலராறுகளையும் எடுத்துக்காட்டி, பதப்பொருள், கருத்து, விசேஷார்த்தம், சொற்சுவை, பொருட்சுவை, யாப்பிலக்கணம் முதலியவற்றை ஆங்காங்கு வேண்டுழி இனிது விளக்குவதோடு, ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயமுறைகளையும், அகப்பொருள் துறையிலக்கண வகைகளையும் உள்ளவிடத்து விவரித்துவருமாறு முயன்றிருக்கின்றேன். அன்றி பூர்வாசார்யர்களுடைய வியாக்கியானங்களின் வாக்கியங்களும் உரியவிடங்களில் இதில் எடுத்தாளப்படும், “முன்னோர் மொழிபொருளேயன்றி யவர்மொழி இதில் எடுத்தாளப்படும், “முன்னோர் மொழிபொருளேயன்றி யவர்மொழியும், பொன்னேபோற் போற்றுவம்“ (நன்னூல்) என்பது இலக்கணமாதலால்.
திருக்கோவையார்க்கு உரைசெய்யத் தொடங்கிய நல்லறிவுடைய தொல்பேராசிரியர்தாமே அந்நூலுரைப் பாயிரத்தில் “பரமகாரணன் திருவருளதனால் திருவாதவூர்மகிழ் செழுமறைமுனிவர், ஐம்பொறி கையிகந்தறிவாயறியாச், செம்புலச் செல்வராயினராதலின், அறிவன் நூற்பொருளும் உலக நூல்வழக்குமென, இருபொருளும் நுதலி எடுத்துக்கொண்டனர், ஆங்கவ்விரண்டனுள், ஆகமநூல்வழியின் நுதலியஞான, யோகநுண்பொருளினை யுணர்த்துதற்கரிது, உலகநூல்வழியின் நுதலியபொருளெனும், அலகில்தீம்பாற் பரவைக்கண் எம், புலனெனுங் கொள்கலன் முகந்தவகைசிறிது, உரையா மரபின் உரைக்கப்பாற்று” என்றதனால், அந்நூலின் உட்கிடைப் பொருளேயன்றி வெளிப்படைப்பொருளும் உணர்த்துதற்கு எளியதன்றென்றனரென்றால், அந்நூலினும் மேம்பட்டுள்ள நம் ஆழ்வார்களருளிச் செயல்களின் ஸ்வாபதேசம் அந்யாபதேசமென்னும் இருவகைப் பொருளையும் உள்ளபடி வெளியிடுதற்குச் சிற்றறிவுடைய சிறியேனாகிய உரியேனல்லேனாயினும் பூர்வாசார்யரகளது அருளிச்செயல்களையே பற்றுக்கோடாகக் கொண்டு இவ்வுரையெழுதத் தொடங்கினேன்.
முக்குணங்களும் மாறிவரும் மானுடரியற்கையாலாய கைப்பிழையும் அச்சுப்பிழையும், இரவிலும் விரைவிலும் எழுதவேண்டியிருக்கின்றமைப்பற்றி நேரும் பிறழ்வுமாகிய பலகுற்றங்குறைகளைப் பெரியோர் தமது இயற்கை நற்குணத்தாற் பொறுத்தருளுமாறு பிரார்த்திக்கின்றேன். குற்றங்குறைகளையெடுத்துக் காட்டுவார் பக்கல் பெருநன்றிபாராட்டுவதுடன், அவற்றை அப்போதைக்கப்போது திருத்திவரவுங் கருத்துறுவேன்.
குற்றங் குறைகண்டு கூறுங் குரவர்கட்
கெற்றைக்குங் கைம்மாறா மென்தலையை – கற்றார்கள்
கல்லா வடியேனைக் கண்ணுற் றிகழாரேல்
எல்லா மெளிதா மெனக்கு.
ஸௌம்யளு | இங்ஙனம், ஸ்ரீவைஷ்ணவதாஸன் |
ஆவணிமீ | பெருமாள்கோயில் பிரதிவாதிபயங்கரம் |
பௌர்ணமி | அண்ணங்கராசாரியன் |
காஞ்சீபுரம் |
ஸ்ரீ
பேரருளாளன் பெருந்தேவித்தாயார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பொதுத்தனியன்கள்
(நம்பெருமாள் அருளிச்செய்த்து)
ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி சூணார்ணவம்
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம்
ஸ்ரீசைலேச தயாபாத்ரம் | – | திருமலையாழ்வார் என்னும் திருவாய்மொழிப் பிள்ளையின் திருவருளுக்குப் பாத்ரபூதரும் |
தீபக்த்யாதி குணார்ணவம் | – | ஞானம், பக்தி முதலிய நற்குணங்களுக்குக் கடல் போன்றவரும் |
யதீந்த்ர ப்ரவணம் | – | எம்பெருமான் பக்கலிலே ப்ராவண்ய முடையவருமான |
ரம்ய ஜாமா தாம் முநிம் வந்தே | – | ஸ்ரீமணவாளமாமுனிகளை வணங்காநின்றேன். |
குறிப்பு: “யதீந்த்ர ப்ரவணம்” எங்கிறவிது மணவாளமாமுனிகளுக்கு அஸாதரணமான நிரூபகம்.
பொதுத்தனியன்களின் விசேஷவுரை
***- இப்புவியிலரஞ்கேசற்கு ஈடளித்தான் வாழியே“ என்று வாழ்த்தப்படா நின்ற ஸ்ரீமணவாளமாமுனிகள் திருவரங்கம் பெரியகோவிலில் ஸ்ரீரங்கநாதன் திருமுன்பே, திருவாய்மொழியின் சிறந்த வியாக்கியானமாகிய ஈடுமுப்பத்தாறா பிரப்படியைக் காலக்ஷேபம் ப்ரஸாதித்துவருகிற அடைவிலே காலக்ஷேபசாத்து முறையன்று ஸ்ரீரங்கநாதன்தானே ஒரு சிறுபிள்ளைவடிவுடன் திருவோலக் கத்தினிடையே ஓடிவந்து கைகூப்பிநின்று ஸ்ரீசைலேசதயாபாத்ரமென்று தொடங்கி இந்தத் தனியனை வெளியிட்டுச் சென்றதுமன்றியில், வடமொழி வேதத்தின் ஆதியிலும் அந்தத்திலும் ப்ரணவோச்சாரணம் பண்ணுவது நியதமாயிருப்பதுபோலத் ஸ்ரீவைஷ்ணவர்களனைவரும் நியதமாக அநுஸந்திக்கக் கடவர்களென்று நியமனமுமருளப்பட்டது.
மணவாளமாமுனிகளின் ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளைக்கு ஸ்ரீசைலேசர் என்று திருநாமம்.
கூரத்தாழ்வான் அருளிச்செய்தது.
லக்ஷ்மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்
லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் | – | ஸ்ரீயப்பதியான எம்பெருமானைத் தொடக்கத்திலேயே உடைத்தாய் |
நாத யாமுந மத்யமாம் | – | ஸ்ரீமந்நாதமுனிகளையும், ஆனவந்தாரையும் இடையிலே உடைத்தாய் |
அஸ்மதாசார்ய பர்யந்தாம் | – | எமக்கு ஆசார்யான எம்பெருமானுரை முடிவிலே உடைத்தான |
குருபரம் பராம் வந்தே | – | ஆசார்யபரம்பரையை வணங்காநின்றேன். |
நம்முடைய ஆசார்ய பரம்பரையிலே எம்பெருமான் முதலிநின்கின்றமையால் லக்ஷ்மீநாத்ஸமாரம்பாம் எனப்பட்டது. எம்பெருமானுக்குப் பிறகு பிராட்டி, ஸேனைமுதலியார், நம்மாழ்வார் இவர்கட்குப்பிறகு ஸ்ரீமந்நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால்நம்பி, ஆளவந்தார் முதலான ஆசாரியர்களை நடுவிடத்திலே வைத்து நாதயாமுநமத்யமாம் என்றார். இத்தனியனருளிச்செய்தவர் கூரத்தாழ்வானாகையாலே அஸ்மதாசார்ய பதத்தால் எம்பெருமானாரைக் கொள்ளவேணும். அவர்தாம் குருபரம்பரைக்கு நடுநாயகமாயிராநின்றாரேயாகிலும் ஆழ்வானுக்கு ஸாக்ஷாத் ஆசார்யரானமைபற்றி அவரை முடிவிலேவைத்து அநுஸந்திக்கவேண்டியதாயிற்று.
இத்தனியனை ஆழ்வானுக்குப் பின்புள்ள ஆசார்யர்களும், இப்போதுள்ள அஸ்மதாதிகளும், நமக்குப் பின்னே வருமவர்களும் அநுஸந்திக்கும்போது “அஸ்மதாசார்ய“ என்ற இப்பதமானது அவரவர்களுடைய ஸாக்ஷாதாசார்யரை உத்தேசிதத்தாகும், அப்போது எம்பெருமானார் நாதயாமுநர்களிலே அடக்கமாய் நடுவிடத்திலே நின்றாராவர் – என்று நிர்வஹிப்பாருமுண்டு அஸ்மதாதிகளின் ஆசார்யர்களளவும் அந்வயிப்பதற்குப் பாங்காகவே ஆழ்வான் “ராம நுஜார்யபர்யந்தாம்“ என்னாமல் அஸ்மதாசார்யபரயந்தாம் என்று பொதுவினே அருளிச்செய்தாரென்பர்.
இதுவும் ஆழ்வானருளிச் செய்தது.
யோ நித்யமச்யுதபதாம்புஜக்மருக்ம
வ்யாமோஹதஸ் த்திதாரணி த்ருணாய மேநே
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே.
ய: | – | யாவரொரு எம்பெருமானார் |
நித்யம் | – | எந்நாளும் |
அச்யுத பதாம்புஜ யுக்மருக்மவ்யா மோஹத: | – | எம்பெருமானது திருவடித்தாமரை யிணை களாகிற ஸுவர்ணத்திலுள்ள மிகுந்த விருப்பத்தினாலே |
தத் இதராணி | – | அத்திருவடிகளுக்குப் புறம்பாயுள்ள விஷயங்களை |
த்ருணாய மேநே | – | துரும்பாக நினைத்துத் தள்ளிவிட்டாரோ |
அஸ்மத் குரோ: | – | எமக்கு ஆசார்யராய் |
பகவத | – | ஸமஸ்தகல்யாணகுண பரிபூர்ணராய் |
தயா ஏக ஸிந்தோ | – | தயாகுணத்துக்கு முக்ய ஸமுத்ரம் போன்றவரான |
அஸ்ய ராமாநுஜஸ்ய | – | இப்படிப்பட்ட எம்பெருமானாருடைய |
சரணௌ | – | திருவடிகளை |
சரணம் | – | உபாயமாக |
ப்ரபத்யே | – | பற்றுகிறேன். |
ஆழ்வானருளிச் செய்த பஞ்சஸ்தவங்களில் முதலதான ஸ்ரீவைகுண்ட ஸ்தயத்தில் முதல் சலோகமாமிது. இதுவே எம்பெருமானார்க்குத் தனியனாகவும் ப்ரஸித்தமாயுள்ளது.
உலகில் ஸுவர்ணத்தில் ஆசைகொள்ளாதாரில்லை, எப்படிப்பட்ட விரக்தர்கட்கும் பொன்னில் விருப்பம் கோகாது, பரமவிரக்தரான எம்பெருமானார் தாமும் ஸ்வர்ணத்தில் ஆசையைத் தவிர்ந்திலர், அதாவது – எம்பெருமானுடைய திருவடித் தாமரையினைகளை ஸுவர்ணம், அது தன்னிலே மஹத்தான வ்யாமோஹம் கொண்டார், பொன்னை விரும்பினவர்கள் புறம்புள்ள பொருள்களைப் புல்லாக நினைத்து அவற்றில் விருப்பமற்றிருப்பரன்றோ, அப்படியே எம்பெருமானார் தாமும் அச்யுதபதாம்புஜயுக்மமாகிற ஸுவர்ணத்திலே மோஹம் வைத்தபின் மற்ற பொருள்களையெல்லாம் த்ருணமாக நினைத்துத் தள்ளிவிட்டார் – எம்பெருமான் திருவடிகளிலே பரமப்ராவண்யமுடையனார், அவரது திருவடிகளே நமக்குப் பொன் – என்றாராயிற்று.
(ஆளவந்தார் அருளிச்செய்தது)
மாதாபிதா யுவதய ஸ்தநயா விபூதி
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்,
ஆத்யஸ்யந குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா.
மாதா பிதா யுவதய: | – | தாய், தந்தை மாதர்களும், மக்கள், செல்வம் |
– | (மற்றுமுள்ள) எல்லாமும் | |
தநயா: விபூதி: | – | மக்கள், செல்வம் |
ஸர்வம் | – | (மற்றுமுள்ள) எல்லாமும் |
மத் அந்வயாநாம் | – | நான் பிறந்த குலத்தில் பிறந்தவர்களுக்கு |
நியமேந யத் ஏவ | – | விதிக்கப்பட்ட எந்தத் திருவடியிணையே ஆகின்றதோ |
ந: ஆத்யஸ்ய குலபதே: | – | நமக்குக் குலகூடஸ்தராகிய நம்மாழ்வாருடைய |
வகுள அபிராமம் | – | மகிழமலர்களினால் அலங்க்ருதமாயும் |
ஸ்ரீமத் | – | வைஷ்ணவஸ்ரீயோடே நித்யோஜ்வலமாயுமிருக்கிற |
தத் அங்க்ரி யுகளம் | – | அந்தத் திருவடியிணையை |
மூர்த்நா ப்ரணமாமி | – | தலையால் வணங்குகின்றேன். |
***- ஆளவந்தார்ருளிச்செய்த ஸ்தோத்ராத்நத்தில் ஐந்தாம் ச்லோகமாமிது, இதுவே நம்மாழ்வார்க்குத் தனியனாகவும் ப்ரஸித்தமாகவுள்ளது. “சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய் தந்தையும் அவரேயினியாவாரே“ (திருவாய்மொழி -5-1-8) என்று ஆழ்வார்க்கு மாதாபிதாக்கள் முதலிய எல்லா உறவுமுறையாரும் எம்பெருமானேயானது போல ஸ்ரீவைஷ்ணவர்கட்கெல்லாம் ஆழ்வார் திருவடிகளே ஸர்வஸ்வமாகிறதென்று அருளிச்செய்கிற இவருடைய அத்யவஸாயத்தை என் சொல்வோம். நம்மாழ்வார்க்குப் பல திருநாமங்களிருக்கவும் அவற்றை யெல்லாம் விட்டு “ஆத்யஸ்ய ந; குலபதே“ என்று –‘நம்முடைய குலத்துக்குத் தலைவர்‘ என்று அருளிச்செய்யும்படியான திருவுள்ளக்கனிவு விலக்ஷணமானதே. “விப்ரர்க்கு கோத்ரசரண ஸூத்ரகூடஸ்தர் பராசா பாராசர்ய போதாயநாதிகள், ப்ரபந்தஜநகூடஸ்தர் பராங்குச பரகாலயதிவராதிகள்“ என்ற ஆசார்ய ஹ்ருதய ஸூக்தி இங்கு ஸ்மரிக்கத்தக்கது.
மதந்வயாநாம் என்கிற பதத்தினால தமக்கு முன்னே அவதரித்திருந்த பெரியோர்களும், தமக்குப்பிறகு ஜனித்த, ஜனிக்கின்ற, ஜனிக்கப்போகிற ஸ்ரீவைஷ்ணவஸந்தாநங்களும் விவக்ஷிதம். ஸ்ரீவைஷ்ணவர்களென்று பேர்பெற்ற அனைவர்க்கும் ஆழ்வார் திருவடிகளே ஸர்வஸ்வம் என்றாராயிற்று.
“லக்ஷ்மீநாத ஸமாரம்பாம். . . . . . . . வந்தே குருபரம்பராம்“ என்ற எம்பெருமான் ப்ரதமாசார்யனாகையாலே அத்யஸ்ய ந; குலபதே; என்று எம்பெருமானைச் சொல்லுகிறதென்று கொண்டு, அங்க்ரியுகளம் என்கிற பதத்தினாலே நம்மாழ்வாரைச் சொல்லுகிறது என்பாருமுளர். எம்பெருமானுடைய திருவடி நிலைக்கு ஸ்ரீசடகோபன் என்று திருநாமமாகையாலே இப்படியும் சொல்லலாம் வகுளாபிராமம் என்கிற விசேஷணத்தினால் இவ்வர்த்தம் நன்கு நிலைபெறும் “மகிழ்மாலை மார்பினன்“ என்றும் “வகுளாபரணர்“ என்றும் நம்மாழ்வாரைச் சொல்லக்கடவதிறே. இவ்வர்த்தம் பொருந்துமாயினும் ஆத்யஸ்ய ந; குலபதே என்பதால் நம்மாழ்வாரைச் சொல்லுகிறதென்பதே ஏற்றதாகையாலும் பூர்வாசார்யர்களின் வியாக்கியானமும் இவ்வண்ணம்மேயாகையாலும் இதுவே கொள்ளத்தக்கது.
திவ்யப்ரபந்த திவ்யார்த்த தீபிகை – தனியன் உரை
(ஸ்ரீபராசரபட்ட ரருளிச்செய்த்து)
பூதம் ஸரச்ச மஹதாஹ்வய பட்டநாத
ஸ்ரீபக்திஸார குலசேகர யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ரமிச்ராந்
ஸ்ரீமத்பராங்குசமுநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.
பூதம் | – | பூதத்தாழ்வாரையும் |
ஸரச்ச | – | பொய்கையாழ்வரையும் |
மஹத் ஆஹ்வய பட்டநாத ஸ்ரீபக்திஸார குலசேகர யோகி வாஹாந் | – | பேயாழ்வார் பெரியாழ்வார் திருமழிசையாழ்வார் குலசேகராழ்வார் திருப்பாணாழ்வார் இவர்களையும் |
பக்த அங்க்ரி ரேணு பரகால யதீந்த்ர மிச்ராந் | – | தொண்டாடிப்பொடி யாழ்வார் திருமங்கையாழ்வார் எம்பெருமானார் இவர்களையும் |
ஸ்ரீமத் பராங் குசமுநிம் | – | நம்மாழ்வாரையும் |
நித்யம் | – | நாள்தோறும் |
ப்ரணத அஸ்மி | – | ஸேவிக்கிறேன் |
***- ஆழ்வார்கள் பதின்மரையும் ஆசாரியர்களில் முக்கியரான எம்பெருமானாரையும் சேர்த்து அநுஸந்திக்கும் ச்லோகமாமிது. இதில், பொய்கையார் பூதத்தார் பேயார் என்கிற முறைமைப்படியே திருநாமங்களைப் பதியாமல் பூதத்தாழ்வாரை முன்னு பதிந்தும் நம்மாழ்வாரை முடிவிற்பதிந்துமிருப்பது ச்லோகம் கூடினவகையிலே அமைந்த அமைப்பு என்று நினைத்திடுவர் சிலர். அங்ஙனன்று, “காஸார பூத மஹதாஹ்வய பக்திஸாராந் ஸ்ரீமச்சடாரி குலநகர பட்டநாதாந், பக்தாங்க்ரிரேணு முநிவாஹந கார்த்திகேயாந் ராமாநுஜஞ்ச நம் ப்ரணதோஸ்மிநித்யம்“ என்று அடைவுபடக் கவி சொல்லுவதில் பெருமையொன்றுமில்லை, ஆயினும், பூதத்தாழ்வார் தொடங்கி நம்மாழ்வார் வடிவாக அமைக்கப்பட்ட இந்த ப்ரக்ரியைக்கு நல்ல நியாமகம் ஒன்றுண்டு கேண்மின்.
ஆழ்வார்களுள் முக்கியரான நம்மாழ்வாரை அவயவியாகவைத்து மற்றுள்ள ஆழ்வார்களை அவர்க்குத் திருமுடி திருக்கண் முதலிய அவயங்களாக வைத்துப் பூருவாசாரியர்கள் ச்லோகங்களருளிச்செய்திருப்பதைக் கீழ்முகவுரையின் முகப்பில் எடுத்துக்காட்டியிருக்கிறோம். அவற்றில், பூதத்தாழ்வாரைத் திருமுடியாகவும், பொய்கை பேயாழ்வார்களைத் திருக்கண்களாகவும், பட்டர்பிரானைத் திருமுகமாகவும், திருமழிசைப்பிரானைத் திருக்கழுத்தாகவும், குலசேகரப்பெருமானையும் திருப்பாண்பெருமானையும் திருக்கைகளாகவும், தொண்டரடிப்பொடிகளைத் திருமார்பாகவுமும், கலியனைத் திருநாபியாகவும் எதிராசனைத் திருவடியாகவும் உருவகப்படுத்தியிருத்தலால் அந்த ப்ரக்ரியைக்கு ஏற்ப இந்தத் தனியன் திருவ்வதரிதத்தென்று பெரியோர் கூறுவர். அவயவ பூதர்களை முந்துற வரிசையாகச் சொல்லி, அவயவியான ப்ரபந்நஜநகூடஸ்தரை முடிவில் சொல்லியிருப்பது இவ்வகையிலே நன்கு பொதுந்துமென்றுணர்க.
பட்டந் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கும்போது நஞ்சீயருடைய பிரார்த்தனையினால் அருளிச்செய்த ச்லோகமிது.
ஆக, “ஸ்ரீலைலேச தயாபாத்ரம்“ என்று தொடங்கி இவ்வளவும் பொதுத்தனியன்கள். நாலாயிர திவ்யப்ரபந்தங்களுள் எந்த பிரபந்தத்தை அநுஸந்திக்கவேணுமானாலும் முந்துற இந்த ஐந்து தனியன்களையும் அநுஸந்தித்தே யாகவேண்டுமென்று ஸத்ஸம்ப்ரதாய பரம்பரையாகையால் இவை பொதுத் தனியன்கள் எனப்பட்டன. தனித்தனியே ஒவ்வொரு ப்ரபந்தத்துக்கும் அஸாதரணமாக அநுஸந்திக்கப்படவேண்டிய தனியன்கள் சிறப்புத் தனியன்களாம். அவை ஒவ்வொரு பிரபந்தத்தின் முகப்பிலும் வியாக்கியானிக்கப்படும்.
தனியன் என்றால் என்ன?
தமிழ்நூல்களில் சிறப்புப்பாயிரமென வழங்கப்படுவதே ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் தனியன் என்று வழங்கப்படும். இது, நூலின் சிறப்பை யாயினும் நூலாசிரியரின் சிறப்பையாயினும் இரண்டையுமாயினும் எடுத்துக்கூறுவது. நூலினுட்சேராமல் அதன் புறத்தே தனித்து நிற்றல் பற்றித் தனியன் என்பது காரணப்பெயராம். இதில் “அன்“ என்னும் ஆண்பால்விகுதி உயர்வு குறித்தற்பொருட்டு அஃறிணைப் பெயரோடு வந்த்தென்க “திருக்கோவையார்“ “நாலடியார்“ என்பவற்றில் ஆர்விகுதிபோல. இத்தனியன் பூருவாசாரியர்களால் ஒவ்வொரு பிரபந்தத்துக்கும் அருளிச்செய்யப்ப்பட்டிருக்கின்றது. ஸம்ஸ்க்ருத ச்லோகங்களாகவும் சில தனியன்களுண்டு. “தன்னாசிரியன் தன்னொடு கற்றொடு தன் மாணாக்கன் தகுமுரைகாரனென், றின்னோர் பாயிரமியம்புதல் கடனே“ என்ற நன்னூற் சூத்திரத்தினால் தனியனருளிச் செய்வதில் அதிகாரமுடையர் இன்னாரென்றறியாலாம்.
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
திவ்யப்ரபந்த திவ்யார்த்ததீபிகையில்
பொதுத்தனியன்களின் உரை
முற்றிற்று
ஸ்ரீ
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியாழ்வார் வைபவம்
இவ்வாழ்வார் பாண்டியநாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனிமாதத்து ஸ்வாதீ நக்ஷத்திரத்தில் வேயர்குலத்தில் அவதரித்து விஷ்ணுசித்தரென்று திருநாமமுடயவராய் வடபெருங்கோயில் உடையானுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே எம்பெருமானுக்குத் தொண்டு பூண்டு அமுதம் உண்கையையே இயல்வாகவுடையராய், எம்பெருமான் திருவுள்ளத்துக்கு எந்த கைங்கரியம் உகப்போ, அதுவே நாம் செய்யத்தக்கது என்று உறுதிகொண்டு ஆராய்ந்து பார்த்தவளவில், ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்தில் கம்ஸனுக்குப் பணிசெய்துகொண்டிருந்த மாலாகார்ருடைய மனையிலே யெழுந்தருளிப் பூமாலை இரந்துபெற்று அணிந்துகொண்டானென்கிற உவப்பு என்று நிச்சயித்துத் திருநந்தவஞ்செய்து வடபெருங்காயில் உடையானுக்குத் திருமாலைகட்டிச் சாத்திக்கொண்டிருந்தார்.
இங்ஙனிருக்கையில், பாண்டியகுலத்திற் பிறந்த ஸ்ரீவல்லபதேவனென்னு மரசன் மதுரையில் தர்மிஷ்டனாய் அரசாட்சி புரிந்துகொண்டிருக்குங்காலத்தில் ஒரு நாளிரவில் நகர சோதனை செய்துகொண்டு திரியும்போது ஒரு தெரு திண்ணையின் மேல் ஒருவன் படுத்திருக்கக் கண்டு அவனையெழுப்பி “நீ யார்?“ என்று கேட்க, “நான் ஒரு பிராமணன்“ கங்கை நீராடி மீண்டு வருகிறேன் என்று அவன் சொல்ல, “உனக்கு ஏதாவது நீதி தெரிந்திருந்தால் சொல்லு பார்ப்போம்“ என்று அரசன் சொல்ல அந்த அந்தணன்.
வர்ஷார்த்தமஷ்டௌ ப்ரயதேத மாஸாந்
நிசார்த்தமர்த்தம் திவஸம் யதேத
வார்த்தக்யஹேதோர் வயஸா நவேந
பரத்ரஹேதோரிஹ ஜந்மநா ச.
என்ற ச்லோகத்தைச் சொன்னான். (இதன் பொருள் –மழைக்காலத்தில் வேண்டியவற்றுக்காக மற்ற எட்டு மாதங்களில் முயற்சிசெய்யவேண்டியது; இராக்காலத்துக்கு வேண்டியதற்காகப் பகலில் முயற்சி செய்யவேண்டியது; கிழத்தனத்தில் வேண்டியவற்றுக்காக யௌவனத்தில் முயற்சி செய்யவேண்டியது; பரலோக போகத்திற்காக இப்பிறவியில் முயற்சி செய்ய வேண்டியது என்பதாம். )
அரசன் விவேகியாகையாலே இந்த ச்லோகத்தைக் கேட்டதும் “நமக்கோ இஹலோகத்தில் போகங்களுக்கு ஒரு குறையில்லை இனி, பரலோக நற்கதிக்கு முயலவேண்டும்; இதற்கு என்னவழி?’’ என்று அன்றிரவு முழுவதும் இதுவே சிந்தையாயிருந்து, பொழுது விடிந்தவுடனே தன்னுடைய புரோஹிதரனான செல்வநம்பியை வரவழைத்து ‘நால்வகைப் புருஷார்த்தங்களையும் அளிக்க வல்ல பரதத்துவம் இன்னதென்று நிச்சயிப்பதற்கு என்ன உபாயம்?‘ என்று கேட்க, ‘வித்வான்களைத் திரட்டி அவர்களைக்கொண்டு இதனை நிர்ணயிக்க வேணும்‘ என்று அவர் சொல்ல, ராஜாவும் அப்படியே நல்லதென்று இசைந்து, அளவற்ற பொருள்களை ஒரு சிலையில் முடிந்து அந்தப் பொற்கிழியை வித்யாசுல்கமாக ஸபாமண்டபத்தின் முன்னிலையில் உயரக்கட்டுவித்துப் “பரப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை வைதிகப்ரமாணங்களால் நிர்ணயித்துச் சொல்லுகிறவர் இந்தப் பொற்கிழியைப் பெறுதற்கு உரியர்“ என்று பலவிடங்களிலும் பிரசுரப்படுத்தினவளவில், அத்தேசத்திலும் மற்றும் பல தேசங்களிடமிருந்து பலவகை மதத்துப் பல பண்டிதர்கள் வந்து திரண்டனர்.
அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் எம்பெருமான் ஸ்ரீவிஷ்ணு சித்தரைக் கொண்டு வேதாந்த ஸித்தமான பரதத்துவத்தைப் பிரகாசப்படுத்தி உலகத்தை வாழ்விக்கவேணுமென்று திருவுள்ளங்கொண்டு அந்த அடியவருடைய கனவிலே எழுந்தருளி ‘நீர் மதுரைக்கு விரைந்து சென்று பாண்டியராஜனுடைய பண்டித ஸபையிற் சேர்ந்து ஸ்ரீமந்நாராயணனே பரம்பொருளென்று ஸ்தாபித்துப் பொற்கிழியை அறுத்துக்கொண்டு வாரும்‘ என்று நியமனம் தந்தருள; அதற்கு அவர் ‘சிறிதும் சாஸ்த்ரஞானமில்லாத அடியேன் எங்ஙனம் இதனைச் செய்யவல்லேன்?‘ என்ன? எம்பெருமான், ‘அதைப்பற்றி உமக்கென்ன கவலை? அந்த பாரம் நம்முடையதன்றோ?‘ என்றருளிச்செய்து மறைந்தான்.
பெரியாழ்வார் வைபவம்
அநந்தரம் விஷ்ணுசித்தர் எழுந்து ஆச்சரியப்பட்டு எம்பெருமானது நியமனப்படியே நடக்க நிச்சயித்து உடனே புறப்பட்டுப் பாண்டியராஜ பண்டிதஸபையில் எழுந்தருளின வளவிலே, அவரைக் கண்ட அரசனுக்கும் புரோஹிதர்க்கும் ‘இவரிடத்தில் ஏதோ விசேஷமிருக்கிறது’ என்று தம்மில் தோன்றினபடியால் பரம கௌரவத்துடனே எதிர்கொண்டழைத்தல் திருவடிதொழுதல் முதலியவற்றால் உபசரித்து சபைநடுவே சீரிய சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்தனர். இவர்கள் இப்படி பஹுமாநித்தத்தைக்கண்டு மற்றுள்ள வித்வான்களெல்லாரும் பொறமைகொண்டு “அளவற்ற வேதசாஸ்த்ரங்களைப் பயின்றுள்ள எங்கட்கெல்லாம் அகௌரவ முண்டாகுமாறு ஒன்றுந்தெரியாத இப்படி கௌரவிப்பது அயுக்தம்‘ என்று சொல்லி ஆக்ஷேபிக்க, செல்வ நம்பி அவர்களையடக்கி விஷ்ணுசித்தரை நோக்கி ‘தேவரீர் பரமகிருபையுடன் பரதத்வ நிர்ணயம் செய்தருளவேணும்‘ என்று பிரார்த்திக்க; அந்த விஷ்ணு சித்தர் கனவில் காட்சிதந்த கமலைகேழ்வனுடைய கருணையைக் கனக்க நம்பியிருந்தபடியால் எம்பெருமானைச் சிந்தைசெய்ய; அவ்வளவிலே பகவத்க்ருபையாலே அவர்க்கு ஸகல சாஸ்த்தரார்த்தங்களும் கைகொள் நெல்லிக்கனியாக இலங்கின. இங்ஙனம் எம்பெருமானின்னருளால் ஸர்வஜ்ஞரான விஷ்ணுசித்தர் அப்போது ச்ருதி ஸ்மிருதி இதிஹாஸ புராணங்களிலிருந்து பல வாக்கியங்களைப் பிரமாணமாக எடுத்துக்காட்டி அவற்றின் அர்த்தங்களையுமும் தாமே ஆக்ஷேபஸமாதாநங்களோடு யுக்தியுக்தமாக வெளியிட்டு இதர மதக் கொள்கைகளை எல்லாம் கண்டித்து, ஸ்ரீவைஷ்ணவ மதமே ப்ராமாண்யம் என்றும், ஸ்ரீமந்நாராயணனே பரமபுருஷன் என்றும், அவனைச் சரணமடைவதே சிறந்த மார்கமென்றும் பரக்க உபந்யஸித்துப் பரதத்வ ஸ்தாபநம் பண்ணினவளவிலே முன்பு பொறாமையாலே தூஷித்த வித்வான்கள் எல்லாரும் ஒன்றும் வாய்திறக்க வழியில்லாமல் வெட்கித் தலைகவிழ, வல்லபதேவனும் செல்வநம்பியும் அவருடைய ஞானவைபவத்தைக் கண்டு கொண்டாடி ஸாஷ்டாங்கமாக விழுந்து ஸேவித்தனர். முன்பு அரசனால் ஒரு கம்பத்தினுச்சிறந் கட்டி நிறுத்தப்பட்டு பொற்கிழி தானாகவே உவந்து ஆழ்வார் முன்னே தாழவிழிய, இதுவும் ஒரு பகவத் க்ருபையென்று உவந்து ஆழ்வார் அதனை அறுத்துக் கொண்டருளினார்.
அதைக்கண்ட அரசனும் புரோஹிதரும் மற்றும் பல பண்டிதர்களும் ஆழ்வாரையடி பணிந்து மிகப் புகழ்ந்து அவரைப் பட்டத்து யானையின் மேலேற்றிக் குடை சாமரம் மரைத் தோரணம் முதலியவற்றைத் தாங்களே பணிமாறிக் கொண்டு கூடுவேயிருந்து திருவீதிகளிலே மஹோத்ஸவம் செய்வித்தார்கள். அக்காலத்தில் அவர் பண்டிதர்கள் அனைவர்க்கும் தலைவராய் விளங்கினமையால் ராஜா அவர்க்குப் பட்டர்பிரான் என்று திருநாமம் சாத்திப் பல பிருதாவளிகளைக் கூறிவரும்படி கட்டளையிட்டான். அப்படியே பலரும் பல பிருந்தா கோஷிக்க, திருச்சின்னம் ஒலிசெய்ய, வெற்றிச் சங்கமெடுத்தூத, இப்படிப்பட்ட வைபவத்துடனே ஆழ்வார் மஹோத்ஸவம் கண்டருள்வதைப் பார்த்து ஆநந்திக்க விரும்பிய பரமபதநாதன் பிராட்டியுடனே பெரிய திருவடியின் மீதேறி எதிரில்வந்து தோன்றினான்.
மகனுடைய மஹோத்ஸவத்தைக் காணவரும் மாதாபிதாக்களைப் போலே தம்முடைய உத்ஸவத்தைக் காணவந்த திருமாலைக் கண்ட ஆழ்வார் சிறிதும் செருக்குக்கொள்ளாமல் அந்த தேவாதி தேவனுடைய ஸர்வஜ்ஞத்வம் முதலிய திருக்குணங்களை அநுஸந்திப்பதற்கு முன்னே ஸௌந்தர்ய ஸௌகுமார்யங்களிற் கண்செலுத்தி அவற்றையே ஸேவித்து ஈடுபட்டு ஆழ்ந்து பக்திபரவசராய் அதனால் தம்முடைய நிலைமையையும் எம்பெருமானுடைய – நிலைமையையும் மறந்து “காலம் நடையாடாத பரமபதத்திலே இருக்குமிப் பரமபுருஷன் காலம் நடையாடுகிற இந்த லோகத்தில் வந்து நிற்கிறானே! இவனுக்கு என்ன தீங்கு வருமோ!’’ என்று மிகவும் அஞ்சி ‘இந்த திவ்யமங்கள விக்ரஹத்துக்கு எந்தவிதமான அவத்யமும் நேரிடாதிருக்கவேணும்‘ என்று மங்களாசாஸநம் பண்ணுகிறவராய் யானைமணிகளையே தாளமாகக் கொண்டு திருப்பல்லாண்டு என்னும் திவ்யப்ரபந்தத்தைப் பாடினார்.
அநந்தரம் ஆழ்வார் தம்மைச் சரணடைந்த பாண்டிய குலபதியைக் குளிரக்கடாக்ஷித்துப் பாகவத கோஷ்டியில் ஒருவனாக்கிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர்க் கெழுந்தருளி, கிழியிற் கிடைத்த பொருள்களை யெல்லாம் வடபெருங்கோயிலுடைய பெருமாள் திருமுன்பேவைத்து தண்டன் ஸமர்பித்து அந்தப்பொருளால் அங்கே கோபுரம் கட்டுவித்துப் பழையபடி நந்தவன கைங்கரியமே நடத்தி வருகையில், க்ருஷ்ணாவதாரத்திலே மிகவும் ஈடுபட்டு ஆழ்ந்தவராகையாலே அவவ்வதார சரிதைகளையே பிரதானமாகப் பாராட்டி அநுபவித்து அவ்வநுபவத்தால் உண்டான ஆநந்தம் உள்ளடங்காமற் பெருகவே, அதைப் பிரபந்தமுகமாக வெளியிடத் தொடங்கிப் பெரியாழ்வார் திருமொழியென்னும் திவ்யப்ரபந்தத்தையும் அருளிச்செய்தார்.
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
“உண்டோ திருப்பல்லாண்டுக் கொப்பதோர் கலைதான்
உண்டோ பெரியாழ்வார்க் கொப்பொருவர் – தண்டமிழ்நூல்
செய்தருளு மாழ்வார்கள் தம்மிலவர் செய்கலையில்
பைதல்நெஞ்சே! நீயுணர்ந்து பார்.”
ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ
ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபத்த்துள்
முதலாயிரம்
திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின்
தனியன்கள்
(ஸ்ரீமந்நாதமுனிகள் அருளிச்செய்தது)
குருமுகமநதீத்ய ப்ராஹ வேதாநசேஷாந்
நரபதிபரிக்லுப்தம் சுல்கமாதாதுகாம,
ச்வசுரமமரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி.
ய: | – | யாவரொரு பெரியாழ்வார் |
நரபதி பரிக்லுப்தம் | – | ஸ்ரீவல்லபதேவனென்கிற அரசனால் ஏற்படுத்தப்பட்ட |
சுல்கம் | – | பந்தயப் பொருளாகிய பொற்கிழியை |
ஆதாது காம: | – | கிரஹிக்க எண்ண முடையவராய், |
குருமுகம் அநதீத்ய | – | ஆசார்யமுகமாக ஒரு கல்வியும் கற்காமலே |
அசேஷாந் வேதாந் | – | (பரதத்துவ நிர்ணயத்திற்கு வேண்டிய) வேதங்கள் எல்லாவற்றையும் |
ப்ராஹ | – | (பகவத் கிருபையினால்) எடுத்துரைத்தாரோ, |
ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத் ச்வசுரம் | – | ஸ்ரீரங்கநாதனுக்கு நேராக மாமனாரும் |
அமர வந்த்யம் | – | தேவர்களினால் ஸேவிக்கத் தகுந்தவரும் |
த்விஜகுல திலகம் | – | பிராமணகுலத்திற்குத் திலகம் போன்றவருமான |
தம் விஷ்ணு சித்தம் | – | அப்பெரியாழ்வாரை |
நமாமி | – | வணங்குகிறேன். |
***- எம்பெருமானும் ராமக்ருஷ்ணாதி அவதாரங்கள் செய்தகாலத்தில் வஸிஷ்டன் ஸாந்தீபிநி முதலானவர்களை ஆசார்யராகக் கொண்டு சாஸ்த்ரங்கள் பயின்றதாக இதிஹாஸங்களில் காண்கிறோம். பெரியாழ்வாரோ அப்படியல்லாமல் எம்பெருமானே நாவினுள் வந்துநின்று பேசுவிக்க அந்த பகவத்கிருபையாலே ஸகலசாஸ்த்ரப் பொருள்களும் உணரப் பெற்றவராய் வேண்டிய வேதங்களோதி விரைந்து கிழியறுத்தார் – என்கிறது முன்னடிகளால்.
கிழியறுத்துப்பெற்ற பொருள்களை ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபெருங்கோயில் உடையான் ஸந்நிதியில் ஸமர்ப்பித்துவிட்டு முன்புபோல் நந்தவனங்கைகரியம் நிர்வஹித்துக் கொண்டிருக்கையில் திருத்துழாயடியிலே கிடைத்த ஆண்டாளை எடுத்து வளர்த்துப் பருவம் வந்தவளவிலே அழகிய மணவாளனுடைய நியமநப்படியே திருவரங்கமாநகர்க்கு அழைத்துக்கொண்டுபோய் ஸ்ரீரங்கநாதனுக்கு ஸமர்ப்பித்தபடியால் இவ்வாழ்வார் முதலானபதிகளை விட்டிட்டு இவருடைய திருவுள்ளத்தையே நித்யவாஸஸ்தலமாகக் கொண்டதனால் விஷ்ணுசித்தரென்று திருநாமம் பெற்றாரிவர். ஞானமனுட்டானமிவை நன்றாகவே யுடையரான இவரால் பிராமணகுலத்துக்கே ஒரு ஏற்றமுண்டான படியால் த்விஜகுலதிலகராகச் சொல்லப்பட்டார்.
இப்படிப்பட்ட பெருமைகளால் தேவதைகளும் வந்து வணங்கும்படி இருந்தனால் ‘அமரவந்த்யம்‘ என்றார். இப்படிப்பட்ட பெரியாழ்வாரை ஸேவிக்கிறேனென்று முடித்தாராயிற்று.
பாண்டியர் அருளிச்செய்தது
(இருவிகற்ப நேரிசைவெண்பா)
மின்னார் தடமதிற்சூழ் வில்லிபுத்தூ ரென்றொருகால்
சொன்னார் கழற்கமலஞ் சூடினோம் – முன்னாள்
கிழியறுத்தா னென்றுரைத்தோங் கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து.
மின் ஆர் | – | “ஒளி நிறைந்த |
தட | – | பெரிய, பரப்பும் உயர்ந்தோங்குகையுமுள்ள |
மதிள் | – | திருமதிலாலே |
சூழ் | – | சூழப்பட்ட |
வில்லிப்புத்தூர் என்று | – | ஸ்ரீவில்லிப்புத்தூர்“ என்று |
ஒரு கால் சொன்னார் | – | ஒருதரம் உச்சரித்த வருடைய |
கழல் கமலம் | – | திருவடித்தாமரைகளை |
சூடினோம் | – | சிரமேற்கொண்டோம் |
முன் நாள் | – | “புருஷார்த்தம் வெளியாகாத காலத்தில் |
கிழி | – | பொருள் முடிப்பை |
அறுத்தான் என்று | – | அறுத்தருளினவர்“ என்று |
உரைத்தோம் | – | சொல்லப்பெற்றோம் |
நெஞ்சமே | – | ஓ! நெஞ்சே! |
வந்து | – | நீ அநுகூலமாய் வரப்பெற்று |
கீழ்மையினில் | – | அதோகதியாகிற நரகத்தில் |
சேரும் | – | சேருகைக்குடலான |
வழி | – | வழியை |
அறுத்தோம் | – | அறப்பண்ணினோம். |
***- பெரியாழ்வாரது திருவவதாரஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரின் சிறப்பை ஒருகாலாகிலும் அநுஸந்திப்பவர்களின் திருவடித்தாமரைகளைத் தலையில் அலங்காரமாக அணிந்துகொண்டோம், பெரியாழ்வார் பாண்டிய ராஜஸபையில் எழுந்தருளி வேதப்பொருள்களை விளங்கவுரைத்து வித்யாசுல்கமான பொற்கிழியை அறுத்துப் பெற்றுக்கொண்டாரென்று அவருடைய ப்ரபாவத்தைப் பேசினோம், இவற்றால் நற்கதியிற்செல்ல பாக்கியமும் பெற்றோம். இத்தனைக்கும் மூலகாரணம் – நமது நெஞ்சு விஷயாந்தரங்களிற் செல்லாமல் அநுகூலித்து வந்ததேயாம் என்று உகந்தாராயிற்று.
இதுவும் அங்ஙனமே
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்க மெடுந்தூத – வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று.
பாண்டியன் | – | வல்லபதேவ னென்கிற பாண்டிய ராஜன் |
கொண்டாட | – | ப்ரசம்ஸிக்க, |
பட்டர்பிரான் | – | “ப்ராஹ்மணர்களுக்கு உபகாரகரான பெரியாழ்வார் |
வந்தான் என்று | – | எழுந்தருளினார்“ என்று |
ஈண்டிய | – | திரள்திரளான |
சங்கம் | – | சங்குகளை |
எடுத்து | – | கையில் கொண்டு |
ஊத | – | (பலர்) ஊத, |
வேண்டிய | – | (விஷ்ணுபாரம்யஸ்தாபநத்துக்கு) ஆவச்யகங்களான |
வேதங்கள் | – | வேதவாக்கியங்களை |
ஓதி | – | உபந்யஸித்து |
விரைந்து | – | விளம்பியாமல் |
(த்வரித்து) | ||
கிழி | – | ஸ்ரீவித்யாசுல்கமாகவைத்த பொருள்முடிப்பை |
அறுத்தான் | – | அறுத்தருளின பெரியாழ்வாருடைய |
பாதங்கள் | – | திருவடிகளாளனவை |
யாமுடைய | – | நமக்கு |
பற்று | – | புகலிடம் |
***- எவர் வல்லபதேவனுடய வித்வத்ஸபையிலே எழுந்தருளும் போது ‘இவர்தான் பரதத்வநிர்ணயம் செய்தருளப்போகிறார்“ என்றறிந்த அவ்வரசன் உபசரித்துக் கொண்டாடவும், அங்கே திரண்டுகிடந்த வித்வான்கள் அந்தக் கொண்டாட்டத்தைக்கண்டு பொறாமல் இவரை வென்றுவிடவேணுமென்று பலபடியாய்த் தர்க்கித்தும் வெற்றிபெறாமல் தோற்றுப்போய் ஈடுபட்டு வெற்றிச்சங்குகளை வாய்வைத்து ஊதவும் அக்காலத்தில் ஸ்ரீமந்நாராயணனே பரதத்துவம்‘ என்று ஸ்தாபிப்பதற்கு வேண்டிய வேதப்பிரமாண்ங்களை எடுத்து உபந்ஸித்துப் பரதத்வ நிர்ணயம் பண்ணிப் பொற்கிழியை அறுத்துக்கொண்டாரோ அந்தப்பெரியாழ்வாருடைய திருவடிகளே சரணம் என்றதாயிற்று.
தனியன் உரை முற்றிற்று
திருப்பல்லாண்டு
இப்பிரபந்தத்திற்குத் திருப்பல்லாண்டென்று திருநாமம் வழங்குதற்குக் காரணம் யாதெனில், ஒவ்வொரு பாசுரத்திலும் பல்லாண்டு பல்லாண்டு என்று சொல்லி மங்களாசாஸநம் செய்திருப்பதனால் அதனையே நிரூபகமாக்கிப் பல்லாண்டு என்று திருநாமம்சாத்தினர். திரு என்பது வடமொழியில் ஸ்ரீசப்தம்போல் மேன்மையையுணர்த்தும், மேன்மைதங்கிய மங்களாசாஸந ப்ரபந்தம் என்றபடி. இப்பிரபந்தம் பல்லாண்டென்று தொடங்கப்படுதலால் முதற்குறிப்பு என்னு மிலக்கணத்தால் திருப்பல்லாண்டெனத் திருநாமம்பெற்ற தென்னவுமாம்.
‘பல்லாண்டு‘ என்கிற பதம் ‘பல் ஆண்டு‘ என்று பிரிந்து பல வருஷங்களென்று பொருளுடையது. பல வருஷங்களிலும் எம்பெருமானுக்கு மங்களமுண்டாக வேணுமென்பது தாற்பரியம். “ஸர்வதா விஜயீபவ“ என்றபடி.
இத்திருப்பல்லாண்டுப் பிரபந்தம் திருவவதரிக்கவேண்டிய காரணத்தை இவ்வாழ்வாருடைய வைபவத்திலே விரித்துரைத்தோம், கண்டுகொள்க.
அவாப்த ஸமஸ்தகாமனென்றும் ப்ரஸித்தனான ஈச்வரனைக்கண்டால் தமக்கு வேண்டிய மங்களங்களை அவனிடத்தில் பிரார்த்தித்துப் பெறவேண்டியிருக்க, தாம் அவனுக்கு மங்களமுண்டாகுமாறு ஆசாஸிப்பது தகுதியோவென்னில்; பகவத்கிருபையினால் கிடைத்த பக்தியினால் அந்த பகவானுடைய ஸர்வரக்ஷகத்வம் முதலான குணங்களை அடியோடு மறந்து ‘பகவானுக்குக் குறையொன்றுமில்லாமல் இருப்பதே நமக்கு மங்களம்‘ என்று இவ்வாழ்வார் நினைத்து மங்களாசாஸநம் பண்ணுகிறார் என்றுணர்க. ஜ்ஞாநதசையென்றும் ப்ரீதிதசையென்றும் இரண்டு அவஸ்தைகள் உண்டு. அவற்றுள், ஸர்வேச்வரனே ரக்ஷகனாகவும், தான் அவனாலே ரக்ஷிக்கப்படுகிறவனாகவும் பிரணவத்தில்சொல்லுகிறபடியே தெளிவாகக்கண்டு அநுஸந்திக்கும் தசை ஜ்ஞாநதசையாம்; அந்த நிலைமையில் “அண்ணா! அடியேனிடரைக் களையாயே” என்றார்போலே பிரார்த்திப்பார்கள். இனி ஸர்வேச்வரனுடைய ஜ்ஞாநசக்திகளையெல்லாம் மறந்து ஸெளந்தர்ய ஸெளகுமார்யங்களையே அநுஸந்தித்து ‘இப்படிப்பட்ட அழகிய திருமேனிக்கு என்ன தீங்கு விளைந்திடுமோ? என்று அச்சம் சங்கித்து வியாகுலப்படும் தசை ப்ரீதிதசையாம் அந்த நிலைமையில், ஈச்வரனை ரக்ஷிக்க வழிதேடித் தடுமாறுவர்கள், “பல்லாண்டு போற்றி, ஜிதம் தே“ என்பர்கள்.
ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தனான எம்பெருமானிடத்திலே ப்ரீதியினால் கலங்கி அச்சம் சங்கிப்பது மற்றும் பலரிடத்திலும் காணத்தக்கது, 1. ஸ்ரீராமன் பிராட்டியைத் திருமணம் புரிந்துகொண்டு மிதிலாபுரியில் நின்றும் அயோத்திக்கு மீண்டு வரும்போது பரசுராமன் வந்து தோன்றினகாலத்தில் தசரதசக்ரவர்த்தி ஸ்ரீராமனுடைய ப்ரபல சக்தி விசேஷங்களை மறந்து இளமையையும் ஸௌகுமார்யத்தையுமே பார்த்து அஞ்சிப் பரசுராமனிடத்திலே அபயம் பிரார்த்தித்தான். 2. கௌஸல்யையும் ஸ்ரீராமனுடைய ப்ரபாவங்களை அறிந்திருந்தும் இராமன் வநவாஸத்துக்குப் புறப்படும்போது “தந் தே பவது மங்களம் ஸ்ரீ தத் தே பவது மங்களம்“ என்று மங்களங்களை ஆசாஸித்தாள். 3. தண்டகாரண்யவாஸிகளான ரிஷிகளும் தங்களுடைய ஆபத்தைப் போக்கவும் அபிமதங்களைக்கொடுக்கவும் ஸ்ரீராமன் எழுந்தருளியிருக்கிறாரென்று அறிந்துவைத்தும் அதை மறந்து ஸ்ரீராமனுடைய வடிவழகிலே யீடுபட்டு மங்களாசாஸநம் பண்ணினார்கள். எம்பெருமானுடைய ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதிகள் எப்படிப்பட்ட ஞானிகளையும் மயக்கி பயசங்கையிலே கொண்டு நிறுத்திவிடும். (இங்ஙனே பல உதாஹரணங்கள் ஸ்ரீவசநபூஷணத்தில் விரிவாகக் காணத்தக்கன.
மங்களாசாஸநம் பண்ணுகிறவர்கள் ஸர்வரக்ஷகனான ஈச்வரனை ரக்ஷ்யனாகவும், அவனாலே ரக்ஷிக்கப்பட வேண்டிய தங்களை ரக்ஷகர்களாகவும் நினைக்க நேரிடுகிறபடியால் இந்த நினைவு விபரீதஜ்ஞானமேயன்றோ? மயர்வற மதிநலம் பெற்றவர்களான ஆழ்வார்களுக்கு இந்த விபரீத ஞானம் கூடாதேயென்னில் தீவினைகளின் பயனாகவருகிற விபரீதஞானம் ஹேயமேயொழிய பகவானுடைய வைலக்ஷண்யமடியாக வருகிற விபரீதஞானம் ஹேயமல்ல, மிக உத்தேச்யமாகவுமிருக்கும்.
இந்த விபரீதஞானம் பரமபதத்திலுமுண்டு, ‘ஹாவு ஹாவு ஹாவு‘ என்கிற ஸாமகான கோஷத்தைக்கேட்கும் திருவனந்தாழ்வான் அந்த ஸாமகோஷத்தை அஸுர ராக்ஷஸர்களின் கோலாஹலமென்று பிரமித்துச்சீறி அழலை உமிழ்கிறானென்று சொல்லப்பட்டுள்ளது. 1. “ஆங்கு ஆரவாரமது கேட்டு அழலுமிழும், பூங்காரரவு“ என்றார் திருமழிசைப்பிரான். “***“ –ஸ்நேஹாத் அஸ்தாந ரக்ஷாவ்யஸநிபிரபயம் சார்ங்கசக்ராஸிமுக்ய; ஆநந்தைகார்ணவம் ஸ்ரீர்ப் பகவதி! யுவயோராஹு ராஸ்தாநரத்நம்“ (பரமபதத்தில் பஞ்சாயுதாழ்வார்களும் ப்ரேமத்தாலே கலங்கிக் காப்பிடாநிற்பர்கள்) என்று பட்டரும் ஸ்ரீகுணரத்ந கோசத்தில் அருளிச்செய்தார். ஆகையாலே எம்பெருமானுக்கு மங்களங்களை விரும்புவது சேதநர்க்கு ஸ்வரூபாநுரூபமும் நித்யமுமாம்.
மற்றுள்ள ஆழ்வார்களுக்கும் மங்களாசாஸநத்தில் ஊற்றமிருந்தாலும் அவர்களுக்கு அது எப்போதோ ஒருகாலுள்ளதேயன்றி இப்பெரியாழ்வார்க்குப்போலே நித்யமாயும் முக்கியமாயுமிராது. அவர்கள் எம்பெருமானை ராக்ஷகனாகப்பற்றி அவனிடத்தில் தங்களுடைய வாழ்ச்சியைப் பெறுவதற்கு விரும்புவர்கள். இவ்வாழ்வார் அப்படியல்லாமல் எம்பெருமானுடைய வாழ்வையே தமக்கு வாழ்வாக நினைத்துப் பெருமாளுக்கு என்ன தீங்கு வருகிறதோவென்று பயப்பட்டுக் காப்பிடத் தேடுகிற பரமபக்தராவர் ஆனது பற்றியே மற்றுள்ள ஆழ்வார்களைவிட மிக்க பெருமையை உடையவரானது காரணமாகவே இவர்களுக்குப் பெரியாழ்வாரென்று ப்ரஸித்தியுண்டாயிற்று,
“மங்களாசாசனத்தில் மற்றுள்ள வாழ்வார்கள்
தங்க ளார்வத்தளவு தானன்றிப் – பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர்பிரான் பெற்றான்
பெரியாழ்வா ரென்னும் பெயர்”.
என்று உபதேசரத்தினமாலையிலே இவ்வர்த்தத்தை மணவாளமாமுனிகள் அருளிச்செய்தார்.
ஸ்ரீமத் வேதாந்த்தேசிகள் சூடிக்கொடுத்த நாச்சியார் விஷயமாக அருளிச்செய்த கோதாஸ்துதியில் அருளிச்செய்துள்ள “***“ – தாதஸ்துதே மதுபித: ஸ்துதிலேசவச்யாத் கர்ணாம்ருதை: ஸ்துதிசதை ரநவாப்தபூர்வம் – த்வத்புக்தமால்ய ஸுபகாமுபஹ்ருத்ய மாலாம் லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம்“ என்ற ச்லோகத்தை நோக்குமிடத்து, பெரியாழ்வார் என்கிற பட்டம் திருப்பல்லாண்டு பாடின பொங்கும் பரிவலல்லாமல் ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலையைப் பெருமாளுக்கு ஸமர்ப்பித்ததனால் கிடைத்ததாக விளங்குகின்றது. (மஹத்தரபதமாவது – ஆழ்வார்க்கு விசேஷணமான பெரிய என்னும் பதம்) பெரியாழ்வார் என்னும் திருநாமத்திற்கு மணவாளமாமுனிகள் அருளிச்செய்தபடி மங்களாசாஸநத்தின் பொங்கும் பரிவே காரணம் என்பது ஸத்ஸம்ப்ரதாயம் வேறொன்றைக் காரணமாகக் கூறுவது அஸ்வரஸமென்று கருதியே மேற்குறித்த கோதாஸ்துதி ச்லோகத்திற்கு வியாக்கியானஞ்செய்த மஹான்கள் “மஹத்தரபத“. . . . . என்பதற்கு நித்யவிபூதியென்று பொருள்கொண்டனர்போலும்.