(2930)

துயக்கறு மதியில்நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்,

மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்,

புயற்கரு நிறத்தனன் பெரு நிலங் கடந்தநல் லடிப்போது ,

அயர்ப்பில னலற்றுவன் தழுவுவன் வணங்குவ னமர்ந்தே.

 

பதவுரை

துயக்கு அறு மதியில்

-

கலக்கமற்ற நெஞ்சில் பிறந்த

தல்ஞ்னத்துளற்

-

நல்ல ஞானத்தையுடையரான

அமரரை

-

தேவர்களையும்

துயர்க்கும்

-

கலங்கப்பண்ணுகிற

மயக்கு உடை

-

மயக்குகறி வல்லமையையுடைய

மாயைகள்

-

அவதார ஆச்சரியங்கள் எல்லையற்ற ஆகாசத்திற் காட்டிலும்

பெரியன வல்லன்

-

பெரியனவாகச் செய்ய வல்லவனாய்,

புயல்

-

நீலமேகம்போலே

கரு நிறந்தனன்

-

கருநிறத்தை யுடையனான எம்பெருமானுடைய

பெரு நிலம் கடந்த

-

பெரிய பூமிப்பரப்பை எளிதாக அளந்த

நல்

-

விலக்ஷணமான

அடிபோது

-

திருவடித்தாமரைகளை

அமர்ந்து

-

வேறு பிரயோஜனங்களில் பற்றற்று அமர்ந்து

அயர்ப்பு

-

மறப்பில்லாதவனாய்

அவற்றுவன்

-

முறைமாறி அவன் குணங்களை வாயாலே சொல்லுவேன்;

தழுவுள்ள

-

ஆலிங்கனம் பண்ணுவேன்;

வணங்குவன்

-

தலையாலே வணங்குவேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் தன்னிடத்து அமர்ந்த காதல் அமையப்பெறாதவர்கள் திறத்தில் பண்ணும் மாயமயக்குக்களை முன்னடிகளில் அருளிச் செய்து, அது தான் எப்படியே யானாலும், அவன் காட்டிய வழியே காணவிருக்கின்ற நாம் மனமொழி மெய்களாலே நம் விடாய்கெட உலகளந்த திருவடிகளை அநுபவிப்போமென்று தாம்கொண்ட பாரிப்பைப் பின்னடிகளில் வெளியிடுகிறார்.

துயக்காவது ஸம்சய விபர்யயங்கள். ‘அதுவோ இதுவோ! அப்படியோ இப்படியோ! என்று ஐயங்கொள்ளுதலாகிற ஸம்சயமும், ஒன்றை வேறொன்றாகவே துணிந்துவிடுதலாகிற விபர்யயமும் இல்லாத மதியையுடையராய் உள்ளது உள்ளபடியே க்ரஹிக்கவல்லவர்களான தேவர்களையும் கலங்கப் பண்ணும் ப்ராமகத்வ (ப்ரமஜநகத்வ) சக்தியையுடைய ஆச்சரியமான தன்மைகளுக்கு எல்லையில்லாதவன் என்பன முன்னடிகள்.

இங்கு அமரர் என்றது இந்திரன் முதலிய தேவர்களை என்றும், நிதய் ஸூரிகளையென்றும் அருளிச்செய்வர். இந்திரராதி தேவர்களுக்கு ரஜோகுண தமோ குணங்கள் மிக்கிருக்கச் செய்தேயும், ஸத்வகுணம் தலையெடுத்தாலும் அதுவும் அப்படியே கனத்திருக்கும். அப்படி ஸத்துவம் தலையெடுக்குங் காலத்து நம்முடைய காரியம் நம்மாற் செய்து நிறைவேற்றுவித்துக்கொள்ள முடியாது; எம்பெருமானே நம் காரியத்துக்கு நிர்வாஹன்’ என்றிருந்து அவன் பக்கலிலே யாசித்துக் காரியத்தையும் நிறைவேற்றுவித்துக்கொண்டு அடுத்த க்ஷணத்திலே எதிரிடுவர்கள். இந்திரனுடைய கதையே இதற்கு உதாஹரணமாகும். இங்கே நம்பிள்ளையீடு:-

“தங்களிருப்பிடமுமிழந்து ஸ்த்ரீகளும் பிடியுண்டு எளிமைப்பட்டவளவிலே அத்தை பரிஹரித்துத் தரவேணுமென்று இரந்து பின்னை இவனும்போய் நரதவதம்பண்ணிச் சிறைகிடந்த ஸ்திரீகளையும் மீட்டுக்கொடுத்துப் போராநிற்கச்செய்தே, புழக்கடைக்கே நின்றதொரு பூண்டைப் பிடுங்கிக் கொண்டு போர, வஜ்ரத்தைக்கொண்டு தொடர்ந்தானிறே” என்பதாம்.

இனி, அமரர் என்பதற்கு நித்யஸூரிகளென்று பொருள்கொள்ளும் பக்ஷத்தில் பெரிய திருவடியின் இதிஹாஸம் உணரத்தக்கது. இங்கே நம்பிள்ளையீடு:-

“அன்றிக்கே,  நன்ஞானத்துளமரர் என்கிறது நித்யஸூரிகளையாய் ஜ்ஞாதிகனான பெரிய திருவடியும்’ தேவரீரையும் நாயச்சிமாரையும் வஹித்தேன் நானன்றோ’ என்றாற்போல சிவியார் சொல்லும் வார்த்தையைச் சொன்னானிறே” என்பதாம்.

இப்படி இந்திராதி தேவர்களையும் நித்யஸூரிகளையும் மயக்கவல்ல மாயைகள் எம்பெருமானிடத்தில் அளவிட முடியாதவையிருக்கின்றன என்பது கிடக்கட்டும்; அவனநுக்ரஹத்தாலே காட்டின வடிவழகை நாமநுபவிப்போமென்கிறார் மேலடிகளில். நீர்கொண்டெழுந்த காளமேகம் போன்ற திருமேனியையுடையவனும் பரம்பின நிலத்தை அளக்கிறவிடத்து வஸிஷ்ட சண்டான விபாகமின்றியே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்தவனுமான எம்பெருமானுடைய, “நீயொரு நாள் படிக்களவாக நிமிர்ந்த நின்பாதபங்கயமே தலைக்கு அணியாய்” என்று ஆசைப்பட வேண்டும்படி மிகவழகிய திருவடித் தாமரைகளை மனமொழி மெய்கள் மூன்றினாலும் அநுபவிக்கப்பெறுவேனாகவேறுமென்று மநோரதிக்கின்றார்.

ஈற்றடியிலுள்ள வினைமுற்றுகளுக்குப் பிரார்த்தனைப் பொருள் கொள்ளாமல் இயல்வுப் பொருள் கொண்டு ‘அலற்றுவதையும் தழுவுவதையும் வணங்குவதையுமே ஸ்வபாவமாகவுடையேன்’ என்பதாகவும் உரைப்பர். (இது ஆறாயிரப்படி நிர்வாஹம்)

 

English Translation

He mystifies even the clear-thinking gods, he has wonders that would fill the sky, he has a dark cloud-hued, his lotus-feet measured the Earth, I shall forever sit and praise, adore and worship him.

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain