(2947)

மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா

கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!

வானார் சோதி மணிவண்ணா. மதுசூ தாநீ யருளாய் உன்

தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே.

 

பதவுரை

மான் ஏய் நோக்கி மடவாளை

-

மானை நிகர்த்த பார்வையையுடையவளாகிய பெரியபிராட்டியை;

மார்பில் கொண்டாய்

-

திருமார்பிலே உடையனாய் (அது காரணமாக)

மாதவா

-

மாதவனென்ற திருநாமம் பெற்றவனாய்

கோவிந்தா

-

கோவிந்தனே!

வான் ஆர் சோதி

-

வானுலகம் இடமடையும்படியான ஒளியையுடைய

மணிவண்ணா

-

நீலமணிபோன்ற நிறமுடையவனே!

மதுசூதா

-

மதுவென்னு மசுரனைக் கொன்றவனே

கூனே சிதையா

-

(கூனியின்) கூன் ஒன்றே நிமிரும்படி (மற்ற ஒரு அவயவத்திற்கும் வாட்ட முண்டாகாதபடி)

உண்டை வில் நிறத்தில்

-

சுண்டுவில்லை நிமிர்க்கிற ரீதியிலே (சிறிதும் சிரமமின்றி)

தெறித்தாய்

-

நிமிர்த்தவனே!

நீ

-

நீ

உன்

-

உன்னுடைய

தேனே மலரும் திரு பாதம்

-

தேனோடு கூடி மலர்கின்ற திருவடித் தாமரைகளை

வினையேன்

-

பாபியான நான்

சேரும் ஆறு

-

கிட்டுப்படியாக

அருளாய்

-

கிருபைபண்ணவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டுக்கு இரண்டுவகையான அவதாரிகை கூறுவர்;  முதலிற் பண்ணின நைச்சியாநுஸந்தானம் தலைமடிந்து எம்பெருமான் விஷயத்திலே சிறிது ஆபிமுக்கியத்தைக் கீழ்ப் பாசுரத்திற்காட்டின ஆழ்வார் என்னை ஏவி அடிமை கொள்ளவேணுமென்று இப்பாட்டில் பிரார்த்திக்கின்றாரென்பது ஒரு அவதாரிகை ஆழ்வார்க்கு இப்போதுண்டான ஆபிமுக்கியம் நிலைத்திருக்கவேணுமென்றும். இவரைத் துடிக்கவிட்டே சேர்த்துக்கொள்ள வேணுமென்றுங் கருதிய எம்பெருமான் முகங்காட்டாதே மறைய நிற்க, அது தாளாமல் ‘அருவாய்’ என்று பிரார்த்திக்கிறாரென்பது மற்றொரவதாரிகை.

மான்பேடையினது நோக்குப் போன்ற நோக்கை யுடையளான ஸ்ரீமஹாலக்ஷ்மியைத் திருமார்பிலே கொண்டு அதனால் மாதவனென்னுந் திருநாமமுடையோனே! கூனி கூன் நிமிர்ந்த கோவிந்தனே!, பரமபதம் நிரம்பும்படியான தேஜஸ்ஸையும் நீலமணிபோன்ற நிறத்தையுமுடையவனே!, மதுசூதனே!, உன்னுடைய பரம போக்யமான திருவடிகளை நாயினேன் பெறும்படி அருள்புரியவேணுமென்கிறார்.

சேதநர்கட்குப் புருஷகாரஞ் செய்வதையே தொழிலாகவுடைய பெரிய பிராட்டியார் திருமார்பிலே நித்ய ஸந்நிதாநம் பண்ணியிருக்கும்போது அருளாமைக்குக் காரணமில்லை! என்பார்போன்று முதலடி யருளிச்செய்தார்.

முதலடியிலுள்ள இரண்டு விளிகளில் ஏதேனும் ஒன்று போருமே; அர்த்தபேதமின்றியே இரண்டு விளிகள் ஏதுக்கு? - என்று சிலர் நினைக்கக்கூடும்; அந்த சங்கைக்குப் பரிஹாராமாக நம்பிள்ளை அருளிச்செய்வது:- “மாம்பழத்தோடு ஒரு ஸம்பந்தமின்றிக்கே யிருக்கச்செய்தே அப்பேரைத் தரிக்குமாபோலேயிறே இவனையொழிய ஸ்ரீமானென்னும் பேரைத் தரிக்கிறவர்கள். அங்ஙனன்றிக்கே... அவள் திருமார்பிலே நித்யவாஸம் பண்ணுகையாலே மாதவனென்னுந் திருநாமத்தையுடையவனே!” என்று.

உலகத்தில் மற்றும் பல தெய்வங்களும் ‘ஸ்ரீமாந் ஸ்ரீமாந்’ என்று சொல்லப்படுவதுண்டு; மாம்பழத்தோடு சிறிதும் ஸம்பந்தமில்லாத ஒரு ஜந்துவுக்கு மாம்பழவுண்ணியென்று பேர் வழங்குவதுபோலவேயாகும் அது. எம்பெருமானொவனுக்கே ஸ்ரீமானென்பது ஏற்கும் என்று விளக்குதற்கே “மானேய் நோக்கி மடவாளை மார்பிற்கொண்டாய்” என்று முந்துகிற யோகார்த்தவிவணம் பண்ணிப் பின்பு மாதவ என்றது.

இரண்டாமடியிற் குறித்த வரலாறு:- பலராமனுங் கண்ணபிரானும் வில்விழாவுக்கென்று கம்ஸனாலழைக்கப்பட்டு மதுரைக்குச் செல்லுங்கால் ராஜவீதியில் சந்தனக் கிண்ணத்தைக் கையிலேந்திருவருகிற மங்கைப்பருவமுடைய ஒரு கூனியைக் கண்டு ‘நங்காய்! யாருக்கு நீ இந்தப் பூச்சுக்கொண்டு போகிறாய்?’ என்று விலாஸத்தோடு கேட்டருள, அந்தக் கூனி இவ்வாறு காதலுடையவன் போலக் கண்ணன் அருளிச் செய்தது கேட்டு, அவனது திருக்கண்களாலே மனமிழுக்கப்பட்டவளாய் ‘அழகனே! நான் நைகவக்கிரை யென்பவளென்னும், கம்ஸனாலே சந்தனாதிப் பூச்சுக்கள் ஸித்தஞ்செய்யும் வேலையும் வைக்கப்பட்டவளென்றும் நீ அறியாயோ? என்ன; கண்ணன், எங்கள் திருமேனிக்கு ஏற்ற வெகு நேர்த்தியான  இந்தப் பூச்சை எங்கட்குக் கொடுக்கவேணும்’ என்று சொன்னவுடனே,  அவள் ‘அப்படியே திருவுள்ளம் பற்றுங்கள்’ என்று சொல்லி மிக்க அன்போடு ஸமர்ப்பிக்க, அப் பூச்சைத் திருமேனியிலணிந்து ஸ்ரீகிருஷ்ணன் இவளிடத்து மிகவும் ப்ரஸந்நனாய், நடுவிரலும் அதன் முன்விரலுங் கொண்ட நுனிக்கையினாலே அவளை மோவாய்க்கட்டையைப் பிடித்துத் தன் திருவடிகளினால் அவள் கால்களை யமுக்கி இழுத்துத் தூக்கிக்கோணல் நிமிர்த்து அவளை மகளிரிற் சிறந்த உருவினளாக்கியருளினனென்பது க்ருஷ்ணாவதாரத்தின் கதை.

ஸ்ரீராமவதாரத்திலும் *கூனே சிதைய உண்டையில் நிறத்தில் தெறிந்த்த கதை ஒன்றுண்டு:- இராமன் சிறுவனாயிருந்த காலத்தில், ஒருநாள் கையில் சிறு வில்லும் மண்ணுண்டையுங்கொண்டு விளையாடி வருகையில் ஒருகால், விற்கொண்டு எய்த உண்மை கைகேயியின் வேலைக்காரியான மந்தரையென்னுங் கூனியின் முதுகின் புறத்தே தெறிக்க, அவள் தனது கூனுடைமையை இராமன் இங்ஙனம் பரிஹஸித்தனனென்று தவறாகக் கருதி மனம்வருந்தி, அவன் மேற் சினங்கொண்டு, ராஜபுத்திரனாகையாலே அப்பொழுது ஒன்றுஞ் செய்யமாட்டாமற் சென்று. தனக்கு வாய்க்குந்தருணம் நோக்கிக் கறுக்கொண்டிருந்து, பின்பு தசரதன் இராமபிரானுக்கு முடிசூட்ட நிச்சயித்ததை உணர்ந்தவளவில் கோபதாம் மிக்கவளாகி, அதற்கு எப்படியாவது தான் தடை செய்ய வேண்டுமென்று நிச்சயித்து, கைகேயிக்குக் கலகஞ்செய்து அவள் மனத்தை மாற்றி, அவளைக் கொண்டு இராம பட்டாபிஷேகத்தைத் தவிர்த்து அப்பெருமானை வனம் புகுவித்தனள்- என்று சொல்லுவதொரு இதிஹாணுமுண்டு. இதனைக் கம்பரும் தமது இராமாயணத்தில் கிஷ்கிந்தாகாண்டத்து அரசியற்படலத்தில் “சிறியரென்றிகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்றிந், நெறியிகந்து யானோர் தீமையிழைத்தலாலுணர்ச்சிநீண்டு, குறியதாமேனியாய கூனியாற் குவவுத்தோளாய்! வெறியனவெய்தி நொய்தின் வெந்துயர்க் கடலின் வீழ்ந்தேன்” என்ற செய்யுளிற் குறிப்பித்துள்ளார். (இச்செய்யுள் இராமபிரான் வாலிவதமான பின்பு ஸுக்ரீவனுக்கு முடிசூட்டி அவனுக்குச் சில ஹிதோபதேசங்கள் செய்யுமடைவிலே உள்ளது. ‘எவர் விஷயத்திலும் வலிமை நிலைகளில் எளியவரென்பது பற்றி அலக்ஷயஞ்செய்து வருத்தந்தருஞ் செயல்களைச் செய்யாதே; நான் இந்த சன்மார்க்கத்தின் வரம்பைக் கடந்து ஒரு தீங்கு செய்ததனாலே கூனியினிடம் கஷ்டங்களை யடைந்து துன்பக்கடலில் விழுந்தேன்’ என்பது மேற்குறித்த செய்யுளின் கருத்து.

“கூனே சிதைய” என்கிற இவ்விடத்திற்கு மேற்குறித்த ஸ்ரீராமக்ருஷ்ண வ்ருத்தாந்தங்களிரண்டையும் வியாக்கியானங்களில் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். கண்ணபிரானுடைய சரித்திரபரமாகக் கொள்ளும்போது “உண்டையில் நிறத்தில்” என்பதை ஒரு சொல்வடிவமாகக் கொண்டு, சுண்டுவில்லை நிமிர்ப்பதுபோலே இலேசாகக் கூனி கூன் நிமிர்த்தபடியைச் சொல்லிற்றாகிறது (நிறத்தில் என்து. அவ்விதமாக என்றபடி.) “சுண்டுவில்லைத் தெறித்தாப்போலே அநாயாஸேந நிமிர்த்தாய்” என்பது இருபத்தினாலாயிரத்தில்  பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்தி.

இனி, ஸ்ரீராமபிரானுடைய சரித்திரபரமாகக் கொள்ளும்பக்ஷத்தில், கூனே சிதைய- (மந்தரையின்) கூன் முன்னும் பின்னும் தள்ளுண்ணும்படியாக (நோவு அடையும்படியாக). உண்டைவில்- சுண்டுவில்லைக்கொண்டு, நிறத்தில்- மருமத்திலே, தெறித்தாய்- எய்தாய் என்று பொருள் காண்க. இங்ஙனே இராமபிரானுடைய சரிதையைக் கூறுவதாகில், கோவிந்தா! என்கிற விளி பொருந்தாதே; காகுத்தா! என்றன்றோ விளிக்கவேண்டும்- என்று சிலர் சங்கிக்கக்கூடும். இதற்கு இருவகையான ஸமாதான முரைத்தனர் பூருவர்கள். கோவிந்தா! என்றது பசுக்களை மேய்ப்பவன் என்னும் பொருளில் இங்கு வந்ததன்று; வடமொழியில் பூமிக்கும் கோவென்று வாசகமுண்டாதலால், பூமிக்கு ரக்ஷகனானவனே! என்கிறது. இஃது இராமபிரானுக்கும் விளியாகலாம் என்பது முதல் ஸமாதானம்.

“அன்றிக்கே, தீம்பு சேருவது க்ருஷ்ணனுக்கே யாகையாலே

*போம்பழியெல்லாம் அமணன் தலையோடே என்னுமாபோலே

அவன் தலையிலே ஏறிட்டுச் செல்லுதல்” (நம்பிள்ளையீடு.)

என்பது இரண்டாவது ஸமாதானம். அதாவது- “கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய்” என்று இராமபிரானுடைய சரிதையைச் சொல்லிவிட்டு, குணக்கடலாகிய இராமபிரான் இப்படிப்பட்டவொரு தீம்பு செய்ததாகச் சொல்லுவதற்குத் திருவுள்ளமில்லாமல், “பல்லாயிரவரிவ்வூரிற் பிள்ளைகள் தீமைகள் செய்வார். எல்லாமுன்மேலன்றிப்போகாது’ என்கிறபடியே ஊர்ப்பட்ட தீம்புகளையெல்லாம் தனக்கே கொள்ளப்பிறந்த கண்ணபிரான்மேலே இந்தத் தீம்பையும் ஏறிட்டு விடலாமென்று ஆழ்வார் திருவுள்ளம்பற்றிப்போலும் கோவிந்தா! என்று க்ருஷ்ண ஸம்போதநம் பண்ணிற்ற என்றபடி.

மேலே உதாஹரித்த நம்பிள்ளையீட்டில் *போம்பழியெல்லாம் அமணன் தலையோடே என்ற ஸ்ரீஸூக்தியில் அடங்கிய வரலாறு வருமாறு- ஒரு கள்ளன் ஒரு பிராமணனுடைய (அன்றைக்குத்தான் சுவர் வைக்கப்பெற்ற) புழைக்கடையிலே கன்னம் வைக்க, அது ஈரச்சுவராகையாலே இறுத்தியதனால் அந்தக் கள்ளன் மாண்டுபோக, அவ்வளவில் அவனது உறவினர் வந்து பிராமணனைப் பழிதரவேணுமென நிர்ப்பந்திக்க, இரண்டு திறத்தாரும் நியாயாதிபதி பக்கல் செல்ல, அவ்வரசன் அவிவேகியும் மூர்க்கனுமாகையாலே ‘பிராமணா! நீ ஈரச்சுவர் வைக்கவேயன்றோ அவன் முடிந்தான், ஆகையாலே நீ பழிதர வேண்டியதே என்ன, அவன் எனக்குத் தெரியாது; சுவர்வைத்த கூலியாளைக் கேட்கவேணும்’ என்ன; அவனை யழைத்து அரசன் விசாரிக்க, அவனும் ‘தண்ணீர் விடுகிறவன் அதிமாக விட்டிட்டான்; நான் என்செய்வேன்?’ என்ற; அவனை யழைத்துக் கேட்க, அவனும் ‘என்னால் வந்ததன்று, நான் பானையைச் சிறிதாகவே செய்ய நினைத்தேன்; அது செய்து கொண்டிருக்கும்போது ஒரு தாஸி போக்குவரத்தாயிருந்தாள்; அவளைப் பார்க்கிற பராக்கிலே பானை பருத்துவிட்டது. நானென் செய்வேன்?’ என்ன; பிறகு தாஸியை அழைத்து விசாரிக்க, ‘வண்ணான் என் சேலையை விரைவில் கொணர்ந்து தாராமையினாலே போகவரத் திரிந்தேன்’ என்று அவள் கூற, வண்ணானையழைத்துக் கேட்க, அவன் துறையில் கல்லிலே ஓர் அமணன் (திகம்பரச்சாமி) உட்கார்ந்திருந்தான் எவ்வளவு உரப்பியும் அவன் எழுந்து செல்லவில்லை; பிறகு அவனாகவே எழுந்து சென்ற பின்பு சேலையைத் தோய்த்துத் தரவேண்டியதாயிற்று; நான் என் செய்வேன்; அந்த அமணனே தாமதத்திற்குக் காரணம்’ என்று கூற, அந்த அமணனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து ‘நீயன்றோ இத்தனையுஞ் செய்தாய்; நீயே பழி தர வேணும்’ என்று அரசன் கட்டளையிட, அவ்வமணன் மௌனச்சாமி யாகையாலே ஒன்றும் விடை கூறாதிருக்க, ‘உண்மையில் பழி தன்னிடத்திலுள்ளதனால் இவன் வாய்திறந்திலன்; இவனே குற்றவாளன்’ என்று அரசன் அவன் தலையை அரியக் கட்டளையிட்டான்- என்பது அந்யாயதந்ய சரிதத்திலுள்ள ஒரு கதை. (அமணன் குற்றஞ் செய்யாதிருக்கவும் அவன் தலையில் ஏறினாற்போலே கண்ணபிரான் தீம்பு செய்யாதிருந்தாலும் பிறருடைய தீம்பும் அவன் தலையில் ஏறுமென்று விநோதமாகக் காட்டினபடி.

மதுசூதா! = மதுவென்னும் அசுரனை யொழித்தாற்போலே, நைச்சியாநு ஸந்தானம் பண்ணி அகலுகையாகிற என் விரோதியைப் போக்கினாய் என்ற குறிப்பு.

வினையேன் உன் திருப்பாதம் சேருமாறு அருளாய் = கலத்திட்ட சோற்றை விலக்குவாரைப்போலே முதலில் நீவந்து கிட்டும்போது அகன்றொழியும்படியான பாபத்தைப் பண்ணின நான் திருவடி சேர்ந்து வாழுமாறு அருள்புரியவேணும்.

 

English Translation

O Madava, Lord bearing the fawn-eyed dame Lakshmi O Govinda, who straightened the bow-like bends of Trivakra's body!  O Madhusudana, gem-hued Lor of effulgent celestials light, hear me! Grant that this hapless self attain your nectar lotus-feet!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain