ஏழாந் திருமொழி

(1208)

கள்வன்கொல் யானறியேன் கரியானொரு காளைவந்து,

வள்ளிமருங் குலென்றன் மடமானினைப் போதவென்று,

வெள்ளிவளைக் கைப்பற்றப் பெற்றதாயரை விட்டகன்று,

அள்ளலம் பூங்கழனி யணியாலி புகுவர்க்கொலோ.

விளக்க உரை

(1209)

பண்டிவ னாயன்நங்காய். படிறன்புகுந்து, என்மகள்தன்

தொண்டையஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை யுகந்து,அவன்பின்

கெண்டையொண் கண்மிளிரக் கிளிபோல்மிழற் றிநடந்து,

வண்டமர் கானல்மல்கும் வயலாலி புகுவர்க்கொலோ.

விளக்க உரை

(1210)

அஞ்சுவன் வெஞ்சொல்நங்காய் அரக்கர்க்குலப் பாவைதன்னை,

வெஞ்சின மூக்கரிந்த விறலோந்திறங் கேட்கில்,மெய்யே

பஞ்சியல் மெல்லடியெம் பணைத்தோளி பரக்கழிந்து,

வஞ்சியந் தண்பணைசூழ் வயலாலி புகுவர்க்கொலோ.

விளக்க உரை

(1211)

ஏதுஅவன் தொல்பிறப்பு இளைய வன்வளை யூதி,

மன்னர் தூதுவ னாயவனூர் சொலுவீர்கள்! சொலீரறியேன்,

மாதவன் தந்துணையா நடந்தாள்தடஞ் சூழ்புறவில்,

போதுவண் டாடுசெம்மல் புனலாலி புகுவர்க்கொலோ.

விளக்க உரை

(1212)

தாயெனை யென்றிரங்காள் தடந்தோளி தனக்கமைந்த,

மாயனை மாதவனை மதித்தென்னை யகன்றைவள்,

வேயன தோள்விசிறிப் பெடையன்ன மெனநடந்து,

போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர்க்கொலோ.

விளக்க உரை

(1213)

எந்துணை யென்றெடுத்தேற் கிறையேனு மிரங்கிற்றிலள்,

தன்துணை யாயவென்றன் தனிமைக்கு மிரங்கிற்றிலள்,

வன்துணை வானவர்க்காய் வரஞ்செற்றரங் கத்துறையும்,

இந்துணை வன்னொடும்போ யெழிலாலி புகுவர்க்கொலோ.

விளக்க உரை

(1214)

அன்னையு மத்தனுமென் றடியோமுக் கிரங்கிற்றிலள்,

பின்னைதன் காதலன்றன் பெருந்தோள்நலம் பேணினளால்,

மின்னையும் வஞ்சியையும் வென்றிலங்கு மிடையாள்நடந்து,

புன்னையும் அன்னமும்சூழ் புனலாலி புகுவர்க்கொலோ.

விளக்க உரை

(1215)

முற்றிலும் பைங்கிளியும் பந்துமூசலும் பேசுகின்ற,

சிற்றில்மென் பூவையும்விட் டகன்றசெழுங் கோதைதன்னை,

பெற்றிலேன் முற்றிழையைப் பிறப்பிலிபின் னேநடந்து,

மற்றெல்லாம் கைதொழப்போய் வயலாலி புகுவர்க்கொலோ.

விளக்க உரை

(1216)

காவியங் கண்ணியெண்ணில் கடிமாமலர்ப் பாவையொப்பாள்,

பாவியேன் பெற்றமையால் பணைத்தோளி பரக்கழிந்து,

தூவிசே ரன்னமன்ன நடையாள்நெடு மாலொடும்போய்,

வாவியந் தண்பணைசூழ் வயலாலி புகுவர்க்கொலோ.

விளக்க உரை

(1217)

தாய்மனம் நின்றிரங்கத் தனியேநெடு மால்துணையா,

போயின பூங்கொடியாள் புனலாலி புகுவரென்று,

காய்சின வேல்கலிய னொலிசெய்தமிழ் மாலைபத்தும்,

மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain