(3711)

திகழவென் சிந்தை யுள்ளிருந் தானைச் செழுநிலத் தேவர்நான் மறையோர்,

திசைகைகூப்பி யேத்தும் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றங்கரை யானை,

புகர்கொள்வா னவர்கள் புகலிடந் தன்னை அசுரர்வன் கையர்வெங் கூற்றை,

புகழுமா றறியேன் பொருந்துமூ வுலகும் படைப்பொடு கெடுப்புக்காப் பவனே.

 

பதவுரை

என் சிந்தையுள் திகழ இருந்தானை

-

என்னெஞ்சினுள்ளே விளங்கிக் கொண்டிருப்பவனும்

நால் மறார் செழு நிலம் தேவர்

-

நான்கு வேதங்களையு மோதின விலக்ஷண ப்ராஹமணர்கள்

திசை கை கூப்பி ஏத்தும் திருச் செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரை யானை

-

திசைகள் தோறும் நின்று கைகூப்பித் துதிக்கும்படியான திருச்சிற்றாற்றுப் பதியிலுள்ளவனும்

புகர் கொள்வானவர்கள் புகல் இடம் தன்னை

-

சிறந்த தேவர்களுக்கும் புகலிடமாயிருப்பவனும்

வன்கைய் அசுரர் வெம் கூற்றை

-

மிடுக்கரான அசுரர்களுக்கு வெவ்விய யமன் போன்றவனும்

பொருந்து மூ உலகும் படைப்போடு கெடுப்பு காப்பு அவன்

-

தன்னோடு பொருந்திய மூவுலகத்தினுடையவும் ஸ்ருஷ்டி ப்ரளய ரக்ஷணங்களுக்குக் கடவனுமான பெருமானை

புகழும் ஆறு அறியேன்

-

புகழும் விதம் இன்னதென்ற்று அறிகின்றிலேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்படி யென்னெஞ்சிலே திகழாநிற்கிற திருச்சிற்றாற்றெம்பெருமானைப் புகழும்படியறிகின்றிலே னென்கிறார். செழுநிலத்தேவர் நான்மறையோர் திசை கைகூப்பி யேத்தும் –நாலு வகைப்பட்ட வேதங்களையோதி நிபுணர்களாய் நிலத் தேவர்களாயிருக்குமவர்கள் திக்குக்கள்தோறும் நின்று கைகூப்பியேத்தும்படியான திருச்சிற்றாற்றிலே வர்த்திக்கிறவனை யென்றது –உகவாதார்க்குக் கிட்டவொண்ணாதபடியாய் உகந்தவர்களே புடைசூழவிருக்கிறபடியைச் சொன்னவாறு.

புகர்கொள்வானவர்கள் புகலிடந்தன்னை –வானவர்க்குப் புகராவது-தங்களை வந்து பணிகின்றவர்களுக்குத் தாங்கள் புகலாயிருக்கையாம், அப்படிப்பட்டவர்களுக்கும் ஆபத்து வந்தால் அவர்களுக்குப் புகலிடமாயிருப்பவனெம்பெருமான். * வேதாபஹாரகுருபாதகதைத்ய பீடாத்யாபத் விமோசநம் பண்ணிக் கொடுப்பார் இவனை யொழிய வேறொருவருகளுக்கு மிருத்யுவாயிருப்பவன் எம்பெருமான். கூற்றை என்றால் போராதோ? “வெங்கூற்றை“ யென்னவேணுமோ? யமன் வெவ்வியனாகவல்லாமல் ஸாதுவாகமிருப்பனோவென்று சங்கை தோன்றும், இதற்கு நம்பிள்ளையருளிச் செய்வது பாரீர் –“அந்தகன் தண்ணீரென்னும்படி வெவ்விய கூற்றமாயுள்ளவனை“ என்று. அசுரர்களை யழிக்கும் விஷயத்தில் யமனுடைய  வெம்மையிற் காட்டில் பன் மடங்கு அதிகமான வெம்மையை யுடையவன் என்றவாறு. இப்படிப்பட்ட எம்பெருமானைப் புகழுமாற்றியேன் – நான் புகழ்ந்து அப்பெருமானுக்கு ஆகவேண்டுவதொன்றுமில்லை, என் குறை தீரப் புகழவேண்டுவதுண்டே அங்ஙனே புகழும் பரிசு அறிகின்றிலேன், புகழாதொழியவும் மாட்டுகிறிலேன், பின்னை என் செய்வதென்ன, பொருந்து மூவுலகும் படைப்பொடு கெடுப்புக் காப்பவனே – தனக்கு விதேயமான ஸகல லோகங்கைளினுடையவும் ஸ்ருஷ்டி முதலானவற்றைப் பண்ணுமவனென்று திரறச் சொல்லுமத்தனை, பிரித்து வகையிட்டுச் சொல்லப்புகுந்தால் சொல்லிமுடிக்கப் போகாதென்றப்படி.

 

English Translation

The Lord in my thoughts resides in Tirucchengunrur, worshipped by sages and celestials.  He is the refuge of devotees.  He gives death to the Asuras.  I know not how to praise him.  He is the creator, protector, and the destroyer of the three worlds

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain