(2453)

இல்லறம் இல்லேல் துறவறமில் என்னும்,

சொல்லற மல்லனவும் சொல்லல்ல - நல்லறம்

ஆவனவும் நால்வேத மாத்தவமும், நாரணனே

யாவதீ தன்றென்பா ரார்.

 

பதவுரை

(முக்திமார்க்கம் தெரியாமல் ஸம்ஸாரத்தில் உழல்கின்ற ஆத்மாக்களுக்கு)

இல்லறம் என்னும் சொல்லும்

-

க்ருஹஸ்த தர்மமாக சாஸ்த்ரஜித்தமான கர்மயோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்

சொல் அல்ல

-

பிரமாணமல்ல

இல்லேல்

-

அங்ஙனன்றிக்கே,

துறவறம் என்னும் சொல்லும்

-

ஜ்ஞாநயோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்

சொல் அல்ல

-

பிரமாணமல்ல

இல்லேல்

-

அங்ஙனுமன்றிக்கே

அல்லன அறம் என்னும் சொல்

-

(பக்தியோகம் தேசவாஸம் திருநாம ஸங்கீர்த்தனம் முதலான) மற்ற உபாயங்கள் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்

சொல் அல்ல

-

பிரமாணமல்ல

நல் அளம் ஆவனவும்

-

நல்ல தருமங்களாகிய திருநாம ஸங்கீர்த்தநாதிகளும்

நால் வேதம் மா தவமும்

-

நான்கு வேதங்களிலும் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய கருமங்களுமெல்லாம்

நாரணனே ஆவது

-

ஸ்ரீமந்நாராயணனுடைய அநுக்ரஹத்தாலே பயனளிப்பன வாகின்றன.

ஈது

-

இவ்வுண்மையை

அன்று என்பார் அது

-

மறுப்பாருண்டோ? (இவ்வுலகம் அனைராலும் அங்கீகரிக்கத்தக்கது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டின் அந்வயக்ரமம் சிறிது வருத்தப்படுத்தும், நன்கு ஊன்றி அந்வயித்துப் பொருளுணர்க. இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்திற்கு அரும்பதவுரை யிட்டாரொருவர் “இப்பாட்டுக்குத் தெரியாது, பதந்தோறும் தெரிந்தால் கண்டுகொள்வது“ என்று கையொழிந்தார் அவர்தாம் மதியின் பரிச்ரமம் ஸஹியாதவர் போலும்.

‘இல்லறம் என்னும் சொல்லும் சொல் அல்ல. இல்லேல் துறவறம் என்னும் சொல்லும் சொல் அல்ல, இல்லேல் அல்லன அறம் என்னும் சொல்லும் சொல் அல்ல‘ என்று இங்ஙனே மூன்று வாக்யார்த்தமாக முன்னடிகளை அந்வயித்துக்கொள்க. ‘அல்லன்வும்‘ என்றவிடத்துள்ள உம்மை இரண்டாமடியின் முதலிலுள்ள ‘சொல்‘ என்ற சொல்லோடு கூட்டிக்கொள்ளப்பட்டது. கர்மயோகம், ஜ்ஞாநயோகம், பக்தியோகம் ஒன்றும் தஞ்சமல்ல என்பன முன்னடிகள். எந்த யோகமும் எம்பெருமானடியாகவே பயன் தருவனவாதலால் ஸாக்ஷாத்தாக அவனையே உபாயமாகக் கொள்ளுதல் சிறக்கும் என்பன பின்னடிகள்.

இல்லறம் என்னும் சொல்லும் சொல் அல்ல –க்ருஹஸ்தனாயிருந்துகொண்டு அநுஷ்டிக்கவுரிய தருமங்களாகிய யஜ்ஞதாநதப, ப்ரப்ருதிகளான கர்மயோகம் இங்கு இல்லற மெனப்படுகிறது. “ஸ்ர்வதர்மாந் பரித்யஜய“ இத்யாதி சரமச்லோகாதிகாரிக்குக் கர்மயோக விதாயகங்களான சாஸ்த்ரங்கள் தஞ்சமல்ல என்கை.

இல்லேல் துறவறம் என்னுஞ் சொல்லும் சொல்லல்ல – ‘துறவறம்‘ என்று ஸந்ந்யாஸத்தைச் சொல்வது ப்ரஸித்தம், கீதையில் ஸந்ந்யாஸ சப்தத்தால் ஜ்ஞாநயோகத்தை வ்யவஹரிப்பது காண்க. (ஐந்தாவது அத்யாயத்தில் ஒன்று, இரண்டு, ஆறு முதலிய ச்லோகங்களிற் காணலாம்) கர்மத்தைவிட பற்ற வேண்டியதான ஞானயோகம் ஸந்ந்யாஸமென்றும் தறவறமென்றும் பெயர் பெற்றதாகும். “***“ என்றதுணர்க. சரமச்லோகதிகாரிக்கு இந்த ஜ்ஞாநயோக விதாயக சாஸ்த்ரங்களும் தஞ்சமல்ல என்கை.

அல்லன அறம் என்னும் சொல்லும் சொல் அல்ல – கீழ்ச்சொன்ன கர்மயோக ஜ்ஞாநயோகங்களையொழிந்த பக்தியோகமும், அவதாரரஹஸ்யஜ்ஞாநம் புருஷோத்தம வித்யை தேசவாஸம் திருநாமஸங்கீர்த்தநம் திருவிளக்கெரிக்கை திருமாலையெடுக்கை முதலான (உபாயபுத்தியோடு செய்யும) வையும் இங்கு ‘அல்லன அறம்‘ என்றதனால் கொள்ளத்தக்கன. ஆக இவை யொன்றும் தஞ்சமல்ல என்கையாலே எம்பெருமானையே உபாயமாக வரிப்பதாகிற ப்ரபத்தி  யோகமே தஞ்சமென்னுமிடம் பெறப்பட்டதாகும். *****  எந்த ஆளவந்தார் ஸ்தோத்ரஸூக்தி இதற்குச் சார்பாக இங்கு அநுஸந்தேயம். பின்னகட்குச் சார்பாக  *****  என்கிற (வரதராஜஸ்தவம் - 93) ஆழ்வான் ஸ்ரீஸூக்தி அநுந்தேயம். எந்த யோகத்தைப் பற்றினாலும் முடிவில் அந்நதந்த யோகங்களினால் திருவுற்றமுவக்கும் எம்பெருமானே பலன் பெறுவிக்கவல்லவன் ஆதலால் அவனது திருவருளையே தஞ்சமாகக் கொள்ளுதல் ஏற்குமென்றவாறு.

ஈது அன்று என்பாரார்? – இவ்வர்த்தம் ஸகல சாஸ்த்ரங்களிலும் பொதிந்து கிடக்கையாலே இது ஸர்வஸம்மதமாகவற்று என்கை.

 

English Translation

To say that pursuing the various Asramas, -householder, student, renunciate or forest-dweller, -alone is sufficient to give the fruits of life is not correct. Even the paths of right conduct and renunciation taught in the Vedas do but lead to Narayana as the supreme goal, who can deny this?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain