(3832)

உயிர்க்கதுகாலனென்று உம்மையானிரந்தேற்கு நீர்

குயில்பைதல்காள் கண்ணன்நாமமேகுழறிக் கொன்றீர்

தயிர்ப்பழஞ்சோற்றோடு பாலடிசிலும் தந்து சொல்

பயிற்றியநல்வளமூட்டினீர் பண்புடையீரே.

 

பதவுரை

குயீல் பைதல்காள்

குயிற் குட்டிகளே

அது உயிர்க்கு காலன் என்று

(கண்ணனுடைய நாமமாகிற) அது என்னுயிர்க்கு மிருத்யுவென்று சொல்லி

உம்மை யான் இரந்தேற்கு

(அந்த க்ருஷ்ண நாமத்தைச் சொல்ல வேண்டாவென்) உங்களை வேண்டிக்கொண்ட என்னை

கண்ணன் நாமமே குழறி கொன்றீர்

அந்தக் கண்ணன்நாமங்களையே அநக்ஷரமதுரமாகச் சொல்லிக் கொலை செய்கிறீர்கள்

தயிர் பழஞ்

தயிரையும் பழைய சோற்றையும் சோற்றோடு

பால் அடிசிலும் தந்து

பாலையும் செஞ்சோற்றையு மூட்டி

சொல் பயிற்றிய

அவனது திருநாமங்களாகிற சொற்களை கற்பித்தத்ற்குக் கைம்மாறாக

நல் வளம் ஊட்டீவீர்

(இப்படி யென்னைக் கொலை செய்கையாகிற) நல்ல காரியம் செய்தீர்கள்

பண்பு உடையீரே

நீங்கள் நல்ல தர்மிஷ்டர்களே

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– இந்த நிலைமையில் பகவந்நாம ஸம்கீர்த்தனமும் அஸஹயமாயிருக்கிறபடியை அந்யாபதேசத்தாலே தெரிவிக்கிற பாசுரமிது. ஆழ்வார் தாம் வளர்த்தத குயில்களுக்கு ராமநாமங்களையும் கிருஷ்ண நாமங்களையும் கற்பித்து வைத்திருப்பதுண்டு;  ராமநாமம் ம்ருத ஸஞ்ஜீவனமாகையாலே, உயிர் தொலையும்படியாயிருக்கும் நிலைமையிலே ராமநாமங்களையே சொல்ல வேண்டு மென்றும், கிருஷ்ண நாம ப்ரஸ்தாவமும் செய்யலாகாதென்றும் திட்டம் செய்திருந்தது முண்டு.  இப்போது உயிர் தொலையுந்தருணமாகையாலே, ராமநாமத்தையே சொல்லுங்கள், கிருஷ்ண நாமத்தைச் சொல்லவேண்டா வென்று விசேஷித்துக் கட்டளை யிட்டிருந்தும் அவை க்ருஷ்ண நாமத்தையே சொல்ல, ஓ படுகொலை! படு கொலை! படுகொலை! என்கிறாள் பாரங்குச நாயகி.

குயிற் பைதல்காள்! உயிர்க்கு அது காலனென்று உம்மை யானிரந்தேற்கு=குயிற் குட்டீகளே!  அந்த க்ருஷ்ண நாமமானது ராமநாமம்போலே ம்ருதஸஞ்ஜீவநியாய்ப்போனவுயிரை மீட்டுக் கொண்டு வந்து கொடுக்க வல்லதன்று;  வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பேயாக வளர்த்தாளே (நாச்சியார் திருமொழி12–7) என்கிறபடியே இருக்கிறயுயிரையும் கொண்டுபோய் முடிக்க வல்லது;  அப்படிப்பட்ட நாமத்தை இப்போது என் செவியிலே வீழ்த்த வேண்டா வென்று நான் பலகாலம் பிரார்த்தித்திருந்தும் அந்தோ!  சரணாகத காதுகரானீர்களே!  கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்–நெஞ்சைப் புண்படுத்தி வைக்கும் கிருஷ்ண நாமத்தையே அவ்யக்தமதுரமாகச் சொல்லிச் சொல்லி என்னைக் கொலை செய்கீறீர்களே!  ம்ருதஸஞ்ஜீவநியான ராம நாமங்களையும் சேர்த்துச் சொன்னாலாகாதோ? உபகாரம் பண்ணினார்க்கு இப்படி அபகாரம் பண்ணுகை நீதியோ? என்ன; என்ன வுபகாரம் நீ பண்ணிற்று? என்று அவைகேட்க;

தயிர் பழஞ்சோற்றோடு பாலடிசிலும் தந்து சொல்பயிற்றிய நல்வளம் என்கிறாள் பஞ்சாமிருதமளித்தன்றோ உங்களை நான் வளர்த்தது.  தயிரென்ன பழமென்ன சோறென்ன பாலென்ன அடிசிலென்ன ஆகிய இவ்வைந்தையும் தந்து என்பதாகக் கொள்ளலாம்;  சோறு என்றாலும் அடிசில் என்றாலும் ஒன்றேயாயிருக்க இரண்டுபடச் சொல்லுவானென்? என்னில், வேறுஞ்சோற்றைச் சோறென்கிறது;  விசேஷ மிச்ரமான சோற்றை அடிசிலென்கிறது–என்று கொள்ளலாம். இப்படி கொள்ளுமளவில் ஐந்து பதார்த்தங்கள் தேறுகையாலே பஞ்சாமிருதம் போன்ற அர்த்த பஞ்சகத்தையுமுபதேசித்து சிஷ்யர்களைப் போஷித்தமை ஸ்வாபதேசார்த்தமாக விளங்கும், அன்றி, பழஞ்சோறு என்றவிடத்து பழமும் சோறும் என்று இரண்டாகக் கொள்ளாமல் பழைய சோறு என்று ஒன்றோயகக் கொள்வதுதான் முன்னோர்களின் வியாக்கியானங்களிலுள்ளது. "தயிரும் பழஞ்சோறும் பாலும் செஞ்சோறும் அவ்வவ காலங்களிலே தந்து" என்பது ஈடு.  இவையிட்டு நான் உங்களை வளர்த்துப் போந்ததற்கு நல்ல கைம்மாறு செய்தீர்கள்! இவ்வளவு இரக்கங்கெட்டவர்களா நீங்கள் ! என்றதாயிற்று.

 

English Translation

O Foolish koels! I pleaded with you not to sing my Krishna's names.  Alas, you have killed me, I gave you cruds and rice and sweet pudding, and taught you to speak. O Benevolent birds! Good reward for my labours

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain