(2900)

மனனக மலமற மலர்மிசை யெழுதரும்

மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்

இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்

இனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே.

 

பதவுரை

மனனகம்

-

மனத்திலேயிருக்கிற

மலம் அற

-

(காமம் கோபம் முதலிய) தீக்குணங்கள் கழியக் கழிய (அதனால்)

மலர்

-

மலர்ந்ததாகி

மிசை எழ தரும்

-

மேலே மேலே விருத்தியடைகிற

மனன் உணர்வு

-

மாநஸ ஜ்ஞான மென்கிற யோக வுணர்ச்சியால்

அளவிலன்

-

அளவிடப்படாதவனும்

பொறி உணர்வு

-

(மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும்) வெளியிந்திரியங்களின் ஞானத்தினால் அளவிடப்படாத’வனுமாய்

இனன்

-

இப்படிப்பட்டவனும்

முழு உணர் நலம்

-

பரிபூர்ண ஞானானந்த ஸ்வரூபியும்

எதிர் நிகழ் கழிவினும்

-

எதிர்காலம் நிகழ்காலம் இறந்தகாலம் என்ற மூன்று காலங்களிலும்

இவன் இலன்

-

ஒப்பு இல்லாதவனும்

மிகுநரை இலன்

-

மேற்பட்டவ ரில்லாதவனுமா யிருப்பவன்

என் நன் உயிர்

-

எனக்கு நல்ல ஆத்மா.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் இவ்வாழ்வாரை வசப்படுத்திக்கொண்டது தனது திருக்கல்யாண குணங்களைக் காட்டி யாதலால் அக்குணங்களிலே முற்படி இழிந்து பேசினார். அக்குணங்கள் ஸ்வரூபத்தைப் பற்றி நிற்குமேயொழிய நிராச்ரயமாய் நில்லாது; ஆகவே அக்குணங்களுக்கு ஆச்ரயமான ஸ்வரூபத்தை அவள் அவன் என்று கீழ்ப்பாட்டிலேயே ப்ரஸ்தாவித்தார். அந்த திவ்ய ஸ்வரூபமானது சித்து அசித்து என்கிற இரண்டு தத்துவங்களிற்காட்டிலும் விலக்ஷணமாயிருக்கிறபடியை இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.

“மனனகமலமற மலர் மிசையெழுதரும் மனனுணர்வளவிலன்” என்னுமளவால் ஜீவாத்மஸ்வரூபத்திற்காட்டிலும் பரமாத்மஸ்வரூபம் விலக்ஷணம் எனப்படுகிறது. “பொறியுணர்வலையிலன்” என்று ஜடப்பொருள்களிற்காட்டில் விலக்ஷணம் எனப்படுகிறது ஞானமும் ஆனந்தமுமே வடிவெடுத்ததாயும், முக்காலங்களிலும் ஒப்புயர்வற்றதாயுமிருக்கிற அந்த பரமாதம் ஸ்வரூபம் அடியேனுக்குத் தாரகமாயுமிரா நின்றது என்கிறார் பின்னடிகளில். என்னுயிர் என்றதையும் ஒரு விசேஷணமாகக் கொண்டு அப்படிப்பட்டவனது சுடரடி தொழுதெழன்மனனே!- என்று முன்பாட்டோடே கூட்டிப் பொருளுரைத்துக் கொள்வதுமுண்டு.

சிற என்றதை ‘அற அற’ என்று இரட்டித்துக் கொள்க. ‘சிரமமாக ஒழிய என்பது பொருள். மன்னகமலம் = ‘காமா கிரோதச்ச லோபச்ச ஹர்ஷோ மாநோ மதோ த்ருதி:- விஷாதச் சாஷ்டமா: ப்ரோக்த: இத்யேதே மநஸோ மகா:” என்று சொல்லப்பட்ட காமம் குரோதம் முதலிய துர்க்குணங்கள் படிப்படியாகக் கழிந்து கொண்டேவர, அதனால் மனவுணர்சசியானது விகாஸம் பெற்று மேன்மேலுங் கொழுந்துவிட்டுக் கிளர்ந்து வரும். (அப்படிப்பட்ட மாநஸஜ்ஞாநத்தாலே ஜீவாத்மா உணரப்படுவன்; எம்பெருமானோவெனில் அப்படி உணரப்படமாட்டான் என்க.

(மனன் அகம்) அகம் - ஏழாம் வேற்றுமையுருபு; மநஸ்ஸிலே என்றபடி மனனுணர்வு- மாநஸஜ்ஞானம்; (அதனாலே) அளவு- பரிச்சேதித்தல்; அதை யுடையவன் ஜீவாத்மா; அஃதில்லாதவன் எம்பெருமான் என்க. இங்ஙனன்றியே, மனனுணர்வு என்பதற்கே மனத்தினாலுணரப்படும் ஜீவாத்மா’ என்று பொருள் கொண்டு, அதனளவல்லாதவன் எம்பெருமான் என்றும், பொறியுணர்வவை என்பதற்கு- கண் முதலிய இந்திரியங்களால் உணரப்படும் பொருள்கள் என்றுபொருள் கொண்டு அவைபோலல்லாதவன் எம்பெருமான் என்றும் உரைப்பர்.

பகவத் ஸ்வரூபமானது சேதநாசேதந ஸ்வரூபங்களிற் காட்டில் விலக்ஷணம் என்று சொல்லவேணுமானால் ‘ஜீவாத்மாவைப்போலல்ல; ஜடப்பொருள் போலல்ல’ என்றிப்படி (எளிதாக)ச் சொல்லலாமே; அங்ஙனம் சொல்லாமல் “மன்னகமலமற” என்று தொடங்கி ‘ஜீவாத்மா மாநஸஜ் ஞானத்திற்கு விஷயமாகவல்லவன், ஜடப் பொருள் பாஹ்ய இந்திரியங்களுக்கு விஷயமாகவற்று’ என்கிற விஷயங்கள் சொல்லப்படுவதற்குக் காரணம் ஏதென்னில்; உலகத்திற் சில பதார்த்தங்களுக்குப் பரஸ்பர வைலக்ஷண்யம் குறையற்றிருக்கச் செய்தேயும் ஏதாவது ஒரு ப்ரகாரத்தாலே ஸாம்யமும் சொல்லக்கூடியதாயிருக்கும்; காண்மின்; பொன்னும் கரியும் ஒன்றோடொன்று நெடுவாகி பெற்றிருக்கச் செய்தேயும், பொன்னைக் காண்கிற கண்ணே பொன்னேயுங் காணாநின்றது என்று இப்படியால் ஒரு ஸாம்யமும் சொல்லக் கூடியதாயிருக்குமே; அப்படிப்பட்ட ஸாம்யமாவது எம்பெருமானுக்கு சேதநாசேதநங்களோடு உண்டோவென்னில் அதுவுமில்லை. யென்கைக்காக ஜீவாத்மாவை கிரஹிக்கிற இந்திரியம் இன்னதென்றும் ஜடப் பொருள்களை க்ரஹிக்கிற இந்திரியங்கள் இன்னவையென்றும் கூறப்பட்டதென்க.

இங்ஙனம் சொல்லக்கூடுமோ? எம்பெருமான் பாஹ்ய இந்திரியங்களாலே க்ரஹிக்கக்கூடியவனல்லனாயினும் அழுக்கற்ற மனத்தினால் க்ரஹிக்கக்கூடியவனாக ஓதப்பட்டிருக்கின்றானே, அதற்கு மாறாக “மனனுணர்வளவிலன்” என்னக்கூடுமோ? என்னில்; கூடும். எம்பெருமான் விசுத்தமான மனத்தினால் க்ரஹிக்கக்கூடியவன் என்று ப்ரமாணங்கள் சொன்னதற்குக் கருத்து யாதெனில்; ‘எம்பெருமான் அப்படிப்பட்டவனெல்லன், அவ்வளவனல்லன்’ என்றிப்படி அறியக்கூடியவன் என்று சொல்லுவதேயாம். ஆதலால் அந்த: காரணத்தினால் ஜீவாத்மா க்ரஹிக்கப்படுவதற்கும் பரமாத்மா கிரஹிக்கப்படுவதற்கும் நெடுவாசியுண்டென்க.

எம்பெருமான் அடியோடு ஞானத்திற்கே விஷயமல்லன் என்று சொல்லி விட்டால் ஆகாசத்தாமரை, மலடிமகன், முயற்கொம்பு முதலிய வஸ்துக்கள்போல் எம்பெருமானும் ஒரு அஸத்பதார்த்தம் (இல்லாத பொருள்) என்று சொன்னதாக முடியுமாதலால், அப்படிப்பட்ட துச்சத்வசங்கை எம்பெருமானிடத்து உண்டாகாமைக்காக விசுத்தமான அந்த: காரணத்தினால் க்ரஹிக்கக்கூடியவனாகச் சொல்லிற்றேயன்றி, உண்மையில் அணுத்ரவ்யமான ஜீவாத்மா க்ரஹிக்கப்படுவதுபோல் விபுத்ரவ்யமான பரமாத்மா க்ரஹிக்கப்பட முடியாதென்ப.

இனன் = இப்படிப்பட்டவன் முன்னடிகளிற் சொன்ன தன்மைகளையே உட்கொண்டு ‘இப்படிப்பட்டவன்’ என்று அநுபாஷிக்கிறபடி முன்பு சொல்லப்பட்டதையே மீண்டும் அநுபாஷணஞ் செய்தல் ஈடுபாட்டின் மிகுதியை வளக்கும்.

உணர் முழுநலம் = உணர் என்றது உணர்வு என்றபடி: (ஞானம்) என்க. நலம்- ஆந்தம். முழு என்றதை இரண்டனோடுங் கூட்டுக. கட்டடங்க ஞானமுமாய் கட்டடங்க ஆனந்தமுமாயிருக்குமென்றவாறு. பரமாத்ம ஸ்வரூபத்தில் ப்ரகாசமல்லாததும் அநுகூலமல்லாததுமான பாகமே கிடையாதென்றதாயிற்று. ஆனந்தமும் ஞான விசேஷமே யாதலால் ஒன்றைச் சொன்னாலே போதுமே; ஆனந்தம் ஞானம் என்ற இரண்டையுஞ் சொல்லத் தேவையில்லையே  யென்னில்; அப்போது இனன் என்றதற்கு ‘உபமானம்’ என்று பொருள்கொண்டு, நேராகத் தன்னை அறிய முடியாமையாலே எப்போதும் உபமானத்தினாலேயே அறியப்படுவதான முழுநலமாயிருக்கும் என்று உரைத்துக்கொள்ளலாம். உபநிஷத்து “யுதாஸைந்தவகந” என்று ஓர் உபமானத்தையிட்டேயன்றோ பரப்ரஹ்ம ஸ்வரூபத்தை நிரூபிப்பது. ஆழ்வார் தாமும் “கடிசேர் நாற்றத்துள்ளாலை யின் பத்துன் பக்கழிநேர்மை. ஒடியாவின்பப் பெருமையோன்” (திருவாய்மொழி: 8-8-2) என்று ஓர் உபமானத்தையிட்டு நிரூபிக்கின்றமை காண்க.

நம் தர்சனத்தில், சித்து அசித்து ஈச்வரன் என்ற மூன்று தத்துவமே உள்ளது. ஈச்வரன் மற்றை யிரண்டு தத்துவங்களிற் காட்டில் விலக்ஷணன் என்பது முன்னடிகளிலேயே வியக்தமாகக் சொல்லப்பட்டிருக்க, ‘எதிர்நிகழ்கழிவினும் இன்னிலன்’ என்று மூன்று காலங்களிலும் ஒப்பில்லாதவன் என்று மறுபடியும் சொல்வதற்குப் பயன் ஏன்? என்னில்; கேண்மின்; ஸாதாமிய த்ருஷ்டாந்தமென்னும் வைதர்மிய த்ருஷ்டாந்தம் என்றும் த்ருஷ்டாந்தம் இருவகைப்படும். அவனைப்போல் இவனிருக்கிறான். என்று அந்வயமுகத்தாலே ஒப்புச் சொல்லுகை ஸாதர்மிய த்ருஷ்டாந்தம்; அவன் எப்படி அயோக்கியனாயிருக்கிறானோ அப்படி இவன் அயோக்யனல்லன்’ என்று வ்யதிரேகமுகத்தாலே சொல்லுகை வைதர்மிய த்ருஷ்டாந்தம். இப்பாட்டின் முன்னடிகளால் எம்பெருமானுக்கு ஸாதர்மிய த்ருஷ்டாந்தமில்லையென்றது, ‘இனனிலன்’ என்பதால் வைதர்மிய த்ருஷ்டாந்தமும் இல்லை யென்னப்படுகிறது. சேதநாசேதநங்களைப்போல எம்பெருமானும் இந்திரிய க்ராஹ்யன், என்னக்கூடுமானால் அப்போது ஸாதார்மிய த்ருஷ்டாந்தமுண்டாகும்; அங்ஙனல்லன் என்று சொல்லப்பட்டமையால் ஸாதர்மிய த்ருஷ்டாந்தமில்லையென்று முன்னடிகளிற் சொல்லிற்றாயிற்று. இனி, ‘எம்பெருமான் அவைபோலல்லன்’ என்று சொல்லுகிற முகத்தால் வைதர்மிய த்ருஷ்டாந்த ஸம்பாவமாவது எம்பெருமானுக்குச் சொல்லக்கூடுமோவென்று விமர்சித்துப் பார்த்து அதுவுமில்லை யென்கிறது இனனிலன் என்பது.

இப்படிச் சொல்லும்பக்ஷத்தில் எம்பெருமான் சேதநாசேதநங்கள் போலல்லன் என்றுஞ்சொல்ல முடியாது, என்பதாகத் தேறுகின்றது; ஆகவே ‘எம்பெருமான் சேநாசேதநங்களைப் போன்றவன், என்று முன்னடிகட்கு முரணாக ஸ்தாபிக்கப்பட்டாகிறதே என்று சிலர் சங்கிக்கலாம்; அப்படியல்ல. வைதர்மிய த்ருஷ்டாந்தமில்லையென்று சொல்வதன் கருத்து யாதெனில்; ‘வஸிஷ்டன் சண்டாளனைப் போலல்ல’ என்று ஒருவன் சொன்னால், ‘சீ சீ, அப்படிச் சொல்லாதே’ என்று ஒருவன் அதனை மறுத்துச் சொன்னானாகில்’ வஸிஷ்டர் சண்டாளனைப்போன்றவர்தாம்’ என்று ஸ்தாபிப்பதா அதன் கருத்து? அல்ல; எடுத்துக்கழிக்கவும் தகாத ஒரு ஹேயவஸ்துவோடே ஸர்வோத்க்ருஷ்ட வஸ்துவுக்கு ஸாமன்யம் உண்டென்கையும் ஸாம்யம் இல்லையென்கையும் இரண்டும் இகழ்வாம்; ஸாம்யப்ரஸக்தியேயில்லாத வஸ்துவேடே ஸாம்யத்தை மறுப்பதும் தகாததேயாம்.

இவ்வளவு அர்த்தங்களையுஞ் சுருக்கி ஒன்பதினாயிரப்படியிலே நஞ்சீயர் அருளிச்செய்கிறார்- “அவனோடு ஒவ்வாதென்று சொல்லுகைக்கும் ஸத்ருசமாயிருப்பதொரு பதார்த்தத்தையுடையனல்லன் என்கிறது”  என்று.

இங்ஙனேயாகில், “கார்வண்ணந் திருமேனி கண்ணும்வாயும் கைத்தலமுமடியிணையுங் கமலவண்ணம்” என்றும் “நீலமேகநிபம்” என்றும் இப்படியே பலரும் பல த்ருஷ்டாந்தங்களைக் கொண்டு எம்பெருமானை வருணிப்பது சேருமோ? எனில்; சேராதுதான்; நெஞ்சில் ஒருபடியாகப் பதிவதற்காக ஏதோ சில உபமானங்களைக் கூட்டிச் சொல்லுகிறதேயொழின, உண்மையில், பரஞ்சோதிக்கு ஸர்வாத்மநாவிஸத்ருசமான வஸ்துக்களை உவமை கூறுதலும் இகழ்வேயா மென்பதை இவ்வாழ்வார் தாமே மேலே “ஓட்டுரைத் திவ்வுலகுக்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும், பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ!” என்று ஸ்பஷ்ட்மாகவே அருளிச்செய்கிறார்.

இன்னுணர் முழுநலம் என்பதற்கு “நேராகத் தன்னை அறிய முடியாமையாலே எப்போதும் உபமானந்தாலேயே அறியப்படுவதான முழுநலமாயிருக்கும்” என்றும் ஒருபொருள் கொள்ளலாமென்று மூன்றாமடியில் சொல்லிவைத்து, நான்காமடியில் வந்து இன்னிலன் (உமானமற்றவன்) என்று சொல்லுவது நேர்விரோதமன்றோ வென்று சிலருடைய நெஞ்சு குழம்பியே கிடக்கும். இதற்கு நாம் என் செய்வோம்! ஏதாவதொரு உபமானத்தையிட்டுப் புகழ்ந்தாலன்றி வஸ்துஸ்வரூபம் தெரிய மாட்டாதாகையாலே உபமானத்தைக்கொண்டே உணரவேண்டியதாயுமிரா நினறாது; உபமானத்துக்கு அர்ஹமான வஸ்து எதுவுமில்லை என்கிற உண்மைப் பொருளை மறையாதே வெளியிட வேண்டியதாயுமிரா நின்றது: ஆகையாலே இந்த விரோதம் அபரிஹார்யமாய் ஸஹ்யமாகக் கடவது.  இதனை எதுபோலக் கொள்ள வேணுமென்றால்- “எனதாவி தந்தொழிந்தேன் இனி மீள்வதென்பதுண்டே” என்று ஆத்மஸமர்ப்பணம் பண்ணி “எனத தாவியார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே” என்று அதனை உடனே மறுத்துக் கூறுமிடத்து ஆத்மஸமர்ப்பணம் பண்ணவும் வேணும் ஐயோ! அநியாயமாகப் பண்ணினோமே! என்று அநுதாபப்படவும் வேணும்’ என்று சாஸ்த்ரார்த்தம் தேறுவதுபோல், எம்பெருமானை உபமானமுகத்தாலே புகழவும் வேணும், உடனே, ஐயோ! விலக்ஷண வஸ்துவுக்கு ஒப்புச்சொல்லி அவத்யத்தை விளைத்தோமே! என்று அநுதாப்படவும் வேணும் என்று சாஸ்திரார்த்தமாகக் கொள்ளத்தக்கது.

மிகுநரைஇலன்= மிகுநர் என்றால் தன்னைப்பார்க்கிலும் மேற்ப்பட்டவர்; எம்பெருமான்தானே ஸர்வஸ்மாத்பரனாகையாலே அவனுக்கு மேற்பட்டார் ஆருமில்லையென்கிறது. அவனுக்கு ஸமானமானவர்களே இல்லை என்ற முடித்தபின்பு. மேற்பட்டாரிருக்கக்கூடுமோ வென்கிற சங்கையே உண்டாக இடமில்லாதிருக்க, “மிகுநரையிலன்’ என்னக்கூடுமோ வெனின்;“ந தத் ஸமச்சாப்யதிகச்ச த்ருச்யதே” என்ற ச்வேதாச்வதர உபநிஷத்தின் சாயையை அடியொற்றிச் சொல்லுகிறபடி. அவ்வுபநிஷத்துதான் அப்படி சொல்லக் கூடுமோவென்னில்; எம்பெருமானுக்கு மேற்ப்பட்டவர்கள் எப்படி அஸம்பாவிதர்களோ அப்படியே ஒத்தாரும் அஸம்பாவிதர்களென்று உபமாநரா ஹித்யத்யத்தைத் திடப்படுத்துவதற்காகவே சொல்லுகிறதென்று நஞ்சீயர் ஒரு வழி காட்டினர்.

முதற்பாட்டில் உயர்வில்லாதவனென்றார்; உயர்வில்லாவிடினும் ஒப்புண்டோ என்று சங்கித்து, ‘மிகுநரையிலேனே’ என்று கொண்டு முன் சொன்ன உயர்வில்லாத ஸர்வேச்வரனைச் சுட்டி, அவன் சேதநாசேதந விலக்ஷணஜ்ஞாநாந்த ஸ்வரூபியாதலால்எதிர் நிகழ்கழிவினும் இனனிலன் ஸமாநனில்லாதவன் என்றார் இப்பாசுரத்தில் என்றுங்கொள்ளலாம். அப்பொழுது, இனன்- இப்படிப்பட்டவனுடைய என்று பொருள்கொண்டு, சுடரடிதொழுதெழென் மன்னே! என்று முன்பாட்டோடே கூட்டிக்கொள்க.

என்னுயிர் என்பதை என் நன் உயர் என்றும், எனன் உயிர் என்றம் இரண்டு வகையாகவும் பிரிக்கலாம்.

மனன் இனன் என்ற விடங்களில் மகரனகரப்போலி அறிக. மனம் என்றாலும் மனன் என்றாலும், இனன் என்றாலும் இனம் என்றாலும் ஒக்குமென்க. இனன் என்பதற்கு இப்படிப்பட்டவனென்று பொருளாகும்போது, இனன் என்று னகர வீற்றதாகவே சொல்வடிவமாகும்.

 

English Translation

He cleanses the heart, makes it blossom and grow, he is beyond the ken of thought, feeling and senses, He is pure consciousness, all goodness, and eternal. He has no peer or superior, he is all our souls.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain