(2944)

நினைந்து நைந்துள் கரைந்துருகி, இமையோர் பலரும் முனிவரும்,

புனைந்த கண்ணி நீர்சாந்தம் புகையோ டேந்தி வணங்கினால்,

நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய், முதலில் சிதையாமே,

மனஞ்செய் ஞானத் துன்பெருமை மாசூ ணாதோ மாயோனே.

 

பதவுரை

மாயோனே!

-

ஆச்சரியனான எம்பெருமானே!

இமையோர்

-

(பிரமன் முதலிய) தேவர்களும்

முனிவரும்

-

(ஸநகன் முதலிய) ரிஷிகளுமான

பலரும்

-

பலபேர்களும்

நினைந்து

-

(உனது ணங்களைச்) சிந்தித்து

நைந்து

-

(அதனாலலே) சரீரமும் கட்டுக்குலைந்து

உள்கரைந்து

-

மனம் கரைந்து

உருகி

-

நெகிழ்ந்து

புனைந்த

-

தொடுக்கப்பட்ட மாலைகளையும்

நீர்

-

திருமஞ்சனத்தீர்த்தத்தையும்

சாந்தம்

-

சாத்துப்படியையும்

புகையோடு

-

தூபத்தையும்

ஏந்தி

-

கையிலேந்திக்கொண்டு வந்து

வணங்கினால்

-

தொழுதால்,

நினைத்த எல்லாம் பெருள்கட்கும்

-

நினைக்கப்பட்ட ஸகல பதார்த்தங்களுக்கும்

வித்து ஆய்

-

மூலமாகி

முதலில் சிதையாமே

-

ஸ்வரூபவிகாரம் பிறவாதபடி

மனம் செய் ஞானத்து

-

மனத்தினால் செய்யப்பட்ட ஸங்கல்பரூபமான ஞனாத்தையுடைய

உன்

-

உன்னுடைய

பெருமை

-

பெருமையானது

மாசு உணாதோ

-

அழுக்கடையாதோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டைக் காட்டிலும் இப்பாட்டு பரம விலக்ஷணமானது. கீழ்த் திருவாய்மொழிகளில் தாம் சொன்ன சொற்களுக்கு அநுதாபம் காட்டினார், கீழ்ப்பாட்டில். எம்பெருமானைக் கெடுத்துவிட்டேனென்று சொல்வதற்கும் நான் அதிகாரியல்லேனே; என் அதிகாரத்திற்குட்படாத வார்த்தையை நான் சொல்லிவிட்டேனே யென்று தடுமாறுகிறார். அதாவது என்ன? எனின்; ‘பகவத் விஷயத்தில் அதிகரிப்பதற்கு நான் அர்ஹனல்லேன்’ என்பதுதானே கீழ்ப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. இங்ஙனஞ் சொல்லவேண்டுமானால் என்கிற நியாயத்தினாலே பகவத் விஷயத்தில் அதிகரிக்க ப்ரஸக்தி தமக்குண்டென்பது ஒருவாற விளங்கிவிடுகின்றது. அப்படி ஆக்ஷேபத : ப்ரஸக்தமாகிற அதிகாரமும். தமக்கு அஸஹ்யம் போலும்: நான் வாய் மூடிக் கொண்டிருக்க வேணுமேயன்றி வாய் திறந்து ‘அநர்ஹன்’ என்ற சொல்லுவதோடு ‘அர்ஹன்’ என்ற சொல்லுவதோடு ஒரு வாசியில்லை யென்று திருவுள்ளம் பற்றுகிறார். வேதத்தை அதிகரிக்கத்தகாத யோநியிலே பிறந்தவொருவன்  “எனக்கு வேதம் தெரியாது” என்று உள்ளதையே சொல்வதுங்கூட அவத்யமாம்; ஏன்? வேதம் தெரிந்துகொள்வதற்குத் தனக்கு ப்ரஸக்தியுண்டுபோலவும் ஆனால் அதைத் தான் தெரிந்துகொள்ள முயலவில்லைபோலவும் அந்த வார்த்தையினால் தொனிக்ககூடும் மாதலால்.

பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்வதத்திலே ஸ்ரீரங்கநாதனைத் துதிப்பதாகத் தொடங்கி பகவத் குணங்களின் எல்லையின்மையையும் தமது ஜ்ஞான  சக்திகளின் புன்மையையும் நோக்கி *ஸ்துமஹே வயம் கிமிதி தம் ந சக்நும:* என்று அவனைக் துதிக்க காரமில்லை என்று சொன்னார்; உடனே இங்ஙனஞ் சொல்வதற்கும் தமக்கு அதிகாரமில்லை யன்பதை *யதி மே ஸஹஸ்ரவதநாதிவைபவம் நிஜமர்ப்பயேத் ஸ கில ரங்கசந்த்ரமா.அது சேஷவத் மம ச தத்வதேவ வா ஸ்துதிசக்த் யபாவவிபவேபி பாகிதா* என்ற அடுத்த ச்லோகத்தினால் அருளிச் செய்தார்; அதுவும் இங்கு உணரத்தக்கது.

கீழ்ப்பாசுரத்திற் கூறிய விஷயத்திற்கும் அநுதாபரூபமாக இப்பாசுரம் அமைந்திருக்கின்ற தென்னம் விஷயம் இப்பாட்டில் எந்த ஸ்ரீஸூக்தியினால் தெரிகின்றது? என்னில்; இப்பாசரத்தின் தாற்பரியத்திலிருந்து தொனிக்கின்ற தாற்பரியம் இது. அதனை விவரிக்கின்றேன்;- விலக்ஷணர்ளான பிரமன் முதலிய தேவர்கள் நியமங்களோடு உன்னை ஆச்ரயித்தாலுங்கூட, அப்படிப்பட்ட அவர்களின் ஆச்ரயணமும் உனது சிறந்த மேன்மைக்குக் குறையாகுமன்றோ என்பது இப்பாட்டிலட் ஸ்பஷ்டமாகச் சொல்லப்படுகிற அர்த்தம். கீழ்ப்பாட்டில் தாம் பண்ணின நைச்யாநுஸந்தானத்தைப் பண்ணுவதற்கு அந்த இமையோர் தாம் அதிகாரிகள் என்பது இதன் தாற்பரியமாக முடிந்தது. அப்படி உயர்ந்தோர் பண்ணவேண்டிய நைச்சியாநுஸந்தானத்தைப் பண்ணுவதற்கும் நான் அதிகாரியல்லேன் என்பது அதன் பரமதாற்பரியமாகுமென்றுணர்க.

ஆழ்வார் இங்ஙனம் அருளிசசெய்வதிலிருந்து பல சங்கைகள் உதிக்கும்; எங்ஙனேயென்னில்; பிரமன் சிவனிந்திரன் முதலான தேவர்களுங்கூட எம்பெருமானைத் தொழுவதற்க யோக்யதையுடைரல்லர் என்று இங்குச் சொல்லுகின்ற ஆழ்வார் தாமே பலவிடங்களில், அத தேவர்களின் தொழுகையை எம்பெருமானுக்குச் சிறப்பாக அருளிச்செய்கிறாரே; அன்றியும், ‘அத்தேவர்கள் தாம் எம்பெருமானைத் தொழுவதற்கு உரியார்’ என்றம் அருளிச்செய்கிறாரே; அன்றியும், ஒருபடியாலும் எம்பெருமானைத் தொழுவதற்கு யோக்யதையற்றவராக இப்போது தம்மைச் சொல்லிக் கொண்டவர் மேலே பலவிடங்களில் அவனையே தொழுவதுமாய் அவனையே தொழக் காதலிப்பதுமாய்ப் பாசுரங்களிருளிச்செய்கிறாரே; இவையெல்லாம் ஒன்றோடொன்று முரண்பட்டிருக்கவில்லையா? எவ்வண்ணம் பொருந்தும்? என்று சிலர் சங்கிக்கக்கூடும். இவை பரஸ்பர விருத்தங்களான விஷயங்களல்ல; எம்பெருமானது ஒப்புயவர்வற்ற மேன்மையை விளக்கும்போது பேசுகிற பாசுரங்களும் ஒன்றோடொன்று முரண்படுமவையல்ல; “எனதாவிதந்தொழிந்தேன்” என்று முந்துற ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுவதும், உடனே “எனதாவியார் யானன் தந்தநீ கொண்டாக்கினையே” என்று அந்த ஆத்ம ஸமர்ப்பணத்தையும் மறுப்பதும், மறுபடியும் தாள்களையெனக்கே தலைத்தலைச்சிறப்பத்தந்த பேருதவிக் கைம்மாறாத், தோள்கை யாரத்தழுவி யென்னுயிரை அறிவிலைசெய்தனன் சோதீ!” என்பதும் ஆகிய இவையெல்லாம் தனித்தனி சாஸ்த்ரார்த்தங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நியாயமமே இங்குக் கொள்ளத்தக்கதாம்.

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி = இச் செயல்கள் எம்பெருமானை வணங்குகின்ற இமையோர்களுடையவை. அவர்கள் எம்பெருமானை வணங்குதற்கு உடலாகச்சூட்டு நன்மாலைகளையும் நீர் சுடர் தூபங்களையும் சேகரிக்கும்போது நினைப்பதும் நைவதும் உள்கரைவதும் உருகுவதுமாயிருக்கிறபடியைச் சொல்லுகிறது. இவ்வுபகரணங்களை ஏந்திக்கொண்டு நாம் பகவத் ஸந்நியிலே சென்றால் பகவான் நம்மைக்குளிரக் கடாக்ஷிப்பனன்றோ?’ என்று நினைப்பார்களாம்; பிறகு அந்தக் கடாக்ஷ தாரைகளை மாநஸாநுபவமாக அநுபவித்து அவயவங்களில் சில விகாரம் பெறுவார்களாம்; அதன்பிறகு நெஞ்சும் கட்டுக்குலைந்து மங்குவர்களாம்,இப்படியெல்லாம் ஆகிறவர்கள் ஆரென்னில்;

இமையோர் பலரும்  முனிவரும்= பிரமன் முதலிய தேவர்களும் ஸநகஸநந்தநாதி மக்ஷர்ஷிகளுமாம் அத் தேவர்களும் தாம் தங்களையே பரதெய்வமாக அபிமானித்தக் கொண்டு அஹங்காரரிகளாயிருப்பதாகச் சொல்லும் புடைகளும் பலவுண்டாதலால் அவற்றோடு விரோதம் சங்கிக்க வொண்ணாதபடி நம்பிள்ளை அருளிச்செய்கிறார் - “இவர்கள், ரஜஸ்தமஸ்ஸுக்களாலே அபிபூதரானபோது பண்ணும் துர்மாநம்கனத்திருக்குமாபோலே யாயிற்று ஸத்வம் தலையெடுத்தபோது பகவத் குணாநுபவம் பண்ணி சிதிலராம்படியும்” என்று.

தேவர்கள் முக்குணங்களும் கலகப்பெற்றவர்களாதலால் ரஜஸ் தமோ குணங்கள் மிக்கிருக்கும்போது அஹங்காரம் பாராட்டுவர்கள்; ஸத்வகுணம் தலையெடுத்த போது ‘ஆழ்வார்களும் இவர்கட்குக் கீழ்ப்படிதான்’ என்னும் படியாகவே அகாதமாக அவகாஹிப்பர்கள் என்றவாறு. ஆகவே, அவர்கள் ஸத்வகுணம் தலையெடுத்திருக்கப்பெற்ற நிலைமை இங்குச் சொல்லப்படுகின்ற தெனக்கொள்க. இங்ஙனம் ஸத்வகுணமடியான ப்ரேமமுடையவர்களாதலால் ஆதரத்தோடு தொடுத்த மாலைகளையும் அர்க்கிய பாத்ய ஆசமநீய தீர்த்தங்களையும் சாத்துப்படி தூபதீபங்களையும் ஏந்திக்கொண்டு வந்து வணங்குகின்றனராம்.

“வணங்கினால் உன் பெருமை மாசூணாதோ” என்று அந்வயம். இப்படிப்பட்ட ஸாமாந்யர்கள் வணங்கும்படியாயோ உன் பெருமை யிருப்பது? ஏறக்குறைய உன்னோடு ஒத்திருப்பார் வணங்குவதன்றோ உனக்குத் தகுதி. ‘சிங்கத்தைச் சில எறும்புகள் வணங்கின’ என்றால் அது எப்படி பரிஹாஸமாகுமோ அப்படியே இவர்கள் உன்னை வணங்கினார்களென்பதும் பரிஹாஸமாய்த் தலைக்கட்டுமதன்றோ என்கை. இதனை மெய்ப்பித்ததற்பொருட்டு எம்பெருமானுடைய அஸாதாரணமானவொரு பெருமையை ஒன்றரையடிகளால் அருளிச்செய்கிறார்- நினைந்தவென்று தொடங்கி புருஷார்த் தோபயோகியான காரண களேபரங்களை ஸம்ஹார ஸமயத்திலே யிழந்து சிறகொடிந்த பறவைபோலே யிருக்குமிருப்பிலே எம்பெருமானது திருவுள்ளத்தில்  ஐயோ! என்று ஓர் இரக்கநினைவு உண்டாகுமன்றோ; அப்படிப்பட்ட நினைவுக்கு இலக்கான எல்லாப் பொருள்கட்கும் ஏன்றபடி.

வித்தாய் முதலில் சிதையாமே = உலகத்தில் ஒவ்வொரு கார்யப் பொருளுக்கும் உபாநாநகாரணம், ஸஹகாரிகாரணம், நிமித்தகாரணம் என மூன்று காரணங்கள் இன்றியமையாதவை. அப்படியே ஜகத்துக்கும் மூன்று காரணங்களும் வேண்டும். அம்மூவகைக் காரணங்களும் எம்பெருமானேயென்பது வேதாந்திகளின் கொள்கை. இங்கு வித்து என்பதனால் உபாதாந காரணத்வமே முக்கியமாய் விவக்ஷிதம். உலகத்தில் உபாதாந காரணத்தின்படி எங்ஙனே யிராநின்றதென்றால், காரியப்பொருள் கண்டாய்விட்ட பின்பு அந்த உபாதான காரணப்பொருள் முதல் சிதைந்து விட்டதாகவே காணப்படுகிறது! வஸ்த்ரத்திற்குப் பஞ்சு உபாதாந காரணம்; வஸ்த்ரனாகிற காரியப்பொருள் தேறிவிட்டபின்பு பஞ்சாகிற உபாதாந காரணப்பொருள் முதல் சிதையாதே காணக்கூடியதாக இல்லையன்றோ; அப்படியே ஜகத்துக்கு உபாதாந காரணபூதனான பகவானும் ஜகத்ஸ்ருஷ்டி தேறினபின்பு முதல் சிதைதானாக வேண்டுமே என்ன, அந்த லௌகிக நியாயம் இங்குக் கொள்ளத்தக்கதன்று அத்புத சக்தியுக்தனான பகவான் முதலில் சிதையாமே வித்தாகின்றான் எனப்பட்டது.

மனஞ்செய் ஞானத்து உன்பெருமை = திருவுள்ளுத்தினாலே செய்யப்பட்ட ஸங்கல்பரூப ஜ்ஞானத்தையுடையனான உன்னுடைய பெருமை என்றபடி- ஆக, இப்படி விலக்ஷணமான பெருமை படைத்தவுனக்குக் கார்யபூதர்கள் செய்கிற வழிபாடுகள் என்ன ஏற்றம்? ஏற்றமில்லையென்பது மாத்திரமன்று; தாழ்வுமாகும் என்றதாயிற்று.

 

English Translation

O My wonder Lord!  You are the will and the seed of all creation, undiminishing, known to the heart alone!  Sages and celestials faint in your contemplation.  They offer worship with water, Sandal, incense, and flowers and count your glories with melting hearts, but never come to an end.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain