(3704)

வார்கடா அருவி யானைமா மலையின் மருப்பி ணைக் குவடிறுத் துருட்டி,

ஊர்கொள்திண் பாகன் உயிர்செகுத் தரங்கின் மல்லரைக் கொன்றுசூழ் பரண்மேல்,

போர்கடா வரசர் புறக்கிட மாட மீமசைக் கஞ்சனைத் தகர்த்த,

சீர்கொள்சிற் றாயன் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றெங்கள்செல் சார்வே.

 

பதவுரை

வார் கடா அருவி

-

பாய்கின்ற மதநீராகிற அருளிப் பெருக்கையடைய

யானை மா மலையின்

-

குவலயாபீட யானையாகிற பெரிய மலையினுடைய

மருப்பு

-

இரண்டு தந்தங்களாகிற

இணை குவடு

-

இரண்டு சிகரங்களை

இறுத்து

-

முறித்து

உருட்டி

-

(யானையை) முடித்தொழித்து

ஊர் கொள் திண்பாகன் உயர் செகுத்து

-

யானையை நடத்த வல்ல சதிருடையனான பாகனது உயிரையும் முடித்து

அரங்கில்

-

அரண்மனை வாசலில்

மல்லரை கொன்று

-

(சாணூர முஷ்டிக) மல்லர்களையும் தொலைத்திட்டு

சூழ் பரண் மேல் போர் கடாவு அரசர் புறக்கிட

-

சுற்றுமுண்டான மஞ்சத்தின் மேலே நின்ற ரணவீரர்களான அரசர்கள் முதுகு காட்டியோடும்படியாகப் பண்ணி

மாடம் மீமிசை

-

மாடத்தின் மேல் நிலத்திலேயிருந்த

கஞ்சனை

-

கம்ஸனை

தகர்த்த

-

தொலைத்திட்ட

சீர் கொள் சிறு ஆயன்

-

வீர ஸ்ரீயையுடைய கோபாலகிருஷ்ணன் எழுந்தருளியிருக்குமிடமான

திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு

-

திருச்செங்குன்றூர்த்திருச் திருச்சிற்றாறென்கிற திருப்பதியானது

எங்கள் செல் சார்வு

-

எங்களுக்குச் சென்று சேரும் புகலிடமாகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- குவலயாபீட வதம் மல்ல நிரஸநம் முதலான வீரச் செயல்களைச் செய்த சீர் கொள்சிற்றாய னெழுந்தருளியிருக்குமிடமான திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாற்றுப்பதி எமக்கு நிர்ப்பயமான புகலிடமென்கிறார். வில்விழவென்கிற வியாஜத்தினால் அக்ரூரணையிட்டுக் கம்ஸனால் திருவாய்ப்பாடியினின்று மதுரைக்கு வரவழைக்கப்பட்ட பலராமஸமேதனான கண்ணபிரான் குவலயாபீட ஸம்ஹாரம் தொடங்கிக் கம்ஸவதமளவாகச் செய்த பராக்ரமச் செயல் மூன்றடிகளால் கம்பீரமாகப் பேசப்படுகிறது. எம்பெருமான் ஆழ்வார்க்குக் காட்டின வீரம் பாசுரத்திலும் ஏறிப் பாய்ந்துவிட்டதுபோலும். குவலயாபீடயானை கண்ணனை முடிப்பதற்காக அரண்மனைவாசலில் மதமூட்டி நிறுத்தப்பட்டிருந்தது, அதனை அநாயாஸேந முடித்துப் பாகனையும் உயிர்மாய்த்தான் கண்ணபிரான். அந்த யானையை ஒரு மலையாக ரூபிக்கிறாராழ்வார், மலைக்கு அருவிப் பெருக்கு இருக்குமே, அப்படியே யானைக்கு மதநீர்ப்பெருக்கு உள்ளதென்கிறார், மலைக்குக் குவடுகளிருப்பதுபோல யானைக்கு மருப்பிணையுள்ளதென்கிறார்.

உருட்டியென்று அவ்யானையை முடித்தமை சொன்னபின்பும் “ஊர் கொள் திண்பாகன்“ என்று அந்த யானையைப் பாகன நடத்துகிறானாகச் சொன்னவது கூடுமாவென்ன, இதற்கு நம்பிள்ளையருளிச் செய்கிறார் “உயிருள்ள பதார்த்தத்தை நடத்துமாபோலே நடத்த வல்லனாயிற்று சிக்ஷாபலத்தாலே“ என்று. அந்தப் பாகனையும் முடித்து, சாணூரமுஷ்டிகரென்னும் மல்லர்களையும் கொன்று, அதன்பிறகு மஞ்சத்தின்மீது கம்ஸனுக்குக் காவலாக இருந்த அரசர்களையும் முதுகுகாட்டி யோடப் புடைத்து, உயர்ந்த மாடத்திலே யிருந்த கம்ஸனையும் முடிசிதற மயிரைப்பிடித்துக் கீழேவிழ விட்டு மேலேபாய்ந்து அவனை முடித்திட்ட வீர ஸ்ரீயையுடைய கோபாலகிருஷ்ணன் எழுந்தருளி யிருக்குமிடமான திருச்செங்குன்னூர்த் திருச்சிற்றாறு நாங்கள் அச்சங்கெட்டு ஆச்ரயிக்குமிடம்.

 

English Translation

The mountain-like tusker rolled, overflowing with strong drink, The creeping mahout was killed, the display-wrestlers routed.  The petrified kings on balconies turned and fled; kamsa's head was crushed, when our Lord of Tirucchengunrur came as the Victorious cowherd lad!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain