(2951)

மாயோம் தீய அலவ லைப் பெருமா வஞ்சப் பேய்வீய

தூயகுழவி யாய்விடப்பால் அமுதா அமுது செய்திட்ட

மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்த னெவ்வுயிர்க்கும்

தாயோன் தம்மா னென்னம்மான் அம்மாமூர்த்தி யைச்சார்ந்தே.

 

பதவுரை

தீய

-

கொடிய  நினைவையுடையவளாய்

அலவலை

-

பஹுஜல்பிதங்களையுடையவளாய்

பெரு மாவஞ்சம்

-

மிகப்பெரிய வஞ்சகையான

பேய்

-

பூதனையானவள்

வீய

-

முடியும்படி

தூய் குழவி ஆய

-

பசுங்குழந்தையாகி

விடம்பால் அமுது ஆ

-

(அந்தம் பூதனையின்) விஷங்கலந்த பால் அமிருதமாம்படி

அமுது செய்திட்ட

-

அமுது செய்த

மாயன்

-

ஆச்சரியஸ்வபாவனுடன்

வானோர் தனி தலைவன்

-

நித்ய ஸூரிகளுக்கு அத்விதீயநாதனும்

மலராள் மைந்தன்

-

திருமகள் கொழுநனும்

எவ் உயிர்க்கும் தாயோன்

-

எல்லாவுயிர்களுக்கும் தாய் போன்றவனும்

தம்மான்

-

தனக்குந்தானே ஸ்வாமியும்

என் அம்மான்

-

எனக்கு ஸ்வாமியும்

அம்மா மூர்த்தியை

-

அப்படிப்பட்ட மேலான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனுமான பெருமானை

சார்ந்து

-

கிட்டி

மாயோம்

-

இருவரும் மாயாது வாழக்கடவோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் எம்பெருமான் வெண்ணெயின் ப்ரஸ்தாவமெடுத்து ஆழ்வார் வாயை மூடுவித்தானே; அதற்குமேல் ஆழ்வார்- ‘எம்பெருமானே! திருவாய்ப்பாடியில் வெண்ணெய் உனக்குப் பரமயோக்யமென்பது மெய்யே; ஒப்பற்ற பரிவுடைய யசோதைப்பிராட்டி முதலானாருடைய வெண்ணை யாகையாலே அஃது உனக்கு அமுதமாயிருக்கும்; பாபியான என்னுடைய ஸம்பந்தம் உனக்கு விஷயமாயிருக்குமே, என்றார்; அதுகேட்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்! அப்படி விஷமானாலும் நமக்குக் குறையில்லை காணும்; பூதனையின் கதை உமக்குத் தெரியாமையில்லையே; அவளுடைய விஷமும் நமக்கு அமுதமாயிற்றன்றோ; அதுபோலவே உம்மால் விஷமென்று நினைக்கப்படுவதும் எனக்கு அமுதமேயாகத் தடையில்லை’ என்று சொல்லிக் கொண்டு ஆழ்வாரது திருமேனியை மேல்விழுந்து கைக்கொள்ள, இனி அகல்வேனல்லேனென்று பொருந்துகிறாரிதில், “விடப்பாலமுதா அமுது செய்திட்ட மாயன்” என்று இப்பாட்டிலுள்ள சொற்போக்குக்கு இந்த அவதாரிகை இணங்கியதே.

பாட்டின் தலையிலுள்ள மாயோம்” என்று அந்வயம். பிரிகை யென்றும் மாய்கை யென்றும் பரியாயம். இனிமேல் ஒருகாலும் பிரிந்து தொலையக்கடவோமல்லோம் என்கிறார். ‘மாயோன்’ என்று ஒருமையாகச் சொல்லாமல் பன்மையாகச் சொன்னதனால் எம்பெருமானையுங் கூட்டிக்கொண்டு சொல்லுகிறாரென்பது பெறப்படும். சேதநனைவிட்டுப் பிரிவது எம்பெருமானுக்கு மாய்பு; எம்பெருமானை விட்டுப் பிரிவது சேதனுக்கு மாய்வு. இருவரும் கூடியே யிருந்திட்டால் ஒருவர்க்கும் மாய்வில்லை யாதலால் ‘அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றியாயிரம் பல்லாண்டு’ என்றாராயிற்று.

‘தீயவலவலைப் பெருமாவஞ்சம்’ என்னுமளவும் பேய்ச்சிக்கு விசேஷணம்:- *ஒருத்தி மகனாய்ப்பிறந்து ஓரிரவி லொருத்திமகனா யொளித்து வளர்கின்ற ஸ்ரீகிருஷ்ண சிசுவை நாடி யுணர்ந்து கொல்லும்பொருட்டுக் கஞ்சன் பல அசுரர்களை ஏவ, அவர்களில் ஒருத்தியான பூதனை யென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ண சிசுவை யெடுத்துத் தனது நஞ்சுதீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்ல முயல பகவானாகிய குழந்தை அவ்வரக்கியின் ஸ்தனங்களைக் கைகளால் இறுகப் பிடித்துப் பாலுண்கிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தருளினன் என்பது பேய்வீயத் தூயகுழவியாய்விடப் பாலமுதாவமுது செய்திட்ட வரலாறு.

அலவவலை = அளவுகடந்து வார்த்தை சொல்லுகிறவனுக்கு ‘அலவலை’ என்று பெயர்; பூதனை யசோதையின் உருக் கொண்டுவந்து யசோதைபோலவே பரிவு தோற்றப்பல வார்த்தைகளுஞ் சொன்னதுபற்றி அவளை இங்கு அலவலை யென்றது (தூயதுழவியாய்) ஈச்வரத்தன்மை கலசாத வெறுங் குழந்தையாய் என்றபடி. ஈச்வரத்தன்மையில்லையாகில் விஷத்தால் முடிந்திருக்க வேண்டுமே; அதனை அமுதமாக அமுது செய்தமை எங்ஙனே? என்னில்; “விஷம் அம்ருதமாம் முஹுர்த்தத்திலேயாயிற்று பிறந்தது” என்கிறார் நப்பிள்ளை. பூதனை முதலானோர் இவனுடைய ஈச்வரத்தன்மையினால் முடிந்தார்களல்லர்; இவன் பிறந்த முஹுர்த்தத்தின் வன்மையால் முடிந்தார்களத்தனை என்றபடி. இது ரஸோக்தி.

(விடப்பால் அமுதாவமுது செய்திட்ட.) “ஸ்தந்யம் தத் விஷஸம்மிச்ரம் ரஸ்யமாஸுத் ஜகத்குரோ” என்ற (ஹரிவம்ச) ப்ரமாணத்தை அடியொற்றி அருளிச் செய்தபடி. இப்படி அமுதசெய்த மாயனும், நித்யஸூரிகளுக்கு அத்விதீய நிர்வாஹனும், தாமரையைப் பிறப்பிடமாகவுடைய பிராட்டிக்கு போக்யமான யௌவனத்தை யுடையவனும், ஸகலாத்மாக்களுக்கும் தாய்போல் பரிவனும் தனக்குத்தானே கடவனும், என்னை அகலவொட்டாமல் இழுத்துப் பிடித்துக்கொண்டே ஸ்வாமியும், அதுக்கடியான விஷக்ஷண விக்ரஹத்தை யுடையனுமான பெருமானை அணுகி இனி ஒருகாலும் பிரியக் கடவேனல்லேன் என்றாராயிற்று.

 

English Translation

The peerless Lord of celestials, our Lord and protector is the spouse of Sri; a beautiful great form compassionate like a mother to all creation; with the innocence of a child he sucked the poisoned breast of the fierce ogrees putana, and drank her life to the bones.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain