(2946)

தானோ ருருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய

வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்

தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும்

வானோர் பெருமான் மாமாயன் வைகுந் தன்எம் பெருமானே.

 

பதவுரை

தான்

-

பிரம ருத்ராதிகளொருவருமின்றி ஒருவனேயாகி நின்றதான்

ஓர் உருவே

-

ஓருருவமுடையனாய்க் கொண்டே

தன்னில்

-

இப்படி மூவகைக் காரணமான தன் ஸங்கல்பரூப ஜ்ஞானத்திலே

மூவர் முதலாய வானோர்

-

பிரம்மன் சிவன் இந்திரனாகிய மூவர் முதலான தேவர்களும்

முனிவரும்

-

ரிஷிகளும்

பலரும்

-

பல  சேதனர்களும்

மற்றும்

-

மற்ற மானிடசாதியும்

மற்றும்

-

மற்ற மிருகம் பறவை முதலான

முற்றும் ஆய்

-

எல்லாமுமாகி

தான்

-

இப்படி ஸங்கல்பத்தோடு கூடியிருக்கிறதான்

தனி

-

நிமித்தகாரணம் வேறு அல்லாமையால் தனியனான

விந்து ஆய்

-

உபாதான காரணமாய்க் கொண்டு

தன்னுள்ளே

-

தனக்குள்ளே

ஓர்

-

ஒப்பற்ற

பெரு நீ

-

மஹத்தான அர்ணவத்தை

தோற்றி

-

தோன்றுவித்து

அதனுள்

-

அதிலே

கண் வளரும்

-

நித்திரைசெய்கிற

வைகுந்தன்

-

பரமபதநாதன்

வானோர் பெருமான்

-

நித்யஸூரிகளுக்குத் தலைவன்

மா மான்

-

மிகவும் ஆச்சரியகுண சேஷ்டிதங்களைவுடையவன்

எம் பெருமான்

-

எனக்கு ஸ்வாமி.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வார் நைச்சியாநுஸந்தானம் பண்ணி அகல நினைத்தது கீழ்ப்பாட்டில் சிறிது தணியத் தொடங்கிற்று; அதைக்கண்ட சிலர் ‘ஆழ்வீர் இனி நீர் என் செய்வதாக நினைக்கிறீர்; அணுகப் பார்க்கிறீரோ?’ அகலப் பார்க்கிறீரோ?” என்று கேட்க நான் அகல நினைத்தாலும் ஸ்வாமியான அவன் விடுவதாக இல்லையே; அவன் ஒன்றாலொன்று குறைவில்லாதவனாயிருந்து  வைத்தும் ஸ்ருஷ்டி முதலான க்ருஷிகளைப் பண்ணி ஒரு பொருளாகக் கொண்டபின் நான் அகல்வேனென்றாலும் தன் ஸௌசீல்ய குணத்தினால் என்னை விடமாட்டாதவனாயிரா நின்றானேயென்கிறார்.

தானோருருவே தனிவித்தாய் = சாந்தோக்ய உபநிஷத்தில் *ஸதேவஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்வித்யம் ப்ரஹ்ம * என்று ஓதிக் கிடக்கிறவிடத்தில் ‘ஸ்தேவ’ என்றும் ‘ஏகமேவ’ என்றும் ‘அத்விதீயம்’ என்றும் மூன்று வாக்கியங்களிருப்பதனால் அம்மூன்றாலும் மூவகைக் காரணங்களும் எம்பெருமானேயென்கிறது என்று கொள்ளவேணும்; வேறொரு உபாதாந காரண வஸ்து இல்லாமல் தானே உபாதாந காரண பூதனாய், வேறொரு ஸஹகாரி காரணமில்லாமல் அதுவும் தானேயாய், வேறொரு நிமித்த காரணமில்லாமல் அதுவும் தானேயா யிருப்பவன் என்பதையே அந்த உபநிஷத் வாக்கியம் தெரிவிக்கும். அதுபோலவே இங்கும், வித்தாய், தனிவித்தாய் ஓர் தனிவித்தாய் என்றாகி அம்மூவகைக்காரணமும் தானேயாயிருக்குந் தன்மை சொல்லிற்றாகிறதென்ப தான் என்பதனால் வேறோர் உபாதாநகாரண மில்லை யென்றும், ஓர் என்பதனால் வேறொரு ஸஹகாரிகாரணமில்லையென்றும், தனி என்பதனால் வேறொரு நிமித்தகாரணமில்லையென்றுஞ் சொல்லப்பட்டதென்க.

(தன்னில் மூவர் முதலான வானோர்பலரு மித்யாதி.) தன்னோடு சேர்ந்து மூவராக நின்றவர்கள் பிரமனும் சிவனுமாவார்; அவர்கள் முதலான தேவர்களையும் ஸநகாதி மஹர்ஷிகளையும் ஸ்தரங்களையும் ஜங்கமங்களையும் இன்னமுஞ் சொல்லப்படாத மற்றெல்லாவற்றையு முண்டாக்குகைக்காக- என்பது இரண்டாமடிக்குப் பொருள் தன்னில் என்பதற்கு, ‘தன்னோடு’ என்று பொருள் கொள்ளாமல் ‘தன்னுடைய ஸங்கல்பமாகிற ஸ்வரூபத்திலே’ என்றும் பொருள்கொள்வர்; இப்பொருளில் மூவர் என்றது இந்திரனையுங்கூட்டி மூவரென்றபடி, “மூவர் முதலாய வானோர் பலரும் முனிவரும் மற்றும் முற்றும் தன்னில் ஆய்” என்று இப்பக்ஷத்தில் அந்வயிக்க வேணும். ஆய் என்றது ஆகைக்காக என்றபடி. பிரமன் சிவனிந்திரன் முதலான தேவர்கள் முதலான எல்லாமும் தானேயாகி என்று முரைப்ப, உலகத்தில் கப்புங்கிளையுமான மரம் வித்துக்குள் ஸூக்ஷ்மமாகவுள்ளதே யென்கிற கொள்கைப்படி கார்யவஸ்தையில் ஸ்தூலரூபமாய்த் தெரிகிற எல்லாப்பொருள்களும் காரணாவஸ்தையில் ஸூக்ஷ்மரூபமாகவுள்ளனவே யாதலால் இங்ஙனஞ் சொல்லக்குறையில்லை. ஆக முன்னடிகளிரண்டாலும் எம்பெருமானுடைய காரணாவஸ்தை கூறப்பட்டதாயிற்று.

தானோர் பெருநீர் தன்னுள்ளேதோற்றி அதனுட் கண்வளரும் = இப்படி ஸ்ருஷ்டிப்பதிலே ஒருப்பட்ட தான் தனனக்குக் கண்வளர்ந்தருளுகைக்குப் போதும் படியான பரப்பையுடைய ஏகார்ணவத்தைத் தன் பக்கல் நின்று முண்டாக்கி அதனுட் கண்வளர்ந்தருளுகிறபடி இவன்றான் ஆரென்னில், (வானோர்பெருமான்) நித்யஸூரிகளுக்குத் தலைவன். (மாமாயன்) ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையவன். (வைகுந்தன்) திருநாட்டைத் தனக்கு நிலயமாகவுடையவன். (எம்பெருமான்) இந்தப் பதமே இப்பாட்டிற்கு மருமமாகும்: உடைமை தப்பிப்போகத் தொடங்கினால் உடையவன் ஆறியிருப்பனோ? மக்கள் பெறுவதற்காக ஏற்கனவே நோன்பு நோற்றுப் படாத பாடுகள் பட்டுப்பிள்ளை பெற்ற தாயானவள் அந்த மகன் நடக்கவல்லனான ஸமயத்திலே தேசாந்தரஞ் செல்வேனென்றால் விட்டு ஆறியிருக்கமாட்டாளன்றோ; அப்படியே நெடுநாளாகத் தன்வாசியறியாமற்போன எனக்கு அறிவைத் தந்தருளித் தன்னை உள்ளபடியறிவித்தவன். தான் தந்த அறிவைக்கொண்டு நான் விலகிப்போகத் தொடங்கினால் அவன் எப்படி ஆறியிருக்கக்கூடும்? என்கிற இவ்வளவு கருத்தை உள்டக்கி எம்பெருமானே என்றார்.

 

English Translation

The Lord of celestials, Lord of Vaikunta, my own Lord, himself became the cause of the three. –Brahma, Siva, Indra, -within him. He caused the celestials, and sages and the living, and all else to be, then appeared in the deep ocean sleeping on a serpent couch.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain