nalaeram_logo.jpg
(485)

கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்

அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

இள கன்று எருமை

-

இளங்கன்றுகளையுடைய எருமைகளானவை

கனைத்து

-

(பால் கறப்பார் இல்லாமை யாலே) கதறிக்கொண்டு

கன்றுக்கு இரங்கி

-

(தன்) கன்றின் மீது இரக்கமுற்று

நினைத்து

-

(கன்று ஊட்டுவதாக) நினைத்து (அந்நினைவினால்)

முலை வழியே நின்று பால் சோர

-

முலை வழியால் இடைவிடாமல் பால் பெருக, (அப்பெருக்கினால்)

இல்லம்

-

வீட்டை

நனைத்து – (முழுவதும்) ஈரமாக்கி

-

(முழுவதும்) ஈரமாக்கி

சேறு ஆக்கும் நல் செல்வன்

-

சேறாகப் பண்ணுகையாகிற சிறந்த  செல்வத்தை யுடையவனுடைய

தங்காய்

-

தங்கையானவளே!

பனி

-

பனியானது

தலை வீழ

-

எங்கள் தலையிலே விழும்படி

நின் வாசல் கடை பற்றி

-

உனது மாளிகையின் வாசற் கடையை அவலம்பித்துக் கொண்டு,

சினத்தினால்

-

(பிராட்டியைப் பிரித்தான் என்னுஞ்) சீற்றத்தினால்

தென் இலங்கை கோமானை

-

தென் திசையிலுள்ள லங்காபுரிக்கு அரசனான இராவணனை

செற்ற

-

கொன்றொழித்தவனும்

மனத்துக்கு இனியானை

-

சிந்தனை இனியனுமான இராமபிரானை

பாடவும்

-

(நாங்கள் பாடா நிற்கச் செய்தேயும்

நீ

-

நீ

வாய் திறவாய்

-

வாய்திறந்து பேசுகிறாயில்லை,

இனித் தான்

-

எங்களாற்றாமையை அறிந்து கொண்ட பின்பாகிலும்

எழுந்திராய்

-

எழுந்திரு;

ஈது என்ன பேர் உறக்கம்

-

இஃது என்ன ஓயாத தூக்கம்?

அனைத்து இல்லத்தாரும்

-

(இச்சேரியிலுள்ள) எல்லா வீட்டுக்காரர்களாலும்

அறிந்து

-

(நாங்கள் உன் மாளிகை வாசலில் திரண்டு நிற்கிறவிது) அறியப்பட்டதாயிற்று:

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாட்டிலிருந்து போதோடு காட்டிலிருந்த போதோடு வாசியற பெருமாளைப் பின்தொடர்ந்து நோக்கிக்கொண்டு திரியும் இளையபெருமாளைப் போன்று, கண்ணபிரானையன்றி மற்றொருவரையும் அறியாமல் என்று மொக்க அவனையே பினறொடர்ந்து அவன் பக்கலில் மிகவும் பரிவுபூண்டிருப்பா னொருவனுடைய தங்கையாய்ச் சீர்மை பெற்றிருப்பாளொரு ஆய்ப்பெண்ணை உணர்த்தும் பாசுரம், இது.

நெடும்போதாக நின்வாசற் கடையை நாங்கள் பற்றிக்கொண்டு, முன் பொலாவிராவணன்றன் முதுமாதிளிலங்கை செற்ற சீரிய சேவகத்தை எடுத்துப் பாடாநின்றாலும் நீ வாய்திறவாதே கிடந்துறங்குகின்றாய்; இங்ஙனும் ஓருறக்கங்கூடுமோ? உன்னைக் காணாதே நாங்கள் அலமந்து தளர்ந்திருக்க மாற்றை நீ அறிந்து வைத்தும் இங்ஙனுறங்குகை உரியதன்று, இனிக்கடுக உணர்ந்து வாராய், என்கிறார்கள்.

இதில் முதலிரண்டை அடிகளால் இவள் தமையனுடைய செல்வத்தின் சிறப்புக்கூறப்படுகின்றது.  அவன் அநவரதம் கண்ணபிரானுடன்  கூடித்திரிபவனாதலால் கறவைகளைக் காலந் தவறாது கறக்கப் பெறான்;  அக்கறவைகள் வகுத்த கால்திற் கறக்கப் பெறாமையாலே முலைகடுத்து ‘கன்று என்படுகிறதோ!’ என்று வாசலிலே நின்று குமுறி, தூரத்திற் கட்டப்பட்டிரா நின்றுள்ள கன்றின்மீது தனது பாவபந்தத்தைச் செலுத்தி, பாவநாப்ரகர்ஷத்தாலே, கன்று முலையின் வாய்வைத்ததாகக் கொண்டு, கைவழியாகவு மன்றி, கன்றின் வாய்வழியாகவு மன்றி முலை வழியே பால் சொரியா நிற்கும்; அந்தப் பாற்பெருக்கனால் வீடு முழுவதும் வெள்ளமானபடியா தொன்றுண்டு – அதனைச் செல்வமென்றிட்டு, இங்ஙனொத்த செல்வமுடையானுக்குத் தங்கையாகப் பிறந்தவளே! என்று அவளை விளிக்கின்றனர்.

கனைத்தல் - குமுறுதல்; இடைவீடின்றித் தானஞ் செய்தலையே தொழிலாகவுடைய உதார சிகாமணிகள் ஒரு கணப்பொழுது கொடாதொழியில் மனந்தளும்புமாறு போலவும், எம்பெருமான் அடியார் காரியங்களைச் செவ்வனே செய்யப் பெறாதொழியில் “ருணம் ப்ரவ் ருத்தமிவ மே ஹ்ருதயாந்நாபஸர்ப்பதி” என்று திருவுள்ளந் தளும்புமாறு போலவும், பசுக்கள் கிரமமான காலத்திற் கறக்கப் பெறாதொழியில் முலைக்கடுப்புற்றுக் கனைத்தல் இயல்பென்க.

நின்று பால் சோர – முகில் மழைபொழிய நினைத்தால் கடலிற்புக்கு நீரை முகந்து கொண்டு வந்து பின்பு பொழிய வேணும்; இக்கறவைகட்கு அவ்வருத்த மில்லை, நினைவே ஊற்றாகப் பால் சுரக்குமாதலால்; அந்நினைவு மாறாமையால் திருமலையில் திரு அருவிகள் போன்று பால் மாறாதே பெருகுமென்க.  “பகவத் விஷயப்பொருள் கூற வேணும்” என்று ஒருவர் கேளாதொழியினும் கற்றுணர்ந்த ரஸிகர் தமது செல்லாமையாலே தாமே பகவத் விஷயார்த்தங்களை எடுத்துரைக்குமாறு போலவும், அர்ஜுநன் கேளாதேயிருக்கக் கண்ணபிரான் கீதையில் “பூய ஏவ மஹா பாஹோ! ச்ருணு மே பரமம் வச:” என்று கூறத்தொடங்கினாற்போலவு மாயிற்றுக் கறவைகளின்படி.

மேல் நான்காவது முதல் இரண்டரை அடிகளால் இவர்கள் தாங்கள் செய்யும் படியைக் கூறுகின்றனர்;  கீழ் “ஆழிமழைக்கண்ணா!” என்ற பாட்டில் பர்ஜந்ய தேவதைக்கு அருளிப்பாடிட்டு மழைபெய்ய நியமித்தார்களாதலால், அக்கட்டளையின்படி அவன் பெய்யும் மழை தலையிலே விழுமாறு இவளது வீட்டுவாசற்கணையத்தை அவலம் பித்துக் கொண்டு நிற்குமாற்றைக் கூறும், நான்காமடி.

இராமபிரான் இராவனனோடு போர்புரியும் போது அவன் மிகவும் எளிவரவு பட்டமையைக்கண்டு இரக்கமுற்று, “நிசாசரர் கோமானே! போரில் மிகவும் வருத்தமுற்றாய்; ஆதலின் இன்று இருப்பிடஞ்சென்று சிறிது தேற்றமடைந்து நாளை போர்க்கு வா, அப்போது என் வலியைக் காண்பாய்” என்று நியமநம் தந்து தானே போகவிட்டருளினமை முதலிய பல குணங்களினால் ஈடுபடுத்துந்தரமுடையனாதல் பற்றி “மனத்துக் கினியானை” என அடைமொழி கொடுக்கப்பட்டது.  கண்ணபிரான் பெண்களைப் படுத்தும்பாடுகளை நினைத்தால் “வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே” என்னும்படியிருத்தலால், அவன் மனத்துக்கு இனியனல்லன் போலும்.

இனித்தானெழுந்திராய் - எங்களுடைய ஆர்த்தியைக் கண்டு எழுந்திரா தொழியில் ஒழி; மனத்துக்கினியானுடைய பாட்டுக்களைக் கேட்கவாகிலும் உணருதி என்றபடி.

ஈதென்ன பேருறக்கம் - உறக்கம் இருவகைப்படும் - லௌகிகமும் வைதிகமும்.  தமோ குணத்தின் பிராசுர்யத்தினால் உறங்குகின்ற ஸம்ஸாரிகளின் உறக்கம் - லௌகிகம்.  ஆமைத்துலகங்களினுடையவும் காவலைச் சிந்தனை செய்து கொண்டு உறங்குவான் போல் யோகு செய்யும் எம்பெருமானுடைய நித்திரை வைதிகம்.  இவ்விரு வகையிலுஞ் சேராதே யிருப்பதொரு விலக்ஷண நித்திரையாயிராநின்றது உன் உறக்கம் என்கிறார்களென்க.

“அனைத்தில்லத்தாருமறிந்து” என்பதற்கு இரண்டு வகையாகக் கருத்துரைக்கலாம்; நீ பரஸம்ருத்தியையே பிரயோஜநமாகவுடையையாதலால், ‘இப்பாடியிலுள்ள பெண்களில் ஒருத்தி தப்பாமல் அமைத்தில்லத்தாரும் உணர்ந்து வரவேண்டும்’ என நினைத்துக்கிடக்கிறாயாகில், அங்ஙனமே அனைத்தில்லத்தாரும் அறிந்து வந்தாயிற்று; இனி நீ உணர்ந்துவா என்கிறார்கள், என்பது ஒரு கருத்து; பாடியிலுள்ள பெண்களெல்லாருந் திரண்டு வந்து உன் மாளிகை வாசலில் நின்று கூப்பிட, நீ சிறிது பொழுது உணராமற் கிடக்க, இதனால் உனக்கு வரும் மதிப்பை அனைவரும் அறியவேண்டுமென்று கிடக்கிறாயாகில், அங்ஙனும் அறிந்தாயிற்று; இனி உணர்ந்துவா, என்கிறார்கள் என்பது மற்றோர் கருத்து.  இவ்விரண்டினள் பின்னருரைத்த கருத்து சிறக்குமென்க.

(ஸ்வாபதேசம்) பூதத்தாழ்வார்க்கு அடுத்து முந்தினவரான பொய்கை யாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது. தங்காய்! என்ற விளி இவர்க்கு நன்கு பொருந்தும் உலகில் தங்கையென்று ஸ்ரீ மஹா லக்ஷ்மியையும் தமக்கையென்று மூதேவியையும் வழங்குவர்கள். ‘சேட்டை தம்மடி யகத்து’ என்ற திருமலைப் பாசுரத்தில், தமக்கைக்கு வாசகமான ஜ்யேஷ்டா என்ற சொல்லால் மூதேவியைக் குறித்தமை காண்க.  ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாமரை மலரிற் பிறந்தவள்.  ‘வனச மலர்க் கருவதனில் வந்தமைந்தாள் வாழியே’ என்கிறபடியே பொய்கை யாழ்வாரும் தாமரைப் பூவில் தோன்றியவர் இந்த வொற்றுமைநயம் பற்றி தங்காய்! என விளிக்கத் தகுதியுடையாரிவ் வாழ்வார்.  “நனைத் தில்லஞ் சேறாக்கும்” என்ற விசேடணமும் இவர்க்கு வெகு நேர்த்தியாகப் பொருந்தும்.  ராவணவதாநந்தரம் திருவயோத்திக்கு மீண்டு எழுந்தருளாநின்ற பெருமாளை  நோக்கி பரத்வாஜ மஹர்ஷி “பங்க திக் தஸ்து ஜடிலோ பரதஸ் த்வாம் ப்ரதிக்ஷதே” என்றார். இங்கு பரதாழ்வான் சேறு பூசப் பெற்றிருப்பதாகச் சொல்லப்பட்டதன் கருத்து யாது?  இரவும் பகலும் நிச்சலும் அழுதழுது நினைத்தில்லம் சேறாக்கினன் என்றபடி.  “வண்பொன்னின் பேராறுபோல் வருங் கண்ண நீர்கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றம் சேறு செய் தொண்டர்” என்றார் குலசேகரப் பெருமாளும்.  அவ்வண்ணமாகவே பொய்கை யாழ்வாரும் “பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்று தாமே பேசினபடியே அழுதவராதலால் நினைத்தில்லஞ் சேறாக்கின ரென்க.

(கனைத்து) முதன் முதலாகப் பேசத் தொடங்கும்போது கனைப்பது இயல்பு.  பொய்கையார்க்கு முன்னம் பேசினவர்கள் யாருமில்லை. இவரே முதன் முதலாகப்பேசத் தொடங்கினவரென்பது இவ்வினையெச்சத்தினால் தோற்றுவிக்கப்படும்.  (இளங்கற்றெருமை) எருமை என்றால் மஹிஷீ; லக்ஷித லக்ஷணாக்ரமத்தால் தேவ தேவ திவ்ய மஹிஷீ என்றவாறு.  எம்பெருமானுக்கு திவ்ய மஹிஷியான பிராட்டியை யொப்பவர் இவ்வாழ்வார் என்பது ஸூரனை.  “இளங் கன்றுகளையுடைய” என்று விசேஷணமிட்டதனால், மற்றை யாழ்வார்களனைவரும் இவர்க்கு வத்ஸ ஸ்தாநீயாகளாய் இவர் மாத்ரு ஸ்தாநீயர் என்று காட்டினபடி.  ஆழ்வார்களுள் முதல்வரிறே யிவர்.  (கன்றுக்கிரங்கி) இவர் ஸ்ரீ ஸூக்தி யருளிச் செய்யத் தொடங்கினது  கன்றுகளான நம்போல்வார் பக்கலிலுள்ள பரம க்ருபையா லென்கை.

(நினைத்து முலைவழியே நின்று பால்சோர.) பகவத் குணங்களை நினைத்தவாறே அந்த நினைவு தானே ஊற்றாகப் பால் போன்ற ஸ்ரீ ஸூக்திகள் பெருகப்புக்கன என்ற படி.  (பனித்தலை வீழ நின்வாசல் கடைபற்றி) இவர் பொய்கையில் தோன்றினவராதலால் இவரது வாசற்கடையைப் பற்றுவார்க்குப் பணித்தலை வீழ ப்ராப்தமே யாகுமிறே.  (சினத்தினா இத்யாதி.) இது ஸ்ரீராம குண கீர்த்தனம்.  மஹர்ஷிகளின் ஞானக் கண்ணுக்கும் இலக்காகாத வொரு ஸ்ரீராம சரிதம் இவ்வாழ்வாருடைய அகக்கண்ணுக்கு இலக்கானமை “பூமேய மாதவத் தோன்தாள் பணிந்த வாளரக்கன் நீண்முடியைப் பாதமத்தா லெண்ணினான் பண்பு.” என்ற இவரது பாசுரத்திற் பொலியும்.  அதில் “நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே!” என்றதற்குப்பொருந்த “மனத்துக் கினியானை” என்றாள்.  (இனித் தானெழுந்திராய்) “பழுதே பல பகலும்” என்கிற பாசுரம் பேசின பிறகுங்கூட உறங்கலாமோ? என்கை. முழுக்ஷப்படியில் ‘பழுதே பல பகலும் போயின வென்று இறந்த நாளைக்குக் கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகில்லை”  என்ற ஸ்ரீ ஸூக்தியும் இங்கு அநுஸந்தேயம்.  (அனைத்தில்லத்தாரு மறிந்து) “அறியுமுலகெல்லாம் யானேயு மல்லேன்” என்ற இவ்வாழ்வாரது பாசுரத்தை அழகாக நினைப்பூட்டுகிறபடி காண்மின்.

இப்பாசுரத்தோடு ஆண்டாளுக்கு முந்தின ஆழ்வார்களை யெல்லாம் உணர்த்திற்றாயிற்று.  “ஆழ்வார்கள் பன்னிருவர்” என்றுமுள்ள ஸம்ப்ர தாயப்படிக்கு ஸ்ரீ மதுர கவிகளும் ஆண்டாளும் ஆழ்வார் கோஷ்டியில் சேராதவர்களாதலால் இவ்விருவரையும் உணர்த்துவதும் இப்பாட்டிலேயே அறியக்கிடக்கிறது.  எங்ஙனே யென்னில்; நற்செல்வன் தங்காய்! என்றது நற்செல்வன் தங்கையே! என்று பொருள்படுதலால் நற்செல்வன் தன்னுடைய கையாக இருப்பவனே! என்றபடியாகும்.  இங்கு நற்செல்வ னென்பது நம்மாழ்வாரை, அவர் திருவாய்மொழி அருளிச் செய்கையில் மதுரகவிகள் அவருடைய சையின் ஸ்தாநீயராயிருந்து பட்டோலை கொண்டாராதலால் இந்த விளி மதுர கவிகட்குப் பொருந்தும்.

இனி நற்செல்வனென்று எம்பெருமானாரைச் சொல்லிற்றாகி அவருடைய தங்கையென்று ஆண்டாளையுஞ் சொல்லக் குறையில்லை “கோதற்ற ஞானத் திருப்பாவை பாடியபாவை தங்கை” என்றும், “பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே” என்று முள்ளவை காண்க.  ஆண்டாள் தன்னைத்தானே உணர்த்திக் கொள்ளுகை பொருந்துமோவென்று  விரஸமாக வினவுவார்க்கு நாம் விடையளிக்க வல்லோமல்லோம்.  சொற்சுவை அமைந்திருக்கு மழகை அநுபவித்துப் போருகிறோ மத்தனை.

English Translation

O sister of a fortune favoured cowherd who owns cows with boundless compassion, that pour milk from their udders, at the very thought of their calves, slushing the cowshed! We stand at your doorstep with dew dropping on our heads. Come open your mouth and sing the praise of the Lord dear to our heart, who in anger slew the demon-king of Lanka. At least now, wake up, why this heavy sleep? People in the neighborhood know about you now!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain