(2945)

மாயோ னிகளாய் நடைகற்ற வானோர் பலரும் முனிவரும்,

நீயோ னிகளைப் படை என்று நிறைநான் முகனைப் படைத்தவன்

சேயோ னெல்லா அறிவுக்கும், திசைக ளெல்லாம் திருவடியால்

தாயோன் எல்லா வெவ்வுயிர்க்கும் தாயோன் தானோ ருருவனே.

 

பதவுரை

மா யோனிகள் ஆய்

-

பெருமையுள்ள பிறப்பையுடையவர்களாய்க் கொண்டு

நடை

-

ஸ்ருஷ்டி முதலான வியாபாரங்களை

கற்ற

-

அறிந்திருக்கிற

வானோர்

-

தேவர்களும்

முனிவரும்

-

ரிஷிகளும்

பலரும்

-

மற்றும் பலருமாகிய

யோனிகளை

-

காரணபூதர்களான பிராணிகளை

நீ படை என்று

-

நீ படைக்கடவாயென்று

நிறை நான் முத்னை படைத்தவன்

-

(ஞான சக்திகள்) நிறைந்த சதுர்முகனை ஸ்ருஷ்டித்தவன்

எல்லா அறிவுக்கும் சேயோன்

-

எல்லா ஞானத்துக்கும் எட்டாதவன்

திசைகள் எல்லாம்

-

ஸகல லோகங்களையும்

திரு அடியால்

-

திருவடியினால்

தாயோன்

-

அளந்தவன்

எல்லாவெவ் வுயிர்க்கும்

-

எவ்வகைப்பட்ட ஸகலமான பிராணிகளுக்கும்

தாயோன்

-

தாய்ப்போன்றவன்;

தான்

-

இப்படிப்பட்ட எம்பெருமான்

ஓர் உருவனே

-

(ஸொசீல்யமாகிற) ஒரு படியை யுடையவனாயிருக்கின்றானே!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** கீழ் இரண்டு பாட்டிலும் எல்லைகடந்த நைச்சியத்தை அநுஸந்தித்து அகலப் பார்த்த ஆழ்வாரைநோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! நீர் இங்ஙனம் நம்முடைய மேன்மையைப் பார்த்து நெகிழ நினைத்தல் தகுமோ? நம்முடைய மேன்மையை மாத்திரமேயோ நீர் பார்ப்பது? நாம் எல்லாரோடும் கலந்தும் தாழநின்றும் பொருந்தும்படியான சீலகுணத்தையும் பார்க்கவேண்டாவோ?’ என்று தனது சீலகுணத்தைக் காட்டும் முகமாக உலகளந்தவரலாற்றை நினைப்பூட்ட, அதனை அநுஸந்தித்து அகலவும் மாட்டாமல் அணுகவும்மாட்டாமல் நடுவே நின்று பேசிப் போதுபோக்குகிறபடியாய்ச் செல்லுகின்றது இப்பாசுரம்.

முந்துற மேன்மைக்குணத்தை விரிவாக அருளிச்செய்து பின்னர் சீலகுணத்தைப்பேசி, ‘இப்படியும் ஒரு  மஹாநுபாவனிருப்பதே!’ என்று ஈடுபடுகிறாராயிற்று.

எம்பெருமான் எப்படிப்பட்டவன்? நிறை நான்முகனைப் படைத்தவன், என்னவென்று சொல்லி நான்முகனைப் படைத்தான்? நீ யோனிகளைப் படையென்று சொல்லி நான்முகனைப் படைத்தான். எந்த யோனிகளைப் படையென்று சொன்னான்? மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவருமான யோனிகளைப் படையென்றான்- அதாவது, ஸப்த ரிஷிகள் தசப்ஜாபதிகள் ஏகாதச ருத்ரர்கள் த்வாதசாதித்யர்கள் அஷ்டவஸுக்கள் என்றிப்படிச் சொல்லப்பட்டுள்ளவர்களும் விலக்ஷண ஜன்மங்களை யுடையவர்களும் தத்தமது அதிகாரங்கட்கு ஏற்ற ஸ்ருஷ்டி முதலியவற்றை நன்கு அறிந்திருப்பவர்களுமான சிறந்த வ்யக்திகளை நீ படையென்று நியமித்து நான்முகக் கடவுளைப்படைத்தானென்றவாறு.

எல்லாவறிவுக்கும் சோயோன் = பிரமன் முதலானோருடைய அறிவுக்கும் எட்டாதவன் என்றபடி. “தாம் தம்பெருயைறியார்” என்றும் “தனக்குத் தன் தன்மையறிவரியான்” என்றுஞ் சொல்லுகிறபடியே தனது பெருமை தன்னுணர்வுக்கே விஷயமாகாதது என்னும்போது மற்றையோருடைய அறிவுக்கு விஷயமாகாதது என்பது சொல்லவேணுமோ’ சேயோன் - தூரத்திலிருப்பவன் என்பது பொருள். இப்படி பேரறிவாளருடைய அறிவுக்கும் எட்டாதவனாயிருந்து வைத்து, தானே தன்னைக்கொண்டுவந்து காட்டத் திருவுள்ளம்பற்றுமாகில் தடையின்றிக் காட்டவல்லவன் என்பதைத் திசைகசளெல்லாந் திருவடியால் தாயோன் என்றதனால் பெறுவிக்கின்றார். பூமிப்பரப்பை யடங்கலும்  திருவடிகளாலே தாவியளந்துகொண்டவன். பிராட்டிமார் தொடும் போதும் பூத் தொடுமாபோலே கூசித் தொட வேண்டும்படியான மெல்லிய திருவடிகளைக் கொண்டு கல்லுங் கரடுமான உலகங்களையெல்லாந் தாவியளந்து கொண்டவன். பிராட்டிமார் தொடும் போதும் பூத் தொடுமாபோலே கூசித் தொடவேண்டும்படியான மெல்லிய திருவடிகளைக் கொண்டு கல்லுங் கரடுமான உலகங்களையெல்லாந் தாவி யளப்பதே! என்ற ஈடுபாடும் இதில் உள்ளுறை.

இங்ஙனே எல்லார் தலையிலும் திருவடிகளைக் கொண்டுவந்து வைப்பதற்குக் காரணம் கூறுவார்போல் எல்லா வெவ்வுயிர்க்குந்தாயோன் என்கிறார்.

தான் ஒருருவனே! = எம்பெருமானுடைய எல்லையற்ற மேன்மையையும் அதற்கு எதிர்த்தட்டான நீர்மையையும் பேசி, “இப்படியும் ஒரு பகவான் இருக்கிறபடி என்னே!” என்று வியந்து தலைக்கட்டுகிறார். ஒருருவனா யிருக்கையாவது மேன்மைபோலே நீர்மையும் அளவிறந்திருக்கையாம்.

 

English Translation

You created the sages and the celestials, even the four-faced Brahma, and gave him the power the make the wombs of all creation. Lord who stepped over all creation and measured the Universe, you are compassionate to all, like a mother to all beings!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain