nalaeram_logo.jpg
(482)

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.

பதவுரை

தூ மணி மாடத்து

-

பரிசுத்தமான மாணிக்கங்கள் அழுத்திச்சமைத்த மாளிகையில்

சுற்றும்

-

நாற்புறமும்

விளக்கு எரிய

-

விளக்குகள் எரியவும்

தூபம் கமழ

-

(அகில் முதலியவற்றின்) வாசனைப்புகைகள் மணம் வீசவும்,

துயில் அணைமேல் கண் வளரும்

-

மென்மையான படுக்கையின் மீது நித்திரை செய்யா நின்ற,

மாமான் மகளே

-

அம்மான் பெண்ணே!

முணி கதவம்

-

மாணிக்கக் கதவினுடைய

தாள்

-

தாழ்ப்பாளை

திறவாய்

-

திறந்திடுவாயாக,

மாமீர்

-

அம்மாமீ!

அவளை

-

(உள்ளே உறங்குகிற) உன் மகளை

எழுப்பீரோ

-

எழுப்ப மாட்டீரோ?

உன் மகள்;

-

உன் மகளானவள்

ஊமையோ

-

வாய்ப்புலன் இல்லாதவளோ?

அன்றி

-

அல்லாமற்போனால்

செவிடோ

-

செவிப்புலன் இல்லாதவனோ? (அன்றி)

அனந்தலோ

-

பேருறக்க முடையவளாயிருக்கின்றாளோ? (அன்றி)

பெரு துயில்

-

பொரிய படுக்கையில்

எமப்பட்டாளோ

-

காவனிடப்பட்டாளோ? (அன்றி)

மந்திரம்பட்டாளோ

-

மந்திரவாதத்தினால் கட்டுப்படுத்தப்பட்டானோ?

மா மாயன்

-

‘அளவிறந்த ஆச்சரியச் செய்கைகளை யுடையவனே!’

மாதவன்

-

‘திருமகள் கேழ்வனே!’

வைகுந்தன்

-

‘ஸ்ரீ வைகுண்டநாதனே!’

என்று என்று

-

என்று பலகால் சொல்லி

நாமம் பலவும்

-

(எம்பெருமானுடைய) திரு நாமங்கள் பலவற்றையும்

நவின்று

-

(வாயாரக்) கற்றோம்;

(இனியாகிலும் உன் மகள் உணரலாகாதா?)

ஏல் ஓர் எம் பாவாய்!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மைத்துனமையுறவுடையா ளொருத்தியை உணர்த்தும் பாசுரம் இது சுற்றும் விளக்குகள் வளங்கப் பெற்றுத் தூபங்கள் மணம் வீசாநிற்கப் பெற்ற நன்மணி மாடத்தில் மெல்லணைமேற் கண் துயில்கின்ற மாமான்மகளை நோக்கி “மணிக்கதவம் தாள் திறவாய்” என்று வெளியே நிற்பவர்கள் சொல்ல, அவள் அதனைக் கேட்டு வைத்தும் மறுமொழி ஒன்றுங் கூறாதாளாய்க்கிடக்க, அங்ஙனே கிடக்கும்படியைக் கண்ட அவள் தாயார் “இத்தனை பெண்பிள்ளைகள் வருந்தி வாசலிலே நின்று துவள, இவள் ஒரு பேச்சும் பேசாதே கிடந்துறங்குவது என்ன நீதி!’ என்று நெஞ்சிற் கொண்ட இரக்கம் முகத்திலே தோற்றும்படி யிருக்குமாற்றை இவ்வாய்ச்சிகள் கண்டு, ‘மாமீர்! அவளொருத்தி எங்கள் திரளிற் புகாமை யாலே நாங்கள் படும்பாட்டைக் கண்டீரே; உமது மகளைச் சிறிது உணர்த்தலாகாதா? நாங்கள் நெடும்போதாக நின்று கூவச்செய்தேயும் இவள் மறுமாற்ற மொன்றும் தருகின்றிலளே; இவள் ஊமையா? செவிடா? பேருறக்கம் பிடித்தவளா? அன்றி, இவள் எழுந்திருக்கக் கூடாதென்று யாரேனும் படுக்கையில் காவலிட்டிருக்கிறார்களா? ஆன்றி மந்திரவாதத்தினால் ஸர்ப்பத்தைத் தடைகட்டுவது போல், இவள் படுக்கையினின்றும் எழுந்திருக்கவொண்ணாதபடி ஆரேனும் மந்த்ரப்ரயோகம் பண்ணிவிட்டார்களா? நாங்கள் ஒரு வகையாகவும் நிர்ணயிக்கமாட்டுகின்றிலோம்’ என்ன; இதனைக்கேட்ட தாயார் ‘நீங்கள் இங்ஙனே ஒன்றும் சங்கிக்கவேண்டா; அவளுக்கும்படியான பகவந்நாமங்களைப் பகரத்தொடங்கினீர்களாகில் அவள் தன்னடையே உணர்ந்தெழுந்துவருவள்’ என்ன; ‘அங்ஙனமும் செய்தற்றது; நாங்கள் இவ்வளவாகச் சொன்ன பகவந்நாமங்கட்கு ஓர் வறையறையில்லை காணும்; இன்னும் யாம் என் செய்வோம்’ என்கிறார்கள்.

தூமணி மாடம் = நம்மாழ்வார் திருவாய் மொழியில் திருத்துலைவில்லி மங்கலத்தை வருணிக்கத்தொடங்கி, “துவளில் மாமணிமாடமோங்கு துலைவில்லி; மங்கலம்” என்றார்.  இங்கு அங்ஙனன்றித் “தூ மணிமாடம்” எனப்பட்டது.  இவ்விரண்டிற்கு முள்ளவாகும்யென் என்னில்; துவள்இல் என்ற அடைமொழியினால் - துலைவில்லி மங்கலத்து மாடங்களின் மணிகள், முதலில் துவளுற்றிருந்து பின்னர் துவளற்றனவாயின வென்பது தோற்றுவிக்கப்படும்.  இங்கு தூ என்ற அடைமொழியினால் - இங்குற்ற மாடத்து மணிகள் பிறப்பே தொடங்கிப் பரம பாவநங்களாய் எஞ்ஞான்றும் துவளின் ஸம்பந்தத்தைப் பெறாதன வென்பது தோற்றுவிக்கப்படும்.  (குவள் -- தோஷம்) இங்கு, முக்தர்படியையும் நித்தியர்படியையும் நெஞ்சிற் கொள்க; முக்தராகிறார் - சில நாள் வரை ஸம்ஸாரஸாகரத்தில் அழுந்திக்கிடந்து, பின்னர் அப்பற்று அறப்பெற்றோர்; (இது, துவளில் என்றபடிக்கு ஒக்கும்.) நித்தியராகிறார் - என்றும் ஸம்ஸாரஸம்பந்தமே யில்லாதாராய் அநவரதம் பரவாஸுதேவன் பதவிணையிற் பரிசரியை பண்ணும் அநந்த கருட விஷ்வக்ஸேநர்கள் போல்வார்; (இது தூ என்றபடிக்கு ஒக்கும்.)

புறம்பே நின்று துவள்கின்ற எங்கள் நெஞ்சு இருண்டு புகையாநிற்க, உள்ளே சுற்றும் விளக்கெரியும்படியாகப் பெற்ற பாக்கியமே பாக்கியம்! என்னும் வயிற்றெரிச்சல் முதலடியில் தோற்றுமாறு காண்க.

“புறம்பே நின்று ‘மணிக்கதவம் தாள் திறவாய்’ என்கிறவர்கள் உள்ளெரிகிற விளகக்கறிந்தபடி என்னென்னில்; மாணிக்கக்குப்பியிலே அகவாயிலுள்ளது நிழலிட்டுத் தோற்றுமா போலே தூமணிமாடமாகையாலே உள்ளெரிகிற விளக்குத் தோற்றுமிறே” என்ற ஆறாயிரப்படி அருளிச்செயலை இங்கே கூட்டிக்கொள்க.

“தூபம் கமழ” என்ற சொல்நயத்தால், கண்ணுக்குப் புகையாகத் தோன்றுகையன்றியே வெறும்பரிமளமேயாயிருக்குமாறு தோன்று மென்ப.  “தூபம் பமழ என்றும் ஓதுவர் : துயிலணை - படுத்துக் கொண்டவுடனே உறக்கத்துக்குப் பரவசமாக்கவல்ல மெத்தையென்க; இதனால், அப்படுக்கையின் மென்மை, குளிர்த்தி முதலிய குணங்கள் விளங்கும்.  “மென்மலர்ப் பள்ளி வெம்பள்ளியாலோ” என்றபடி நாங்கள் பள்ளியிற்சாயப் பெறாதேயிருக்க, நீ துயிலணையிற் கண்வளர்வது நமது நட்புக்கு நன்றாகப் பொருந்துமம்மா! என வெறுத்துக் கூறுகின்ற சொற்போக்கு இது என்றுணர்க.  “துயிலணைமேல உறங்கும்” என்னாதே “கண்வளரும்” என்றது - பகவத்விஷயத்தில் அவகாஹித்தவர்கள் கௌரவிக்கத் தக்கவரென்ற கருத்தை காட்டுதற்கென்க.  ஊடே வெறுத்துக் கூறுவதெல்லாம் ஆற்றாமையின் செயலத்தனையிறே. (“மாமான் மகளே) திருவாய்ப்பாடியிலே ஒருப்ரக்ருதி ஸம்பந்தம் தனக்கு உஜ்ஜீவநஹேதுவாக ஆண்டாள் ஆசைப்பட்டபடி” என்பது ஆறாயிரப்படி.

“ஊமையோ? செவிடோ? ஏன்ற வினாக்களுக்கு உட்கருத்து :- ஆர்த்தர் விஷயத்தில் இரக்கமுற்று ‘ஐயோ !’ என்றொரு வாய்ச்சொல் சொல்வதற்கும் அவகாசமில்லையோ உன் மகளுக்கு? ஆர்த்தரான எங்களுடைய கூக்குரல் செவிப்படவொண்ணாதபடி உன் மகள் உள்ளே செய்யுங் காரியம் என்னோ?

அனந்தலோ ? - கண்ணபிரானோடு நெடும்போதாக் கூடிக் களித்துப் படுக்கையில் இப்போதுதான் சாய்ந்தனளோ? ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? - உன் மகள் எங்களை உறங்கவொட்டாதவாறு போல அவளை ஆரேனும் உணரவொண்ணாதபடி மந்திரவாதஞ்செய்து கட்டுப்படுத்தினரோ? “பெய்யுமாமுகில் போல்வண்ணா! உன்றன் பேச்சுஞ் செய்கையும், எங்களை மையலேற்றி மயக்க உன்முகம் மாய மந்திரந்தான் கொலோ?” என்ற நாச்சியார் திருமொழியை இங்கு அநுஸந்திக்க.

ஏமம் என்பதை, ஹேம என்னும் வடசொல்லின் விகாரமாகக் கொள்ளில் கநகமாமான பெருந்துயிலில் மந்திரப்பட்டாளோ? என்று பொருளாம்.  ஏமம் - இரா, இன்பம், உன்மத்தம், கலக்கம், களிப்பு, காவல், சேமம், திரைச்சீலை, புதையல், பொன், மயக்கம், விபூதி.

இவர்கள் இங்ஙனே வினவக்கேட்ட தாயார், “பெண்காள்! நீங்கள் இவளது பிரகிருதியை உணர்ந்திருந்து இவளை எழுப்பவேண்டும் முறையை உணர்ந்தீர்களே; இங்ஙனே மெழுப்பினால் இவள் எழாள்.  தென்றலுஞ் சிறு துளியும் பட்டாற்கோல அவள் உகக்குந் திருநாமங்களை வாயார அநுஸந்தித்தீர்களாகில் சடக்கென உணர்ந்து வாராளோ”  என்ன; அங்ஙனுஞ் செய்தற்றதென்கிறார்கள், கடையிருண்டடிகளால்.

மாமாயன் :- அபலைகளான பெண்களைத் தன்வசப்படுத்திக் கொள்ளுதற்குச் சாதனமான பல ஆச்சரிய குண சேஷ்டிதங்களை உடையவன் என்றபடி.

மாதவன் :- இடக்கை வலக்கை அறியாத இடைச்சிகளை மாத்திரம் வசப்படுத்திக் கொண்டவனல்லன் அவன்; அல்லிமலர் மகளை இறையு மகலவொண்ணாதபடி மார்பில் அழுத்திக்கொண்டுள்ளவன் காண்மின் என்றவாறு.

வைகுந்தன் :- இங்ஙன் பெண்களை மாத்திரம் தோற்பிக்குமவனல்லன்; கண்கள் துஞ்சாமே கண்டபடியே நிற்கும் நித்திய ஸூரிகளை ஒரு நாடாகவுடையன் என்கை.  என்றென்று என்றமையால் அவைபோல்வன பல திருநாமங்கள் கூறினமை தோன்னும்.

(ஸ்வாபதேசம்). நம்மாழ்வாருக்கு அடுத்த முந்தினவரான திருமழிசைப்பிரானை யுணர்த்தும் பாசுரமிது. இதில் மாமான் மகளே! என்ற விளி ஒருவகையான தேஹஸம்பந்த்தில்  நோக்குடையது.  ஆண்டாளுக்கும் திருமழிசை யாழ்வார்க்கும் ஒரு வகையான தேஹஸம்பந்தமுண்டு : அதாவது - ஸ்ரீதேசிகன் கோதாஸ்துதியில் “கமலாமிவாந்யாம் கோதாம்” என்றும் “ஸந்த : பயோதி துஹிதுஸ் ஸஹஜாம் விதுல் த்வாம்” என்றும் அருளிச் செய்தபடியே ஆண்டாள் ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷ்மியாவஸ் “பார்க்கவீ லோகஜநநீ க்ஷ்ரஸாகரஸம்பவா” என்ற அமரகோசத்தின்படியும் இதிஹாஸ புராண வரலாற்றின் படியும் லக்ஷ்மி (ஆண்டாள்) ப்ருகு குலத்தில் தோன்றியவள்.  திருமழிசைப்பிரானும் ப்ருகு குலத்தில் தோன்றியவரென்பது சரித்திரஸித்தம்.  இத்தகைய ஸமாந குலஸம்பந்தம் இங்கு நோக்கத்தக்கது.  ரிஷி குலத்திலே பிறந்து பிரம்பன் குடியிலேயானார் அவர்.  ப்ராஹமண குலத்திலே பிறந்து கோபாலர் குலத்திலேயானாள் இவள்.  இதுவும் ஒற்றுமை நயம்.  (தூமணி மாடத்து) சிறந்த மாணிக்கக் குப்பியினுள்ளேயுள்ளது வெளியில் நிழலிட்டுத் தோன்றும்.  திருமழிசைப்பிரான் “உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே” என்று வேண்டடிக்கொண்டபடியே உள்ளிருந்த திருமால் அப்படியே வெளியிற் பொசிந்து காட்சி தந்தமையால் இவர் தூமணிமாட மென்னத் தகுதியுடையார்.  (சுற்றும் விளக்கெரிய) விளக்காவது ஞானவொளி.  “சாக்கியங் கற்றோஞ் சமண்கற்றோம் சங்கரனாராக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்,” என்றபடி இவ்வாழ்வார் ஸகல மதங்களிலும் புக்கு ஸர்வதோமுகமான ஞான விளக்கம் பெற்றவராதலால் சுற்றும் விளக்கெரிதல் இவர்க்கு அஸாதாரணம்.  “யானறிந்தவாறு - ஆரறிவார்” என்றும் “என் மதிக்கு விண்ணெல்லாமுண்டோ விலை” என்றும் இவரது பாசுரங்களினாலும் இது ஸித்தம்.  (தூபம் கமழ) சிறந்த ஞானமிருத்தல் மாத்திரம் பயன்படாது; அது நன்கு பரிமளிக்கவேண்டும்.  எம்பெருமானையன்றி வேறொரு தெய்வத்தைத் தொழாதிருத்தலே ஞானத்திற்குப் பரிமளம்.  “மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்பது இவ்வாழ்வாருடைய திருவாக்காகும்.  (துயிலணை மேல் கண்வளரும்) இவ்வாழ்வாருடைய திருக்கண் செல்வது சயனத்திருக்கோலமான எம்பெருமான்களின் மீது தான்.  கச்சி வெஃகாவிலும் திருக்குடந்தையிலுமே பெரும்பாலும் இவர் காலம் கழித்தது.  சயனத்திருப்பதிகளையே ஒரு கோர்வையாக வெடுத்துப் பாசுரம் பாடினவரும் இவ்வாழ்வார்; நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள் நாகத்தணையரங்கம் பேர் அன்பில் - நாகத்தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால், அணைப்பார் கருத்தனவான்” என்றது காண்க.  (துயிலணை மேல் கண்வளரும் மாமானுடைய மகளே!) மகள் என்றதனால் விதேயத்வம் சொன்னபடி. மகள் சொற்படி தந்தை கேட்பதும் தந்தை சொற்படி மகள் கேட்பதும் வழக்கம்.  மாமான் என்றது மஹா மஹான் என்றபடி.  துயிலணைமேல் கண்வளரும் மாமான் யதோக்தகாரி யெம்பெருமான்; அப்பெருமாள் இவ்வாழ்வார் சொற்படி கேட்டவர்; ‘கணிகண்ணன் போகின்றான் - நீயுமுயன்றன் பைந் நாகப் பாய் சுருட்டிக்கொள்’ என்றபேரது அப்படியே சுருட்டிக்கொண்டு புறப்பட்டார்; “உன்றன் பைந்நாகப்பாய் விரித்துக்கொள்” என்றபோதும்  அப்படியே.  இனி, துயிலணைமேற் கண்வளரும் மாமான் - ஆராவமுதன்; அப்பெருமாளும் “எழுந்திருந்து பேசுவாழி கேசனே” என்ற இவ்வாழ்வாரது வேண்டுகோளின்படி எழுந்திருந்தவர் என்பது ப்ரஸித்தம்.  (உன் மகள் தான் ஊமையோ) வாய்திறவாமலே ஹஸ்தசேஷ்டை முதலியவற்றால் காரியம் செய்வது ஊமைகளின் பணி.  இவ்வாழ்வாரும் யாத்திரையடைவில் பெரும்புலியூரென்னும் கிராமத்தில் ஒரு வேதியன் வீட்டுவாசல் திண்ணையில் சிறிது பொழுது எழுந்தருளியிருக்க அங்கு வேதமோதிக்கொண்டிருந்த அந்தணர்கள் நீறுபூத்த நெறுப்புப்போலுள்ள ஆழ்வாருடைய மஹிமையைத் தெரிந்துகொள்ளாமல் அவரைக் கீழ்ச்சாதியராக வெண்ணி வேதாத்யயனம் அவருடைய காதிற்படலாகாது என்று கருதி ஓத்துத் தவிர்ந்திருக்க, அக்குறிப்பை யறிந்த ஆழ்வார் அவ்விடத்தை விட்டுத் தூரத்திற் சென்று வேறோரகத்து மேடையில் வீற்றிருக்கையில் அந்த வேதியர்கள் மீண்டும் வேதமோதத் தொடங்கி, விட்ட வாக்கியம் தோன்றாது மயங்கி நிற்க, ஆழ்வார் அது கண்டு கறுப்பு தெற்களைக் கையுகிராலே இடந்துபோட, அப்பொருளுள்ள வேதவாக்கியம் அவர்கட்குத்தோன்றிற்று: அதாவது - “க்ருஷ்ணானாம் வ்ரித்றீணாம் நகநிர்பிந்நம்” என்பது.  உடனே அவர்கள் ப்ரதக்ஷ்ண ப்ரணாமாதிகளால் இவரை உபசரித்து க்ரதார்த்தராயினர் என்பது சரித்திர வரலாறு.  இங்ஙனமாக வாய்திறவாமலே, இங்கிதத்தினால் காட்டினது பற்றி ஊமையோ என்றது.  சொன்ன சொற்களைச் செவி யேற்காதவர் செவிடர்: அந்தச் செவிடும் இவரது சரிதையில ப்ரஸித்தம்: முன் சொன்ன பெரும்புலியூரில் அந்தணரடிகள் யாகஞ் செய்து கொண்டிருந்த விடத்தில் இவ்வாழ்வாரை எழுந்தருள்வித்துக்கொண்டு போய்ச் சில மஹான்கள் இவர்க்கு அக்ர மொழிகளை வர்ஷிக்க, அவற்றை இவ்வாழ்வார் செவியேற்காதிருந்தனர் என்ற வரலாறு காண்க.  (அனந்தலோ) தூக்கமோ என்றபடி, பரமைகாந்திகட்குத் தூக்கமாவது பாஹ்ய விஷயங்களிற் சிறிதும் நெஞ்சு செல்லாதிருக்கப் பெறுதலே.  “உன்னைத் தெரித்தெழுதி வர்சித்துங் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினென் போது”  என்றும் “தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாமமேத்தப் பொழுதெனக்கு மற்றதுவே போதும்” என்று மருளிச் செய்யு மிவ்வாழ்வார்க்கு இந்த நிலைமையே அனந்தலாகும்.  (ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ) மற்றையாழ்வார்களிற் காட்டிலும் இவ்வாழ்வாருடைய பரமைகாந்தித்வம் மிக விலக்ஷணம் என்பது இங்கு அறியத்தக்கது.  “பிதிரு மனமிலேன் பிஞ்ஞகன்றன்னோடெதிர்வன், அவனெனக்கு நேரான்” என்னும் படியான திருநாவீறு இவர்க்கே அஸாதாரணமன்றோ! இது தான் பெருந்துயில், எம்பெருமானை யொழிந்த மற்றையோரைக் கண்கொண்டு பாராமையிற் பெருமை.

(மாமாயன்) “மாயமென்ன மாயமே” என்றும், “மாயமாய மாக்கிகனாய் உன்மாயமுற்று மாயமே” என்றும் பலகாலும் எம்பெருமானது மாமாயங்களைப் பேசுகிறவர் இவ்வாழ்வார்.  (மாதவன்) “மாதவனை ஏத்தாதார் ஈனவரே” என்றவரும் இவ்வாழ்வாரே, “திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு” என்றதுங் காணலாம்.  (வைகுந்தன்) “வைகுந்தச் செல்வனார் சேவடிமேல் பாட்டு” என்றவர் இவ்வாழ்வாரே.  வைகுந்தனது சேவடிமேல் தாம் பாசுரம் பாடினவராகச் சொல்லிக்கொண்டார்.  ஆகவே, மாமாயன், மாதவன், வைகுந்தனென்ற திருநாமங்கள் இவ்வாழ்வார்க்குப் பரமபோக்யங்களென்பது ஸூசிதம்.

English Translation

O cousin sleeping in a sparkling hall on a soft bed with lamps glowing and incense wafting all around! Pray unlatch your belled door. My good aunt, pray wake your daughter. Is she mute, or deaf, or fatigued or a spell been cast on her? Let us chant “Wonder Lord!”, “Madhava!”, “Vaikunta dweller!”, and many such names! Come, join us!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain