(2943)

வளவே ழுலகின் முதலாய் வானோ ரிறையை அருவினையேன்

களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன், பின்னையும்,

தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லா னாயர் தலைவனாய்,

இளவே றேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்துநைந்தே.

 

பதவுரை

வளம்

-

வளப்பம்பொருந்திய

ஏழ் உலகின்

-

ஏழுலகத்திற்கும்

முதல் ஆய்

-

முதலாகிய

வானோர் இறையை

-

நித்யஸூரி நாதனான எம்பெருமானை

அரு வினையேன்

-

போக்வொண்ணாத பாபத்தையுடையோனாகிய நான்

நினைத்து

-

மனத்தினால் தியானித்து

நைந்து

-

உடம்பும் கட்டுக்குலைந்து

களவு ஏழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன்

-

களவுத் தொழில் விளங்கும்படி வெண்ணெயை  ஒளித்துண்ட கள்வனே!’ என்று சொல்லியழைக்கின்றேன்;

பின்னையும்

-

அதற்குமேலும்

தளவு ஏழ் முறுவல்

-

முல்லை யரும்புபோலத் தோன்றுகிற புன்னகையையுடைய

பின்னைக்கு ஆய்

-

நப்பின்னைப் பிராட்டிக்காக

வல் ஆனாயர் தலைவன் ஆய்

-

சிறந்த இடையர் தலைவனாய் வந்து

இள

-

இளமைதங்கிய

ஏறு ஏழும்

-

எருதுகளேழையும்

தழுவிய

-

அணைத்துமுடித்த

எந்தாய்

-

என் ஸ்வாமியே!

என்பன்

-

என்றும் சொல்லுவேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- * அயர்வறுமமரர்களென்றிருக்கும் நித்யஸூரிகளாலே அநுபவிக்கத் தக்கவனான எம்பெருமானை அந்தோ! நான் மனமொழி மெய்களினால் தூஷித்து விட்டேனே யென்கிறார். இவர்தம் தூஷித்தமை என்னென்னில்; சில சேஷ்டிவாயினால் தூஷித்தபடியாம்; அவனையும் அவளது சேஷ்டிதங்களையும் சிந்தித்த தானது நெஞ்சினால் தூஷித்தபடியாம், இங்ஙனம் நெஞ்சினால் நினைந்ததனாலும் வாய்விட்டுச் சொன்னதனாலும் உடல் சிதிலமாகப் பெற்றமை சரீரத்தினால் தூஷித்தபடியாம்.

எம்பெருமானையே சிந்தியுங்கோளென்றும், அவனையே வாயார வாழ்த்துங்கோளென்றும், அவனையே சரீரத்தாலும் அணைக்கப் பாருங்கோளென்றும் கீழும் மேலும் பன்முறையும் பிறர்க்கும் உபதேசிக்கின்ற இவ்வாழ்வார் இப்போது இங்ஙனம் அருளிச்செய்வது ஸர்வாத்மநா தம்முடைய நைச்சியத்தை வெளியிட்டுக் கொள்ளுகிற ஒரு முறையாகும். இந்த நடையை அடியொற்றித் திருவரங்கத்த முதனாரும் இராமாநுச நூற்றந்தாதியில் “போற்றருஞ் சீலத்தி ராமாநுச! நின் புகழ்தெரிந்து சாற்றுவனேல் அதுதாழ்வு, அதுதீரில் உன் சீர்தனக்கு ஒரேற்றம்” என்றரளிச் செய்திருப்பதும் இங்க நினைக்கத்தக்கது.

“வளவேழுலகின் முதலாயவானோரிறை” என்பதனால் சாமானியரால் எtடுத்துரைக்கத்தகாத பெருமையுடைய எம்பெருமானுக்கு நிரூபிக்கப்பட்டதாயிற்று. அருவினையேன் என்றதனால் பகவத் விஷயத்தில் சிறிதும் வாய்வைக்கத் தகுதியின்மையாகிற தமது தாழ்வு தெரிவிக்கப்பட்டது.

வளம் என்பது ஏழுலகிலாவது, ஏழுலகின் முதல்வனாகிய எம்பெருமானிடத்திலாவது வானோரிடத்திலாவது விசேஷணமாக அந்வயிக்கலாம். “வளவேழுலகின் முதலாய” என்பதானல் வீலாவதமி நாயகத்வமும் “வானோரிறை” என்பதனால் நித்யவிபூதி நாயகத்வமும் சொல்லிற்றாகி உபயவிபூதிநாதனென்று பெருமையின் எல்லை சொல்லிற்றாயிற்று.

அருவினையேன்= சாஸ்த்ரஜ்ஞர்கள் ஆத்மஸ்வரூபத்தை ஞானத்தையிட்டும் ஆனந்தத்தையிட்டும் நிரூபிப்பர்கள். ஆழ்வார் அஞ்ஙனன்றியே பாபத்தையிட்டே ஸ்வாத்மஸ்வரூபத்தை நிரூபிக்கிறார் காண்மின். பாபமே வடிவெடுத்தவன் நான் என்கிறார். மிகவும் தர்மசீலனாயிருப்பனொருவன் அறிவுகலங்கி வீட்டிலே நெருப்பையிட்டுப் பிறகு ஸத்வம் தலையெடுத்தவாறே ‘அந்தோ! பாவியேன்! அக்ருத்யம் செய்துவிட்டேனே! என்று அநுதபிக்குமாபேலே, ஆழ்வாரும் எம்பெருமானை விரும்பினதற்கு அநுதபிக்கிறபடி என்னே! பாரீர்.

நீசராகக்கொண்ட எம்பெருமானைச் செய்தது என்? என்ன; அதனை மூன்றடிகளால் அருளிச்செய்கிறார். வெண்ணெய் திருடின கள்வேனே! என்றும், நப்பின்னைப் பிராட்டிக்கா எருதுகளேழையும் வலியடக்கினவனே! என்றும் தாம் சொல்லிவிட்டாராம்; இதற்கே அநுதபிக்கின்றாராயிற்று. மேற்குறித்த இரண்டு வார்த்தைகளும் வஸ்துஸ்திதியைச் சொல்வனவே யானாலும், எம்பெருமானுக்கு ஸந்தோஷஹேதுவான விளிகளே யானாலும், அந்த வார்த்தைகளைச் சொல்லி எம்பெருமானையழைப்பதற்க உண்மையான பரிவுடையாரண்றோ அர்ஹதையுள்ளவர்கள்; யசோதைப்பிராட்டி, நப்பின்னைப் பிராட்டி போல்வார் உள்கனிந்து உருகிச் சொல்லவேண்டிய வார்த்தைகளை அநுவாதஞ் செய்யவும் எனக்குத் தகுதியில்லையே!; அந்தோ! ந யினேன் சொல்லிவிட்டேனே! என்று அநுதபிக்கின்ற முகத்தாலே தம்முடைய பரமநைச்சியத்தை அநுஸந்தித்தராயிற்று.

தொடுவுண்ட கள்வா! = களவினால் உண்ட கள்வனே! என்றபடி “மாயை தொடு பட்டிமை வஞ்சனையாகும்” என்றது காண்க. திருவாய்ப்பாடியில் கண்ண பிரான் அடிக்கடி வெண்ணெய் களவாடி அமுதுசெய்தமை பிரஸித்தம்.

கள்வா! என்பன் என்றவிடத்து, நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் பிள்ளைப் பெருமாளையங்கார் “பண்டேயுன்தொண்டாம் பழவுயிரையென்ன தென்று கொண்டேனைக் கள்வனென்று கூறாதே- மண்டத்தோர், புள்வாய் பிளந்தபுயனே உனைக்கச்சிக் கள்வாவென்ளோதுவதென்கண்டு?” என்றுரைத்த பாசுரமும் அதன் உருக்கமான பொருளும் உணரத்தக்கது. (இதன் கருத்து ஒருவர்க்கு உரிய பொருளைத்தன்னதாகக் கொள்வது கள்ள மெனப்படும். ஆகவே அநாதியாக உனக்கே உரிய தாய்க்கிடந்த ஆத்மவை நான் என்னுடைய தென்று கொண்டிருக்கிறேனாதலால் என்னைக் கள்வனென்ற சொல்லத்தகும். உலகத்திலுள்ள பொருள்கள் யாவும் நின்னுடையனவே யாதலால் வெண்ணெய் கொள்ளுதல் முதலிய தொழில்களைச் செய்யினும் உன்னைக் கள்வனென்று கூறுதல் தகாது; இவ்வாறிருக்க, இத்தன்மையை ஆய்ந்தறியாமலே என்னையானே திருடிக்கொண்ட பெருந் திருடனாகிய என்னைக் கள்வனென்னாமல் ஸர்வஸ்வாமியான உன்னைக் கள்வனென்பது என்ன பேதமை! என்று சமத்காரந்தோன்றக் கூறியவாறு.

பின்னைக்காய் இளவேறேழுந்தழுவிய வரலாறு:- கும்பனென்னும்  இடையர் தலைவனது மகளாயும் நீளாதேவியின் அம்சமாகப் பிறந்ததனால் நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்துகொள்ளுதற்காக அவள் தந்தை வந்யாசுல்கமாகக் குறித்தபடி யாவருக்கும் அடங்காத அஸுராவேசம் பெற்ற ஏழு எருதுகளையுங் கண்ணபிரான் ஏழு திருவுருக்கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ் செய்து கொண்டனனென்பதாம்.

வல்லரனாயர் தலைவனாய் - ‘வல்’ என்கிற அடைமொழி பசுக்களுக்கு மாகலாம், ஆயர்க்குமாகலாம், ஆயர்தலைவனுக்கு விசேஷணமாவதிலே ஸ்வாரஸ்யமுண்டு:- இடையர்களில் கொழுத்த இடையன் என்றபடி: இடைச்சாதியன் என்பதை மற்ற இடையர்களைக் காட்டிலும் அதிகமாகக் காட்டிக்கொள்பவன் என்றவாறு. இங்கே நம்பிள்ளையீடு:- “உடம்பிருக்கத் தலைகுளித்தும் தலையிருக்க வுடம்பு குளித்துமிறே திரிவது; (இடையர்) கார்த்திரக புதியதுக்குக் குளித்தார்களாகில் இவன் அதுவுஞ் செய்யாதே இடைத்தனத்திலே ஊன்றி நிற்கும்படியைச் சொல்லுதல், இப்படி யிருக்கிலல்லது பெண் கொடார்களிறே இடையர்.”

என்பன், நினைந்து, நைந்து என்ற மூன்றினாலும், எம்பெருமானை மூன்ற காரணங்களினாலும் தாம் கெடுத்தமையைக் கூறினாராவர்; என்பன்- எருதேழடர்த்த செயலுக்குத் தோற்று நப்பின்னைப் பிராட்டி சொல்லும் பாசுரத்தைச் சொன்னேன்; இது வாயாலே கெடுத்தமை. நினைந்து – ஒரு வார்த்தை சொல்லும்போது முந்துற நெஞ்சினால் நினைந்தே சொல்ல வேண்டுதலால் நினைத்தலுஞ் செய்தேன்; இது மனத்தினால் கெடுத்தமை. நைந்து = அந்தச் சொல்லைச் சொல்லும்போது மெய்யன்தேன்; இ.து மெய்யினால் கெடுத்தமை.

 

English Translation

Hapless me I saw the Lord of celestials, cause of the seven worlds, and faintly called, "O Rogue who ate butter by stealth", Then, "O strong herdsman who killed seven bulls for winning Nappinnai's Jasmine smile, O My lord".

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain