(2924)

யாருமோர் நிலைமைய னெனவறி வரிய வெம்பெருமான்,

யாருமோர் நிலைமைய னெனவறி வெளியவெம் பெருமான்,

பேருமோ ராயிரம் பிறபல வுடையவெம் பெருமான்,

பேருமோ ருருவமு முளதில்லை யிலதில்லை பிணக்கே.

 

பதவுரை

பேரும்

-

(விக்ரஹத்தைப் பற்றின) திருநாமங்களும்

பிற

-

(அந்தத் திருநாமங்களுக்கேற்ற) விக்ரஹங்களும்

பல ஆயிரம் உடைய

-

அனேகமாயிரம் உடையனாய்க் கொண்டு தொற்றி

எம்பெருமான்

-

எமக்கு நாதனானவனாய்,

யாரும்

-

எப்படிப்பட்ட ஞானிகளுக்கும்

ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான்

-

ஒரு படியையுடையவன் என்று அறுதியிட வொண்ணாத பெருமானாய்.

யாரும்

-

(அன்பர்களாகில்) அறிவில்லாதவர்களானார்க்கும்.

ஓர் நிலைமையன் என் அறிவு எளிய எம்பெருமான்

-

ஒரு படிப்பட்டவனென்று அறியக்கூடிய பெருமானான பகவானுக்கு

ஓர் பேரும்

-

ஒரு பேரும்

ஓர் உருவமும்

-

ஒரு ரூபமும்

உளது இல்லை

-

உண்டாயிருப்பதில்லையென்று (பிரதிகூர்க்கும்)

இலது இல்லை

-

இல்லையாய் இருப்பதில்லையென்று (அநுகூலர்க்கும்)

பிணக்கே

-

நித்ய விவாதமாயேயிருக்கும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய திவ்யாவதாரங்கள் ஒருவர்க்கும் அறியப் போகாதோவென்ன, அடியவர்க்கு எளிதில் அறியக் கூடியவையாய் மற்றையோர்க்குச் சிறிதும் அறியப்போகாதவனாயிருக்குமென்கிறாரிதில்.

யாரும் ஓர் நிலைமையனென அறிவு அரிய எம்பெருமான் = எவ்வளவேனும் அதிசயித்த ஞானத்தையுடையரேலும் அப்படிப்பட்டவர்களும் தமது முயற்சியாலே காண விரும்பினால் இன்னபடிப்பட்டிருப்பதொரு ஸ்வபாவத்தையுடையவனென்று அறியவொண்ணாத எம்பெருமான்- எம்பெருமானுடைய நிர்ஹேதுகவிஷயீகாரத்திற்கு இலக்காகப் பெறாதவர்கள் எவ்வளவு சீரியராயினும் எம்பெருமானது நிலைமையை ஒரு ஸ்தூலாகாரமாகவும் அறியகில்லாராய்க்கிடப்பரென்றபடி.

யாருமோர் நிலைமையனென அறிவு எளிய எம்பெருமான் = பிறப்பாலும் செய்கையாலும் ஞானத்தாலும் எத்தனை தாழ்ந்தவர்களாகிலும் தன்னுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு இலக்காகப் பெற்றவர்களாகில் அன்னவர்களாலே எளிதிலறியக்கூடிய படிகளையுடையனாயிருப்பன்.

பேருமோராயிரம் = அநபவிக்குமடியர்க்கு இழிந்துவிடமெல்லாம் துறையாம்படி பல்லாயிரந் திருநாமங்களையுடையனாயிருப்பன். ஆயிரமென்றது அநேக பர்யாயம். பிறபலவுடைய எம்பெருமான் = இங்குப் ‘பிற’ என்பது திய்வமங்கள விக்ரஹத்தை நோக்கியது. நாமத்திற்கும் ரூபத்திற்கும் எங்கும் ஒரு சேத்தியுண்டாகையாலே இங்ஙனே பொருள் கொள்ளுதல் பொருந்தும். “பேருமோருருவமும்” என்ற ஈற்றடியுங் காண்க. திருநாமவாச்யங்களாலும் தன் இச்சையாலே பரிக்ரஹிக்கப்படுமவைகளாயுமுள்ள பலபல திருவுருவங்களையுடையானென்றவாறு.

பேரும் ஓருருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே= இதற்குப் பலபடியாகப் பொருள் கொள்ளலாம். ‘பேதம் ஓருருவமும் உளது. இலதில்லை. பிணக்கு இல்லை’ என்று மூன்று வாக்கியமாகக் கொண்டு- அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு விலக்ஷணமான நாமங்களும் ரூபங்களும் உண்டு; இல்லையென்பது கிடையாது; ஆகையால் சாஸ்திர விச்வாஸசாலிகளுக்கு விவாதமில்லை- என்பதாக ஒரு யோஜநை. அன்றியே, பேரும் ஓர் உருவமும் உளதில்லை = (எம்பெருமான் பக்கலில் அன்பு இல்லாதார்க்கு) ஒரு திருநாமமும் ஒரு விக்ரஹமும் உண்டாயிருப்பதில்லை (என்று தோற்றியிருக்கும்); இலதில்லை - (எம்பெருமான் பக்கலில் அன்புடையார்க்கு) அந்த நாம ரூபங்கள் உண்டாகியே தோற்றம், பிணக்கே- அன்புடையார்க்கு அன்பிலாதார்க்கும் இப்படி விவாதமாகியே யிருக்கும் என்றுமாம். மற்றும் பலவகைகளும் காண்க.

 

English Translation

My Lord is hard to see as the changeless one.  My Lord is easy to see as the changeless one.  My Lord bears a thousand names and forms.  My Lord is opposed to name and form, being and non-being.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain