இராமாநுச நூற்றந்தாதி அவதாரிகை
ஸ்ரீ:
எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
திருவரங்கத்தமுதனார் திருவடிகளே சரணம்.
இராமாநுச நூற்றந்தாதி.
இராமாநுசனது நூற்றந்தாதி என விரியும். இராமாநுசன் விஷயமாக அந்தாதித் தொடையாற் பாடப்பட்ட நூற்றுச்சொச்சம் பாசுரங்களை யுடையதொரு பிரபந்தம் என்பது பொருள். இத்தொடர்மொழியில் தொக்குநின்ற ஆறாம் வேற்றுமையுருபின் பொருளாகிய ஸம்பந்தம்-விஷயமாகவுடைமை; விஷ்ணுபுராணம், சடகோபரந்தாதி என்பவற்றிற் போல. இராமாநுசனைப்பற்றிய நூற்றந்தாதி என விரித்தால், இரண்டாம் வேற்றுமை யுருபும் பொருளும் உடன் தொக்க தொகையாம். இராமாநுசன் + நூற்றந்தாதி; சில விகாரமா முயர் திணை '' (நன்னூல்) என்றதனால் நிலைமொழி யீற்றுமெய் கெட்டது; 'கம்பராமாயணம்' ‘நளவெண்பா' என்பவற்றிற்போல. இராமாநுச னூற்றந்தாதி என்பாரு முளர். இராமாநுசன் என்பது, ராம அநுஜ என்ற இரண்டு மொழி சேர்ந்து தீர்க்கஸந்திபெற்றது. ராமனுடன் பிறந்தவன் என்று பொருள். ராமாவதார ஸமயத்திலே இத்திருநாமம் இளையபெருமாளுக்கு வழங்கிவந்தது; பின்பு திருமலைநம்பி நியமன மடியாக, ஸ்ரீவைஷ்ணவ தர்சந நிர்வாஹகராகத் திருவவதரித்தருளின உடையவர்க்கு இத்திருநாமமாயிற்று. இளையாழ்வார் என்று தமிழ்த்திருநாமம்; லக்ஷ்மண முநி, இத்யாதி திருநாமங்களும் பர்யாய நாமங்களாம். அவ்வாசிரியர் விஷயமான நூற்றந்தாதியாய்த்து இது.
அந்தாதி = அந்தத்தை ஆதியாக வுடையது; அன்மொழித் தொகை ; வடமொழித்தொடர், தீர்க்கஸந்தி. அந்த ஆதி எனப் பிரிக்க. அந்தாதியாவது - முன்னின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும் அடியாயினும் அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது; இங்ஙனம் பாடும் நூலினது ஈற்றுச் செய்யுளின் அந்தமே முதற்செய்யுளின் ஆதியாக அமையவைத்தல் மண்டலித்த லெனப்படும். இது தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்றாம். பதிற்றந்தாதி நூற்றந்தாதி என்ற வகைகளில் இந்நூல் நூற்றந்தாதியாம். அதாவது-நூறு வெண்பாவினாலேனும் நூறு கட்டளைக் கலித்துறையினாலேனும் அந்தாதித் தொடையாற் கூறுவது. இத்திவ்யப்பிரபந்தம் நூறு பாசுரங்களுக்குமேல் அதிகமாக எட்டுப் பாசுரங்கள் கொண்டதாயினும் நூற்றந்தாதி யென்னத் தட்டில்லை ; நூறு ஆயிரம் முதலிய பெரிய எண்களுக்குப் பத்தெட்டு குறையினும் மேற்படினும் அவை நூறு ஆயிரம் என்னத் தகுந்தவையேயாம். ஆயிரத்து நூற்றிரண்டு பாசுரங்கள் கொண்ட திருவாய்மொழியைத் (திருவாய்மொழி யாயிரம்' என்றும், ஆயிரத்தெண்பத்தினாலு பாசுரங்கள் கொண்ட பெரிய திருமொழியைத் திருமொழி யாயிரம்' என்றும் அருளிச்செய்திருப்பது காண்க. யதிராஜ ஸப்ததி, வரவாமுநி சதகம் என்ற வடமொழி நூல்களிலும் அதிகமாக நாலைந்து ச்லோகங்களும் ஏழெட்டு ச்லோகங்களும் உள்ளடைய காண்க. இங்கன் அதிகமாக இருப்பதுபோல் குறைவாயிருத்தலுமுண்டு;-- ''வாணனாயிரந் தோள் துணித்த '' என்று ஆழ்வார்கள் பலவிடங்களிலு மருளிச் செய்கிறார்கள்; பாமசிவனது பிரார்த்தனைக்கிணங்கி எம்பெருமான் வாணனை நாலு கைகளோடும் உயிரோடும் விட்டருளினனாகப் புராணங்கள் கூறுகின்றமை அறியத்தக்கது. ‘நாலாயிர திவ்யப்ரபந்தம்' என்ற வ்யவஹாரத்தின் தத்துவமும் உய்த்துணரத்தக்கது.
இப்பிரபந்தத்தில் நூற்றெட்டுப் பாசுரங்கள் அமைந்ததற்கும், பாட்டுத்தோறும் இராமாநுசத் திருநாமம் தட்டாமல் அநுஸந்திக்கப்பட்டிருப்பதற்கும் பெரியோர் ஒரு காரணங் கூறுவர் , எம்பெருமானார் திருவடிகளில் அன்பு பூண்டவர்கட்கு இப்பிரபந்தம் ஸாவித்ரிபோலே நித்யாநுஸந்தேயமாக வேணுமென்று பாட்டுத் தோறும் திருநாமத்தைவைத்து நூற்றெட்டுப் பாட்டாக அருளிச் செய்தார் - என்று. ப்ரபந்ந ஸாவித்ரி என்றும் ப்ரபந்த காயத்ரி என்றும் இதனை நம்முதலிகள் வ்யபதேசித்துப் போருவர்கள்.
இப்பிரபந்தம் எம்பெருமானார் காலத்திலே அவதரித்ததாயினும், பெரிய பெருமாளால் அமுதனார்க்கு அருளப்பாடிட்டு எம்பெருமானாரால் திருச்செவி சார்த்தப்பட்ட தாதலால் இது ஆழ்வார்களருளிச் செயல்களோடு சேர்த்து அநுஸந்திக்கலாயிற்று. திருக்கார்த்திகைக்குப் பின் ஆழ்வார் திவ்ய ப்ரபந்தங்கட்கு ஏற்பட் டுள்ள அநத்யயநம் இதற்கும் ஒக்கும்.
முதலாயிரம், பெரிய திருமொழி, திருவாய்மொழி, இயற்பா என்ற நான்கு ஆயிரங்களுள் நான்காவதான இயற்பாவில் சரமப் பிரபந்தமாகச் சேர்க்கப்பட்டிருக்கும் இந்த நூற்றந்தாதி. ப்ரணவார்த்தமான முதலாயிரத்தோடு நம்மாழ்வார் விஷயமான பாகவத சேஷத்வத்தை ப்ரதிபாதிக்கும் கண்ணிநுண்சிறுத்தாம்பைச் சேர்த்தாற்போல, கைங்கரியத்தில் களையறுப்பதான இயற்பாவுடனே இதனைச் சேர்த்து அநுஸந்திக்கை பொருத்தமுடைத்தேயாம்.
திருவரங்கத்தமுதனார் வரலாறு
இவ்வமுதனார், ஒரு பங்குனித்திங்களில் ஹஸ்த நக்ஷத்ரத்தில் மூங்கிற்குடியில் திருவவதரித்து, திருவரங்கம் பெரியகோயிலில் இருந்ததுவே காரணமாகப் பெரியகோயில் நம்பி என்று ப்ரஸித்தராய் வாழ்ந்து வந்தார்.
[அஷ்டப்பிரபந்தம் செய்தருளினவரும் பட்டர் திருவடிகளில் ஆச்ரயித்து உய்ந்தவருமான “பிள்ளைப்பெருமாளையங்கார்'' என்பவர்க்கு இவர் திருத்தகப்பனார் என்று சிலரும், பாட்டனார் என்று சிலரும் சொல்லுவர்.]
இவர் ஸகல சாஸ்த்ரங்களையும் அதிகரித்து மஹா நிபுணராய், தமக்குக் குலக்ரமமாகக் கிடைத்த ஸந்நிதி புரோஹித வ்ருத்தியையும் புராணபடந கைங்கர்யத்தையும் பெற்று மிகவும் ராஜஸராய்ச் செருக்குடன் வாழ்ந்துவரும் நாளிலே, உலகங்களை வாழ்விக்கத் திருவனந்தாழ்வானது திருவவதாரமாய்த் திருவவதரித்த எம்பெருமானார் தமது இயற்கையின்னருளாலே இவரைத்திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம்பற்றிக் கூரத்தாழ்வானுக்கு நியமிக்க, ஆழ்வானும் அவரை அநுவர்த்தித்து ஞானச்சுடர் கொளுத்தி எம்பெருமானார் திருவடிக்கீழ்க் கொணர்ந்து சேர்க்க, எம்பெருமானாரும் அவரைக் குளிரக் கடாக்ஷித்தருளி ஆழ்வான் பக்கல் ஆச்ரயிக்கும்படி நியமிக்க, அப்படியே அவரும் ஆழ்வானை ஆச்ரயித்துத் தத்வ ஹித புருஷார்த்தங்களை ஐயந்திரிபறத் தெளிந்து ஆத்ம ஆத்மீயங்களை அந்த ஆசார்யன் திருவடிகளிலே ஸமர்ப்பித்துப் பரம ப்ரவணராயிருந்தார். இப்படியிருக்கையில், ஸ்வாசார்யருடைய உகப்புக்கு உறுப்பாகத் தமக்கு ப்ராசார்யரான எம்பெருமானார் விஷயமாக ஒன்றிரண்டு பிரபந்தங்களைச் செய்து அவற்றை எம்பெருமானார் ஸந்நிதியிற் கொணர்ந்துவைக்க, எம்பெருமானாரும் அவற்றை அவிழ்த்துக் கடாக்ஷிக்க, அவை தமது திருவுள்ளத்துக்கு இசைந்திராமையாலே அவற்றைக் கிழித்தெறிந்துவிட்டு அவரை நோக்கி, 'ஏதாவது பிரபந்தம் பாடவேணுமென்கிற விருப்பம் உமக்கிருக்குமாகில், உமக்கு உத்தேச்யரான ஆழ்வானுடையவும் நமக்கு உத்தேச்யரான ஆழ்வார்களுடையவும் உகந்தருளின நிலங்களினுடையவும் ஸம்பந்தம் தோற்றுமாறு ஒரு பிரபந்தம் செய்யும்' என்று நியமித்தருள, இவரும் அப்படியே செய்கிறேனென்று அந்த நியமநத்தை சிரஸாவஹித்து எம்பெருமானார் திருவடிகளிலே மெய்யன்பர்க்கு நித்யாநுஸந்தேயமாம்படி பாட்டுக்கள் தோறும் இராமாநுசனென்னுந் திருநாமத்தையிட்டு நூற்றெட்டுப் பாட்டாக அருளிச்செய்து எம்பெருமானார் ஸந்நிதியிலேவந்து வணங்கி 'இதைக் கேட்டருளவேணும்' என்று பிரார்த்தித்து அநுமதிபெற்றுக் கூரத்தாழ்வான் முதலானோர் பேரோலக்கமாக இருக்கிற அங்குத்தானே இந்தப் பிரபந்தத்தை விண்ணப்பம் செய்ய, எம்பெருமானார் மற்றை முதலிகளோடும் திருச்செவி சார்த்தித் தலைதுலுக்கிப் போரவுகந் தருளி, தம் திருவடிகளில் ஸம்பந்தமுடை யார்க்கெல்லாம் அந்தப் பிரபந்தத்தை அன்று தொடங்கி என்றும் நித்யாநுஸந்தேயமாம்படி கற்பித்தருளியதுந் தவிர, அவரது வாக்கு அமுதவாக்கா யிருந்தமையால் அவர்க்கு அமுதன் என்ற திருநாமத்தையும் பிரஸாதித்தருளி மிகவும் கடாக்ஷித்தருளினார். ஆகையால் அதுமுதல் ‘பெரியகோயில் நம்பி' என்ற திருநாமம் மாறித் திருவரங்கத்தமுதனார் என்ற திருநாமம் வழங்கத் தொடங்கிற்று. இப்பிரபந்தத்திற்கு ப்ரபந்த காயத்ரி என்ற திருநாமமும் அன்றேதொடங்கி நிகழலாயிற்று.
இந்த விருத்தாந்தம் சிறிது மாறுபாடாகவும் சொல்லப்படுவ துண்டு ; எங்கனே யெனின்;- அமுதனார் எம்பெருமானாருடைய நியமனம் பெற்று இப்பிரபந்தம் இட்டருள்வதாக அடையவளைந் தான் திருமதிலுக்கு இவ்வருகேயிருந்த ஒரு தென்னஞ்சோலைத் திருமண்டபத்தில் வீற்றிருந்து பட்டோலை கொண்டிருக்கும் போது, அவ்வளவில் எம்பெருமானார் அழகியமணவாளனது நியமநத்தினால் ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலிய அந்தரங்கசிஷ்யர்களோடு அவ்விடத்தே யெழுந்தருள அப்போது "செழுந் திரைப்பாற்கடல்'' என்ற நூற்றைந்தாம்பாசுரம் தலைக்கட்டி, இருப்பிடம் வைகுந்தமென்ற பாசுரம் எழுதவேண்டிய தருணமாயிருந்ததென்றும், அது முதலான மூன்று பாசுரங்களும் எம்பெருமானார் திருமுன்பே தொடுக்கப்பட்டனவென்றும், பிறகு அரங்கேற்றியான பின் இந்த விசேஷத்துக்கு ஸ்மாரகமாக இப்பிரபந்தத்திற்கு மாத்திரம் சாற்றுப் பாசுரங்கள் மூன்றாயிருக்கவேணும்' என்று ஆழ்வான் நியமித்தருளினாரென்றும், ஆனதுபற்றியே மற்றைப் பிரபந்தங்கட்கு இரண்டு பாசுரம் சாற்றாயிருப்பது போலல்லாமல் இதற்கு மூன்று பாசுரம் சாற்றாக ஸம்ப்ரதாயம் நிகழ்கின்றதென்றும் கோயில் கஸ்தூரி ஜீயர் பணிக்கக் கேட்டிருக்கை.
ஸர்வ ப்ரகாரங்களாலும் இத்திவ்ய ப்ரபந்தத்தின் வைபவம் மொழியைக்கடக்கும் பெரும்புகழுடைத்து. இந்த நூற்றந்தாதியை அறியக்கற்று வல்லாராகாதார் அவைஷ்ணவர்களே யாவர். இஃதொன்றைமாத்திரம் கற்றாரேனும் * மீட்சியின்றி வைகுந்தமாநகர் மற்றதுகையதுவே. இத்தகைய வைபவம்வாய்ந்த இத்திவ்ய ப்ரபந் தத்திற்கு ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸங்க்ரஹமாக ஓர் உரையும்; பிள்ளைலோகம் ஜீயர் சிறிது விரிவாக ஒரு வியாக்கியானமும் இட் டருளினர். அவ்விரண்டையுந் தழுவி, இன்னும் ஆவச்யக விஷயங்களையும் ஊடே சேர்த்து அனைவர்க்கும் எளிதாம்படி அடியேனால் எழுதப்படுகிற திவ்யார்த்த தீபிகை என்னுமிவ்வுரையில் குற்றங் குறைகளைக்காணாது குணலேசத்தையே பெரியோர் கண்டு களிப்பாராக.
இங்ஙனம்,
உரையாசிரியன்,
பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கரார்ய தாஸன்.
இராமாநுச நூற்றந்தாதியின் தனியன்கள்
வேதப்பிரான் பட்டர் அருளிச்செய்தவை.
(ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் – என்னுடைய
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் – என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு
என்னுக் கடவுடையேன் யான்.
முன்னை வினை | - | முன்னே செய்த பாபங்களெல்லாம் |
அகல | - | ஒழிவதற்காக, |
மூங்கில் குடி அமுதன் | - | ‘மூங்கிற்குடி’ என்னுங் குலத்திலே தோன்றி |
திருவாங்கத்தமுதனாருடைய | ||
பொன் அம் கழல் கமலப்போது இரண்டும் | - | பொன்போல் அழகிய பாதாரவிங்தங்களிரண்டையும் |
என்னுடைய சென்னிக்கு | - | எனது தலைக்கு |
அணி ஆக | - | ஆபரணமாக |
சேர்த்தினேன் | - | பொருந்தவைத்துக் கொண்டேன் |
யான் | - | இப்படி அமுதனாருடைய திருவடிகளைச் சூடப் பெற்ற அடியேன் |
தென் புலத்தார்க்கு | - | தெற்குத் திக்கிலுள்ளாரான யமகிங்கரர்கட்கு |
என்னுக்கு | - | எதுக்காக |
கடவு உடையேன் | - | ப்ராப்தி யுடையேன்? |
***- மூங்கிற்குடியென்ற மஹாகுலத்திலே தோன்றிய திருவரங்கத்தமுதனாருடைய திருவடித் தாமரைகளை நான் சிரோபூஷணமாக அணிந்துகொண்டேன் ; அதனால் எனது ஸகல கருமங்களும் தீயினில் தூசாயொழிந்தன. இனி யமனுக்காவது யமபடர்களுக்காவது என்னருகே வருவதற்கு யாதொரு ப்ரஸக்தியுமில்லை: என்றாராயிற்று.
“முன்னே வினையகலச் சேர்த்தினேன்” என இயையும் (மூங்கிற்குடி.) வேயர்குலம், ஆஸூரிகுலம், கூரகுலம் என்பனபோல மூங்கிற்குடி யென்று ஒரு குலமுண்டாம். அமுதன் = இவர்க்கு, பெரியகோயில்நம்பி என்பது பண்டு வழங்கி வந்த திருநாமம். இவர் இயற்றிய நூற்றந்தாதியைத் திருச்செவி சர்த்தியருளிய எம்பெருமானார் இவருடைய வாக்கு அமுதவாக்கா யிராநின்றதென்று உகந்தருளி அமுதன் என்று திருநாமம் ப்ரஸாதித்தருளினாராம். கமலப்போது = தாரைப்பூ. அணி = ஆபரணம். சேர்த்தினேன் = சேர்த்தேன் என்றபடி: இன் – சாரியை
என்னுக்கு + கடவுடையேன் = என்னுக்கடவுடையேன்: (கடைக்குறை) கெடுதல்விகாரப்புணர்ச்சி. என்னுக்கு = ஏதுக்காக என்கை; “என்னுக்கவளை விட்டிங்குவந்தாய்” என்றார் குலசேகரப் பெருமாளும். (கடவுடையேன்.) கடவு = ப்ராப்தி; அதாவது - உரிமை.
கட்டளைக் கலித்துறை
நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தி யிராமானுசமுனி தாளிணைமேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமு தோங்குமன்பால்
இயம்புங் கலித்துறையந்தாதி யோதவிசை நெஞ்சமே.
நெஞ்சமே | - | மனமே!, |
நயம் தரு | - | விஷயங்களால் தரப்படுகிற |
பேர் இன்பம் எல்லாம் | - | சிற்றின்பங்கள் யாவும் |
பழுது என்று | - | வ்யர்த்தங்களென்று (அவற்றை விட்டொழிந்து) |
நண்ணினர்பால் | - | தம்மை ஆச்ரயித்தவர்கள் விஷயத்தில் |
சயம் தரு கீர்த்தி | - | ஸம்ஸார ஜயத்தைப் பண்ணிக்கொடுக்கும் புகழுடையரான |
இராமாநுச முனி | - | எம்பெருமானுருடைய |
தாள் இணை மேல் | - | இரண்டு திருவடிகள் விஷயமாக |
உயர்ந்த குணத்து திரு அரங்கத்து அமுது | - | சிறந்த குணசாலியான திருவரங்கத்தமுதனுர் |
ஓங்கும் அன்பால் | - | கொழுந்து விட்டோங்கிய பக்தியினாலே |
இயம்பும் | - | அருளிச்செய்த |
கலித்துறை அந்தாதி | - | கட்டளைக் கலித் துறையினாலமைந்த நூற்றந்தாதியை |
ஓத | - | அத்யயநம்செய்ய |
இசை | - | ஸம்மதித்திருக்கக் கடவை. |
***- விஷயாந்தரங்களின் அநுபவத்தினாலுண்டாகும் சிற்றின்பங்கள் யாவும் அற்பங்களென்றும் ஹேயங்களென்றும் கருதி அருவருத்து அவற்றில் நசையற்றுத் தம்மைவந்து அடிபணிகின்ற மஹாநுபாவர்களுக்கு ஸம்ஸார ஸம்பந்தத்தை அறுத்தருளி மோக்ஷத்தைத் தந்தருள்பவராய் இப்பெரும் புகழ் பரவப் பெற்றவரான எம்பெருமானார் விஷயமாக, பகவத் பாகவத பக்தி முதலிய மஹாகுணங்கள் நிறைந்த திருவரங்கத்தமுதனார் பரம பக்தி தலையெடுத்துச் சொன்ன நூற்றந்தாதி யென்னும் திவ்ய ப்ர பந்தத்தை ஓதுவதற்கு நெஞ்சே! நீ இசைந்திடாய் என்கிறார். நல்வழி தீவழிகளிற் போதற்கு நெஞ்சே முதற்காரணமாதலால் அதனுடைய ஆனுகூல்யம் பெறுதற்குப் பாரிக்கின்றாரென்க.
நயம் = விஷயாந்தரங்கள். “ நாணுமை நள்ளேன் நாயும்” (முதல் திருவந்தாதி) என்ற விடத்து, நயம் என்பதற்கு விஷயாந்தரங்களென்று பொருள் அருளிச் செய்யப்பட்டிருத்தல் காண்க. பேரின்பம் - சிற்றின்ப மென்ன வேண்டுமிடத்துப் பேரின்பமென்றது விபரீதலக்ஷணையாம். 'நல்ல பாம்பு’ என்னுமாப்போல. அன்றி, பேரின்பமுண்டென்று ப்ரமித்திருப்பார் கருத்தாலெ சொல்லிற்றாகவுமாம்.
“ஆயிழையார் கொங்கை தங்க்கும் அக்கா தலளற்றழுந்தி மாயுமென்னாவியை வந்தெடுத்தானின்று” என்று அவ்வமுதனார் தாமும், “மதநகத நைர் நக்லிச்யந்தே யதீச்வரஸம்ச்ரயா: என்று தூப்புல் பிள்ளையும், காமாதிதோஷஹரமாத்மபதஸ்ரீதாநாம்” என்று பெரிய ஜீயரும் பணித்தவை இப்பாட்டின் முன்னடிக்குச் சந்தையாக அநுஸந்தேயம்.
“....பழுதின்றி நண்ணினம்பால்" என்றும், “பழுதின்றி நண்ணிநன்பால்'' என்றும் பாடபேதங்களுண்டாம். சயம் = ஜயம்; "நாவலிட்டுழி தருகின்றோம் நமன்றமர் தலைகள் மீதே" என்று மீசை முறுக்கிச் சொல்லப் பண்ணுகை.
(கலித்துறையந்தாதி-.) “முதற்சீர்நான்கும் வெண்டளைபிழை யாக், கடையொருசீரும் விளங்காயாகி, நேர்பதினாறே நிரைபதினேழென் றோதினர் கலித்துறை யோரடிக்கெழுத்தே'' என்பது, கட் டளைக்கலித்துறை யிலக்கண முணர்த்தும் ஸூத்ரமாகும். கட்டளைக்கலித்துறையில் ஒவ்வோரடிக்கும் உரிய ஐந்துசீர்களுள் முதல் நான்கும் ஈரசைச்சீர்களும் ஐந்தாவது விளங்காய்ச்சீருமாக வெண்டளை பிறழாமல் வரும். வரவே, நேரசை முதலான அடி ஒற்றொழித்துப் பதினாறெழுத்தும், நிரையசை முதலான அடி ஒற்றொழித்துப் பதினேழெழுத்துமாகத் தானே அமையும். வெண்பாவுக்குப்போலக் கட்டளைக் கலித்துறைக்கு ஓரடியின் இறுதிச்சீரோடு அடுத்த அடியின் முதற்சீர் வெண்டளை தவறாது வரவேண்டு மென்ற நியதி இல்லை. அந்த நியதிகொள்ளின், நிரையசை முதற் கட்டளைக் கலித்துறையெல்லாம் காய்முன் நிரைவந்து கலித்தளை யாய் வெண்டளை வழுவாமாறு காண்க. கலிநிலைத் துறை, கலிவிருத்தம், ஆசிரியவிருத்தம் என்பவை முதலிய சிலவற்றிற்குப் போலக் கட்டளைக் கலித்துறைக்கு நான்கு அடிகளும் அளவொத்து வரவேண்டுமென்னும் நியதியுமில்லை. வெண்பா ஆசிரியப்பா முதலிய சிலவற்றிற்போலவே அளவொவ்வாமலே வரலாம். கட்டளைக்கலித்துறை பெரும்பாலும் ஏகாரவீற்றதும், சிறுபான்மை ஓகாரவீற்றதுமாம். இந்நூலில் எல்லாப்பாசுரங்களும் ஏகாரவீற்றனவே. நம்மாழ்வார் அருளிச்செய்த திருவிருத்தத்தில், கோலப்பகல்களிறொன்றுகற்புய்ய" என்ற நாற்பதாம் பாசுரமொன்றே ஓகாரவீற்றது. ஓகாரவீறாய் வருவதற்கு வேறு மேற்கோள் கிடைப்பரிது. ஏகார வுயிரீறாகவன்றி மெய்யீறாகவந்த கட்டளைக் கலித்துறைகளும் சான்றோர் செய்யுளிற் காணப்படுகின்றன.
இத்திவ்யப்பிரபந்தம் அந்தாதித்தொடையாற் பாடப்பட்ட பிரபந்தமாதலின் சொல் தொடர்நிலை பொருள் தொடர்நிலை யென் னும் இருவகையுள் சொல் தொடர்நிலையாம். (அந்தாதித் தொடை யாவது - முன்னின்ற பாட்டின் இறுதி எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும் அடியாயினும் பின் வரும் பாட்டின் முதலாகப் பாடுவது.) இந்நூல் இறுதிச்செய்யுளின் அந்தமே முதற்செய்யுளின் ஆதியாக அமையும்படி மண்டலித்துப் பாடப்பட்டுள்ளமை யுங் காண்க. … … …
இதுவுமது.
சொல்லின் தொகைகொண் டுனதடிப்போதக்குத் தொண்டுசெய்யும்
நல்லன்பரேத்து முன்நாமமெல்லா மென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலு மமரும்படிநல் கறுசமயம்
வெல்லும்பரம விராமாநுச விதென் விண்ணப்பமே
அறு சமயம் | - | அப்ராமாணிகங்களான ஆறுமதங்களையும் |
வெல்லும் | - | கண்டித்தருளின |
பரம | - | ஆரியரான |
இராமானுச | - | எம்பெருமானாரே! |
உனது அடி போதுக்கு | - | தேவரீருடைய பாதார விந்தங்களிலே |
தொண்டு செய்யும் | - | வாசிக கைங்கரியம் பண்ணுகிற |
நல் அன்பர் | - | பரமபக்தர்கள் |
சொல்லின் தொகை கொண்டு | - | சப்த ராசிகளைக் கொண்டு |
ஏத்தும் | - | துதிக்கிற |
உன் நாமம் எல்லாம் | - | தேவரீருடைய திரு நாமங்களெல்லாம் |
என் தன் நாவினுள்ளே | - | எனது நாவிலே |
அல்லும் பகலும் | - | அஹோராத்ரமும் |
அமரும்படி | - | பொருந்தியிருக்கும்படி |
நல்கு | - | க்ருபை செய்தருள வேணும்; |
இதுவே என் விண்ணப்பம் | - | இவ்வளவே அடியேன் செய்யும் விஜ்ஞாபனம். |
* * *- கூறுஞ்சமயங்களாறுங் குலையக் குவலயத்தே வந்தருளின ஸ்வாமிந்! தேவரீருடைய திருவடிவாரத்திலே சீலமில்லாச் சிறியேன் செய்யும் விண்ணப்பம் ஈதொன்றே; அது யாதெனில், தேவரீரிடத்துப் பாமபக்தி பூண்டவர்கள் ''தங்களன்பாரத் தமது சொல்வலத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப" என்ற கணக்கிலே தத்தம் சக்திக்கியன்றவாறாக சப்தராசிகளை யடுக்கி தேவரீருடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணுவர்களன்றோ; அத்திருநாமங் கள் இடைவிடாது என்நாவிலே திகழும்படி அநுக்ரஹித்தருளவேணும்; இஃதொன்றேயாய்த்து அடியேனுடைய பிரார்த்தனை என்கிறார் ஒரு பக்த சிகாமணி.
தொகை என்பதற்கு ஸங்கியை என்று பொருள் கொள்ளுதலுமாம். எம்பெருமானார் விஷயமாக நூற்றெட்டுப் பாசுரங்கள் பாடவேணுமென்று ஒரு தொகையை நெஞ்சிலே கொண்டு நல்லன்பரான அமுதனார் அருளிச்செய்த தேவரீருடைய நாமமாலையாகிய நூற்றந்தாதிப் பிரபந்தமானது எப்போதும் என் நாவிலே பொருந்துமாறு அருளவேணும் என்றாராகவுங் கொள்க. ''எங்கள் கதியே இராமானுச முனியே!, சங்கைகெடுத்தாண்ட தவராசா பொங்குபுகழ், மங்கையர்கோனீந்த மறையாயிர மனைத்தும், தங்கு மனம் நீயெனக்குத் தா'' என்றது போலவாம். … *
(இம்மூன்று தனியன்களே ஸகல திவ்ய தேசங்களிலும் வழங்கு மவை; மற்றெரு தனியன் மேனாட்டில் அநுஸந்திக்கப் படுகிறதாம்; அதாவது.)
இனியென் குறைநமக் கெம்பெருமானார் திருநாமத்தால்
முனிதந்த நூற்றெட்டுச் சாவித்திரியென்னு நுண்பொருளைக்
கலிதந்த செஞ்சொற் கலித்துறையந்தாதி பாடித்தந்தான்
புனிதன் திருவரங்கத் தமுதாகிய புண்ணியனே.
(இதன் கருத்து -) ஸர்வேச்வரன் ஆதியிலே ஸங்கல்பபூர்வகமாக உலகத்தைப் படைத்து முதலிலே சதுர்முகப்ரஹ்மாவுக்கு ஸாவித்ரியை உபதேசித்தான். இவ்வமுதனார் அந்த ஸாவித்ரியின் ஸாரார்த்தத்தை யெடுத்து இராமானுசன் என்னுந் திருநாமத்தோடிணக்கிக் கட்டளைக் கலித்துறையிலே வைத்துத் தாம் அநுபவித்த அநுபவத்தின் பரீவாஹ ரூபமாக இந்நூற்றந்தாதியைப் பாடிப் பின்புள்ளாரான நமக்கும் உபகரித்தருளினார். இனி நமக்கு ஐஹிகாமுஷ்மிகங்களில் ஒரு குறையுமில்லை என்பதாம். திரு நாமத்தால்” என்ற விடத்து, திருப்பெயரால் என்று பாடமிருப்பின் வெண்டளைக்குச் சேரும்.
தனியன் உரை முற்றிற்று.
***-***
இராமாநுச நூற்றந்தாதி
உரையின் அவதாரிகை.
ஸகல சாஸ்த்ரங்களுக்கும் ஸங்க்ரஹம் திருவஷ்டாக்ஷரம். அதனுடைய பரம தாத்பர்யமாயும், ஆழ்வார்களுடைய திவ்ய ப்ரபந்தங்களின் ஸாரார்த்தமாயும், ஸ்ரீ மதுரகவிகளுடைய உக்தியாலும் அநுஷ்டாநத்தாலும் ப்ரகாசிதமாயும், நம் பூருவாசார்யர்களின் உபதேச பரம்பரையாலே ப்ராப்தமாயும், சேதநர்களனைவர்க்கும் இன்றியமையாத ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களின் நிஷ்க்ருஷ்ட வேஷமாயும் பரம ரஹஸ்யார்த்தமாயு மிருப்பது சரமபர்வ நிஷ்டை. அஃதிருக்கும்படியைத் திருவரங்கத்தமுதனார்க்கு எம்பெருமானார் தமது நிர்ஹேதுக க்ருபையினாலே கூரத்தாழ்வான் திருவடிகளிலே இவரை ஆச்ரயிப் பித்தருளி அவர் முகமாக உபதேசித்தருளினார். அங்ஙனம் உபதேச ப்ராப்தமான அந்தச் சீரிய பொருளை இவ்வமுதனார் தாம் அநவரத பாவநை பண்ணி எம்பொருமானார் திருவடிகளை இடைவிடாது ஸேவித்துக்கொண்டு போந்தாராய் அவருடைய திருக்கல்யான குணங்களைத் தமது பத்திப் பெருங் காதலுக்குப் போக்குவீடாகப் பேசி அநுபவித்தே தீரவேண்டும்படியான நிலைமை தமக்கு உண்டானமையாலும், சரமபர்வநிஷ்டையே சீரியதென்கிற பரமார்த்தத்தைச் சேதநர்கட்கு எளிதில் உணர்த்த வேணுமென்கிற க்ருபாமூலகமான கருத்தினாலும் தாம் எம்பெருமானாருடைய திவ்யகுண சேஷ்டிதாதிகளை ப்ரேமத்துக்குத் தகுதியாகப் பேசுகிற பாசுரங்களாலே அவருடைய வைபவங்களை அனைவர்க்கும் வெளியிடா நின்றுகொண்டு முன்பு அழ்வார் திருவடிகளுக்கே அற்றுத்தீர்ந்த மதுரகவிகள் தமது நிஷ்டையைத் கூறும் முகத்தாலும் பிறர்க்கு உபதேசிக்கும் முகத்தலும் உஜ்ஜீவநத்துக்கு உபயுக்தமான அர்த்தத்தை லோகத்திலே வெளியிட்டருளினதுபோல, இவர்தாமும் அவ்வகைளாலே ஆசார்யாபிமாநநிஷ்டர்க்கு அறிந்துகொள்ளத்தக்க அர்த்தங்களையெல்லாம் மிக்க சுருக்கமும் மிக்க விரிவுமின்றி நுற்றெட்டுப் பாசுரங்கள்கொண்ட இத்திவ்ய ப்ரபந்த முகத்தால் அருளிச்செய்கிறார்.