(3401)

இனவேய்மலை யேந்தினேன் யானே என்னும்

இனவேறுகள் செற்றேனும் யானே என்னும்,

இனவான்கன்று மேய்த்தேனும் யானே என்னும்

இனவாநிரை காத்தேனும் யானே என்னும்,

இனவாயர் தலைவனும் யானே என்னும்

இனத்தேவர் தலைவன்வந் தேறக் கொலோ?,

இனவேற்கண் நல்லீர்க் கிவையென் சொல்லுகேன்

இனவேற் கண்ணி யென்மக ளுற்றனவே?

 

பதவுரை

இனம் வேல் எண்ணி என் மகள்

-

வேற்படையை யொத்திருக்கிற கண்ணழகையுடையவளான என் மகள்,

இனம் வேய் மலைஏந்தினேன் யானே என்றும்

-

திரள் திரளான மூங்கில்களையுடைய கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்தேன் யானே யென்கிறாள்;

இனம் ஏறுகள் செற்றேனும் யானே என்னும்

-

கூட்டமாகவந்த எருதுகளைக் கொன்றேனும் யானே யென்கிறாள்;

இனம் ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்

-

கூட்டங் கூட்டமான கன்றுகளை மேய்த்ததும் நானே யென்கிறாள்;

இனம் ஆரிரை காத்தேனும் யானே என்னும்

-

திரளான பசுங் கூட்டங்களை ரக்ஷித்தேனும்நானே யென்கிறாள்.

இனம் ஆயர்  தலைவனும் நாயே என்னும்

-

இடையர் கூட்டங்களுக்குத் தலைவனான கோபாலகிருஷ்ணனும் நானே யென்கிறான்; (இப்படி இவன் சொல்லுவதானது

இனம் தேவர் தலைவன் வந்து ஏற கொலோ

-

நித்யஸூரிகள் குழங்களுக்குத் தலைவனான ஸர்வேச்வரன் வந்து ஆவேசித்ததனாலோ?

உற்றன இவை

-

இவள் அடைந்த இத்தகையவிகாரங்களை

இனம் வேல் கண் நல்லீர்க்கு

-

வேல் போன்ற கண்ணழகையுடையீரான உங்களுக்கு

என் சொல்லுகேள்

-

ஏனென்று சொல்லுவேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (இனவேய்மலை.) “திறம்பாமல் மலையெடுத்தேனேயென்னும்” என்று கீழ்ப்பாட்டிலும் கோவர்த்தநோத்தரணம் செய்தது நானேயென்று சொல்லியிருக்கச் செய்தேயும், மீண்டும் “இளவேய்மலை யேந்தினேன் யானே” என்கிற விது என்னென்னில்; புகருக்தி முதலிய தோஷங்களைச் சங்கித்த நிலமோ இது? *அத்யந்த பக்தியுக்தாநாம் ந சாஸ்த்ரம் நைவ சக்ரம: என்று நூல்வரம்பின்றியே பரிமாறும் முறைமை செல்லாநிற்க இங்ஙனே சங்கிக்க இடமில்லை திடீர்.

இனவேறுகள் செற்றேனும் யானே = நீளாதேவியின் அம்சமாகப் பிறந்ததனால் நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டுவந்த நப்பிள்ளைப் பிராட்டியை மணஞ் செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை கந்யாகல்கமாகக் குறித்தபடி யாவருக்கும் அடங்காத அஸுராவேசம் பெற்ற ஏழு எருதுகளையும் குறித்தபடி யாவருக்கும் அடங்காத அஸுராவேசம் பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான் ஏழு திருவுருக்கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டனனென்பது புராணப் பிரசித்தம். இந்தச் செயலைச் செய்தது நானே யென்கிறான் இப்பாரங்குச நாயகி.

இனவான் கன்று மேய்த்தேனும் யானே = திருமஙகையாழ்வார் பெரிய திருமொழியில் (2-5-3)  “கன்று மேய்த்து விளையாட வல்லானை” என்கிறார்; இங்கே ‘விளையாட வல்லான்” என்ற சொற்போக்கு மிகவும் குறிக்கொள்ளத்தக்கது; ‘யானை கொல்லவல்லான்’ ‘சிங்கம் கொல்ல வல்லான்’ என்றால் ஏற்கும்; இங்ஙனே “விளையாடவல்லான்” என்னவாமோ? விளையய்டுக்கும் ஒரு வல்லமை வேண்டுமோ? என்று சங்கை தோன்றும்; அதற்குப் பரிஹாரமாக ஆழ்வார் தாமே அடுத்தபடியாக அருளிச் செய்கிறார்- “வரைமீகானில் தடம்பருகு கருமுகிலை” என்று இவ்விடத்திற்கு பட்டர் அருளிச்செய்யும் விசேஷார்த்தமாவது- மலைமேல் காட்டிலேயுண்டான தடாகங்களில் கன்றுகள் தண்ணீர் குடிக்கப் புகுந்தால் இளங்கன்றுகளாகையாலே நீரிலே முன்னேயிறங்கிக் குடிக்க இறாய்க்குமாம், அக்கன்றுகட்கு நீருண்ணும் விதத்தைப் பழக்குவிப்பதற்காகக் கண்ணபிரான் தான் முதலிலே கையைக் கட்டிக் கவிழ்ந்து நின்று தண்ணீரமுது செய்து காட்டுவானாம்; அதைச்சொல்லுகிறது “வரைமீகானில் தடம் பருகு” என்று. இப்படிப்பட்ட வல்லமையை நினைத்து “கன்றுமேய்த்து விளையாட வல்லானை” என்றார் திருமங்கையாழ்வார். அங்ஙனை விளையாடினது நானென்கிறாள் இப்பெண்பிள்ளை.

இனவாநிரை காத்தேனும் யானே = ப்ரஹ்மசர்யாச்ரமதர்மங்களை அனுட்டித்திருந்து பின்பு க்ருஹஸங்தாச்ரம தர்மங்களை யனுட்டிப்பாரைப்போலே இளமையிலே கன்றுகளை மேய்த்துப் பருவம் நிரம்பின பின்பு பசுக்களை மேய்த்ததும் நானேயென்கிறாள்.

இனவாயர் தலைவனும் யானே= ஆயர்களுக்குள்ளே கண்ணபிரான் தான் தலைவனாயிருக்கையாவது என்னென்னில்; * தன்னேராயிரம் பிள்ளைகளென்கிறபடியே தன்னோடொத்த பருவத்துப் பிள்ளைகளும் தானுமாய்த் தீம்புசெய்து திரியுமிடத்தில் தீம்பில் தானே தலைமைபெற்றிருப்பதாகும். அத்தகைய தீம்புகள் செய்ததும் நானே யென்கிறாள். இப்படியிவள் சொல்லுவது நித்யஸூரிநாதன் வந்து ஆவேசித்ததனாலே போலும்.

 

English Translation

My Vel-eyed daughter prates, "I am the chief of the cowherd- clan.  If was I who grazed the calves, it was I who lifted the mountain, it was I who protected the cows, it was I who killed the seven bulls!"  Has the Lord of celestials possessed her? O severe people, what can I say?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain