(2926)

உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந்நிலைமை,

உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலையுணர்வரி துயிர்காள்,

உணர்ந்துணர்ந் துரைத்துரைத் தரியய னரனென்னுமிவரை,

உணர்ந்துணர்ந் துரைத்துரைத் திறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே.

 

பதவுரை

உணர்ந்து உணர்ந்து

-

உணர்வையே இயற்கையாகவுடையானாகி

இழிந்து அகன்று உயர்ந்து

-

(அந்த உணர்வு அகண்ட மாகையாலே) பத்துத் திக்கிலும் வியாபித்து

உரு வியந்த

-

ஜடப் பொருளில் நின்றும் வேறுபட்டிருக்கிற

இ நிலைமை

-

இந்த ஆத்மாவின் ஸ்வரூபத்தை

உணர்ந்து

-

கேள்வியாலே அறிந்து

உணர்ந்து

-

மநநத்தினாலே அறிந்து

உணரிலும்

-

யோகாத்தாலே ப்ரத்யக்ஷமாக அறிந்தாலும்

இறைநிலை உணர்வு

-

ஸர்வேச்வரனுடைய நிலைமையை அறிவதாவது

அரிது

-

அருமையாயிருக்கின்றது; (ஆயினும்;)

உயிர்கான்

-

சேதநர்களே!

அரி அயன் அரன் என்னும் இவரை

-

விஷ்ணு பிரமன் ருத்ரன் என்று சொல்லப்படுகிற இவர்களை

உணர்ந்து உணர்ந்து

-

(ஒவ்வொருவருடையவும்) குணம் முதலியவற்றைக் கொண்டு பலகாலும் ஆராய்ந்து.

உரைத்து உரைத்து

-

(அதற்கு இணங்கப்) ப்ரமாணங்களை வ்யவஹரித்துப் பார்த்து

மனப்பட்டது ஒன்று

-

உங்கள் மனதில் ஈச்வரனாகத் தோன்றின ஒரு பொருளை

உணர்ந்து உணர்ந்து

-

பலகாலும் அநுஸந்தித்து

உரைத்து உரைத்து

-

(அப்பொருளின் மந்திரம் திருநாமம் முதலியவற்றைப்) பலகாலும் சொல்லி

இறைஞ்சுமின்

-

உபாஸியுங்கோள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸம்ஸாரிகள் ஆழ்வாரை நோக்கி “ஆழ்வீர்! அவதாரத்திலே ஆச்ரயிக்கும்படி சொல்லா நின்றீர்; “மத்யே விரிஞ்சகிரிசம் ப்ரமாவதார:” (ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்- உத்தரசதகம்.) என்கிறபடியே,பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே அவதரித்து நிற்கிற நிலையாயிருந்தது முதலவதாரம்; அதில் மூவரும் ஒரு திகரானவர்போலத் தோற்றியிராநின்றார்கள்; அம்மூவரும் முக்கியர்களேயோ? அல்லது மூவரிலே ஒருவன் முக்கியவனோ! அல்லது மூவர்க்கு மப்பால் ஒருவன் முக்கியனோ? என்று எங்களால் ஆராய்ந்து அறுதியிடப் போகாமையாலே ஆச்ரயிப்பதிலே ஒரு ஆலோசனை உண்டாயிற்று; அதனை நீக்கி ஆச்ரயணீய வஸ்துவை நிர்ஷ்கர்ஷித்துத் தரவேணுமே நாங்கள் ஆச்ரயிக்கும்படி” என்று விஜ்ஞாபிக்க, த்ரிமூர்த்திஸாம்ய ப்ரமத்தைப் பரிஹரிக்குமடைவிலே அருளிச் செய்கிற பாசுரம் இது.

ஜீவாத்மஸ்வரூபத்தை ஒருபடி ஸாக்ஷாத்ரிக்கப் பெற்றாலும் பரமாத்ம ஸ்வரூபம் அறுதியிடவரிது என்கிறார் முன்னடிகளால்.

ஜீவாத்மஸ்வரூபம் எப்படிப்பட்டதென்னில்; உணர்ந்துணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த = ஞானமாத்திரஸ்வரூபமன்றியே ஞானத்திற்கு ஆச்ரயமாயிருக்கும்படியை ‘உணர்த்துணர்ந்து’ என்பதனால் அருளிச் செய்தபடி ‘இழிந்து அகன்று உயர்ந்து என்பதனால் ஸர்வ வயாப்தி சொல்லப்படுகிறது; ஜீவஸ்வரூபம் அணுவானதாயினும் தர்மபூத ஜ்ஞானத்வாரா வ்யாப்தி உண்டாதலால் இங்ஙனமருளிச் செய்க் குறையில்லை என்க. இங்கே ஈடு; - “இச்சேதனன் தான் அணுபரிமாணனாயிருக்கச் செய்தேயும், ஈச்வரன் ஸ்வரூபத்தாலே எங்கும் வியாபித்திருக்குமா போலே ஜ்நானத்தாலே எங்கும் வ்யாபித்திருக்குமென்கிறது” என்பதாம். இழிந்து என்பதனால் கீழ் நிலங்களில் வியாப்தியும், அகன்று என்பதனால் நடுநிலஙக்ளில் வியாப்தியும் உயர்ந்து என்பதனால் மேல் நிலங்களில் வியாப்தியும் சொல்லுகையாலே ஸர்வப்யாப்தி சொல்லிற்றாயிற்று.

உருவியந்த என்பதனால் தேஹத்திற்காட்டிலும் விலக்ஷணன் என்னுமிடம் சொல்லப்பட்டது. உரு என்று ரூபவத்தான அசேத நவஸ்துஸமுதாயத்தைச் சொல்லுகிறது. வியந்த என்றும் பிரிக்கலாம் இயந்த என்றும் பிரிக்கலாம்; பொருள் ஒன்றே.

ஆக இப்படிப்பட்டதான இந்நிலைமை உணர்ந்துணர்ந்து உணரிலும் = ஆத்மாவினுடைய ஸ்வரூபத்தை ச்ரவணம் மநநம் முதலியவற்றால் ஸாக்ஷாத்கரிக்கக் கூடினாலும்- தேஹாதிரிக்தமாயிருக்கிற ஆத்மாவின் ஸ்வரூபத்தை யோகசாஸ்திரத்திற் சொல்லுகிற க்ரமத்தாலே யிழிந்து வருந்தி ஓருவகையாய் அறிந்தானானாலும் என்றபடி.

உயிர்காள்! இறைநிலை உணர்வரிது = சேதனர்களே! ஸர்வேச்வரன் பிரமருத்திரர்களுக்கு அந்தராத்மாவாய் அவர்களைச் சரீரமாகக் கொண்டு தான் சரீரியாய் நிற்கிற நிலை அறியமுடியாததென்கை.

‘இறைநிலை உணர்வரிது’ என்று சொல்லிவிடலாகுமோ? அல்பஜ்ஞர்களான எங்களால் அறியமுடியாதென்பது உண்மையே; அறிந்தவர்களில் தலைவரான தேவரீர் நிஷ்கர்ஷித்து அருளிச் செய்தால் நாங்கள் அறிந்து கொள்ளத் தடையில்லையே என்ன; மத்யஸ்த த்ருஷ்டியாலே ஆராய்ந்து பார்க்கும்படி அருளிச் செய்கிறார் அரியயனரனென்னுமிவரை உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து இத்யாதி. நாராயணனென்றும் நான்முகமெனன்றும் ருத்ரனென்று முள்ள மூன்று மூர்த்திகளின் ஸ்வரூபத்தையும் ஸ்வபாவத்தையும் ஆராய்ந்து பாருங்கோள்; அந்த ஸ்வரூபவஸ்வ பாவங்களைத் தெரிவிக்கின்ற பிரமாணங்களையும் ஒருவர்க்கொருவர் சொல்லிப் பாருங்கோள்; ஒருவன் படைப்பவாய் இருவர் படைக்கப்படுமவர்களாய், ஒருவன் ஸாத்விகனாய் இருவர் ராஜஸதாமஸர்களாய்ப் புலப்படுமவர்கள். அங்ஙனம் புலப்படுமவர்களில் நிஷ்பக்ஷபாதமாய் எந்தத் தெய்வம் உங்கள் நெஞ்சில் சிறந்ததாகத் தோன்றுகின்றதோ அதனை நீங்களே நிஷ்கர்ஷித்துப் பற்றுதல் நன்று என்றாராயிற்று.

 

English Translation

O People! Even if you raalise your nature as different from your body, -formless, sons length, breadth or height, -the Lord is not attained.   Praise him who is spoken of as Brahma, Vishnu and Siva, he is the Lord dwelling in your heart.

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain