ஸ்ரீ:


திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்


திருக்குறுந்தாண்டகம்.


திருக்குறுந்தாண்டக மென்னும் இத்திவ்யப்ரபந்தமானது இந்த வுலகில் இருள் நீங்க வந்துதித்து அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்களுள் பிரதானரான நம்மாழ்வாரருளிச்செய்த சதுர்வேத ஸாரமான நான்கு திவ்ய ப்ரபந்தங்களுக்கு ஆறங்கங்கூற அவதரித்த திருமங்கையாழ்வார் திருவாய்மலர்ந் தருளிய ஆறு திவ்யப்ரபந்தங்களுள் ஒன்றாகும். (பெரிய திருமொழி, திருக்குறுந் தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் என்பன ஆறு திவ்யப்ரபந்தங்களாம்.) ஸ்ரீமந்நாதமுனிகள் வகுத்தருளின அடைவில் இரண்டாவது ஆயிரத்தில் இரண்டாவது பிரபந்தமாக அமைந்தது இது.

” வென்றியேவேண்டி வீழ்பொருட்கிரங்கி வேற்கணார் கலவியே கருதி, நின்றவாநில்லா நெஞ்சினையுடையேன்” என்றும், ” சரந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்பவெள்ளத் தாழ்ந்தேன்” என்றும் தாமே அருளிச்செய்த படி விஷயப்ரவணராய்த் திரிந்துகொண்டிருந்த இவ்வாழ்வார் தம்மை எம்பெருமான் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம்பற்றி விஷயங்களில் ஆழ்ந்து திரிகிற இவரை சாஸ்த்ரங்களைக் காட்டித் திருத்தமுடியாது; நம் அழகைக் காட்டியே மீட்க வேணும்’ என்று கொண்டு தன் அழகைக் காட்டிக்கொடுக்க, ஆழ்வாரும் அதைக்கண்டு ஈடுபட்டு வேம்பின் புழு வேம்பன்றியுண்ணாது. அடியேன் நான் பின்னுமுன் சேவடியன்றி நயவேன்” என்னும்படி அவகாஹித்தார்.

இவர் இப்படி தன்பக்கல் அவகாஹிக்கக்கண்ட எம்பெருமான் இப்போது இவர்க்கு நம்மிடத்து உண்டான பற்று மற்ற விஷயங்களிற் போலல்லாமல் ஸம்பந்த வுணர்ச்சியை முன்னிட்டுப் பிறந்ததாகவேணும்; இல்லையேல் இப்பற்று இவர்க்கு நிலைநிற்காதொழியினும் ஒழியும்’ என்றெண்ணி எல்லாப் பொருள்களையும் விளக்குவதான திருமந்திரத்தையும் தனது ஷௌசீல்யம் முதலிய திருக்குணங்களையும் திருமந்த்ரார்த்தத்துக்கு எல்லை நிலமான திவ்யதேசங்களையும் ஆழ்வார்க்குக் காட்டிக்கொடுக்க அவரும் வாடினேன் வாடி யென்று தொடங்கி எம்பெருமானுகந் தருளின இடமே பரமப்ராப்பமென்று அதுபவித்தார். இங்ஙனம் அநுபவித்த ஆழ்வார்க்கு இவ்வனுபவம் நித்யமாய்ச் செல்லுகைக்காக இவரைத் திருநாட்டிலே கொண்டுபோகவேணுமெனக் கருதிய எம்பெருமான் ஸம்ஸாரத்தில் இவர்க்கு ஜிஹாஸை பிறக்கும்படி அதனுடைய தண்மையை அறிவிக்க, அறிந்தவிவர் அஞ்சி நடுங்கி – ‘மாற்ற முள’ என்னுந் திருமொழியிலே “ஆற்றங்கரைவாழ் மரம் போல்”, “காற்றத்திடைப்பட்ட கலவர் மனம் போல் ”பாம்போடொரு கூரையிலே பயின்றாற்போல்” ” இருபாடெரி கொள்ளியினுள் ளெறும்பே போல்” “வெள்ளத்திடைப்பட்ட நரியினம் போலே” என்று தமது அச்சத்திற்குப் பலவற்றை த்ருஷ்டாந்தமாகச் சொல்லிக் கதறினார்.

இப்படி இவர் கதறிக்கதறி “பணியாயெனக் குய்யும் வகை பரஞ்சோதி!” என்றும் “அந்தோ வடியேற்கருளா யுன்னருளே” என்றும் சொல்லி வேண்டின விடத்தும், சிறுகுழந்தைகள் பசி பசியென்று கதறியழுதாலும் அஜீரணம் முதலியவை கழிந்து உண்மையான பசி உண்டாமளவும் சோறிடாத தாயைப் போலே எம்பெருமான் இவர்க்கு முற்றமுதிர்ந்த பரமபக்தி பிறக்குமளவும் நாம் முகங் காட்டுவோமல்லோம் என்று உதாஸீநனாயிருக்க, ஒருக்ஷணமும் அவனைப் பிரிந்திருக்கமாட்டாத ஆழ்வார், மிகுந்த தாஹங்கொண்டவர்கள் நீரிலே விழுந்து நீரைக் குடிப்பதும் நீரைவாரி மேலே விறைத்துக்கொள்வதும் செய்யுமாபோலே அப்பெருமானை வாயாலே பேசியும் தலையாலே வணங்கியும் நெஞ்சாலே நினைத்தும் தரிக்கப்பார்க்கிறார் – திருக்குறுந்தாண்டகமென்னும் இத்திவ்வியப் பிரபந்தத்திலே.

தாண்டகம் என்பது தமிழில் ஓர்வகைப் பிரபந்தம். இது, அறுசீர்கொண்ட. அளவொத்த அடிகள் நான்கினாலாவது, எண்சீர்கொண்ட அளவொத்த அடிகள் நான்கினாலாவது இஷ்ட தேவதையைப் புகழ்ந்து பாடும் பிரபந்தமாம். அறுசீர் கொண்டது குறுந்தாண்டகமென்றும் எண்சீர்கொண்டது நெடுந்தாண்டக மென்றும் வழங்கப்படும்.


” மூவிரண்டேனு மிருகான்கேனும், சீர்வகை நாட்டிச் செய்யுளினாடவர், கடவுளர்ப்

புகழ்வன தாண்டகம் அவற்றுள், அறுசீர்குறியது, நெடிய

தெண் சீராம், அறுசீரெண்சீரடி நான் கொத்தங் கிறுவது தாண்டக

மிருமுச் சீரடி குறியது, நெடியதிருநாற்சீரே”


எனப் பன்னிருபாட்டியலில் தாண்டக வகைக்கு இலக்கணமுரைத்தது காண்க.

குறுந்தாண்டகத்தில் அடிதோறும் மெய்யெழுத்து முட்படப் பதினைந் தெழுத்துக்குக் குறையாமலும் இருபத்தாறெழுத்துக்கு மேற்படாமலுமிருத்தல் வேண்டும். நெடுந்தாண்டகத்தில் அடிதோறும் இருபத்தா றெழுத்துக்கு மேற்பட்டே யிருத்தல் வேண்டும் என்கிற நியதியுமுண்டு.

சைவப் பிரபந்தங்களுள் குறுந்தாண்டகங் காண்பது அருமையாயினும் நெடுந்தாண்டகம் விசேஷமாகக் காணக் கிடைக்கும்.

Dravidaveda

back to top