(2953)

மாலே மாயப் பெருமானே மாமா யனே என்றென்று

மாலே யேறி மாலருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்

பாலேய் தமிழ ரிசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்

பாலே பட்ட இவைபத்தும் வல்லார்க் கில்லை பரிவதே.

 

பதவுரை

மாலே

-

பெரியோனே!

மாயம் பெருமானே

-

ஆச்சரியகுணநிதியே!

மா மாயனே

-

மஹத்தான ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையவனே!

என்று என்று

-

என்று இங்ஙனம் பல விதங்களான திருநாமங்களைச் சொல்லி

மாலே ஏறி

-

பித்தம் பிடித்து

மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன்

-

ஸர்வேச்வரனது க்ருபையினால் பொருந்தப்பெற்ற திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்

பால் ஏய் தமிழர்

-

(அருளிச்செய்ததான) பாலுக்குச் சமானமான இனிமையுள்ள தமிழில் வல்லவர்களென்ன

இசைகாரர்

-

இசையறிந்து பாடவல்லவர்களென்ன

பத்தர்

-

பக்திமான்களென்ன ஆகிய இவர்களல்லாரும்

பரவும்

-

கொண்டாடும்படியமைந்த

ஆயிரத்தின் பால்

-

ஆயிரம் பாட்டினுள்

பட்ட

-

தோன்றின

இவை பத்தும்

-

இந்தப் பத்துப்பாட்டையும்

வல்லார்க்கு

-

ஓதவல்லவர்களுக்கு

பரிவது இல்லை

-

யாதொரு துக்கமும் உண்டாகமாட்டாது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத் திருவாய்மொழியைக் கற்பார்க்கு ஒருவகைத் துன்பமும் நேரிடாதென்று பயனுரைத்துத் தலைகட்டுகிறார். எம்பெருமான் ஸேவை ஸாதிக்கவர ‘நான் அயோக்யன்’ என்ற அகன்று தாம் பட்ட வருத்தங்கள் இத் திருவாய்மொழி கற்பார்க்கு உண்டாக்கமாட்டாவென்றவாறு.

தாம் இப்படிப்பட்டரென்றால், மாலே! மாயப்பெருமானே! மாமாயனே! என்றிப்படி அநேகந் திருநாமங்களை வாயாரச் சொல்லிப் பித்தம் பிடித்து ஸர்வேச்வரனுடைய க்ருபையினாலேயே பொருந்தப் பெற்றவர் என்கிறார். ஸ்ரீபாஷ்யத்தில் ப்ரஹ்மகப்தத்தை வியாக்கியானித்தருளிநின்ற ஸ்ரீபாஷ்யகாரர் எம்பெருமானுக்கு இரண்டு வகைகளாலே பெருமையை உபபாதித்தார்; ஸ்வரூபத்தாலே ஒரு பெருமையும் குணங்களாலே ஒரு பெருமையுமாக, அப்படியே இங்கும் மாலே! என்றது ஸ்வரூபத்தால் வந்த பெருமையைச் சொன்னபடி. மாயப்பெருமானே! என்றது குணங்களால் வந்த பெருமையைச் சொன்னபடி. இனி, மூன்றாவதான ஒரு பெருமையையும் ஆழ்வாரருளிச் செய்கிறார் மாமாயனே! என்று; இது சேஷ்டிதங்களால் வந்த பெருமையைச் சொன்னபடி. என்றென்று என்றது- தாம் அநுஸந்தித்த திருநாமங்களுக்கு எல்லையில்லாமை காட்டினபடி. மாலே ஏறி = நான் அயோக்யன்’ என்ற அகலும்படியான ஒரு பித்தம் தலையெடுத்ததே, அதைச் சொன்னபடி. என்னத் தனச்சனரங்கனுக் கடியார்களாகி அவனுக்கே பித்தராமவர்” என்று சொல்லப்பட்ட பித்தமாகவுமாம்.

அருளால் மன்னு குருகூர்ச்சடகோபன் = ஆழ்வார் எம்பெருமானது திருவருளாலே ஸத்தைபெற்றவர் என்கிற பரமார்த்தத்தைச் சொல்லுகிறபடியாகவுமாம்; தாம் அகன்ற போகப்புக, சீலகுணத்தைக் காட்டிப் பொருந்தவிட்டுக்கொண்ட சிறப்பைச் சொல்லுகிறபடியாகலுமாம். “தன்னை முடித்துக்கொள்வதாகக் கழுத்திலே கயிற்றையிட்டுக்கொண்டவனை அறுத்து விழ விடுவாரைப் போலே, அகன்று முடியப்புக்க விவரைப் பொருந்த விட்டுக்கொள்ள அவனருளாலே பொருந்தி வாழ்வார்” என்பது நம்பிள்ளையீடு.

(பாலேய் தமிழர் இத்யாதி.) சிறந்த தமிழ்க்கவிதைகளைக்கொண்டு போதுபோக்க வேணுமென்றிருப்பார்க்கு இத் திருவாய்மொழியே தஞ்சம்; நல்ல இசைகளைப் பாடிப் போதுபோக்கவேணுமென்றிருப்பார்க்கும் இத் திருவாய்மொழியே தஞ்சம்; *குருகையர் போன் யாழினிசை வேதத்தியலாதலால் பகவத் குணாநபவத்திலிழிந்து பக்திரஸமே போதுபோக்காக இருக்கவேணுமென்பார்க்கும் திருவாய்மொழியே தஞ்சம் என்றவாறு. “பாலே தமிழரென்று முதலாழ்வார்களை விவக்ஷித்தபடி; இசை காரரென்று திருப்பாணாழ்வாரை விவக்ஷித்தபடி” என்று ஆளவந்தார் அருளிச் செய்வராம். ஸ்ரீபராங்குச நம்பியைப் பாலேய்தமிழரென்கிறது; ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையரை இசைகாரரென்கிறது“ பிள்ளையுறங்காவில்லி தாஸரைப் பத்தரென்கிறது”  என்று ஓருருவிலே கூரத்தாழ்வானருளிச் செய்தாராம்.

ஆயிரத்தின்பாலேபட்ட இவைபத்தும்= திருவாய்மொழி யாயிரமும் மிகச் சிறந்ததாகவே யிருக்கச்செய்தேயும் இந்தத் திருவாய்மொழியையும் மற்றவற்றையும் பார்க்குமிடத்து, மற்றவை கடல்போலவும் இது முத்துபோலவு மிருக்கும் என்ற கருத்து இதில் தொனிக்கும். ‘கடலில் முத்துப்பட்டது’ என்னுமாபோலேயன்றோ இங்குப் பிரயோகமிருப்பது.

பரிவது இல்லை = பரிவு துயரம். ‘அது’ என்பது முதல் வேற்றுமைச் சொல்லுருபு. இத் திருவாய்மொழியை ஓத வல்லார்க்கு ஒரு துக்கமுமில்லை யென்றாராயிற்று.

 

English Translation

This decad of the thousand songs of kurugur satakopan, praised by musicians, devotees and poets, a like fondly addresses the Lord of wonders, full of grace. Those who sing it will never suffer on earth.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain