(3330)

ஒன்றுந் தேவு முலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா

அன்று, நான்முகன் தன்னொடு தேவ ருலகோ டுயிர்படைத்தான்,

குன்றம் போல்மணி மாடம் நீடு திருக்குரு கூரதனுள்,

நின்ற ஆதிப்பி ரான்நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே.

 

பதவுரை

தேவும்

-

தேவர்களும்

உலகும்

-

அவர்களுக்கிருப்பிடமான உலகங்களும்

உயிரும்

-

மனிதர் முதலிய பிராணிகளும்

மற்றும் யாதும்

-

மற்றுமுள்ள எல்லாமும்

ஒன்றும் இல்லா அன்று

-

சிறிதுமில்லாத அந்த ஊழிக்காலத்திலே

நான்முகன் தன்னொடு

-

பிரமனையும்

தேவர்

-

தேவதைகளையும்

உலகு

-

உலகங்களையும்

உயிர்

-

பிராணிகளையும்

படைத்தான்

-

படைத்தவனும்

நின்ற

-

சாஸ்த்ரங்களில் நிலைத்திருப்பவனுமான

ஆதி பிரான்

-

ஆதிநாதனென்றும் எம்பெருமான்

குன்றம் போல் மணிமாடம் நீடு

-

மலைபோன்ற திருமாளிகைகள் உயர்ந்திருக்கப்பெற்ற

திருகுருகூர் அதனுள்

-

திருநகரியிலே

நிற்க

-

காட்சிதந்து கொண்டிருக்கும் போது

மற்றைதெய்வம்

-

வேறுதெய்வங்களை

நாடுதிர் ஏ

-

தேடியோடுகின்றீர்களே.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸகலஜகத்காரணபூதனான ஸர்வேச்வரன் திருநகரியிலே எளியனாய்க் காட்;சி தந்தருளாநிற்க, வேறுதெய்வத்தைத் தேடி யோடுகிறீர்களே! இது என்ன அறிவு கேடு! என்று வெறுக்கிறார்.

எம்பெருமானுடைய ஜகத்காரணத்வத்தை மூதலிப்பன முன்னடிகள்.  ஒன்றும் என்பதை மேலுள்ள தேவும் இத்யாதிகளுக்கு விசேஷணமாக அந்வயிப்பதும், “தேவுமுலகு முயிரும் மற்றம்யாதும் ஒன்றும் இல்லாவன்று” என்று அந்வயித்து உரைப்பதும் பொருந்தும்.  விசேஷணமாக அந்வயிப்பதனால், ஒன்றுதல்-பொருந்துதலாய், அதாவது லயிப்பதாய், என்கிறபடியே, கார்யத்திற்குக் காரணத்திலே லயமாகச் சொல்லுகையாலே காரண பூதனான தன்பக்கலிலே சென்று ஒன்றுகிற (அதாவது, லயமடைகிற) தேவும்-தேவஜாதியும், உலகும்-அத்தேவர்களின் இருப்பிடங்களும், உயிரும்-மனிசர் முதலிய பிராணிவர்க்கமும், இப்படி பிரித்துப் பிரித்துச் சொல்லவேண்டாதபடி எதுவுமே இல்லாமலிருந்த ஊழிகாலத்திலே முந்துற முன்னம் நான்முகனைப்படைத்து, அவன் வழியாக தேவஜாதியையும் அவர்களுக்கு இருப்பிடமான லோகங்களையும் இவ்வருகே சேதநவர்க்கங்களையும் ஸ்ருஷ்டித்தானாயிற் எம்பெருமான் என்றுகொள்க.

இங்கே நம்பிள்ளையீட்டில் விநோமாக அருளிச்செய்வதொரு ஸ்ரீஸூக்திகாண்மின்;-“ஸர்வேச்வரன் சதுர்முகனை ஸ்ருஷ்டித்தான்; சதுர்முகன் பஞ்சமுகனை ஸ்ருஷ்டித்தான்; ஆக இதுதான் பஹூமுகமாயிற்றுக் காணும்.”

ஆக இப்படிபட்ட ஸர்வேச்வரன் உங்களுக்குக் கண்ணாலேகண்டு ஆச்ரயிக்கலாம்படி, மலைபோன்றமணிமாடங்கள் உயர்ந்திருக்கிற திருநகரியிலே ‘நம்மைக் காணவருவார் ஆரேனுமுண்டோ?’ என்று நின்று நின்று எதிர்பார்த்திருக்க, வேறேயொரு தெய்வத்தை அந்தோ! தேடித்திரிகின்றீர்களே!

“***”= வாஸூதேவம் பரித்யஜய யோந்யம் தேவமுபாஸதே.  த்ருஷிதோஜாஹ்நீதீரே கூபம் கநதி துர்மதி’ என்கிற ச்லோகம் இவ்விடத்திற்குப் பொருந்த அநுஸந்திக்கத்தகும். தரஹித்தவன், கங்கை பெருகியோடுமிடத்திலே அதிலே அள்ளிக் குடித்துத் தன் விடாய் தீரமாட்டாதே அதன் கரையிலே குந்தாலிகொண்டு கிணறுகல்ல முயலுமா போலே இருந்தது இவர்களுடையபடி.  திருமாலையில் “கேட்டிரே நம்பிமீர்காள்! கெருடவாகனனும் நிற்கச், சேட்டைதன் மடியகயத்துச் செல்வம்பார்த் திருக்கின்றீரே.” என்ற பாசுரமும் இங்கு நினைக்கத்தகும்.

திருக்குருகூர்-இது பாண்டிநாட்டுத் திருப்பதிகள் பதினெட்டில் ஒன்று; ஆழ்வார் திருநகரியென வழங்கப்படுமது.  குருகாபுரி என்பது வடமொழிவழக்கு.

 

English Translation

Then when none of the gods, worlds, beings, and aught else existed, H made Brahma, -with him the gods, worlds and all the beings.  He stands as Adipiran, in fair kurugur where jewelled houses rise like mountains; then what other god do you seek?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain