(2925)

பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த,

கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்,

வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு,

உணக்குமின் பசையற அவனுடை, யுணர்வுகொண் டுணர்ந்தே.

 

பதவுரை

அறு வகை சமயமும் பிணக்கு அற

-

ஆறுவகைப்பட்ட மதங்களும் (வைதிகமார்க்கத்தோடு) பிணக்கம் ஒழியும்படி.

நெறி

-

வேதமார்க்கத்தை

உள்ளி

-

ஆராய்ந்து

உரைத்த

-

அருளிச் செய்த

கணக்கு அறு நலத்தனன்

-

எண்ணிறந்த கல்யாண குணங்களையுடையவனும்

அந்தமில் ஆகி

-

முடிவில்லாத முதல்வனும்

அம் பகவன்

-

அழகன குணங்களை யுடையவனுமான எம்பெருமானது

வணக்கு உடை

-

வணக்கத்தையுடைய

தவம் நெறி

-

பக்தி (அல்லது) ப்ரபத்தி ஆகிற

வழிநின்று

-

மார்க்கத்தில் நின்று

புறம்நெறிகளை

-

வேறு மார்க்கங்களாகிற களையை

கட்டு

-

பறித்து

அவனுடைய உணர்வு கொண்டு

-

அவனளித்த கீதையைக்கொண்டு

உணர்ந்து

-

உணர்ச்சி பெற்று

பசையற

-

வாஸநாரூபமான பற்றும் அறும்படி

உணக்குமின்

-

உலர்த்திவிடுங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘ஆச்ரயிக்கத் தக்கவனான எம்பெருமான் எளியனென்பது அறிந்தோம்; அன்னவனை ஆச்ரயிக்கும் வழி என்ன?’ என்று ஸம்ஸாரிகள் கேட்பதாகக் கொண்டு, அவன் கீதையிலே அருளிச் செய்துவைத்த பக்திமார்க்கத்தாலே அவனை ஆச்ரயியுங்கோள் என்கிறார்.

அறுவகைச் சமயமும் பிணக்கு அற நெயி உள்ளிரைத்த = ஸாங்கியம், யோகம் காணாதம். பௌத்தம், ஜைனம், பாசுபதம் என்ற ஆறுவகைப்பட்ட சமயங்களும் வைதிக சமயத்தோடு பிணக்கங்கொண்டிருக்கும்; அந்தப் பிணக்கம் தீருமாறு வேத மார்க்கத்தை ஆராய்ந்து அருளிச் செய்தவனும் எண்ணிறந்த திருக்கல்யாணகுணங்களையுடையவனும் ஒருநாளும் முடிவில்லாத ஜகத்காரணபூதனும் ‘பகவாத்’ என்று அஸாதாரணமான திருநாமத்தையுடையவனுமான எம்பெருமான் திறமான பக்தியோகத்திலே நின்று பிராகிருதவிஷயங்களாகிய களையைக்கடிந்து அவற்றின் ஸங்கத்தையும் விடுங்கோள், எங்ஙனே விடுவதென்னில் அவனருளிச் செய்த கீதையாலே அவனையுணர்ந்து புறம்புண்டான பற்றுக்களை யெல்லாம் விடுவது என்றவாறு.

ஸாங்கமான ஸகலவேதங்களுக்கும் தானே பொருள் என்பதை ஸ்ரீகீதையிலே அருளிச் செய்கையாலே அறு சமயக் கொள்கைகள் அவத்யமென்று கழியுண்டனவாயிற்று. கீதை அவதரியாவிடில் அறுசமயங்களுக்கும் வைதிகசமயத்திற்கும் பரஸ்பரம் ஏற்பட்ட பிணக்கு அறாதேயிருக்கும்; வைதிகமார்க்கத்தை நிலை நிறுத்தி கீதை அவதரித்துவிட்டபடியாலே அந்தப் பிணக்கு அற்றதென்க.

பசை அற உணனக்குமின் = கீதையில் இரண்டாவது அத்யாயத்தில் (59) “விஷயாவிவார்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:- ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே’ என்று ஓதப்பட்டது காண்க.

இதெல்லாம் எதுகொண்டு என்ன, அவனுடைய வுணர்வுகொண்டு என்கிறார். இவ்விடத்தில் உணர்வு எனகிறது உணர்வுக்கு உறுப்பான கீதையை, கீதாசாஸ்திரத்தைக் கொண்டு தெரிந்துகொண்டு பசையற வுணக்குமின் என்க.

 

English Translation

Accept the method of the Vedas, and know him through realisation, He is the Lord without end, and beginning of all, spoken of therein.  Give up all doubt and cut as under your attachments, for he resolves the conflicts in the six schools of thought.

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain