(2292)

நன்கோது நால்வேதத் துள்ளான் நறவிரியும்

பொங்கோ தருவிப் புனல்வண்ணன், - சங்கோதப்

பாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப்பார்

நூற்கடலான் நுண்ணறிவி னான்.

 

பதவுரை

நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான்

-

நன்றாக ஓதப்படுகிற நான்கு வேதங்களாலும் பிரதி பாதிக்கப்படுபவனும்

நறவு இரியும்

-

தேன் தோற்கும்படியான போக்யதையை யுடையதாய்

பொங்கு ஓதம் அருவி புனல்

-

கடல் போலவும் அருவிநீர் போலவுமுள்ளதான

வண்ணன்

-

திருமேனியை யுடையவனும்

சங்கு ஓதம் பால் கடலான்

-

சங்குகளோடே கூடின அலைகளை யுடைத்தான திருப்பாற்கடலில் கண்வளர்த்தருள்பவனும்

பாம்பு அணையின் மேலான்

-

சேஷ சயனத்தின் மேல் துயில்பவனும்

பயின்று உரைப்பார் நூல் கடலான்

-

ஓதியுணர்த்துகின்ற வைதிகர்களின் கடல்போன்ற சாஸ்த்ரங்களால் பிரதபாதிக்கப்படுபவனுமான எம்பெருமான்

நுண் அறிவினான்

-

(தம் முயற்சியாலே அறிவார்க்கு) அறிய முடியாதவன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய திருநாம ஸங்கீர்த்தநம் பண்ணினால் எல்லாவகை நன்மைகளும் வந்துகூடு மென்றார் கீழ்ப்பாட்டில், எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை உள்ளபடியே உணருகையாகிற நன்மையும் உண்டாகுமோ என்று கேள்விபிறக்க, எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை உணர்வது மாத்திரம் அருமையான தென்கிறார் இதில்.

நால் வேதங்களாலே பிரதிபாதிக்கப் பட்டவனாய், ‘தேன் தோற்றது‘ என்னும்படியான போக்யதையுடைய விலக்ஷண திவ்யமங்கள விக்ரஹமுடையனாய், திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான்மேல் திருக்கண் வளர்ந்தருளுமவனாய், மநு முதலிய மஹர்ஷிகளினால் வேதங்களுக்கு உபப்ரும்ஹண (வியாக்கியான) மாக இயற்றப்பட்ட ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களினால் பிரதி பாதிக்கப்பட்டவனான எம்பெருமான், நுண்ணறிவினான் – நுட்பமான அறிவையுடையவன், அதாவது – அவனை அறிவது மிகவும் நுட்பமானது – அஸாத்யமானது என்றபடி.

“நுண்ணறிவினான்“ என்பதற்கு – ஸூக்ஷ்மமான ஜ்ஞாநத்தாலே அறியக்கூடியவன், (நம் போன்றவர்களுடைய ஸ்தூலமான ஜ்ஞாநத்தாலே அறியக்கூடாதவன்) என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டாமடியில், ஓதம் + அருவி, ‘ஓதமருவி‘ என்றாக வேண்டுவது ‘ஓதருவி‘ என்றானது தொகுத்தல்.

 

English Translation

The Lord is the substance of the Vedas. He is a mountain stream sweeter than honey, He is the hue of the dark ocean.  He reclines on a serpent in the Ocean of Milk. He is the ocean of knowledge for men of learning. He is subtle knowledge.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain