(2921)

பத்துடை யடியவர்க் கெளியவன், பிறர்களுக் கரிய

வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு

எத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே.

 

பதவுரை

பத்து உடை

-

பக்தியையுடைய

அடியவர்க்கு

-

அடியார்களுக்கு

எளியவன்

-

ஸுலபனாயும்

பிறர்களுக்கு

-

மற்றையோர்களுக்கு

அரிய

-

துர்லபனாயுமிருக்கிற

வித்தகன்

-

ஆச்சரியபூதனும்,

மலர் மகள் விரும்பும்

-

பெரியபிராட்டியார் விரும்புதற் கீடானவனும்

பெறல் அரு

-

பெறுதற்கு அரியனுமான

நம் அடிகள்

-

நமது ஸ்வாமி

மத்து உறு கடை வெண்ணெய் களவினில்

-

(யசோதைப்பிராட்டி) மத்தையுறுத்திக் கடைகின்ற வெண்ணெயினுடைய களவில்

உரம் இடை

-

மார்வினிடையிலே

ஆப்புண்டு

-

கட்டுண்டி

உரலினோடு  இணைந்திருந்து

-

உரலோடு பொருந்தி இருந்து

ஏங்கிய

-

ஏங்கியிருந்த

எளிவு

-

எளிமைக்குணம்

எத்திறம்

-

எப்படிப்பட்டது!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய ஸௌலப்யம் நன்கு விளங்கினது அவதாரங்களிலாதலால் அப்படிப்பட்ட அவதாரங்களுள்ளும் நீர்மைக்கு எல்லையான க்ருஷ்ணாவதாரத்திலே யிழிந்து, அதிலேயும் பரத்வத்தோடு ஸமமாகச் சொல்லக் வடிய நிலைகளிற் செல்லாதே, வெண்ணெய் களவுகண்டு கட்டுண்டு வருந்தியேங்கி நின்ற நிலையிலே யகப்பட்டு இப்படியும் ஒரு எளிமைக்குணமுண்டோவென்று ஈடுபடுகிறார்.

பத்துடையடியவர்க்கு எளியவன்- “முற்ற முதிர்ந்த பக்தியையுடையார்க்கு எளியன்” என்றுரைப்பது ஆழ்வார்க்கு விவக்ஷிதமாயிராது· தன் பக்கலில் சிறிது ஆசை வைத்தவர்களையும் தான் விடமாட்டாமலிருக்கிறான்’ என்று சொல்லுவதே ஏற்றதாகும். ஆகவே, அத்வேமாத்திரமே இங்குப் பத்து என்னுஞ்சொல்லுக்குப் பொருளாகவுரியதாம்.

எளியவனாயிருக்குந்தன்மை எல்லாரிடத்துங் காட்டப்பட்டால் அனர்த்தமாகுமே! உகந்தவர்கட்கு மாத்திரம் எளியனாய், உகவாதார்க்கு அருமைப்பட்டவனநாயிருந்தால்தானே அன்பர் தேறியிருக்க முடியும்; அதற்காக அருளிச் செய்கிறார் பிறர்களுக்கு அரிய வித்தகன் என்று. எம்பெருமானையே உபாயகமாகக் கொள்ளாமல் பிறிதொன்றை உபாயமாகக் கொள்ளுமவர்கள் இங்குப் பிறர்களாவார்; அன்வர்கட்கு அருமைப்பட்டிருத்தலாகிற ஆச்சரியத்திற்கு ஆஸ்பதன் எம்பெருமான் என்கை. என்ன ஆச்சரியமென்னில்; யசோதைப்பிராட்டி முதலானார்க்கு விதேயனாயிருந்த நிலைதன்னிலேயே பூதனை, சகடம், மருதம் முதலியவற்றிற்கு அணுகவுமொண்ணாதிருந்தமை காண்க.

மலர்மகள் விரும்பும் அரும்பெறல் நம் அடிகள் = தாமரை மலரிலே பிறந்து அதனையே இருப்பிடாக வுடையவளாயிருந்த பிராட்டி அங்கே அடிக்கொதித்து அதனைவிட்டு ‘அகலகில்லேனிறையுமென்று அவர்மேன்மங்கை யுறைமார்பா” என்கிறபடியே திருமார்பை விரும்பி விடாதேயிருக்கப் பெற்ற பெருமான்.

முதல் திருவாய்மொழியில் “உளன் சுடர்மிகு சுருதியுள்” என்று ஆழ்வார் ஏகாந்தமாகக் காட்டின லக்ஷ்மீஸம்பந்தம் இப்பாட்டில் நன்கு வெளியிடப்பட்டதாயிற்று.

முதலடியில் “பத்துடை யடியவர்க்கெளியவன்” என்று சொன்ன பக்த புராதீனத்வமானது பின்னடிகளில் உபபாதிக்கப்படுகிறது. மத்துறு கடை வெண்ணெய் என்று தொடங்கி.

யசோதைப்பிராட்டி மத்தையுறுத்தித் தயிர் கடையும்போது அவளது நிழலிலேயொதுங்கியிருந்து களவு வழியிலே வெண்ணெயை அள்ளி அமுது செய்ய, கையோடே பிடியுண்டு உரலோடே மார்வை நெருக்கிக் கட்டியிட்டு வைக்கப் பெற்று அழுது ஏங்கிநின்ற நிலைமை என்னே! என்று கரைக்கின்றாராழ்வார்.

‘உரலினோடிணைந்திருந்தேங்கிய வெளிவு எத்திறம்?’ என்று சொல்லிக் கொண்டே ஆழ்வார் மோஹித்துவிட்டாரென்பது “த்வாமந்யகோபக்ருஹகவ்யமுஷம் யசோதா குர்வி த்வதீயமவமாநமம்ருஷ்யமாணா, ப்ரேம்ணாத தாமபரிணாமஜுஷா பபந்த தாத்ருக் ந தே சரிதமார்யஜனா ஸஹந்தே” என்ற அதிமானுஷ்ஸ்தவ ஸ்ரீஸூக்தியில் ஈற்றடியால் வெளியிடப்பட்டது. கூரத்தாழ்வானால்,  ஆசார்யஹ்ருதயத்திலும் “மூவாறுமாஸம் மோஹித்து” என்றருளிச் செய்யப்பட்டது.

 

English Translation

The Lord is easy to reach by devote through love.  His feet are hard to get for others, even Lotus-dame Lakshmi Oh, how easily he was caught and bound to the mortar, pleading, for stealing butter from the milkmaid's churning pail.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain