(3213)

கொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,

வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீ ர்காள்,

கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல் லாம்தரும் கோதில்,என்

வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.

 

பதவுரை

கொள்ளும் பயன் இல்லை

-

நீங்கள் பெறும் பலன் சிறிது மில்லையாம்படி

குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை

-

குப்பையைக் கிளறினாற்போல் குற்றம் குறைகளே தோற்றும்படியான செல்வமுடைய அற்பரைக் குறித்து

வள்ளல் புகழ்ந்து

-

உதாரனே! என்று கொண்டாடி

நும் வாய்மை இழக்கும்

-

உங்களுடைய ஸத்யத்தையிழந்தொழிகிற

புலவீர்காள்

-

புலவர்களே!

கொள்ள

-

நீங்கள் பாடுகிற துதி மொழிகளைப் பொருத்தமாகக் கொள்ளவல்ல பூர்த்திரயையுடையவனும்

வேண்டிற்று எல்லாம் தரும்

-

வேண்டிய எல்லாவற்றையும் தந்தருள்பவனும்

கோது இல்

-

குற்ற மற்றவனும்

என் வள்ளல்

-

என் விஷயத்தில் மஹோபகாரங்கள் செய்தவனும்

மணி வண்ணன் தன்னை

-

நீலமணி வண்ணனுமான பெருமானை

கவி சொல்ல

-

கவி பாட

வம்மின்

-

வாருங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  ஹேயகுணம் மலிந்த நீசரை விட்டு, ஸமஸ்தகல்யாண குணாத்மகனாய் நம் அபேக்ஷிதமெல்லாம் தரவல்லவனான எம்பெருமானைக் கவி பாட வாருங்கோளென்கிறார். பிறரைக் கவி பாடுவது ஒரு பிரயோஜனத்திற்காகவேயன்றி ஸ்வயம் ப்ரயோஜனமாகவன்றே; அப்படி நீங்கள் கருதுகிற பிரயோஜனம் பெறுவதில்லை என்று முந்துறமுன்னம் அருளிச் செய்கிறார்-பாவிகள் உள்ளத்திற்பதிவதற்காக.

பயனில்லை யென்பது மாத்திரமன்று; இழவுமுண்டு என்கிறார் மேல். (குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை யிழக்கும் புலவீர்காள்!.) நீங்கள் வாய் பெற்ற பேற்றை இழக்குமத்தனையே யுள்ளது என்கிறார். குப்பைகளைச் கிளறினால் கெடுதலான அம்சங்கள் தென்படுமே யல்லது நன்றானதொன்றும் தென்படமாட்டாது; அதுபோல நீசர்களின் சரிதைகளைக் கவிபாடப்புகுந்தால் மறைந்து கிடக்கும் மாசுகள் தாம் வெளிவரும் என்று அநுபவத்திற்குப் பொருத்தமான அருளிச் செய்கிற அழகு காண்மின்.

செல்வத்தை வள்ளல் புகழ்ந்து - அற்பமான செல்வத்தைக் கனத்ததாகப் பாடியென்று தாற்பரியம். “ஸம்பத்தையுடைய க்ஷுத்ரஜாதியை மஹோதாரையாகப் புகழ்ந்து” என்பது பன்னீராயிரம். வாய்மை யிழத்தலாவது- பொய்சொல்லுபவர்கள் என்கிற அபக்க்யாதியைப் பெறுதல்.

பகவத் விஷயத்தில் கவிபாடினால் விளையும் நன்மைளைப் பின்னடிகளில் அருளிச்செய்கிறார்;-

கொள்ளக் குறைவிலன்= இதற்கு ஸாமான்யமாகத் தோன்றும் கருத்து ஒன்றுண்டு; மிக அற்பமான செல்வமுடைய அற்பர்களிடத்திலே நாம் பலன்கொள்ளக் கொள்ள, அவர்களுக்கு அது குறைந்துபோம்; அங்ஙனன்றிக்கே எவ்வளவு செல்வம் கொண்டாலும் அங்குச்சிறிதும் துறை ஏற்படாது என்பதாம் நம் ஆசாரியர்கள் அருளிச்செய்வது இங்ஙனேயன்று; (ஈடுகாண்மின்:-) “நீங்கள் யாவையாவைசில ஏற்றங்களையிட்டுக் கவிபாடினிகோள் அவற்றை ஸ்வீகரிக்குமிடத்தில் ஒருகுறையுடையனல்லன்; ஸமஸ்தகல்யாண குணாத்மகன்.”? அற்ப மனிசர்விஷயத்தில் ஏற்றங்களை ஏறிட்டுக் கவிபாடினால் அவற்றைக் கொள்ளும் யோக்யதை அவர்களுக்குக் கிடையாது; எம்பெருமான் விஷயத்தில் எவ்வளவு ஏற்றமாகக் கவிபாடினாலும் அந்த ஏற்றமெல்லாம் அங்கே மிகவும் பொருத்தமாக அந்வயிக்கக் குறையில்லையென்றவாறு. “அந்யத்ர அதத்குணோக்தி:” என்ற பட்டர் ஸூக்தி காண்க.

வேண்டிற்றெல்லாம் தரும்= நீச மனிசர்கள் ஒருவனுக்கு ஒன்றைக் கொடுத்தால் கொள்ளுகிறவனுக்கு மற்றொன்று தேவையானால் அதைக் கொடுக்க அவர்கள் அசக்தரேயாவர்; இங்கு அபேக்ஷிப்பார் தாழ்வாலே இழக்கில் இழக்குமித்தனை; எம்பெருமான் தரமாட்டாத தொன்றில்லை. ஸ்ரீவிஷ்ணுதர்மத்தில் மாங்கள்யஸ்தவத்தில் - “தேவேந்த்ரஸ் த்ரிவுவநம் அர்த்தமேகபிங்க: ஸர்வர்த்திம்  த்ரிபுவநகாம் ச கார்த்தவீர்ய : வைதேஹ: பரமபதம் ப்ரஸாத்ய விஷ்ணும் ஸம்ப்ராப்தஸ் ஸகல பலப்ரதோ ஹி விஷ்ணு:” என்ற ச்லோகம் இங்கு அநுஸந்தேயம். (ஏகபிங்க;-குபேரன்.)

கோது; இல் - கொடுக்குமிடத்தில் கோதாவது- “கொடுத்தோம்’ என்றிருக்கையும், கைம்மாறு கருதிக் கொடுக்கையும், அளவுபடக் கொடுக்கையும் முதலியன; எம்பெருமானது ஔதார்யத்தில் இவை யித்தனையுமில்லை. ‘என்வள்ளல்’ என்கையாலே எம்பெருமானது ஔதார்யத்தின் சிறப்பு ஆழ்வார்க்கு ஸ்வாநபவஸித்தமென்பது விளங்கும்.

மணிவண்ணன் - எம்பெருமானிடத்தில் ஔதார்யமில்லை யென்றே கொண்டாலும் வடிவழகொன்று போதுமேகவிபாடுகைக்கு என்றவாறு.

 

English Translation

O Poets with mastery over words!  You waste it in praising vile useless trash as great fortune!  Come and praise the benevolent Lord-most-perfect.  He shall provide for your needs without diminishing.

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain