(2922)

எளிவரு மியல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய்,

ஒளிவரு முழு நலம் முதலில கேடில வீடாம்,

தெளிதரும் நிலைமைய தொழிவிலன் முழுவதும், மிறையோன்,

அளிவரு மருளினோ டகத்தனன், புறத்தன னமைந்தே..

 

பதவுரை

நிலை வரம்பு இல பல  பிறப்பு ஆய்

-

ஒரு நிலையும் ஒரு நியதியும் இல்லாத பலவகைப் பிறப்பையுடையனாய்

முதல் இல கேடு இல முழு நலம்

-

முதலுமில்லாமல் முடிவுமில்லாமலிருக்கின்ற கல்யாண குணங்களெல்லாம்

ஒளி வரும்

-

ஒளிமல்கும்படியான

எளி வரும் இயல்பினன்

-

ஸௌலப்யத்தையே இயல்வாக வுடையனாய்

வீடு ஆம் தெளி தரு நிலைமை அது முழுவதும்

-

மோக்ஷமாகிற தெளிவைத் தருதலாகிற அந்த நிலைமையை முழுவதும்

ஒழிவு இலன்

-

எப்போதும் உடையவனான

இறையோன்

-

ஸ்வாமியானவன்

அளிவரும் அருளினோடு அமைந்து

-

அளித்த கிருபையோடே கூடி

அகத்தனன்

-

(அடியவர்க்கு) அந்தரங்கனாய்

புறந்தனன்

-

(மற்றையோர்க்கு) அணுகத்தகாதவனாயிருப்பன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீமதுரகவிகள் முதலான ஸத்துக்களடங்கலும் மோஹிதரான ஆழ்வாரைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். திருவாய்மொழியை அநுபவிக்கப் பிறந்த மஹான்களின் பாக்கியத்தினால் மோஹங் கழிந்து தெளிவுபெற்ற ஆழ்வார் ப்ரஸ்துதமான ஸௌலப்ய குணத்தை விசேஷித்து அருளிச் செய்யத் தொடங்குகிறாரிதில்.

எளிவருமியல்லினன் = கீழ்ப்பாட்டில் “பத்துடை யடியவர்க்கும் எளியவன்” என்று ஸ்நேஹிகளுக்கு ஸுலபனாயிருப்பன் என்று சொன்னது தகுதியன்றென்று திருவுள்ளம் பற்றி எளிமைதானே ஸ்வரூபமாயிருக்குமென்கிறது.

நிலைவரம்பில பலபிறப்பாய் = நிலையில்லாதனவும் வரம்பில்லாதனவுமான பலவகைப்பட்ட அவதாரங்களைச் செய்யபவனென்றபடி, இன்ன யோநியில் தான் பிறப்பதென்று ஒரு ஸ்யவஸ்தை கொள்ளாமலே ‘நிலையில’ என்றது; இன்ன சேஷ்டி தந்தான் செய்வது என்று ஒரு வ்யவஸ்தை கொள்ளாமையாலே ‘வரம்பில’ என்றது - என்று பூர்வாசார்யர்கள் நிர்வஹித்தார்களாம். பட்டர் ‘நிலையில’ என்பதற்கே அவ்விரண்டு பொருளையுங்கொண்டு, இனி ‘வரம்பில’ என்பதற்கு- வரம்பில்லாமையாவது. “அவதரித்து எளியனாய் நின்ற நிலைதன்னிலே பரத்வந்தோற்ற நின்றாலும் நிற்கையாம்” என்று அருளிச் செய்வராம். எங்ஙனே யென்னில், அர்ஜுனனுக்குச் சாரதியாய் நின்று தாழ நிற்கச் செய்தேயும் விச்வரூபத்தக் காட்டினபடியும். சிவபிரான் பக்கல் புத்தீரவரம் வேண்டிப்போகா நிற்கச் செய்தே கண்டாகர்ணனுக்கு முக்தியளித்தபடியும் ஏழுபிராயத்திலே கோவர்த்தனமலையைக் குடையாகவெடுத்தபடியும் முதலானவை நோக்கப்படின், ஒன்றிலும் ஒரு நியதியில்லை, லக்ஷிப்பதற்கு உறுப்பாகுமத்தனையே வேண்டுவது என்ற திருவுள்ளம் விளங்கும்.

பலபிறப்பாயொளிவரு முழுநலம் = பிறக்கப் பிறக்க நாம் புகரழிந்து வாரா நின்றோம்; அங்னல்லாமல் எம்பெருமான் பிறக்கப் பிறக்கக் கல்யாணகுணங்கள் மிகவும் புகர்பெற்ற விளங்குமாயிற்று. *ஸ உச்ரேயாத் பவதி ஜாயமாந:* என்று வேதமும் ஓதிற்று; ஸா (பகவாத்) ஜாயமாநஸ்ஸத் ச்ரேயாதேவ பவதி) என்றபடி. கருமமடியாகப் பிறந்தாலன்றோ பிறக்கப் பிறக்கப் புகார் அழிவது: அநுக்ரஹமடியாக வருகிற அவதாரமாதலால் ஔஜ்ஜவல்யம் மிக்கிருக்குமென்க.

முதலில் கேடில = ஒரு நாளில் தோன்றி ஒருநாள்வரையிலே முடியுமவையல்லாமல் நித்ய ஸித்த குணங்கள் என்றவாறு.

வீடு ஆம் தெளி தருநிலைமையது முழுவதும் ஒழிவிலன் = வீடு - மோக்ஷம்; அதுவாகிற தெளிவைத் தந்தருளுமியல்வு என்றைக்கு மொருபடிப்பட்டிருக்கப் பெற்றவன் என்கை. இதனால் மோக்ஷப்ரதத்வ  மென்கிற குணம் சொல்லப்பட்டதாயிற்று. இக்குணம் கீழே முழுநலம் என்றதிலேயே அடங்கக்கூடுமாயினும்  , இது சிறந்த குணமாதலால் தனிப்படச் சொல்லலாயிற்று.

தெளிவு என்னுஞ்சொல் தெளி என்று குறைந்து கிடக்கின்றது. பரமபதத்தைத் ‘தெளிவிசும்பு’ என்றே வழங்குவர். தெளிவே வடிவெடுத்திருக்குமிடமாதல் அறிக. இந்த லீலாவிபூதி கலக்கத்திற்கே ஏற்பட்டதுபோல அந்த நித்யவிபூதி தெளிவுக்கே ஏற்பட்ட தென்றவாறு.

அருளுக்கு அளிவருதலாவது நிர்ஹேதுகத்வமாம். பாண்டவர் போல்வார்க்குக் கையாளாயிருக்கையும் துரியோதனாதியர்க்கு ஆளிட்டுவிடுகையும் ஈற்றடிக்கு விஷயம்.

 

English Translation

Heedless of places and context, he appears in countless forms.  His radiant fullness is beginning less and endless. Forever providing the ambrosial experience of liberation, he exists with cool grace within and without.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain