(653)

மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்

துறந்துஇருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத் தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்ட ரான

அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே

 

பதவுரை

மறம் நிகழும் மனம் ஒழித்து

-

கொடுமையால் விளங்காநின்றுள்ள மனத்தை ஒழித்து

வஞ்சம் மாற்றி

-

வஞ்சனைகளைப் போக்கி

வல் புலன்கள் அடக்கி

-

கொடிய இந்திரியங்களை அடக்கி

இடர் பாரம் துன்பம் துறந்து

-

(மேன்மேலும்) துக்கத்தை விளைப்பனவாய்ப்

பெருஞ்சுமையாயிராநின்ற பழவினைகளை வேரறுத்து

இருமுப்பொழுது ஏத்தி

-

பஞ்சகாலங்களிலும் துதித்து

எல்லை இல்லா தொல் நெறிக் கண் நிலை நின்ற

-

அளவிறந்த பழைய மர்யாதையிலே நிலைநின்ற

தொண்டர் ஆன

-

தாஸபூதர்களான

அறம் திகழும் மனத்தவர் தம்

-

தர்மசிந்தையே விளங்கும் மனமுடையரான

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு

கதியை

-

பரமப்ராப்யனாய்

பொன்னி அணி அரங்கத்து

-

காவிரியால் அழகுபெற்ற கோயிலிலே

அரவு அணையில் பள்ளி கொள்ளும்:

நிறம் திகழும்

-

அழகு விளங்காநின்றுள்ள

மாயோனை

-

ஆச்சரியனான எம்பெருமானை

என் கண்கள்

-

எனது கண்களானவை

கண்டு

-

ஸேவிக்கப்பெற்று

நீர் மல்க நிற்கும் நாள் என்று கொல்

-

ஆநந்தக் கண்ணீர் ததும்பும்படி நிற்பது

என்றைக்கோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முன்னடிகளிரண்டும் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்கூறுவன. “திகழும் மனம் மறம் ஒழித்து” என்று அந்வயித்து, விளாங்காநின்ற மனத்தில் நின்றும் கொடுமையை நீக்கி என்றுரைத்தலுமாம். முறம்-கொலை, கோபம், கொடுமை. இடர்ப்பாரத் துன்பம் துறந்து-“பாரமாய பழவினை பற்றறுத்து” என்கை. மஹத்தான துக்கத்தை விளைவிக்கக்கூடியதும், மனிதனைக் கீழே அமுக்குவதில் தலைச்சுமை போன்றதுமான பழையவினையை வேரோடு களைந்து என்றபடி.

(இருமுப் பொழுதேத்தி.) இரண்டும் மூன்றும் ஐந்து; பஞ்ச காலபராயணர்களாய் என்றபடி. இதனைச் சிறிது விவரிப்போம்; - ஒரு தினத்தின் பகற்பொழுதை ப்ராத:காலம், ஸங்கவகாலம், மத்யாஹ்நகாலம், அபராஹ்காலம், ஸாயங்காலம் என்று ஐந்தாகப் பகுத்து, ஸூர்யோதயம் முதல் அவ்வாறு நாழிகை இவற்றிற்கு முறையே உரியவை என்று வரையறுத்து, அபிகமநம், உபாதாநம், இஜ்யா, ஸ்வாத்யாயம், யோகம் என்ற ஐந்து ஒழுக்கங்களையும் முறையே அந்த (ப்ராத:காலம் முதலிய) ஐந்து சிறுபொழுதிலும் அநுஷ்டிக்கும்படி பாஞ்சராத்ரம் முதலிய ஆகமங்கள் கூறும். இரவில் ஆசரிக்கவேண்டுவதும் யோகாநுஷ்டாநமே இவற்றின் விவரம் வருமாறு:- முதலாறு நாழிகையாகிய ப்ராத:காலத்திலே, ஸ்நாநம் ஸந்த்யாவந்தனம் ஜபம முதலிய காலைக்கடன்களைச் செய்துமுடித்துத் தாம் ஆராதிக்கவேண்டிய எம் பெருமானுடைய ஸந்நிதியிற்சென்று ப்ரதக்ஷிண நமஸ்கார ஸ்தோத்ரம் முதலியவற்றால் எம் பெருமானை உகப்பிக்கவேண்டும்; இஃது அபிகமநகால நியமம். அதற்கு அடுத்த ஸங்கவகாலத்திலே, பகவதாராதநத்துக்கு வேண்டிய சுத்ததீர்த்தம் சந்தனம் புஷ்பம் தூபதீபத்ரவ்யங்கள் முதலியவற்றையும், எம்பெருமானுக்கு அமுது செய்விப்பதற்கு வேண்டிய பால் தயிர் நெய் தேன் முதலிய வற்றையும் எம்பெருமானுக்கு அமுது செய்விப்பதற்கு வேண்டிய அரிசி பருப்பு கறியமுது சர்க்கரை நெய் தயிர் பழம் முதலிய போஜநோபகரணங்களையும் ஸம்பாதித்துத் தொகுத்து ஸித்தஞ் செய்யவேண்டும். இஃது உபாதாநகால நியமம்.  மூன்றாவதான மத்யாஹ்ந காலத்திலே, மாத்யாஹ்நிகஸநாநமும் மாத்யாஹ்நிகச் சடங்கும்செய்து விதிமுறை வழுவாது பகவானுக்குத் திருவாராதநம் பண்ணிப் பக்குவமான உணவுகளை அமுது செய்வித்து அங்ஙனம் நிவேதித்த உணவுகளை அதிதிகளோடு புஜிக்க வேண்டும். இஃது இஜ்யாகாலநியமம். அதற்கு அடுத்ததான அபராஹ்ந காலத்திலே, மோக்ஷமார்க்கத்துக்கு உரிய வேத வேதாந்த வேதாந்தங்களையும் இதிஹாஸ புராணங்களையும் மற்றும் உரிய நுர்ல்களையும் தாம் கற்றலும் கற்பித்தலும் வேண்டும். இது ஸ்வாத்யாயகாலநியமம்.

ஈற்றதான ஸாயங்காலத்திலே, மாலைக்கடனாகிய ஸந்த்யாவந்தனத்தைச் செய்யத் தொடங்கி ஸூர்யாஸ்தமனமான பின்பு ஜபத்தைப் பூர்த்திசெய்து இரவு போஜநாநந்தரம் ஏகாந்தமாக இருந்து ஐம்பொறிகளை யடக்கி ப்ராணாமஞ்செய்து மனத்தைப் பரமாத்மாவினிடத்தே நிலைநிறுத்தி பகவத்குணாநு ஸந்தானத்தோடு பள்ளிகொள்ளவேண்டும். இது யோகாகாலநியமம். இவ்வாறு அநுஷ்டிக்கும் பாகவதர் பஞ்சகாலபராயணர் எனப்படுவர்.

 

English Translation

The beautiful Lord reclines on a serpent-bed in Arangam between the loins of Ponni, the Kaveri-Kollidam Rivers. He is the sole refuge of devotees whose hearts are filled with compassion and who practice with unshakeable faith the eternal Dharma. Dispensing with avarice, cleansing the vice in their hearts, and subduing their senses, they perform worship five times daily and rid themselves of their painful load of Karma. O. when will I stand in their midst, and offer worship with tears brimming in my eyes?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain