பத்தாந் திருமொழி

(1138)

மஞ்சாடு வரையேழும் கடல்க ளேழும் வானகமும் மண்ணகமும் மற்று மெல்லாம்,

எஞ்சாமல் வயிற்றடக்கி யாலின் மேலோர் இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் றன்னை,

துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூயநான் மறையாளர் சோமுச் செய்ய,

செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

விளக்க உரை

(1139)

கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம் தீபம்கொண் டமரர்த்தொழப் பணங்கொள்பாம்பில்,

சந்தணிமென் முலைமலராள் தரணி மங்கை தாமிருவ ரடிவருடும் தன்மை யானை,

வந்தனைசெய்து இசையேழா றங்கம் ஐந்து வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்,

சிந்தனைசெய் திருபொழுது மொன்றும் செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன்நானே.

விளக்க உரை

(1140)

கொழுந்தலரு மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக் கோள்முதலை வாளெயிற்றுக் கொண்டற்கெள்கி,

அழுந்தியமா களிற்றினுக்கன் றாழி யேந்தி அந்தரமே வரத்தோன்றி யருள்செய் தானை,

எழுந்தமலர்க் கருநீல மிருந்தில் காட்ட இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன்காட்ட,

செழுந்தடநீர்க் கமலம்தீ விகைபோல் காட்டும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

விளக்க உரை

(1141)

தாங்கரும்போர் மாலிபடப் பறவை யூர்ந்து தராதலத்தோர் குறைமுடித்த தன்மையானை,

ஆங்கரும்பிக் கண்ணீர்சோர்ந் தன்பு கூரும் அடியவர்கட் காரமுத மானான் றன்னை,

கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக் குழாவரிவண் டிசைபாடும் பாடல் கேட்டு

தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

விளக்க உரை

(1142)

கறைவளர்வேல் கரன்முதலாக் கவந்தன் வாலி கணையொன்றி நால்மடிய இலங்கைதன்னுள்,

பிறையெயிற்று வாளரக்கர் சேனை யெல்லாம் பெருந்தகையோ டுடந்துணித்த பெம்மான்றன்னை,

மறைவளரப் புகழ்வளர மாடந் தோறும் மண்டபமொண் தொளியனைத்தும் வாரமோத,

சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

விளக்க உரை

(1143)

உறியார்ந்த நறுவெண்ணெ யொளியால் சென்றங் குண்டானைக் கண்டாய்ச்சி யுரலோ டார்க்க,

தறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள் பனிமல்கும் தன்மை யானை,

வெறியார்ந்த மலர்மகள்நா மங்கை யோடு, வியன்கலையெண் தோளினாள் விளங்கு, செல்வச்

செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

விளக்க உரை

(1144)

இருங்கைம்மா கரிமுனிந்து பரியைக் கீறி இனவிடைக ளேழடர்த்து மருதம் சாய்த்து,

வரும்சகட மிறவுதைத்து மல்லை யட்டு வஞ்சகஞ்செய் கஞ்சனுக்கு நஞ்சா னானை,

கருங்கமுகு பசும்பாளை வெண்முத் தீன்று காயெல்லாம் மரகதமாய்ப் பவளங் காட்ட,

செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள் சோலைத் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

விளக்க உரை

(1145)

பாரேறு பெரும்பாரந் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி, பார்த்தன் செல்வத்

தேரேறு சாரதியா யெதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறலழியச் செற்றான்றன்னை,

போரேறொன் றுடையானு மளகைக் கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்து மூர்ப்போல்,

சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

விளக்க உரை

(1146)

தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற,

காவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட் கருள்புரியுங் கருத்தி னானை,

சேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை செம்பொன்செய் திருவுருவ மானான் றன்னை,

தீவடிவின் சிவனயனே போல்வார் மன்னு திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

விளக்க உரை

(1147)

வாரணங்கொ ளிடர்க்கடிந்த மாலை நீல மரதகத்தை மழைமுகிலே போல்வான்றன்னை,

சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன், என்று

வாரணங்கு முலைமடவார் மங்கை வேந்தன்வாட்கலிய னொலியைந்து மைந்தும் வல்லார்,

காரணங்க லாலுகங் கலந்தங்க் கேத்தக் கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain