(2833)

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்

பரக்கும் இருவினை பற்றற வோடும் படியிலுள்ளீர்

உரைக்கின் றனனுமக் கியானறஞ் சீறும் உறுகலியைத்

துரக்கும் பெருமை இராமா னுசனென்று சொல்லுமினே.

 

பதவுரை

படியில் உள்ளீர்

-

இப்பூமியிலுள்ளவர்களே!

யான் உமக்கு உரைக்கின்றனன்

-

நான் உங்களுக்கு (ஒரு    ஹிதம்) சொல்லுகிறேன்; (என்னவென்றால்)

அறம் சீறும் உறுகலியை துரக்கும் பெருமை இராமாநுசன் என்று சொல்லுமின்

-

தர்மமார்க்கத்தில் சீற்றமுடையத் தாய் ப்ரபலமான கலியை ஒட்டி விடும் எம்பெருமானாருடைய திருநாமத்தைச் சொல்லுங்கள்; (அப்படி சொன்னால்)

திருவும்

-

பக்திப்பெருஞ்செல்வமும்

உணர்வும்

-

ஞானமும்

சுரக்கும்

-

மேன் மேலும் பெருகும்

சோல புகில்

-

அந்தத் திருநாமத்தைச் சொல்லத் தொடங்கும் போதே

வாய்  அமுதம் பரக்கும்

-

வாக்கிலே அம்ருதரஸம் வியாபிக்கும்

இரு வினை

-

மஹாபாபங்கள்

பற்று அற ஓடும்

-

அடியோடே போய் விடும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகத்தாரை நோக்கி நீங்களெல்லாரும் ஸ்ரீ ராமாநுஜ திவ்ய நாயத்தை வாயாரச் சொல்லுங்கள், உங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகுமென்கிறார். ஓ ஜனங்களே! உங்களுக்கு ஓர் அருமையான அர்த்தத்தை உபதேசிக்கிறேன், கேளுங்கள், எம்பெருமானுடைய ஸம்பந்தமுள்ள தேசத்தில் தருமத்திற்கு மாறான கலிபுருஷன் நிற்கப்பெறமாட்டான்; அன்னவரது திருநாமங்களை நீங்கள் அநுஸந்தாநம் பண்ணுங்கள்; உங்களுக்கும் ஜ்ஞாநபக்திகள் தலையெடுக்கும் பாவங்களும் தொலையும். அத்திரு நாமங்கள் நாவுக்கும் இனிதாயிருக்கும். சொல்லிப்பாருங்கள்.

உமக்கு-யான், உமக்கியான். “யவ்வரீன் இய்யாம்” என்பது நன்னூல்.

நேர்பதினாறே நிரைபதினேழென் றோதினர் கலித்துறையோரடிக் கெழுத்தே” என்ற இலக்கணத்திற்கு மாறாக இப்பாட்டின் மூன்றாமடியில் (ஒற்றொழித்துப்) பதினெட்டெழுத்து

வந்தது என்னெனில்; உமக்கியான் என்ற விடத்தில் ககரத்தின் மேலேறின இகரம் குற்றிய விகர மாகையாவே வண்ணங்கெடாமைக்குக் கழித்து கீழோடே ஒன்றுவித்துப் பதினேழெழுத்தாகவே எண்ணத்தக்கது. கம்பர் இயற்றிய சடகோபரந்தாதியில்  “என் முடியா தெனக்கியாதே திரா வணன்றன்” என்ற இருபத்தொன்பதாம்பாட்டிலும் இப்படியே பிரயோகம் வந்தமை காண்க. இந்த நூற்றந்தாதியிலும் மேல் ஐம்பத்து மூன்றாம் பாட்டில் “பற்பல்லுயிர்களும் பல்லுலகியரவும் பரனதென்றும்” என்ற விடத்திலும் இங்ஙனமே கொள்க.

 

English Translation

O People of world! I shall tell you a great way to get rid of the soul-devastating kali, say, "Ramanuja" Even as you do, brightness will dawn on your mind, you mouth will swell with nectar, and all the travails of birth and death will flee.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain