(2928)

நாளு நின் றடு நமபழ மையங் கொடுவினையுடனே

மாளும், ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி,

நாளூநந் திருவுடை யடிகள்தம் நலங் கழல் வணங்கி,

மாளுமோ ரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே.

 

பதவுரை

மனனகம்

-

மனத்திலுண்டான

மல் அற

-

(மும்மூர்த்திகளும் ஸமமாவர் என்னும் விப்ரதி பத்தியாகிற) அழுக்கு ஒழியும்படி

கழுவி

-

விவேகத்தாலே பரிசுத்தப்படுத்தி

நாளும்

-

நாள்தோறும்

நம்

-

நமக்கென்றே உரிய

திரு உடை அடிகள் தம்

-

திருமகள் கொழுநனான ஸ்வாமியினுடைய

நலம் கழல்

-

அழகிய திருவடிகளை

வணங்கி

-

ஆச்ரயிக்க

நாளும் நின்று

-

எப்போதும் விடாது நின்று

அடும் நம

-

வருந்துகின்ற நாமறிந்தே

பழமை அம் கொடு

-

பழமையாகிய மிகவுங்

வினை உடனே மாளும்

-

கொடிய பாபங்கள்  ஆச்ரயித்தவுடனே தொலையும்;

ஓர் குறைவு இல்லை

-

ஒரு குறைவுமுண்டாகாது; (இப்படி ஆச்ரயிக்குமிடத்தில்)

மாளும் ஓர் இடத்திலும்

-

சரீரத்தை விடுகிற காலத்திலும்

வணக்கொடு

-

வணக்கத்தோடு

மாள்வது

-

முடிவது

வலம்

-

நன்று.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “நன்றென நலஞ்செய்வதனிடை” என்றருளிச் செய்ததைக் கேட்ட ஸம்ஸாரிகள், அநாதிகாலமாக நாங்கள் பண்ணிக் கூடு பூரித்துக் கிடக்கிற ப்ரபல கருமங்கள் பிரதிபந்தமாயிருக்க நாங்கள் எப்படி எம்பெருமானை ஆச்ரயிக்க முடியும்? அன்றியும் எங்களுடைய வாழ்நாள் வெகுவாய்க் கழிந்து ஒழிந்ததாகையாலே இனி ஆச்ரயிக்க நாள் தானுமில்லையே! என்ன, அவர்களுக்கு உத்தரம்போல் அருளிச் செய்யும் பாசுரம் இது. நீங்கள் செய்து கிடக்கிற பாவங்களை நினைத்து அஞ்சவேண்டா; நீங்கள் எம்பெருமானை ஆச்ரயிப்பதாக முயன்றவளவிலே விரோதி கருமங்களடங்கலும் தொலைந்துபோம்; அவற்றைத் தொலைக்கப் பிராட்டி  ஸந்நிதாநமுண்டுகாணும்; வாழந்õள் பெரும்பாலுங் கழிந்தொழிந்ததே யென்றிருக்கவும் வேண்டா; நீங்கள் தண்டுகாலாவூன்றித்தள்ளி நடக்கும்போதாகிலும் அக்கோலோடே சாய்ந்தால் அது தானும் ஒரு நமஸ்காரமாகக் கணக்கிடப்பெறலாகும் என்றார்.

“மனனகமலமறக்கழுவி நாளும் நம் திருவுடையடிகள் தம் நலங்கழல் வணங்க, நாளும் நின்றடுநமபழமை யங்கொடுவினையுடனேமாளும், ஓர் குறைவில்லை; மாளுமோரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே” என்று அந்வயிப்பது.

இப்பாட்டின் முதலடிக்குச் சார்பாக அறியவேண்டிய தோந்தப் பொருள் கேண்மின்:- ப்ரஹ்மவித்யையை உணர்ந்த அதிகாரிக்கு அவ்வித்யையின் மஹிமையினால் உத்தரபூர்வபாபங்களின் அச்லேஷ விநாசங்கள் கூடும். ஏனெனில் வித்யா மஹிமையை விவரிக்கப் பிறந்த *ஏவம்விதி பாபம் கர்ம நச்லிஷ்யதே* *ஏவம் ஹாஸ்ய ஸர்வ பாம்மாந: *நாராபுக்தம் க்ஷயதே கர்* (கரும பலன் அநுபவித்தேயறவேணும்) என்கிற சாஸ்திரத்தோடு விரோதிக்கின்றதே யென்னில், விரோதமொன்றுமில்லை; விஷயபேதங் கொண்டு இரண்டு சாஸ்திரங்களையும் பொருந்தவிடத்தட்டில்லை. இனி விஷயபேதம் எவ்வாறெனில், “கருமபலன் அநுபவித்தே அறவேணும்’ என்கிற சாஸ்திரம்- கருமங்கள் பலன் தருவதில் திண்ணிய சக்தியுடையன எனக் கூறுதலை விஷயமாகவுடையது. *ஏவம் ஹாஸ்ய ஸர்வ பாப்மாந ப்ரதூயந்தே* இத்யாதிச்ருதிகள் ப்ரஹ்மவித்யை ப்ராசீநபாபங்களுக்குள்ள பலப்ரதாந நக்தியை நாசஞ்செய்வதிலும் பவிஷ்யத் பாபங்களுக்குள்ள பலப்ரதாந சக்தி உத்பத்தியைத் தடைசெய்வதிலும் வல்லமையுள்ளதெனக் கூறுதலை விஷயமாகவுடையன, ஆகையால் இரண்டிற்கும் விஷயம் வேறுபட்டதாயிற்று. அக்நிக்கு தாஹ ஸாமர்த்தியத்தையும் ஜலத்திற்கு தாஹநிவாரண ஸாமர்த்தியத்தையும் கூறுகின்ற இரண்டு பிரமாணங்கள் விஷய பேதத்தாலே அவித்தமாவதுபோல இதனைக் கொள்க.

இப்பாட்டின் முதன் மூன்றடிகட்குச் சந்தையாக “த்வதங்க்ரிமுத்திச்ய கதாபீ கோநசித யதா ததாவாபி ஸக்ருத் க்ருதோஞ்சலி:, ததைவ முஷ்ணாக்யசு பாந்தயசேஷதா: சுபாதி புஷ்ணாதி ஜாது ஹீயதே” என்ற ஆளவந்தார் ஸ்தோத்ரரரத்ந ஸ்ரீஸூக்தி அநுஸந்திக்கவுரியது.

மூன்றாமடியின் முடிவில், வணங்கி என்றது எச்சத்திரிபாய் வணங்கவென்றபடி. வணங்கின் என்ற பாடத்தில் இங்ஙனங்கொள்ளவேண்டிய அருமையில்லையாயினும் அது பாடமன்று.

மூன்றாமடிக்கு ஒரு ஸம்வாதமருளிச் செய்கிறார் நம்பிள்ளை; அதாவது- “ஸர்வேச்வரனை ஆச்ரயித்தானாகில் அவன் பலப்ரதனாகிறான், பிராட்டியைப் புருஷகாரமாகப் பற்ற வேண்டுகிறதென்? என்று நஞ்சீயர் பட்டரைக்கேட்க, *நாளுநந் திருவுடையடிகள்தம் நலங்கழல் வணங்கி யென்று, அவள் முன்னாக ஆச்ரயிக்க வேணுமென்னாநின்றது கண்டீரே! என்று அருளிச்செய்து, அவனை ஆச்ரயிக்குமிடத்தில் இவன் குற்றம் பாராதே தன்னிழலிலே இவனைவைத்து அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்குமவள் முன்னாகப் பற்றவேணும் என்றருளிச்செய்தார்” என்பதாம்.

நலங்கழல் = பிராட்டி புருஷகாரமாகப் பற்றினாருடைய குற்றங்களைக் கணிசியாதே கைக்கொள்ளவல்ல திருவடிகள் என்றவாறு. இதுவாயிற்றுத் திருவடிகட்கு நன்மை.

மாளுமோரிடத்திலும் வணக்கொடு மாள்வதுவலமே = இராவணன் “த்விதா பஜ்யேமப்யேவம் ந நமேயம் து கஸ்யசித்” என்றான்; நான் உடல் பிளந்து செத்துப் போகும்படி நேர்ந்தாலும் சரீரம் இருதுண்டாகப் பிளவுற்றுக் குறுக்கே விழுமத்தனையொழிய அப்போதும் ஒருவனை வணங்கினாப்போல் விழமாட்டேன்’ என்றான். அப்படிப்பட்ட விருத்தஸங்கல்ப மின்றியே, சாகிறபோதாவது தலை கவிழ்ந்து சாவப்பெற்றால் நன்று என்கிறாராழ்வார்.

 

English Translation

Let us purge our hearts free from desires, and worship the radiant feet of the Lord, spouse of Lakshmi.  Our past karmas will vanish, and we shall not want, Even if death comes, we shall die humbly and well.

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain