(2949)

அடியேன் சிறிய ஞானத்தன், அறித லார்க்கு மரியானை

கடிசேர் தண்ணந் துழாய்க்கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை

செடியார் ஆக்கை யடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை

அடியேன் காண்பான் அலற்றுவன், இதனில் மிக்கோர் அயர்வுண்டே?

 

பதவுரை

சிறிய ஞானத்தன்

-

அற்ப ஞானத்தையுடையவனாகிய

அடியேன்

-

நான்

காண்பான்

-

காணும்பொருட்டு

அலற்றுவன்

-

கூவுகின்றேனே!

இதனில் மிக்கு

-

இதனிலும் மேற்பட்டு

ஓர் அயர்வு உண்டே

-

ஒரு அவிவேகமுண்டோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் ‘நைவன்’ என்ற ஆழ்வாரை நோக்கின எம்பெருமான் ‘இனி நாம் இவர்க்கு முகங்காட்டாதிருந்தால் இவர் முடிந்துவிடக்கூடும்’ என்றெண்ணி இவர்க்கு முகங் காட்டுவதாகத் திருவுள்ளம்பற்ற, அஃதறிந்த ஆழ்வார் பின்னையும் அவனது பெருமையையும் தமது சிறுமையையும் சிந்தித்துப் பின்வாங்குதலைத் தெரிவிக்கும் இந்தப் பாசுரம்.

நானோ மிகவும் அற்பமான ஞானம்படைத்தவன்; எம்பெருமானோ எப்படிப்பட்ட ஸர்வஜ்ஞர்களுடைய அறிவுக்கும் எட்டாதவன்; போக்யதையைப் பார்த்தாலோ *தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுடையான்; அறிதலார்க்கு மரியானாயிருந்து வைத்து இடையர்க்கும் இடைச்சிகட்கும் தன்னை எளியனாக்கி வைத்தவன்; தன்னையே உபாயமாகப் பற்றி ‘ஜராமரணமோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே” என்கிறபடியே சரீரஸம்பந்தத்தை அறுத்துக்கொள்ள நினைக்கும் கைவல்ய காமுகர்களுக்கு அதனைத் தவிர்த்துக் கொடுக்கும் ஸ்ரீமான். அப்படிப்பட்ட விலக்ஷணனான அவனைக் காணவேணுமென்று நீசரிற் கடைகெட்ட நாயேன் அலற்றுகின்றேனே; இதைக்காட்டிலும் மூடத்தனம் வெறுண்டோ? என்கிறார்.

இப்பாட்டில் ஆழ்வார் எம்பெருமானுக்கு அடிமைசெய்யத் தாம் தகுதியற்றவர் என்பதை வெளியிட்டுக் கொண்டே தொடக்கத்தில் அடியேன் என்கிறாரே,  இது பொருந்துமோ? என்றொரு சங்கை. இதற்கு சமாதானம்:- அடியேனென்கிற வார்த்தை மநஸ்கரித்துச் சொன்னதன்று; தமக்கு அடிமையுள்ளதாகவொரு அநாதி வாஸநை யிருக்கையாலே அது சொல்லுவிக்கிற வார்த்தை; உலகத்திலும் ஆசார்ய சிஷ்யர்களுக்கும் ஒரு விவாத முண்டாகி சிஷ்யன் ஆசார்யனைக்கடிந்து சொல்லச் செய்தேயும் அவன் வாக்கில் அடியேனென்கிற சொல் பரவசமாக அடிக்கடி வருவதைப் பார்க்கலாம். ‘தேவரீர் இப்படிச்செய்தால் அடியேனுக்கு ப்ரமாதமான கோபம் வரும்’ என்கிறான்; ‘கோபம் வரும்’ என்கிற வார்த்தைக்கும் ‘அடியேன்’ என்கிற வார்த்தைக்கும் எவ்வளவு தூரமுண்டு? சிறிதேனும் பொருத்தமுண்டோ? இல்லையாயிருக்கவும் சொற்பழக்கத்தினாலன்றோ அடியேன் என்று அந்த விவாத ஸமயங்களிலும் வாக்கில் வந்துவிடுகிறது; அது போலவே இங்கும் ஆழ்வார் அடிமைக்கு இறாய்க்கச் செய்தேயும் வாஸநா பலத்தாலே அடியேனென்று மெய்மறந்து சொல்லிவிட்டார் என்பது ஒரு ஸமாதானம். அன்றியே, இப்போது அடியேனென்றது அடிமைத் தொழில் செய்யத் தமக்கு அர்ஹதையுண்டென்று இசைந்து சொல்லுகிற வார்த்தையன்று; ஜீவாத்மாவுக்கு ஞானம் ஆனந்தம் எனகிற குணங்கள் இருப்பதுபோல சேஷத்வமென்கிற ஒரு குணமுமிருப்பதாக ஸ்வரூபத்தை ஆழ்வார் அறியாதவராதலால் அஹம் என்று சொல்லுகிற ஸ்தானத்திலே அடியேனென்கிறாரத்தனை என்பது மற்றொரு ஸமாதானம்.

செடியாராக்கையடியாரைச் சேர்தல் தீர்க்குந்த திருமாலை என்கிற மூன்றாமடி மிகவும் ஆழ்ந்த கருத்தை யுட்கொண்டது; (செடியாராக்கை சேர்தல் தீர்க்கும்) பிறப்பதும் இறப்பதுமாகிய ஸம்ஸார பந்தத்திற்கு மூலமான  சரீர ஸம்பந்தத்தைப்போக்கித் தருமவன் என்று பதப்பொருள். இங்ஙனே, சரீர ஸம்பந்தம் மறுபடியும் என்றைக்க முண்டாகாதபடி பகவான் அருள்புரிவது கைவல்ய மோக்ஷத்தை விரும்புகின்றவர்களுக்கு முண்டு. பரமபதத்தை விரும்புகின்றவர்களுக்குமுண்டு. வாசி என்னவென்னில்; சரீர ஸம்பந்தத்தைப் போக்கிக் கொடுப்பதுடன் தன்னடிக் கீழ்ச் சேர்த்துக் கொள்வதாகிற சிறந்த புருஷார்த்தத்தையுங் கொடுப்பதுண்டு மோக்ஷார்த்திகளுக்கு. கைவல்யார்த்திகளுக்கோ வென்னில் அது கிடையாது. இவ்விடத்தில் செடியாராக்கை யடியாரைச் சேர்தல் தீர்க்குமென்றது மேற்சொன்ன இருவகைப்பட்ட அதிகாரிகட்கும் ஒக்குமாயினும் இங்குக் கைவல்யார்த்திகளையே விவக்ஷித்துச் சொல்வதாகக் கொள்வதே பிரகரணத்திற்கு நன்கு பொருந்தும். ஆறாயிரப்படியில்- “இவனைக் காணவேணுமென்று ஆசைப்படாதே இவன் பக்கலிலே கைவல்யாதி ப்ரயோஜநங்களைக் கொண்டு அகன்று போமவர்கள் என்ன பாக்யம் பண்ணினாரோ? நானும் அங்ஙனேயாகப்பெற்றிலேனே! என்று நோகிறா” என்று பிள்ளான் பணித்தது பரமபோக்யம் கைவல்ய மோக்ஷத்தையும் அதனை விரும்புகின்ற அதிகாரிகளையும் ஆழ்வார் பலவிடங்களிலும் நிந்திப்பவரே யானாலும் இங்கு ஒருவாறு புகழ்ந்து கூறுகின்றாரென்பது உட்கருத்து. எம்பெருமானைக் கிட்டி அவனுக்கு ஒரு அவத்யத்தை விளைக்கப்புகாமல் தங்களளவிலே தாங்கள் நிற்கிறார்களன்றோ அந்தக் கைவல்யார்த்திகள்; இது மிகவும் பாங்கு என்பது இங்கு ஆழ்வார் திருவுள்ளம். இங்கு பரம போக்யமான நம்பிள்ளையீடு காண்மின்:-

“ஜராமரணமோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே என்று அவனையே உபாயமாகப் பற்றி தூறுமண்டின் சரீரத்தை யறுத்துக் கொள்ளுமடியாருண்டு- கேவலர், அவர்களுக்கு அத்தைத் தவிர்த்துக் கொடுக்கும் ஸ்ரீமானை. அவர்கள் பின்னை அடியாரோவென்னில்; ‘அடியாராவர் அவர்களே’ என்கிறருக்கிறார். * என்றியவென்னில்(ஏனென்னில் என்றபடி), சேஷிக்கு அதிசயத்தை விளைக்குமவர்களிறே சேஷபூதராகிறார். என்னைப் போலே கிட்டி அவனுக்கு அவத்யத்தை விளைக்கப்பாராதே ஸம்ஸார ஸம்பந்தத்தை அறுத்துக்கொண்டு கடக்க நிற்கிறவர்களிறே.”

அடிமைத் தொழிலை விரும்பாதவர்களான கைவல்யார்த்திகளை இங்கு அடியாரென்னலாமோ? என்கிற சங்கைக்கும் பரிஹாரம் மேலே காட்டிய நம்பிள்ளை ஸ்ரீஸூக்தியில் மூன்றாமடியில் கைவல்யார்த்திகளைப் புகழ்ந்து கூறுதல் சொல் கொடையில் சிறிது மில்லையாயினும், சொற்செறிவில் அது நன்கு தொனிக்கும். இது பரிகாரலங்காரா மரியாதை.

கைவலயார்த்திகளே சிறந்தவர்களென்று அவர்களைக் கொண்டாட வேண்டும்படியாக உமக்கு இப்போது என்ன இழிவு வந்துவிட்டதென்ன; அடியேன் காண்பானவற்றுவன் என்கிறார். எம்பெருமானை ஸேவிக்கத் தகாத நீசனாகிய நான் அவனை ஸேவிக்க வேணுமென்று அலற்றுகின்றேனல்லவா; இது அவனுக்கு அவத்யமன்றோ? இப்படி அந்தக் கைவல்யார்த்திகள் அலற்றுகின்றார்களில்லை யன்றோ என்றபடி.

இதனின்மிக்கு ஓரயர்வுண்டே? = கீழுள்ள காலங்களில் *மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து நித்ய ஸம்ஸாரியாய்த் தொலைந்தேனே. அந்த நிலைமையிலிருந்த அவ்விவேகமே நன்றுபோலும்; அப்போது நான் எம்பெருமானைக்கிட்டி அவனுக்கு நிறக்கேடு உண்டாக்கப் பார்த்திலேனே. *மயர்வறமதிநலமருளப்பெற்ற இப்போதன்றோ அவனுக்கு நான் அவத்யம் விளைப்பது; இதிற்காட்டில் அவிவேகமுண்டோ! என்கிறார். நைச்சியாநுஸந்தானத்திற்கு இப்பாசுரந்தான் எல்லை நிலம். இதற்கு மேற்பட நைச்சியம் அநுஸந்திக்க வழியில்லையென்க.

 

English Translation

My Lord, Tirumal, wearing the fragrant Tulasi garland! My Krishna, you release devotees from weed-like mortal bondage.Alas!  when even great minds fall to understand him, I, of lowly intellect, weep to see him; can there be a grater folly than this?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain