(3217)

வாய்கொண்டு மானிடம் பாடவந்தகவி யேனல்லேன்,

ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக் கேயுளன்,

சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்,

நீகண்டு கொள் என்று வீடும் தரும்நின்று நின்றே.

 

பதவுரை

வாய்கொண்டு

-

(அருமையான) வாக்கைக் கொண்டு

மானிடம்

-

அற்பமனிதர்களை

பாட வந்த

-

பாடப்பிறந்த

கவியேன் அல்லேன்

-

கவி நானல்லேன்

ஆய்

-

(வேதாந்தங்களினால்) ஆராயப்பட்ட

சீர் கொண்ட

-

திருக்குணங்களையுடைய

வள்ளல்

-

உதாரனாகிய

ஆழி பிரான்

-

சக்கரக்கையனான பெருமான்

எனக்கே உளன்

-

என் வாக்குக்கே இலக்காகவுள்ளான். (அப்பெருமான்)

சாய் கொண்ட

-

அழகிய

இம்மையும்

-

இஹலோகத்து அர்ச்சாவதார அநுபவத்தையும்

சாதித்து

-

உண்டாக்கித்தந்து

வானவர் நாட்டையும் நீ கண்டுகொள் என்று

-

பரமபதாநுபவத்தையும் நீ பெறுவாயாக என்று சொல்லி

வீடும்

-

மோக்ஷ சுகத்தையும்

நின்று நின்று

-

அடைவு பட

தரும்

-

கொடுத்தருள்வன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பரமோதாரனான எம்பெருமானாலே தன்னைக் கவிபாடுகையே ஸ்வபாவமாகப் பண்ணப்பெற்ற வெனக்கு இதரஸ்துதிகளில் அதிகாரமில்லையென்கிறார். “ஜிஹ்வே! கீர்த்தய கேசவம் முராரியும்.” என்றும் “நா வாயிலுண்டே நமோ நாரணாவென்று ஓவாதுரைக்கு முரையுண்டே” என்றும் சொல்லுகிறபடியே அவன் தன்னைத் துதிக்கைக்காகவே படைக்கப்பட்ட வாயைக்கொண்டு நீசரைக் கவிபாடப் பிறந்தவனல்லேன் நானென்கிறார் முதலடியில்.

ஆழ்வீர்! அனேக மஹர்ஷிகளும் மற்றும் முதலாழ்வார்கள் போல்வாரும் துதித்த எம்பெருமானையே நீரும் துதித்தால் என்ன ரஸமுண்டு? வெவ்வேறு விஷயமாகவன்றோ கவிபாடவேணும் என்று சிலர் சொல்ல, ஆய்கொண்ட  சீர்வள்ளலாழிப்பிரானெனக்கேயுளன் என்கிறார். எம்பெருமானை நான் பேசுவது மற்றையோர் பேசினது போலவோ? “பெருங்கேழலார் தம் பெருங்கண்மலர்ப்புண்டரீகம் நம்மேலொருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம், ஒருவர் நம்போல்வருங் கேழ்பவருளரே” (திருவிருத்தம்) என்னும்படி தன் கடாக்ஷத்தை என் பக்கலிலேயே ஒரு மடை செய்தது போலத் தன்னைப் பற்றிக் கவிபாடுவதையும் என்னொருவனுக்கே உரியதாக்கி யருளினா னெம்பெருமான் என்றவாறு. எனக்கே என்ற ஏகாரத்தினால்- இப்படி எம்பெருமான் விஷயீகரித்தது என்னைத் தவிர வேறெருவரையுமில்லையென்பது தெரிவிக்கப்படட்தாம். ‘வலக்கையாழி இடத்தைச் சங்கமிவையுடைய மால்வண்ணனை, மலக்கு நாவுடையேற்கு மாறுளதோவியம் மண்ணின் மிசையே” என்பர் மேலும்.

உபத விபூதிநாதனான எம்பெருமானுடைய உபயவிபூதியும் அடியார்களின்  ஆளுகைக்கென்ற ஏற்பட்டனவாதலால் பொறுக்கப் பொறுக்க உபயவிபூதி கலங்களையும் எம்பெருமான் தமக்குத் தந்தருளுகிறபடியைப் பின்னடிகளால் அருளிச் செய்கிறார். (சாய்கொண்ட விம்மையும் சாதித்து) சாயா என்றும் வடசொல் சாய் என்று குறைந்துகிடக்கிறது. (சாய் கொண்ட) - ஒளிமிக்க என்றபடி. * இருள் தருமாஞாலத்திற் பிறவியை இகழ்ந்து கூறுகின்ற ஆழ்வார் தமது திருவாக்கினால் “சாய்கொண்ட விம்மையும்  சாதித்து” என்றருளிச் செய்யலாமோ? ஐஹிக ஸுகம் இவர்க்கு எதற்கு? என்று சிலர் சங்கிக்கக்கூடும். கேண்மின்;- *கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலுமைங்கருவி கண்ட வின்பமாகிய சப்தாதி விஷய ஸுகமன்று இங்குக் கூறப்படுவது; ‘இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகமாளும் அச்சுவைபெறினும் வேண்டேன்” என்னும்படி இவ்வுலகத்திலேயே இடையூறின்றி பகவத் குணாநுபவம் பண்ணப்பெறில் அந்தஸுகம் பரமோத்தேச்யமாதலால் அதனையே  இங்கு “சாய்கொண்டவிம்மை” என்பதனால் கறிக்கின்றார். திருவிருத்தத்தில் “வேதனை வெண்புரி நூலனை” (79) என்று பாசுரத்தில் “சீதனையே தொழுவார் விண்ணுளாரிலுஞ் சீரியரே” என்றருளிச் செய்தமை காண்க. எம்பெருமானை இந் நிலத்திலிருந்துகொண்டே இடைவிடாது வணங்கி யநுபவிப்பவர் யாரோ, அவர்கள், பரமபதத்தில் வாழும் நித்யமுக்தர்களிற்காட்டிலும் சிறந்தவர் என்றனர். இடைவிடாது எம்பெருமானை அனுபவிப்பவதற்கென்றே வாய்த்த இடமான பரமபதத்தில் பகவதனுபவத்திற்கு எவ்வகையான இடையூறுமில்லையாதலால் அங்கிருந்து கொண்டு அவனையனுபவித்தல் வியப்பன்று; உண்டியே உடையே உகந்தோடுமிம் மண்டலம் பகவதனுபவத்திற்கு நேர்விரோதியாதலால் அப்படிப்பட்ட இந்த இருள் தருமா ஞாலத்திலிருந்து கொண்டே அங்ஙனம் நித்யானுபவம் செய்யும்படியான ஒரு நன்மை வாய்க்குமாகில் அது பரமதாநுபவத்திற் காட்டிலும் மிகச் சிறந்ததென்றே கொள்ளத் தட்டில்லையென்க. பெரிய திருவந்தாதியிலும் “ஒன்றுண்டு செங்கண்மால்” (53) என்னும் பாசுரத்தில் “நின்புகழில்வைகும் தம் சிந்தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு வைகுந்தமென்றருளும் வான்” என்றருளியது நோக்கத்தக்கது. இப்போது ஸித்தமான குணாநுபவத்திற்காட்டிலும் இனிமேல் ஸித்திக்கக் கடவதான வைகுந்தத்திலனுபவம் சிறந்ததல்ல கிடாய் என்றாராயிற்று. ஆகவே “சாய் கொண்ட விம்மையும் சாதித்து” என்றது நன்கு பொருந்தும். இவ்விடத்திலே ஈட்டு ஸ்ரீஸூரிக்திகாண்மின்; - “மோக்ஷஸுகத்திலும் நன்றாம்படி ஐஹிகத்திலே ஸ்வாநுபவமே யாத்ரையாம்படி பண்ணித்தருகை.

இப்படி இந்நிலத்தில் ஸ்வாநுபத்தால் குறையறத் தந்தருளி, நாளடைவிலே சிறிய விபூதியின் அநுபவத்தையும் தந்தருளும்படியை யருளிச்செய்கிறார். “வானவர் நாட்டையும்” என்று தொடங்கி, எம்பெருமான் பரமபதத்தை நித்யமுக்தர்களிட்ட வழக்காம்படி அவர்களுக்கு விதேயமாக்கி, அவ்விடத்தில் தான் பிறர்மனையில் குடியிருப்பவன்போல இருக்கின்றானென்று தோன்றுமாறு “வானவார் நாடு” என்கிறார் “வாணினவரசு வைகுந்தக்குட்டன்” என்றார் பெரியாழ்வாரும் “தேவாநாம் பூத அயோத்தியா என்று கருதியும் பரமபதத்தை நித்ய முக்தர்களினுடையதாகவே ஓதிற்று.

வானவர் நாட்டையும்  நீகண்டுகொள் என்று = இராமபிரான் காட்டில் எழுந்தருளியிருந்த காலத்தில் ஊரிலே பரதாழ்வான் ஸ்ரீபாண்டாவரத்தை வளர்த்துவைத்து, மீண்டெழுந்தருளின இராமபிரானை நோக்கி “அவேக்ஷதாம் பவாத் கோசம் கோஷ்டாகாரம் புரம் பலம், பவதஸ் தேஜஸா ஸர்வம் க்ருநம் தசகுணம் மயா” என்று காட்டிக் கொடுத்தாப்போலே ஸ்ரீவைகுண்டநாதனும் முக்தர்களாய் வருமவர்களை நோக்கி ‘நிகண்டுகொள்’ என்று காட்டுகிறான் போலும்.

நின்று நின்றேவீடும் தரும் = ப்ராப்தகாலத்திலே மோக்ஷ ஸாம்ராஜ்யத்தையும் கொடுப்பவன் என்று பொருள் கொள்வது சிறக்குமென்று நம்பிள்ளை திருவுள்ளும்; குளப்படியிலே கடலைமடுத்தாற்போலன்றிக்கே, எந்த நன்மை செய்தாலும் பொறுக்கப் பொறுக்கச் செய்தருள்வது எம்பெருமானியல்பு. “ஆற்ற நல்ல வகைகாட்டுமம்மான்” என்பர்மேலும். “கலந்துபிரிந்து ஜ்ஞான பக்திகளை வளர்த்தது கனங்குழையிடக் காது பெருக்குதலும் மாஸோபவானி போஜனப் புறப்பூச்சும்போலே ஆற்றநல்ல மாபோகச் சிரமமாக” என்ற ஆசார்ய ஹ்ருதய திவ்யஸூக்தியும் காண்க.

 

English Translation

I was not born to sing in praise of mortal man.  The generous discus-Lord of great virtues is my subject.  He provides me for my life here and hereafter, and even gives me charge of Indra's kingdom.

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain