(3618)

காத்தவெங் கூத்தாவோ! மலையேந்திக் கன்மாரி தன்னை,

பூத்தண் டுழாய்முடி யாய்! புனைகொன்றையஞ் செஞ்சடையாய்,

வாய்த்தவென் நான்முகனே! வந்தென் னாருயிர் நீயானால்,

ஏத்தருங் கீர்த்தியினாய்! உன்னை யெங்குத் தலைப்பெய்வனே?

 

பதவுரை

மலை ஏந்தி கல்மாரி தன்னை காத்த எம்கூத்தா ஓ

-

கோவர்த்தனமலையைத் தாங்கிநின்று கல் மழையைத் தடுத்தவனும் கூத்தில் வல்லவனுமான என்பெருமானே!

பூ தண் துழாய் முடியாய்

-

அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைத் திருமுடியிலுடையவனே!

புனை கொன்றை அம் செம்சடையாய்

-

சிவந்த ஜடையிலே கொன்றைமாலையைப் புனைந்துள்ள சிவனுக்கு அந்தர்யாமியே!

வாய்த்த என் நான்முகனே

-

பிரமனுக்கு அந்தர் யாமியே!

ஏத்த அருகீர்த்தியினாய்

-

துதித்துத் தலைக்கட்ட முடியாத புகழையுடையவனை!

நீ வந்து என் ஆர் உயிர் ஆனால்

-

நீயாகவே பரகதஸ்வீகாரமாக வந்து எனக்குத் தாரகனாக ஆனாயான பின்பு

உன்னை எங்கு தலைப்பெய்வன்

-

உன்னை எங்கே கிட்டியநுபவிப்பேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

(காத்தவெங்கூத்தாவோ.) “குண்டுறடுத்தாநிரை மேய்த்து அவை காத்த வெங்கூத்தாவோ” என்று கோவர்த்தந உத்தரண வ்ருத்தாந்தத்தைக் கூறிக் கூவின ஆழ்வார் மீண்டுமிப்பாட்டிலும் “காத்தவெங்கூத்தாவோ மலையேந்திக் கன்மாரி தன்னை: என்று அது தன்னையே கூறிக் கூவுவது அந்தாதித்தொடை யமைதிக்காகவன்று; ஈடுபாட்டின் மிகுதியாலாம். “மலையேந்திக் கல்மாரிதன்னை” என்ற சொல் தொடையை நோக்கி நம்பிள்ளையருளிச் செய்வது பாரீர் -‘கல்லாலே வர்ஷிக்கையாலே மலையை யெடுத்தப் பரிஹரித்தான்; நீராலே வர்ஷித்தானாகில் கடலையெடுத்து நோக்குங்காணும்” என்று. இதனால், இன்னதைக்கொண்டு இன்ன காரியஞ் செய்வதென்கிற நியதி என்பெருமானுக்கில்லை யென்பதும் ஸர்வசக்தனென்பதும் விளக்கப்பட்டதாம். கல்வாஷத்திலகப்பட்டாரையோ ரக்ஷிக்கலாவது? பஹீதா ஸந்தததுக்க வர்ஷிணி என்கிற ஸம்ஸாரதுக்கவர்ஷத்தில் அகப்பட்டாரை ரக்ஷிக்கலாவது? என்னுடைய ரக்ஷிக்கலாகாதோ? என்னுடைய ரக்ஷ்ணத்துக்காகவும் ஏதேனும் மலையெடுக்க வேணுமோ? மலையெடுத்த தோளைக் காட்டினால் போதுமேயடியேனுக்கு.

“பூத்தண்டுழாய் முடியாய்! புனைகொன்றையஞ் செஞ்சடையாய்! வாய்த்த வென் நான்முகனே!” என்ற விளிகள் மூன்றினாலும் ஸ ப்ரஹமாஸ சிவ: என்ற உபநிஷத்தை அநுவதித்தபடி. “முனியே நான்முகனே முக்கண்ணப்பா” என்றும் “அரியை அயனை யரனை” என்று மருளிச்செய்பவரன்றே இவ்வாழ்வார் த்ரிமூர்த்திகளின் ஸாம்யவாதமோ ஜக்யவாதமோ ஆழ்வார்க்கு விவக்ஷிதம்போலும் என்று சிலர் நினைப்பது சிறிதும் பொருந்தாது ஏனெனில். இவ்வாழ்வார்தாமே பெரிய திரு வந்தாதியில் முதலாந்திருவுருவம் மூன்றென்பர். ஒன்றே முதலாகும் மூன்றுக்கு மென்பர் முதல்வா! நிகரிலகுகாருருவா! நின்னகத்ததன்றே, புகரிலகு தாமரையின் பூ என்ற பாசுரத்தினால் ஸீவ்யக்தமாகப் பரதத்வ நிர்ணயம் செய்தருளியுள்ளாராதலால். (அப்பாசுரத்தி திவ்யார்த்ததீபிகையுரையில் விரிவு காண்க.) ஸகலகாரணபூதனான பெருமானே! பிரமன் விஷ்ணு சிவன்  என்கிற மூன்று மூர்த்திகளுக்கும் வேறொரு தத்துவம் தலையாயிருக்கு மென்று மற்றுஞ் சிலர்சொல்லுவர்கள்; உன்னிடத்திலுள்ளதான திருநாபிக்கமலமே உனது பரத்வத்தை வெளியிட வல்லதாயிருக்கும்போது இந்த வாதங்கள் எங்ஙனே பொருந்தும்? என்பது மேற்குறித்த பாசுரத்தின் தாற்பரிய மென்றுணர்க.

வந்து என்னாருயிர் நீ—எனக்கு அபேவீக்ஷ்யின்றியே யிருக்க நீயே வந்து என்னை விஷயீகரித்து உன்னாலல்லது செல்லாதபடி பண்ணி எனக்குத் தாரகனாயிருப்பவனே! என்றபடி. உன்னையெங்குத் தலைப்பெய்வனே!—நீ உயிராய் நான் உடலாயிருக்கும்போது, உடல்தான் உயிரை வந்து கிட்டுவதென்று ஒன்றுண்டோ! நீயே பெறுவித்துக் கொள்ளவேணுமேயல்லது நானாகப் பெறுவதென்பதுண்டோ? என்றாராயிற்று, இங்கே ஈடு;-“நான் ஓர் உபாயாநுஷ்டானம் பண்ணி உன்னை யெங்கே வந்து கிட்டப்புகுகிறேன்? என்னாலே வந்து கிட்டுகையென்று ஒன்றுண்டோ?”

 

English Translation

My Lord of cool Tulasi crown, my Lord of Konrai-blossom Siva, my four-faced Lord Brahma, Lord of praise worthy names, Lifting a mountain, you stopped a hailstorm.  If indeed you are my soul's soul, pray where am I to meet you?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain