(3215)

சேரும் கொடைபுகழ் எல்லையிலானை,ஓராயிரம்

பேரும் உடைய பிரானையல்லால் மற்று யான்கிலேன்,

மாரியனையகை மால்வரையொக்கும்திண் தோளென்று ,

பாரிலோர் பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள் வேயவே.

 

பதவுரை

சேரும்

-

தனக்குத் தகுதியான

கொடை புகழ்

-

ஔதார்யத்தினாலாகிய புகழுக்கு

எல்லை இலானை

-

எல்லையில்லாதிருப்பவனும்

ஓர் ஆயிரம் பேரும் உடைய

-

ஆயிரந் திருநாமங்களையுடைய உபகாரநனுமான

பிரானை அல்லால்

-

எம்பெருமானை யன்றி

பாரில்

-

பூமியில்

மற்று ஓர் பற்றையை

-

வேறொரு அஸார பதார்த்தத்தைக் குறித்து

கை மாரி அனைய என்று

-

‘கைகள் மேகம்போல் உதாரங்கள்’ என்றும்

திண் தோள்

-

உறுதியான புயங்கள்

மால் வரை ஒக்கும் என்று

-

பெரிய மலைபோல்வன என்றும்

பச்சை பசும்பொய்கள் பேச யான் கில்லேன்

-

மெய் கலவாத புதுப் பொய்களைப் பேசுவதற்கு நான்  சந்தனல்லேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  கீழ் ஆறு பாசுரங்களினால் பரோபதேசம் செய்தருளின ஆழ்வார், தம் உபதேசம் கேட்டு ஒருவரும் திருந்தக காணாமையாலே வெறுத்து அவர்களைவிட்டு, எம்பெருமானை யொழிய வேறு சிலரைக் கவிபாடுகையாகிற பாவம் எனக்கு இல்லையாகப் பெற்றதே! என்று தம்மளவிலே தாம் உகந்து பேசுகிறார். “வழிபறிக்கும்  நிலத்தில் தன்கைப் பொருள்கொண்டு தப்பினவன் உகக்குமாபோலே, இவர்களைப் போலன்றியே பகவத் விஷயத்தை யொழிய வேறு சிலரைக் கவிபாடுகைக்கு நான் க்ஷமனன்றிக்கே யொழியப்பெற்றேனென்று ப்ரீதராகிறார்” என்பது நம்பிள்ளை ஈடு.

சேருங்கொடை புகழெல்லையிலானை = உலகத்தில் கொடையாளிகள் பலர் இருப்பினும் இன்னான் இன்னது கொடுத்தான்’ என்று சொன்னால் ‘அதை நான் நம்புகின்றிலேன்’ என்பாருண்டு; எம்பெருமான் உபய விபூதியையும் ஒருவனுக்குக் கொடுத்தருளினனென்றாலும் ‘இது அஸம்பாவிதம்’ என்பாரில்லை; கொடைபுகழ் பொருந்தியிருக்குமாயிற்று எம்பெருமானுக்கு. இத்தால - கவி பாடுகிறவர்களுக்கு விசாலமான விஷயங்களுண்டென்றதாகிறது.

ஓராயிரம்பேருமுடையபிரானை = “ஓராயிரமாயுலகேழனிக்கும் பேராயிரங் கொண்டதோர் பீடுடையன” என்கிறபடியே மஹாவைபவம் பொருந்திய ஆயிரந் திருநாமங்களை யுடையவனாதலால் எந்த விருத்தத்திலும் எளிதாகத் திருநாமங்களையிட்டுக் கவிபாடுதற்குரியன என்று காட்டுகிறபடி. அப்படிப்பட்ட திருநாமங்களை யெல்லாம் தமக்குப் பிரகாசிப்பித்தருளின மஹோபகாரத்தை நினைத்துப் பிரான் என்கிறார். (பிரான- உபகாரகன.) ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை யல்லது மற்றொரு க்ஷுத்ரபுருஷனை என் வாயினால் நான் துதிக்கமாட்டேன்; அவரவர்கள் நரஸ்துதி செய்வதெல்லாம் பச்சைப்பகம் பொய்யே யல்லது வேறில்லையென்று காட்டுகிறார் பின்னடிகளில்.

கொடுக்கைக்குக் கைம்முதல் சிறிதுமில்லாதவொருவனை நோக்கி  மாரியனைய கையானிவன்” என்றும், கொடையை நினைத்துத் தேம்புகிற தோளுடையானைக் குறித்து “மாஸ்வரை யொக்கும் திண்டோளனிவன்” என்றும் கவிபாடுவதெல்லாம் மெய்யுரை கலசாத பொய்யுரையேயாம். இத்தகைய பொய்யுரகைளில் நான் பிரவேசிக்க சக்தனல்லேன் என்கிறார்.

(மாரி அனைய கை) மேகமானது கைம்மாறு கருதாமல் தாராளமாக வர்ஷிக்கின்றப உலகில் உதாரர்களுக்கு மேகத்தை உவமையாகச் சொல்லுவர். அஸாரமான த்ருண விசேஷத்திற்குப் பற்றையென்றுபெயர். அதுபோன்றவனென்னாதே அதுவாகவே சொன்னது முற்றுகை. “முளைத்தெழுந்து தீய்ந்து போவன சில சிறுதூறு உண்டாயிற்று; அதுபோல, பிறந்தவன்று தொடங்கி முடிந்துபோமளவும் ஒரு காரியத்திற்கும் உதவாதவர்களைப் பற்றையென்கிறது.” என்பர் ஆசிரியர்.

பாரில் என்று ஏழாம் வேற்றுமையாகக் கொள்ளாமல் பார் இல் என்று பிரித்து, ‘தங்குவதற்கு ஓரிடமுமில்லாதவொரு க்ஷுத்ரனை’ என்று பொருள் கூறுதலுமுண்டு.

 

English Translation

The limitless Lord of great munificence bears a thousand names.  He alone is worthy of my praise.  I can not utter blatant lies over mortals, such as "Your arms are like mountains!", "Your hands are like rain clouds!"

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain