(2168)

இனியார் புகுவா ரெழுநரக வாசல்?

முனியாது மூரித்தாள் கோமின், - கனிசாயக்

கன்றெறிந்த தோளான் கனைகழலே காண்பதற்கு,

நன்கறிந்த நாவலம்சூழ் நாடு.

 

பதவுரை

கனி சாய

-

விளாம்பழம் உதிர்ந்து  விழும்படி

கன்று

-

வத்ஸாஸுரனை

எறிந்த

-

எறிதடியாக எடுதெறிந்து இரண்டசுரரையும் முடித்த

தோளான்

-

திருத்தோள்களையுடையவனான ஸர்வேச்வரனுடைய

கனை கழலே

-

ஆபரணத்வநியையுடைய திருவடிகளை

கண்பதற்கு

-

ஸேவிப்பதற்கு ஸாதநம் (அவன் உகந்து வாழ்கிற திருக்கோவலூர்க்கு ஸமீபமான இடத்தில் வஸிப்பதுதானென்று)

நன்கு

-

நன்றாக

அம் நாவல் சூல் நாடு

-

அழகிய ‘ஜம்பூ’ என்று பேர்படைத்த பரந்த த்வீ பத்திலுள்ள பிராணிகள்

அறிந்த

-

அறிந்துவிட்டன;

(இப்படியானபின்)

எழு நரகம் வாசல்

-

ஏழுவகைப்பட்ட நரகங்களின் வாசல்களிலே

இனி

-

இனிமேல்

புகுவார் ஆர்

-

பிரவேசிப்பவர் யாவர்?

(ஒருவருமில்லை)

(ஓ யமகிங்கரர்களே!)

முனியாது

-

(உங்கள் ஸ்தானத்துக்கு அழிவுண்டாவதாகச் சொல்லுகிற என்மேல்) கோபங்கொள்ளமல்

மூரி தான் கோமின்

-

(இனி ஒருகாலும் திறக்கமுடியாதபடி) பெரிய தாழ்ப்பாளைப்போட்டுப் பூட்டுங்கோள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் ஆழ்வாருடைய திருவுள்ளம் ஆநந்த்த்தின் எல்லையிலே நின்றது; திருக்கோவலூரிடைகழியிலே பெருமானோடும் பிராட்டியோடும் நெருக்குண்டிருக்கும் நிலைமையிலேயே இருப்பதாகத் தம்மை யநுஸந்தித்தார்; இனித் தாம் உலகத்தாரை யெல்லாம் உபதேசங்களாலே நன்கு திருத்திப் பணிகொள்ளலாமென நிச்சயித்தார். அப்படியே எல்லாரும் திருந்தி எம்பெருமான் திருவடிகட்கு ஆட்பட்டுவிட்ட்தாகவும் பாவநாபரகர்ஷத்தாலே அநுஸந்தித்தார்; இனி எல்லாரும் ஈடேறி விட்டதாகவும் நரகத்துக்குச் செல்ல ஆள் கிடையாதாகவுங்கருதி “நமன் தமர்காள்! நீங்கள் நரகவாசலை யடைத்துவிட்டு ஓடிபோகலாம்; இனி உங்கள் நாட்டுக்கு அதிதிகளாக வருவாராருமில்லை; உங்கட்கும் காரிய மொன்றுமில்லை; இங்ஙனே உண்மையை எடுதுரைக்கின்ற என்மேல் நீங்கள் கோபங் கொள்ளவேண்டா” என்று யமபரர்களை நோக்கி அதிகம்பீரமாக அருளிச்செய்கிறார்.

ஆழ்வாரருளிச் செயல்கள் நடமாடும் இந்த ஜம்பூத்வீபமே நாடு; மற்ற இடம் காடு என்ற பொருள் இதில் தொனிக்கும்.

” பொலிக பொலிக பொலிக  போயிற்று வல்லுயிர்ச்சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கி யாதொன்றுமில்லை” என்ற திருவாய்மொழிப் பாசுரம் இங்கு அநுஸந்திக்கத்தகும்.

ஈற்றடியில், அறிந்த- அன்சாரியை பெறாத வினைமுற்று; அறிந்தன என்றபடி. நாட்டிலுள்ளவர்கட்கெல்லாம் இனி விரைவில் பகவத் விஷயஜ்ஞாநம் உண்டாகியேவிடும் என்ற நம்பிக்கையினால் எதிர்காலச் செய்தியை இறந்தகாலச் செய்தியாகவே கூறிவிட்டாரென்க.

எழுநரகம்- நரகங்கள் பல பல கிடக்கின்றனவே; ஏழுதானோவுள்ளது என்னில்; கொடிய நரக வகைகளைப்பற்றி எழுநரகமென்றது; அவை “ பெருங்களிற்று வட்டம் பெருமணல் வட்டம், எரியின் வட்டம் பூகையின் வட்டம், இருளின் வட்டம் பெருங்கீழ் வட்டம், அரிபடை வட்டமென எழுவகை நரகம்” என ஓரிடத்திலும், “கூட சாலங் கும்பீ பாகம், அள்ளலதோகதி யார்வம்பூ, செந்துவென்றேழுந் தீநரகப்பெயர்” என வேறோரிடத்திலும் இன்னும் வரிவகையாகவும் தமிழ் நூல்களிற் கூறப்பட்டுள்ளன. இனி, ரெளரவம், மஹாரெளரவம், தமச், நித்ருந்தநம், அப்ரதிஷ்டம், அஸிபத்ரம், தப்தகும்பம் என்று கூறுவாரும் வேறுவகையாகக் கூறுவாரு முலர். இனி, “எழுநரகம்” என்ற இத்தொடர்க்கு- எழுகிற நரகம் = சம்ஸாரிக லடங்கலும் சென்று புகுகிற நரகம் என்றும், கிளர்த்தியையுடைய நரகமென்றும் பொருள் கூறுதலுமுண்டு.

முனியாது – நரகவாசலில் எப்போதும் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு தாங்கள் கைசலிக்க நலியுமாறு எந்தப்பாவி வரப்போகிறானென்று எதிர்பார்த்தவண்ணமா யிருக்கின்றயமபடர்களை நோக்கி “ மூரித்தாள் கோமின் = கதவுகளைக் கெட்டியாகப் பூட்டிக்கொண்டுஒழிந்து போங்கள்” என்றால் அவர்களுக்குக் கோபம் உண்டாவதற்கு ப்ரஸக்தியுள்ளதனால் ’முனியாது’ என்கிறார். உண்மை யுரைப்பவன்மீது கோபங்கொள்ளலாகா தென்கை. மூரித்தாள் — மிக்க வலிமையுள்ள தாழ்ப்பாள். கோமின் என்ற வினைமுற்றில், கோ- வினைப்பகுதி;- தொடுத்தல்.

நாவல் நாடு – ஜம்பூத்வீபம்; அதிலுள்ள பிராணிகட்கு இடவாகு பெயர்.

 

English Translation

The wonder Lord who threw a calf and knocked down the fruits has revealed his tinkling lotus feel.  This Jambu Dvipa knows him well. No more shall anyone enter the portals of hell.  O Messengers of Deathi without getting angry, you had better lock up and leave!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain