(607)

தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ

யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்

தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்

ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே

 

பதவுரை

எந்து இழையீர்!

-

ஆபரணங்களை யணிந்துள்ள மாதர்களே!

யாம் உமக்கு என் கையில் சங்கமும்

-

நான் உகந்து தரித்துக் கொண்டிருக்கிற என் கையில் வளைகள்

தாம் உகக்கும் கம்கையில்சங்தம் போலாவோ

-

தான் உகந்து தரித்துக் கொண்டிருக்கிற தன்கையில் சங்கோடு ஒவ்வாதோ?

தீ முகத்து

-

க்ரூரமானமுகங்களையுடைய

நாக அணைமேல்

-

திருவனந்தாழ்வானாகிற படுகையின்மேலே

சேரும்

-

பள்ளிகொண்டருளாநின்ற

திரு அரங்கர்

-

ஸ்ரீரங்கநாதன்

முகத்தை

-

(என்னுடைய) முகத்தை

நோக்கார்

-

நோக்குகின்றாரில்லை

ஆ!

-

ஐயோ!

அம்மனே! அம்மனே!

-

அந்தோ! அந்தோ!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய விஸ்லேஷம் நெடுகிச்செல்லவே, அதனால் உடல் ஈர்க்குப்போல் கைவளைகளெல்லாம் கழன்றொழிந்தமையையும், இவ்வளவிலும் வந்து முகங்காட்டாத எம்பெருமானுடைய கொடுமையுங் கூறி வருந்துகின்றாள். எந்திழையீர்! என்று அருகே வந்துநிற்கும் பெண்களை விளிக்கிறபடி. “பெண்காள்! - தோழிகாள்!“ என்னாதே எந்திழையீர் என்றது - என்னைப்போலே வளையிழந்து வருந்தாதே, ப்ரளயத்துக்குத் தப்பிப் பிழைப்பாரைப்போலே நீங்கள் மாத்திரம் அவனுடைய விரஹத்துக்கு எப்படித் தப்பிப்பிழைத்தீர்கள்? என வியந்து கேட்கிறபடிபோலும். “ஏந்திழையீர்!, யாமுகக்கு மென்கையிற் சங்கமும் தாமுகக்கும் தம்கையிற் சங்கமே போலாவோ? என்று அப்பெருமாளைக் கேளுங்கள்“ என்று வாக்யசேஷம் பூரித்துக்கொள்ளவேணும். ‘நம் கையிலுள்ள சங்கு எப்போதும் நம்கையிலேயே இருக்கவேணும்‘ என்று அவர் ஆசைப்படுவதுபோல், நானும் ‘நம்கையிலுள சங்கு நம்கையிலேயே இருக்கவேணும்‘ என்று ஆசைப்பட ப்ராப்தி இல்லையா? அவருடைய ஆசைமாத்திரம் வழுவாமல் பலித்துவிடவேணும் என்னுடைய ஆசைமாத்திரம் பாழ்த்துப் போகவேணுமென்று இஃது என்ன விபரீதஸங்கல்பம்? என்று அவரையே போய்க் கேளுங்கள் என்கிறாள். இரண்டடியிலும் சங்கம் என்றது ஸப்தஸ்லேஷம். பாஞ்சஜந்யத்துக்கும் கைவளைக்கும் பெயர்.

தான் சங்கிழந்தமைக்குக் காரணம் சொல்லுகிறாள் பின்னடிகளில், திருவனந்தாழ்வான் ஒருத்தனாகவே பகவதநுபவத்தைக்கொள்ளை கொள்கிறானென்ற வயிற்றெரிச்சலினால் தீமுகத்துநாகணை என்கிறாள் - எரிமூஞ்சித்தெய்வம் சுடுமூஞ்சிப்பாம்பு - என்கிறாப்போலே. * ஆங்கு ஆரவாரமதுகேட்டு அழலுமிழும் பூங்காரரவாகையாலே அஸ்தாநே பயஸங்கையினால் எப்போதும் தீயைக் சுக்கிக்கொண்டேயிருப்பனிறே திருவனந்தாழ்வான். “வாய்ந்த மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்“ இத்யாதிப்படியே உகவாதார் வந்துகிட்ட வொண்ணாதபடி யிருக்குமவனான திருவனந்தாழ்வான் என்கிறாளாகவுமாம். இருவராய்ப் படுக்கவேண்டிய படுக்கையிலே ஒருவராய்ப்படுத்தாரே, அவருடைய நெஞ்சு என்ன நெஞ்சு! என்ற பரிதாபம்தோற்றக் கூறுகின்றாள் அணைமேல் சேரும் திருவரங்கள் என்று. ஆர்த்தர்களை ரக்ஷிப்பதையே தொழிலாகக்கொண்டவர் நல்ல வாய்ப்பாகப் படுக்கை கிடைத்ததென்று சாய்ந்துகிடந்து தூங்குகிறார் - என்கிறாளாகவுமாம். திருவரங்கத்தில் வந்தும் என்னைப்பேணாதே உறங்கிக்கிடந்தாராகில் இதைவிடப் பரமபதத்திலேயே சுகமாக வீற்றிருக்கலாமே, இவ்வளவு தூரம் ஏன் ஓடி வரவேணும்? என்றுங் கருதுகின்றாள். தன்னைக் கைப்பிடித்தால்தான் திருவரங்கத்தில் வரவு பயன்படைத்தாம் என்றிருக்கிறாளிறே.

முகத்தை நோக்கார் - உடம்போடே அணைய வராவிடினும் கண்வட்டத்திலே ஸேவைஸாதிப்பதும் தவிரவேணுமோ? என்முகத்தை நோக்குவதற்கும். அவர் கூசும்படி. நான் என்னபாவம் செய்தேனோ அறியேன். ஆ, ஆல்- ஐயோ! ஐயோ!! என்றவாறு. அம்மனே! அம்மனே!! - இப்படிப்பட்ட அவரை இப்போது நினைப்பதும் - புலி, சிங்கம் முதலியவற்றை நினைப்பதுபோல் பயங்கரமாயிற்றே என்கிறாள் போலும்.

 

English Translation

As the Sanku conch in his hands is dear to him, --O Jeweled Ladies! -- are not the Sanku bangles on my hands dear to me? The Arangar Lord reclining on a fierce serpent does not deign to see my face, O Mother, O Mother!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain