(3404)

கொடிய வினையாது மிலனே என்னும்

கொடியவினை யாவேனும் யானே என்னும்,

கொடியவினை செய்வேனும் யானே என்னும்

கொடியவினை தீர்ப்பேனும் யானே என்னும்,

கொடியா னிலங்கைசெற் றேனே என்னும்

கொடியபுள் ளுடையவ னேறக் கொலோ?,

கொடிய வுலகத்தீர்க் கிவையென் சொல்லுகேன்

கொடியேன் கொடியென் மகள்கோ லங்களே?

 

பதவுரை

கொடிய வினை யாதும் இலன் என்னும்

-

(இப்பெண்பிள்ளை) கொடிய கருமங்களின் பற்று சிறிது முடையேனல்லேன் நான் என்கிறாள்;

கொடிய வினை ஆவேனும் யானே என்னும்

-

அக்கொடியகருமங்களும் எனது நிக்ரஹங்களும் என்கிறாள்;

கொடிய வினை செய்வேனும் யானே என்னும்

-

ஆச்ரிதவிரோதிகளுக்குக் கொடியபாவங்களை விளைப்பதும் நானே என்கிறாள்;

கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்

-

(அடியார்கட்குக்) கொடிய பாவங்களைத் தீர்த்துக் கொடுப்பதும் நானே யென்கிறாள்;

கொடியான் இலங்கை செற்றேனே என்னும்

-

கொடியவனான இராவணனுடைய இலங்காபுரியைத் தொலைத்த்தும் நானே யென்கிறாள்;

(இவன் இப்படிச் சொல்லுவது)

கொடிய புள் உடையவன் ஏற கொலோ

-

ஆச்ரித விரோதிகளுக்குக் கொடியவனான பெரிய திருவடியை த்வஜமாகவுடைய எம்பெருமான் வந்து ஆவேசித்ததனாலோ?

கொடியேன் கொடி என் மகள் கோலங்கள் இவை

-

கொடியேனான என்னுடைய கொடி போன்ற இம்மகளின் அழகிய சேஷ்டைகளான இவற்றைப் பற்றி

கொடிய உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்

-

சொல்லு சொல்லென்று ஹிம்ஸிக்கிற உங்களுக்கு என்னவென்று சொல்லுவேன்?.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- [கொடியவினை.] என்பெருமான் சேதநா சேதநங்களுக்கு அந்தர்யாமியாய் அவற்றை சரீரமாகக் கொண்டிரா நிற்கச்செய்தேயும் அவற்றிலுள்ள தோஷங்கள் தனக்குத் தட்டாதபடி யிருப்பவன். ஜீவாத்மாவானவன் இந்த சரீரத்தை அதிஷ்டிட்டு ஸ்வாதீநமாக நிர்வஹித்துக் கொண்டிரா நிற்கச் செய்தேயும் அதற்குரிய பால்யம் யெளவநம் முதலிய விகாரங்கள் உள்ளுறையும்  தனக்குத் தட்டாதவாறுபோல இதனைக் கொள்க.  “ஆவிசேருயினுள்ளால் ஆதுமோர் பற்றில்லாத பாவனையதனைக் கூடில் அவனையுங் கூடலாமே” என்றது காண்க. தத்வத்ரய வியாக்கியானத்தில் மணவாளமாமாமுனிகளின் ஸ்ரீஸூக்தி:- “சரீரியான ஜீவாத்மாவுக்கு சரீர ஸதன்களான ஸால்யாஷிகள் வந்ததில்லையேயாகிலும் சரீர ஸம்பந்த நிபந்தநமாக துக்க அஜ்ஞானிகள் வருகிறவோபாதி சரீரபூதமான இவற்றோட்டை ஸம்பந்தத்தாலே இவனுக்கு மிங்ஙனே சில தோஷங்கள் வாராதோவென்னில்; வாராது; அதுக்கடி ப்ரவேச ஹேதுவிசேஷம். இவனைப் போலே கர்மமடியாகவன்றிக்கே அநுக்ரஹமடியாகவிறே அவனுக்கு இவற்றில் ப்ரவேசமிருப்பது. *** என்னா நின்றதிறே”

கொடியவினை யாவேனும் யானே = எம்பெருமானுக்குக் கர்மஸம்பந்தமில்லையாகிலும் கருமங்கள் யாவும் அவனிட்ட வழக்கேயாதலால் ‘கொடியவினை யாவேனும் யானே’ என்கிறது.

கொடியவினை செய்தல் -ஆச்ரிதவிரோதிகளுக்கு; கொடியவிளை தீர்த்தல் -ஆச்ரிதர்களுக்கு. முறையே *** என்கிற பிரமாணங்கள் காண்க.

கொடியானிலங்கை செற்றேனே = இலங்கை நீறெழச்செற்று ராவண ஸம்ஹாரம் செய்ததும் நானே யென்கிறாள். ஆழ்வார் தம்மை எம்பெருமானாக அநுகரித்துச் சொல்லும் போது ‘இலங்கை செற்றேனே’ என்ற இவ்வளவே சொன்னதாகவும், ‘கொடியான்’ என்பதைத் திருத்தாயார் கூட்டிக்கொண்டு சொல்லுகிறதாகவும் நஞ்சீயர் அருளிச்செய்வராம். இதற்குக் கருத்து என்னென்னில், ஆழ்வார் இப்போது எம்பெருமான் தன்மையிலே நிற்கிறபடியால் ‘கொடியான்’ என்பது எம்பெருமானுடைய வார்த்தையாக ஆகவேண்டிவரும். அற்பனான இராவணனை ஒரு பொருளாக மதித்துக் கொடியானென்று எம்பெருமான் கூறினதாக இருக்கவேண்டாமென்பதே.

கோலம் = அழகியதன்மை. அன்றியே, ‘கோல்’ என்னும் வினைப்பகுதியடியாகப் பிறந்த சொல்லாகக்கொண்டு முயற்சியென்றும் பொருளுரைப்ப கோலுதல் - முயலுதல்.

 

English Translation

My tender daughter wickedly prates, I have no wickedness of any kind then "I am the wickedness of deeds, I am the redeemer of wickedness, I am the doer of wicked deeds, I am the destroyer of wicked Lanka", Has the Garuda-riding Lord gotten her?  O wicked people of the world, what can I say?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain