(3209)

சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ,

என்னாவில் இன்கவி யானொருவ ர்க்கும் கொடுக்கிலேன்,

தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து,

என்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே.

 

பதவுரை

இது

-

இப்போது நான் சொல்லும் ஹிதவார்த்தையானது

சொன்னால்

-

சொல்லப்படுமாகில்

விரோதம்

-

உங்களுக்கு அநிஷ்டமாக இருக்கும்

ஆகிலும்

-

ஆனாலும்

சொல்லுவன்

-

(உங்கள் அநர்த்தத்தைப் பொறுத்திருக்கமாட்டாமையினால் சொல்லியே தீர்வேன்.

கேண்மின்

-

காது கொடுத்துக்கேளுங்கள்;

வண்டு

-

வண்டுகளானவை

தென்னா தெனா என்று

-

தென்னா தென்னாவென்று ரீங்காரஞ் செய்யப்பெற்ற

திருவேங்கடத்து

-

திருமலையிலே

என் ஆனை

-

என்னுடைய யானை போன்றவனும்

என் அப்பன்

-

எனக்கு மஹோபகாரகனுமான

எம்பெருமான்

-

ஸ்வாமி

உளன் ஆக

-

என் கவிக்கு இலக்காயிருக்கும்போது

என் நாவில் இன் கவி

-

எனது நாவினின்று உண்டான மதுரமான கவிகளை

யான்

-

நான்

ஒருவர்க்கும்

-

வேறொருவர்க்கும்

கொடுக்கிலேன்

-

கொடுக்கமாட்டேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  வேறு சிலரைக் கவி பாடுகின்றவர்களுக்கு ஹிதமுரைக்க இழிந்த ஆழ்வார் அவர்களுக்கு ருசி பிறக்கைக்காகத் தம்முடைய மதத்தை முந்துறமுன்னம் அருளிச் செய்கிறார். தொடங்கும்போதே ‘சொன்னால் விரோதமிது’ என்கிறார்- நீங்கள் சில பிரயோஜனங்களை நினைத்து நரஸ்துதரி செய்யாநிற்க. அதைத் தவிருமாறு நான் உரைக்குமிது உங்களுக்கு விரோதமாகவேயிருக்கும் என்றபடி. மூலத்தில் “சொன்னால் விரோதம்” என்றுள்ளதே யல்லது, இன்னார்க்கு விரோதம் என்று ஸ்பாஷ்டமாக இல்லை; உங்களுக்கு விரோதமாகும்’ என்பது போலவே ‘சொன்னால் எனக்கு விரோதமாகும்’ என்பதாகவும் கொள்ளலாம். இவர்க்கு என்ன விரோதம் என்னில்; நரஸ்துதியைப் பற்றி நெஞ்சினால் நினைப்பதும் வாயினாற் சொல்வதுமே தமக்கு ஸ்வரூப விரோதம் என்று இவர் திருவுள்ளம்.

ஆகிலும் சொல்லுவன் = சொன்னால் விரோதமேயாகிலும் நீங்கள் படும் அநர்த்தம் பொறுத்திருக்கமாட்டாமையாலே சொல்லாதிருக்கில்லேன் - தன் பக்கலிலே விபரீத புத்தியைப் பண்ணி நிற்கிற பாபிஷடனான ராவணனைக் குறித்துப் பிராட்டி ஹிதோபதேசம் பண்ணினாற்போலவும், பாபிகளில் தலவைனான இரணியனைக் குறித்தும் அஸுரபுத்திரர்களைக் குறித்தும் ப்ரஹ்லாதாழ்வான் ஹிதோபதேசம் பண்ணினாப்போலவும், தன்னைத் திரஸ்கரித்த ராவணனைக் குறித்து விபீஷணாழ்வான் ஹிதோபதேசம் பண்ணினாப்போலவும் விமுகரானாரையுங் குறித்து ஆழ்வார் ஹிதோபதேசம் பண்ணுகிறார். அவர்களையும் விடமாட்டாத நகையாலே.

கேண்மினோ = பால்குடிக்கக் கால்பிடிப்பாரைப்போலே அவர்களுடைய ஸ்வரூப லாபத்திற்குத் தாம் யாசகராய் நிற்கிறார். நான் சொல்வதைக் கேட்டபின் அப்படியே அனுட்டிக்க வேண்டி வருமே என்று நீங்கள் சிந்திக்கவேணடா; அனுட்டிக்கவுமாம், அனுட்டியா தொழியவுமாம்; என் பேச்சுக்குக்காது கொடுத்தால்  போதும் என்கிறார். கடலோசைக்குக் காது கொடுக்கிற நீங்கள் அப்படியே என் வார்த்தைக்கும் காது கொடுக்கலாகாதோ வென்கிறார்.

“ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ” என்று அவர்களுக்கு ஏதோ ஹிதமருளிச் செய்பவர் போலத் தொடங்கின ஆழ்வார் (அடுத்த அடிகளில்) அவர்கள் செய்ய வேண்டியதை அருளிச் செய்யாமல் தம்முடைய நிலைமையைப் பேசுகிறார். ‘நாங்கள் இருக்க வேண்டிய நிலைமையைப் பற்றி நீர் எதுக்குச் சொல்லுகிறீர்?’ என்று அவர்கள் சீறுவர்களோவென்கிற அச்சத்தினால் போலும். வழி தவறிப் போமவர்கள் வழியே போவானொருவனைக் கண்டால் நாமுமப்படியே போகவேணுமென்று ஆசைப்பட வேண்டாவோ? நான் இருக்கிறபடி கண்டீர்களே; இப்படியேயன்றோ நீங்களுமிருக்கவேணும் என்கைக்காகச் சொல்லுகிறபடி.

என்னாவில் இன்கவி = ஆழ்வாருடைய கவியானது விஷய வைலக்ஷண்யத்தாலே தம்மையும் ஈடுபடுத்துகிறதாயிற்று. “பாலேய்தமிழரிசைகாரர் பத்தர்பரபுமாயிரம்” “ஆயிரத்துளிப்பத்துள் கேட்டு ஆராய்வார்கள் செவிக்கினிய செஞ்சொல்லே’ “யானாய்த் தன்னை தான்பாடித் தென்னாவென்னுமென்னம்மான்” என்று தமிழ்ப் பண்டிதர்கட்கும் இசைக்காரர்கட்கும் பக்திமான்களுக்கும் நித்யஸூரிகளுக்கும் எம் பெருமானுக்கும் போக்யமாகிற முகத்திலே ஆழ்வார் தமக்கும் (தம் கவி) போக்யமாவது குற்றமன்று.

யான்  ஒருவர்க்கும் கொடுக்கிலேன்.-எம்பெருமானொருவனையே துதிக்கப் பிறந்த நான் வேறொருவரையும் துதிக்கமாட்டேன் என்றபடி. ‘எம் பெருமானையே துதிப்பேன்’ என்று அந்வயமுகத்தாலே சொல்லாமல் இப்படி வ்யதிரேக முகத்தாலே சொல்லுவதில் ஒரு கருத்து விசேஷமுண்டு; எம்பெருமானைத் துதியாமலிருந்தாலுமிருக்கலாம், பிறரைத் துதிக்கலாகாது என்பதாம். “மறந்தும் புறந்தொழமாந்தர்” என்றும் “கடன்மல்லைத் தசையனத்துறைவாரை எண்ணாதே யிருப்பாரை இறைப்பொழுது மெண்ணோமே” என்றும், “கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்கழல்சூடி யவனை யுள்ளத்து, எண்ணாதமானிடத்தை யெண்ணாதபோதெல்லாமினியவாறே” என்றுமுள்ள பாசுரங்கள் காணத்தக்கன.

திருவேங்கடமுடையானே என் கவிக்கு விஷயமாகக் கூடியவன் என்கிறார் பின்னடிகளால், எம்பெருமானை வருணிப்பதோடு அவன் எழுந்தருளியிருக்கும் தலத்தை வருணிப்பதோடு அங்குள்ள சேதநாசேதநங்களை வருணிப்பதோடு வாசியற எல்லாம் தமது கவிக்குப் பரமோத்தேச்யம் என்னுமிடத்தைப் பின்னடிகளில் ஆழ்வார் காட்டியிருக்குமழகு காணத்தக்கது.

என் ஆனை = அநுபவ ரஸிகர்களான ஆழ்வார்கள் எம்பெருமானை யானையாகப் பல விடங்களிலும் பேசுவர்கள். யானைக்கும் எம்பெருமானுக்கும் பல படிகளாலே ஸாம்யமுண்டு; அது நமது ஸ்வாபதோசார்த்தஸாகரத்தில் காணத்தக்கது.

 

English Translation

Tis hard to say this but say it I must, so listen. Since the Lord of bee-humming Venkatama hill is my Lord, my father and my mother, I refuse to dedicate my sweet songs to anyone else.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain