(3877)

ஊதுமத்தீங்குழற்கேயுய்யேன் நானது மொழிந்திடையிடைத் தன் செய்கோலத்

தூதுசெய்கண்கள் கொண்டொன்று பேசித் தூமெழியிசைகள் கொண்டொன்றுநோக்கி

பேதுறுமுகம்செய்துநொந்துநொந்து பேதைநெஞ்சற வறப்பாடும்பாட்டை

யாதுமொன்றறிகிலமம்மவம்ம மாலையும் வந்து மாயன்வாரான்.

 

பதவுரை

இடை இடை அது மொழிந்து

இடையிடையே அபிப்ராய கர்பங்களான பாசுரங்களையிட்டு

ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான்

ஊதுகிற இனிய அக்குழலோசைக்கே நான் முடிந்து போகின்றேன்.

தன் செய் கோலம்

தனக்குத்தானே செய்யப்பட்ட  கோலத்தையுடைத்தாய்

தூதுசெய் கண்கள் கொண்டு

தூது போகின்ற கண்களைக் கொண்டு

ஒன்று பேசி

தன் கருத்தை வெளியிட்டு

தூமொழி இசைகள் கொண்டு

இனிய பாசுரங்களையுடைய இசைகளைக் கொண்டு

ஒன்று நோக்கி

சுடாக்ஷித்து

பேதுறு முகம் செய்து

தன்னீடுபாடு தன் முகத்திலே தோன்றும்படி காட்டி

நொந்து நொந்து

அபலைகள் என்படுகிறார்களோ வென்று மிகவும் நொந்து

பேதை நெஞ்சறவு அற

பெண்களினுடைய ஊடல் அறும்படியாக

பாடும் பாட்டை

பாடுகிற பாட்டை

ஆதும் ஒன்று அறிகிலம்

சிறிதும் அறியகில்லோம்

அம்ம அம்ம

ஐயோ

மாலையும் வந்தது

மாலைப்பொழுதும் வந்திட்டது

மாயன் வாரான்

கண்ணன் வந்திலன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– நலிவதில் மற்றவையெல்லாம் ஒருதட்டாயும் அவனுடைய வேணுகானம் மாத்திரம் ஒருதட்டாயுமிருத்தலால்  "ஊதுமத்தீங்குழற்கே உய்யேன் நான்" என்று மீண்டுஞ் சொல்லுகிறது.  அதிலும் ஸாதாரணமாகக் குழலூதுகையில்லையே ;  'பிரிந்தேன், ஆற்றேன்' என்றாப்போலே சில நிசபாஷணங்களை இடையிடையே சொல்லியாயிற்றுப் பாடுவது.  கண்ணாலே காண்பதும் இவைகளாலே பாடுவதும் லௌகிகர் படியாயிருக்க, இவனுடைய படிலோக விலக்ஷணமாயிரா நின்றது !; கண்களைத் தூதுவிட்டு அவற்றாலே பேசுவதும், தூமொழியிசைகளைக் கொண்டு நோக்குவது மாயிற்று இவன்படி.  பேச்சில் என்ன அபிப்ராயம் வெளிவருமோ அது கண்பார்வையிலேயே வெளிவருகின்றதென்றும், கண்ணாலே நோக்கி யீடுபடுத்துமது இசைப்பாட்டுகளினாலேயே யாகின்றதென்றும் சொன்னவாறு, பேதுறுமுகஞ்செய்து= முதத்தைக் கண்டவாறே பைத்தியம் பிடிக்கும்படியாகச் செய்து என்றபடி.  நொந்து நொந்து= நம்மிடத்திலீடுபட்ட அவலைகள் என்ன பாடுபடுவார்களோ!  என்று தானும் நோவுபடாமலிருக்க முடியாதே. சைதந்யமுள்ளவிடத்தே இந்த நோவுபாடு.  தவிரலொண்ணாதே.  பேதை நெஞ்சறவு அற=பேதைகள் 'இனி அவனோடு கூடுவதில்லை' என்று ஊடல் கொண்டிருப்பார்களே, அவ்வூடலும் திரும்படியாக வாயிற்று கண்ணன் பாடுவது.  அது நலிகிற நலிவு சொல்லுந்தரமன்று, மாலைப்பொழுதிலே அவன் வந்திடுவனென்று ஒரு நசையிருந்தது; ஆனால், மாலையும் வந்தது மாயன் வாரான் என்றலற்றுகிறாள்.

இங்கு மாயன் என்தன் கருத்தை நம்பிள்ளை விவரித்தருளாகிறார் காணமின்;– "தன்னைப் பிரிந்தார் லஜ்ஜிக்கும்படி தானே இழவாளனாய் வந்து கால் பிடிக்கும் ஆச்சர்ய பூதன்"

 

English Translation

The flute melody he plays to the Gopis is alone enough to kill me.  His beautiful red eyes, darling messages between the words of his song, then making a sad face and pretending to be hurt, -alas, alas!  These are more than I can bear, evening has come, but not my Lord

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain