(3211)

ஒழிவென்றில் லாதபல் ஊழிதோறூழி நிலாவ,போம்

வழியைத் தரும்நங்கள் வானவர் ஈசனை நிற் கப்போய்,

கழிய மிகநல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்,

இழியக் கருதியோர் மானிடம் பாடலென் னாவதே.

 

பதவுரை

ஒழிவு ஒன்று இல்லாத

-

ஒழிவு சிறிதுமில்லாத

பல ஊழி ஊழிதோறு

-

காலத்துவமுள்ளதனையும்

நிலாவ

-

நிலைநின்று அநுபவிக்கும்படி

போம்

-

செல்லக்கடவதான

வழியை

-

வழிபாடாகிய கைங்கரியத்தை

தரும்

-

தந்தருள்கின்ற

நங்கள் வானவர் ஈசனை நிற்க போய்

-

நமது தேவாதி தேவனான பெருமானிருக்க, அவனையுமேக்ஷித்து

கழிய மிக நல்ல

-

மிகவும் இனிய

வான் கவி கொண்டு

-

திவ்யாமன கவிகளைக் கொண்டு

புலவீர்காள்

-

பண்டிதர்களே!

இழிய கருதி

-

அதோகதியையடைய நினைத்து

ஓர் மானிடம்

-

அற்ப மனிதர்களை

பாடல்

-

பாடுதலால்

ஆவது என்

-

(உங்கட்கு) உண்டாகும் பயன் யாது?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  பரமவிலக்ஷணனாய் மஹோபகாரகனான எம்பெருமானிருக்க அவனை விட்டு அற்பமணிசரைக் கவி பாடி என்ன பலன்? என்கிறார். ஒரு விச்சேதமில்லாதபடி யாவதாத்ய பாவியான காலமெல்லாம் நிலைநின்று அநபவிக்கும்படி செல்லக் கடவதாயுள்ள வழிபாடான கைங்கரியத்தைத் தந்தருளி நம்மை ஆட்கொள்பவன் எம்பெருமான்; இங்ஙனே கைங்கரியம் செய்கிற நித்யஸூரிகளை ஒரு நாடாகவுடையவன்; இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்தில் எத்தனையூழிகாலம் கவிபாடினாலும் ஏற்றிருக்கும்; பாடுவதற்கும் மெய்யான திருக்குணங்கள் எல்லைகடந்தவையுண்டு; பாடுகிறவர்களுக்கும் ஸகலபுருஷார்த்த ஸித்தியுண்டு; பாட்டுக்கும் மிக்க சிறப்புண்டு; இப்படியிருக்க, தகாத விஷயங்களைத் தேடித்திரிந்து மானிடம்பாடி அதோகதியையடையப் பார்க்கிறீர்களே, இதுவென்கொல் என்கிறார்.

வழியைத் தரும் என்பதற்கு அர்ச்சிராதிமார்க்க கதியைக் கொடுத்தருள்கின்ற என்று பொருள்கொள்வாருமுளர்.

வானவரீசனை நிற்க - வானவரீசனை விட்டு என்றபடி. இனி, ‘ஈசனை’ என்ற ஐகாரத்தைச் சாரியையாக வைத்து முதல் வேற்றுமைப் பொருள் கொள்ளுதலுமொன்று. “இவன் நம்மை நோக்கி ஒரு கவிபாடுவானோ” என்று எம்பெருமான் ஆசையோடிருக்க- என்று ரஸமயமான பொருள் கூறுவர் நம்பிள்ளை.

நிற்கப்போய் என்றவிடத்து ‘போய்’ என்பதற்கு ஈட்டில், “புறம்பே பாடுகைக்கு விஷயம் தேடிப் போய்” என்று அருளிச் செய்துவிட்டு மேலே பணித்த ஸ்ரீ ஸூக்திகள் பரமரஸம்;- “இவன் கவிபாடி (ட) வாராநின்றான் என்றுகேட்டவாறே கழியப்போம்- இவன் கவி கேட்டு ஏதேனும் தனக்குக் கொடுக்க வேண்டுகிறதாகக் கொண்டு; இவனும் அவன் புக்க விடம்புக்கு இத்தைக் கேட்பித்து ஒன்று பெற்றோமாய் விடவேணும் என்று தொடர்ந்து போமே; ஆக, அவன்  போக இவன் போக, போகாநிற்குமித்தனை.” - ஒரு அற்பனை மஹாதனிகனாக நினைத்து ஒரு கவியானவன் அவன் விஷயமாக ஒரு துதிநூல் எழுதி அதை அந்த ப்ரபுவினிடத்தில் வாசித்துக் காட்டி ஏதேனும் வெகுமதி பெறவேணுமென்றெண்ணிப் போக, இதனையறிந்த அந்தப் பிரபு ‘இக்கவியின் கண்ணில் நாம் தென்பட்டால் அவன் தனது நூலை வாசித்துக் காட்ட அவகாசம் கொடுக்க நேர்ந்துவிடும்; பிறகு ஏதேனும் காசு கொடுக்கவும் வேண்டிவரும். ஆதலால் நாம் இவனுக்குப் புலப்படாமே அப்பால் போய்விடுவதே நலம் என நினைத்துத் தலைமறையப் பார்ப்பான்; அவனை விடாமல் பிடிப்பதே கருமம் என்று கவியும் தொடர்ந்துசெல்வன்; ஆக அவன் போவதும் இவன் போவதுமாய், போக்கேயாயிருக்குமென்றதாயிற்று.

கழியமிகநல்ல= “சாஉறுதவ நனிகூர்கழி மிகல்” என்ற நன்னூற் சூத்தரிப்படிக்கும், “கழிய மிக்கதோர் காதலள்” இத்யாதிப் பிரயோகங்களின் படிக்கும் கழிய என்பதற்கு ‘மிகவும்’ என்கிற பொருள் ப்ரஸித்தம்: கழியமிக- அத்யந்தம் என்றபடி, இப்பொருள் கிடக்க, நம்பிள்ளை ரஸமாக வேறொரு பொருளும் அருளிச் செய்கிறார்;- (ஈட்டில்) (கழியவித்யாதி.) கவிபாட்டுண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளையிட்டுச் சொல்லுகையாலே அவனுக் கடங்காதாயிருக்குமிறே; இவன் ஆரைச் சொல்லுகிறது. நம்மையன்று போலும் என்று ப்ரமித்திருக்குமிறே; ஆகையாலே இவனை விட்டுக் கழிய” என்கிற ஸ்ரீஸூக்திகள் காண்க. “அந்யத்ர அதத்குணோக்தி: பகவதிந, ததுத்கர்ஷசௌர்யை பரேஷாம் ஸ்துத்யத்வாத்” என்ற ஸ்ரீரங்கராஜஸ்தவ ஸ்ரீஸூக்தியின்படியே பகவானைப் பற்றிச் சொல்ல வேண்டியவற்றை யெல்லாம் அற்பமணிசர் திறத்திலே ஏறிட்டுச் சொன்னால் அவை அந்த வ்யக்திகளை விட்டுக் கழிந்து போவது ப்ராப்தமேயாம்.

வான்கவி- திவ்யமான கவி என்றபடி ‘கவி’ என்கிற சொல்- பாடல்களை இயற்றும் பண்டிதரையும், அப்பண்டிதரால் இயற்றப்படும் பாடல்களையும் சொல்லும்; ‘இன்கவிபாடும் பரமகவிகளால்” என்ற பாசுரத்தில் ‘கவிபாடும்’ ‘கவிகளால்’ என்றவற்றாலுமிதனையறியலாம்.

புலவீர்காள்! நீங்கள் விவேகிகளல்லவோ? நல்ல பாடல்களை அற்பர்கள் விஷயத்திலே உபயோகப்படுத்தலாகாதென்று அறிவீர்களோ? அஸ்தானத்திலே அருமருந்தன்ன வாக்கைச் செலுத்தலாமோ? என்பது குறிப்பு.

இழியக்கருதி = நரஸ்துதிகளினால் நீங்கள் ஏதோ உயர்த்தியை அடையவேணுமென்று கருதினாலும் உண்மையில் அதோகதியையடையக் கருதுவதாகவே எனக்குப் புலப்படுகிறது என்று காட்டுகிறபடி. “அறிவுடையரானால் நின்ற நிலைக்கு மேலே ஓர் ஏற்றம் தேடிக்கொள்ளுமதொழிய, கீழே போய் அதிபதிக்கத் தேடீவார் உண்டோ?” என்பது ஈடு.

ஓர் மானிடம் பாடல் என்னாவது = ஒரு அற்பனைப் பாடுகை உங்களுடைய விவேகத்திற்குச் சேருமா? அதனால் உங்களுக்குத்தான் ஒரு பிரயோஜனமுண்டோ? கவிக்குத்தான் ஏற்றிருக்கிறதோ? எதற்காக அநியாயமாய்ப் பாடுகிறீர்கள் என்றவாறு.

 

English Translation

O Poets of sweet heavenly excellence!  When the Lord of the celestials, Our Lord is there to show the way for all times, you stop to sing a mortal's praise! Of what use is it?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain